ஞானி-3

ஞானி-1, ஞானி-2

நான் கோவை ஞானியை சந்தித்தது மிக உகந்த ஒரு காலகட்டத்தில் என தோன்றுகிறது. அக்குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரோ பின்னரோ அவரைச் சந்தித்திருந்தால் அந்த நல்லுறவு உருவாகியிருக்காது. நான் அவரை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்த வறட்டு மார்க்சிய அரசியலில் ஒருபகுதியாகவே அவரும் இருந்தார். சொல்லப்போனால் அதன் ஆக்ரோஷமான முகங்களில் ஒன்றாகவே அவர் அறியப்பட்டார். சுந்தர ராமசாமி உள்ளிட்டவர்கள் இருபதாண்டுக்காலமாக அவரை வானம்பாடி குழுவினரின் அரசியல் சித்தாந்தி என்றே அறிந்திருந்தனர். “கோயம்புத்தூரிலே ஆலை, பட்டறைல்லாம் ஜாஸ்தி. இவர் வச்சிட்டிருந்தது மார்க்ஸிய வெல்டிங் பட்டறை” என்று சுந்தர ராமசாமி சொன்னார். “இப்பக்கூட அந்த டூல்பாக்ஸை கையிலேதான் வச்சிட்டிருக்கார்”

ஞானியின் அரசியல் ஈடுபாடு சம்பிரதாயமான கம்யூனிஸ்ட்கட்சி அனுதாபி என்ற அள்வில் தொடங்கியது. விரைவிலேயே அதில் வழக்கமான தொழிற்சங்க அரசியல் மற்றும் மேலோட்டமான கலாச்சார அரசியல் என்பதற்கு அப்பால் மேலும் தீவிரமான பண்பாட்டுச் செயல்பாடுகள் நிகழவேண்டும் என்று அவர் விரும்பலானார். விளைவாக, அவருக்கு இடதுசாரி அமைப்புகளுடன் ஒவ்வாமை உருவாக தொடங்கியது. அவர் என்றுமே எந்த அமைப்பிலும் உறுப்பினராக இருந்ததில்லை என்றாலும் அமைப்புகளுக்கு உகந்தவராக இருந்தார், அந்த தொடக்ககால ஒத்திசைவு இல்லாமலாகியது.

பொதுவாக இடதுசாரி இயக்கங்களில் அறுபது எழுபதுகள் ஒரு கொந்தளிப்பான காலகட்டம். இன்றிருக்கும் மனநிலைகளைக் கொண்டு அன்றிருந்த செயல்பாடுகளை மதிப்பிடுவது கடினம். இன்று மார்க்சியர்கள் எவருக்குமே இந்தியாவில் அல்லது உலகத்தில் எங்காவது நூல்களில் சொல்லப்படும் அந்த இடதுசாரிப் புரட்சி வரும், உற்பத்தி சக்திகள் முற்றிலும் தொழிலாளர்களுக்கு உரிமையானதாக  ஆகும், மண்ணும் பொருளும் பொதுவுடைமையாகும், அரசு உதிர்ந்து மறையும், கலாசாரப் புரட்சி உருவாகி உழைப்பவர்களின் பொன்னுலகொன்று மண்ணில் நிகழும் என்று நம்பிக்கை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இன்று அது சர்வசாதாரணமான ஒரு தொன்மமாக மாறிவிட்டது. இன்று அதை மேடையில் வித்தாரமாகச் சொல்லலாம், தனக்குத்தானே ஒருவரும் ஒருமுறை கூட சொல்லிக்கொள்ள மாட்டார்கள்.

உண்மையில் அது கடவுள் நம்பிக்கை போலத்தான். முனிவருக்கு கடவுள் சங்கு சக்கரத்துடன் நேரில் வந்து ஆட்கொள்வது, மாரியம்மன் தன் சூலாயுதத்தை சுவரில் சாய்த்து வைத்துவிட்டு ஏழைப்பெண்ணுடன் அமர்ந்து கூழ் சாப்பிடுவது இதையெல்லாம் பக்தர்கள் நம்புகிறார்களா என்றால் நம்பினால்தானே அவர் பக்தர்? ஆனால் என் வீட்டுக்கு நேற்று யேசு வந்திருந்தார் என்று சொன்னால் பக்தரே லுலுலாயி என்று நாக்கை வளைப்பார். புரட்சி ஒரு நவீனத்தெய்வம்.

ஆனால் அன்று அப்படி அல்ல. அன்றிருந்த மார்க்சியர்கள் பெரும்பாலானவர்கள் உண்மையிலேயே ஒரு புரட்சிக்காக காத்திருந்தார்கள். அதன்பொருட்டு என்றேனும் களமிறங்க வேண்டியிருக்கும் என்றும் எண்ணியிருந்தார்கள். அன்றெல்லாம் கட்சி உறுப்பினர்களுக்கு புனைபெயர்தான் இருந்தது – புரட்சிவரும்போது அரசின் படைகளிலிருந்து தப்ப. கட்சிச்சுற்றறிக்கைகள் எழுபதுகளில்கூட ரகசியச் சுற்றறிக்கையாகவே வெளியிடப்படும். கட்சிச் சந்திப்புகளும் பயிற்சி வகுப்புகளும் நள்ளிரவில் நடக்கும்.

ஆகவே ஐம்பத்தாறில் தேர்தலரசியலுக்கு வந்து தொடர்ச்சியாக அரசியல் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்தமையால் மார்க்ஸியர்களில் ஒருசாரார் பொறுமை இழக்கத் தொடங்கினார்கள். இந்தியாவில் மார்க்சிய அரசியலே தேர்தலை மையம் கொண்டதாகவும், ஜனநாயகத்துக்கான சமரசங்கள் கழைக்கூத்துகள் சார்ந்து அமைவதாகவும் அவர்களுக்குத் தோன்றியது. அப்பொறுமையிழப்பு முதலில் மார்க்ஸியக் கட்சிகளின் இலக்கியக் கலாச்சாரத் தளத்தில்தான் பிரதிபலித்தது. அங்குதான் மாற்றுக்குரல்கள் எழுந்தன, உடைவுகள் நிகழ்ந்தன. அவை 1967-ல் நக்சலைட் இயக்கமாக ஆயின.

ஞானியிலும் அந்தக் காலகட்டம் நேரடியான செல்வாக்கைச் செலுத்தியது. அப்போது அவருக்கு முப்பது வயது, இளமையின் இலட்சியக்கனவுகளில் ஐயம் தோன்றும் காலம். மரபான மார்க்ஸிய அமைப்புகளின் செயல்பாடுகளில் இருந்து   தன்னை விலக்கிக்கொண்டு எதிர்க்குரலாக ஒலிக்கத் தொடங்கினார். ஞானி அந்த நாட்களைப்பற்றி அதிகமாகப் பேச விரும்பியதில்லை. ஞானியை விட அக்காலகட்டத்தைப் பற்றி என்னிடம் கூடுதலாக பேசியவர் மறைந்த மார்க்ஸிய அறிஞரும் செயல்பாட்டாளருமான சோதிப்பிரகாசம்.

தொண்ணூறுகளில் தொடங்கி மறைவு வரை நான் சோதிப்பிரகாசத்திற்கு மிக அணுக்கமானவனாக இருந்தேன். சோதிப்பிரகாசம் அறுபதுகளின் இறுதியிலிருந்தே ஞானியை அறிந்திருந்தார். அக்கால ஞானி கட்சிமார்க்ஸிய அமைப்புக்களில் ஆழ்ந்த நம்பிக்கையுடன், சோதிப்பிரகாசத்தின் அவநம்பிக்கையையும் விலகலையும் கண்டித்து உரையாடியிருக்கிறார். அறுபதுகளின் இறுதியில் அவரும் அந்த நம்பிக்கையிழப்பையும் விலகையும் அடைந்தார். பின்னர் சோதிப்பிரகாசம் நக்சலைட் இயக்கச் செயல்பாடுகளுக்காக தலைமறைவாக இருந்தபோது அதற்கு உதவியிருக்கிறார்.

ஆனால் நக்சலைட் இயக்கத்தினரின் செயல்திட்டங்கள் இன்னும் நம்பகத்தன்மை அற்றவையாகவும் வெறும் கனவுகளாகவும் ஞானிக்குத் தோன்றின. சாரு மஜூம்தார் எங்கிருந்தோ ஒரு எளிய வாக்குறுதியை பெற்றுக்கொண்டு கனவு காணும் ஒரு பலவீனமான மனிதன் என்று அவருக்கு தோன்றியது. அவரும் எஸ்.என்.நாகராஜனும் ஒருமுறை சாரு மஜும்தாரை அவர் ரகசியமாக தமிழகம் வந்தபோது நேரில் சந்தித்திருக்கிறார்கள் எனச் சொன்னதாக நினைவு. ஆனால் அப்போதே அவ்வுரையாடல் வழியாக ஞானி அவநம்பிக்கை கொண்டார். ஆனால் எஸ்.என்.நாகராஜன் தீவிரமான நம்பிக்கையும் கனவுகளும் கொண்டிருந்தார்.

நக்சலைட் இயக்கத்தின் விரைவான வீழ்ச்சி அன்று அனைவரிலும் சோர்வையும் ஒட்டுமொத்தமான அவநம்பிக்கையையும் உருவாக்கியது. புரட்சி என்ற வார்த்தை முழுநம்பிக்கை அளிக்காமலானது, அது ஒரு அலங்காரச்சொல் ஆக மாறியது ஏறத்தாழ இக்காலகட்டத்தில்தான். [எம்ஜிஆர் மூத்த கம்யூனிஸ்டுத் தலைவர் கல்யாணசுந்தரம் அவர்களால் புரட்சித்தலைவர் என பட்டம் சூட்டப்பட்டதும் இக்காலகட்டத்தில்தான்]

உலகெங்கிலும் வெவ்வேறு நாடுகளில் நிகழ்ந்த ஆயுதப்புரட்சிகள் கொடுமையான ஒடுக்குமுறைகளால் அடக்கப்படுவதை அன்று ஞானியைப் போன்று உலக வரலாறை கவனிப்பவர்கள் அறிந்து கொண்டிருந்தனர். ‘ஆயுதப்புரட்சி’ என்கிற வடிவிலேயே வீரயுகத்துக் கற்பனாவாதம் மேலோங்கியிருக்கிறது, ஆகவேதான் அவை தோற்றுப்போகின்றன என்று அவர் எண்ணினார்.

உதாரணமாக நிக்கலாய் அஸ்திரோவ்ஸ்க்கிய் எழுதிய How the steel was Tempered  என்ற நாவல் தமிழில்  ‘வீரம் விளைந்தது’ என்ற தலைப்பில் மூத்த கம்யூனிஸ்டுச் சிந்தனையாளரான எஸ்.ராமகிருஷ்ணனால் மொழியாக்கம் செய்யப்பட்டதைப் பற்றிப் பேசும்போது ஞானி ‘இங்கே புரட்சின்னா புறநாநூறிலே நடக்கிற ஏதோ குடிப்போர்னு நினைச்சுக்கிடறாங்க. புரட்சியிலே வாகைசூடுவோம்னு ஒருத்தன் சொல்றான். ஏய்யா இந்தியா முழுக்க புரட்சி வந்தா ஆயிரக்கணக்கான டன் வாகைப்பூ தேவைப்படுமே. அந்தளவுக்கு நம்ம கிட்ட வாகை மரம் இருக்கான்னு கேட்டேன். இதான் உலகம் முழுக்க உள்ள பிரச்சினை. புரட்சின்னா அது ஒரு மக்களியக்கம், ஒரு வீரசாகசம் கிடையாது. இந்த புரிதல் பிழையாலேதான் உலகம் முழுக்க ரத்தம் வீணாப்போச்சு” என்றார்.

சூழ்ந்திருக்கும் மக்களின் வாழ்க்கையுடன் தொடர்பற்ற ஒன்றாக, அவர்களிடம் பேச முடியாததாக கம்யூனிசம் மாறிக்கொண்டிருக்கிறது என்று ஞானி கருதினார். மக்களின் வாழ்க்கையை புரிந்துகொள்ள, அவர்களிடம் மேலும்  நெருக்கமாக செல்ல, அவர்களின் கலை இலக்கிய வெளிப்பாடுகளை கவனிக்க வேண்டும் என்றும், அவற்றை ஒட்டிய ஒரு கலை இலக்கிய மறுமலர்ச்சி மார்க்சியத்துக்குள் வரவேண்டும் என்றும், மார்க்சியர் மக்களை நோக்கிப்பேசுபவராக அன்றி மக்களில் ஒருவராக நின்று பேசுபவராக மாற வேண்டும் என்றும் அவர் கருதினார்.

நக்சலைட் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப்பின் ஏறத்தாழ அத்தனை மார்க்ஸியக் குழுக்களிலும் மக்களிடம் கலாச்சார உரையாடலை உருவாக்கவேண்டும் என்னும் எண்ணம்  உருவாகியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இந்நோக்கத்துடன் 1975-ல் உருவாக்கப்பட்டதுதான். 1971-லேயே அதற்கு முன்னோடியான கருத்தியல்குழு உருவாக்கப்பட்டு சிறு பயிற்சிவகுப்புகள் நடைபெற்று வந்தன.

அரசியல்களத்தில் தோற்கடிக்கப்பட்ட நக்சலைட்டுக்கள் ‘மக்கள் கலை இலக்கிய கழகம்’ மக்கள் ஜனநாயக இலக்கிய கழகம்’ போன்ற கலையிலக்கிய அமைப்புக்களாக நாடெங்கும் மீண்டும் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டனர். [தமிழில் ‘கழகம்’ என்றால் மலையாளத்தில்  ‘வேதி’] என்ன சிக்கல் என்றால் அதுவரை கோட்பாடுகளையும் துண்டுப்பிரசுரங்களையும் எழுதியவர்கள் அவர்களே கதை கவிதைகளையும் எழுத ஆரம்பித்தனர். [‘கே முத்தையா கல்லொடைக்கிற தொழிலாளர்களைப் பற்றி நாவல் எழுதியிருக்கார். கல்லொடைக்கிற தொழிலாளர்கள் கே.முத்தையா பத்தி எழுதினா இன்னும் பரவாயில்லாம இருந்திருக்கும்’ -ஞானி]

ஆனால் மார்க்ஸியம் என்பது வெறும் அரசியல் செயல்திட்டம் என்னும் நிலையில் இருந்து அது ஒரு பண்பாட்டுக் கொள்கையும்கூட என்னும் பார்வை மாற்றம் உருவாகியது. இடதுசாரி அரசியல் பண்பாட்டு நடவடிக்கையாக உருமாற்றம் அடைந்தது. இது தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பொதுவான மாற்றத்தை உருவாக்கிய ஒர் அலை. சின்ன அலைதான், நாம் வீசியெறியும் டப்பாக்களை நமக்கே திரும்பிக்கொண்டுவந்து தருவது.

இவ்வெண்ணம் தான் வானம்பாடி போன்ற இயக்கங்களின் தோற்றத்துக்கும் வழியமைத்தது. கோவையின் இலக்கிய அடையாளமான வானம்பாடி இதழ் 1971ல் தொடங்கியது. முல்லை ஆதவன், புவியரசு போன்றவர்களின் முன்முயற்சியால் தொடங்கப்பட்டாலும் அதன் சிந்தனைப்புலத்தை ஞானி வழிநடத்தினார். வானம்பாடி இதழ் ஒரு புரட்சிகரக் கலாச்சாரத்தை இலக்கியத்தில் உருவாக்க நினைத்தது. “இது பூமியின் பிரளயங்களாய், காலத்தின் வசந்தங்களாய், யுகத்தின் சுவடுகளாய், நிறங்களில் சிவப்பாய், மண்ணை வலம்வரும் பறவைகளாய், மானுடம் பாடிவரும் வானம்பாடிகளின், விலையிலாக் கவிமடல்” என வானம்பாடி தன்னை அறிவித்துக்கொண்டது.

[இதிலுள்ள வசந்தம் என்ற சொல்லாட்சி முக்கியமானது. சீனா நக்சலைட் இயக்கத்தை வசந்தத்தின் இடிமுழக்கம் என்றுதான் அறிவித்தது. நூறுபூக்கள் மலரலட்டும் என வாழ்த்தியது.]

ஏறத்தாழ அதேகாலத்திலேயே  ஞானி எஸ்.என்.நாகராஜனுடன் இணைந்து  ‘புதிய தலைமுறை’ என்ற கோட்பாட்டிதழையும் நடத்தினார். இவ்விரண்டிலும் இருக்கும் வேறுபாடு அவரை புரிந்துகொள்ள உதவும். புதிய தலைமுறை இதழ் மார்க்சியத்தில் வந்தாக வேண்டிய அடிப்படையான கருத்தியல் மாற்றத்தை பேசியது. இன்னும் சொல்லபோனால் ஒரு  ‘மக்கள் மார்க்சியம்’ பற்றி அது விவாதித்தது.

மாவோவின் அணுகுமுறையே  ‘கீழை மார்க்சியம்’ என்றும் அது தொண்டு- மக்கள்சார்பு ஆகிய இயல்புகள் கொண்டது என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இருப்பது ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஐரோப்பியபாணி சர்வாதிகார அணுகுமுறை என்றும், அது அதிகாரப்படிநிலைகளால் ஆனது என்றும் எஸ்.என்.நாகராஜன், ஞானி ஆகியோர் எண்ணினார்கள் என்றும் மிகச்சுருக்கமாகச் சொல்லலாம்.

மாவோ மக்களிடம் சென்று பணியாற்றி, பெரும் மக்கள்திரள் ஒன்றை உருவாக்கி, அதை நடத்திச் சென்று புரட்சியை நிகழ்த்தியது முக்கியமான முன்னுதாரணமாக அவர்களுக்கு தோன்றியது. அதுவே இந்தியா போன்ற சீனாவுக்கு பலவகையிலும் நிகரான தேசத்திற்கு உரியது. மக்களிடமிருக்கும் பண்பாட்டுக்கூறுகளைக்கொண்டு அவர்களை ஒருங்கிணைக்க முடியும் என்று அவர்கள் கருதினர்.

புதிய தலைமுறை தொடர்ச்சியாக மார்க்சியத்தில் உருவாகவேண்டிய மக்கள்மைய மாற்றம்- கீழைத்தேய இயல்பு ஆகியவற்றுக்கான கருத்துக்களை முன்வைத்து, அதற்கான விவாதங்களை நடத்திக்கொண்டிருந்தது. அன்று ஞானி அமைப்புசார் மார்க்சியர்களால் துரோகியாகவும் விலைபோய்விட்டவராகவும் குற்றம் சாட்டப்பட்டு கடுமையாக வசை பாடப்பட்டார். ஞானி அவருக்குரிய முறையில் மென்மையாகவும் அழுத்தமாகவும் அதற்கு எதிர்வினையாற்றிக் கொண்டும் இருந்தார்

மறுபக்கம் வானம்பாடி கறாரான மார்க்ஸியக் கொள்கைகளை பின்னுக்குவைத்து ‘மானுடநேயம்’ என்ற பொதுவான அறவிழுமியத்தை முன்வைத்தது. அதனடிப்படையிலேயே அதில் பல்வேறு வகையான பார்வை கொண்டிருந்த இலக்கியவாதிகள் ஒருங்கிணைந்தனர். அவர்கள் கம்யூனிஸ்டுக் கட்சிகளுடன் தொடர்பு கொண்டவர்களோ, கம்யூனிஸ்டுக் கொள்கைகளை கற்றவர்களோ அல்ல.

அன்று கலையிலக்கிய தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களில் இடதுசாரி கருத்துக்களுக்கு இசைவுதர வாய்ப்புள்ள அனைவரையும் பலவகையான சமரசங்கள் வழியாக ஒருங்கு திரட்ட முயன்றது வானம்பாடி. ஆகவேதான் பிற்காலத்தில் வகுப்புவாதிகளாகவும் அடிப்படைவாதிகளாகவும் வெளிப்பட்டவர்கள் கூட அன்று அதில் எழுதினார்கள். அது பொத்தாம்பொதுவான முற்போக்குக் கருத்துக்களை ஓங்கிச்சொல்லும் கவிதைகளையும் படைப்புகளையும் எழுதுபவர்களுக்கான ஒரு பொது மேடையாகவே உருவகிக்கப்பட்டது.

வானம்பாடியில் மீரா, நா.காமராஜன் தொடங்கி ஏறத்தாழ பிற்காலத்தில் காதல் கவிதைகளை எழுத ஆரம்பித்த அத்தனை பேரும் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் யாருமே மார்க்சியத்திற்கு அணுக்கமானவர்களாகவும் எவ்வகையிலும் புரட்சியை மெய்யாக விரும்புபவர்களாகவோ பிற்காலங்களில் வெளிப்படவில்லை. அவர்களின் புரட்சிக்குரல்கள் ஞானி போன்றவர்களுடைய செல்வாக்கால், பாப்லோ நெருடாவின் கவிதைகளின் முன்னுதாரணத்தால், உருவாக்கப்பட்டவை மட்டுமே. ஒருவகையான கற்பனாவாதக் குரல்கள் அவை. காதல்போலவே புரட்சியும் ஓர் இளமைக் கொண்டாட்டமாகவே அவர்களால் கருதப்பட்டது.

வானம்பாடி இதழுக்கு இன்னொரு தனித்தன்மை உண்டு. அதன் பங்களிப்பாளர்களில் பலர் அண்ணாமலைப் பல்கலையில் தமிழ் பயின்றவர்கள். ஐம்பது அறுபதுகளில் அண்ணாமலைப் பல்கலையில் தமிழ்பயில்வது என்பது திராவிட-தமிழியக்க அரசியலை நோக்கிச் செல்வதுதான். அவர்களில் பலர் திராவிட இயக்க மனநிலைகொண்டவர்கள், மு.கருணாநிதி மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தவர்கள்.

ஆனால் 1969ல் மு.கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது அவருடைய செயல்பாடுகள் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தன. அவர் ஆட்சியில் இருந்தபோதுதான் இந்தியாவிலும் தமிழகத்திலும் நக்சலைட்டுகள் ஒழித்துக்கட்டப்பட்டனர். இந்தியக் குடியரசு உள்நாட்டில் நிகழ்த்திய மிகப்பெரிய வன்முறை அதுதான்- இன்றுவரைக்கும்கூட. தோராயமாக 50000 இளைஞர்கள் அன்று அரசால் கொல்லப்பட்டனர். அந்த நடவடிக்கைக்கு மு.கருணாநிதி அளித்த நிபந்தனையற்ற ஆதரவு அவர் மீதான நம்பிக்கையை அழித்தது.

அது 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்திய அரசின் அதிகாரபூர்வ நிலைபாட்டை அவர் ஆதரித்தபோது இங்குள்ள தமிழியர்களுக்கு உருவான ஏமாற்றத்துடன் ஒப்பிடத்தக்கது. இன்றைக்குக் கூட பழைய நக்சலைட்டுக்களுக்கு மு.கருணாநிதிமேல் அந்தக் கசப்பு கொஞ்சம் உண்டு. கைவிடப்பட்டவர்களாக உணர்ந்த அன்றிருந்த திராவிட இயக்க – தமிழியக்க ஆதரவாளர்கள் தங்களை அவ்வியக்கங்களுடனிருந்து விலக்கிக் கொண்டு இடதுசாரிகளாக அறிவித்துக்கொண்டனர். வானம்பாடி அன்றைய திராவிட இயக்க அரசியலை, மு.கருணாநிதி அரசின் ஊழலையும் முறைகேடுகளையும் கடுமையாக எதிர்க்கும் நிலைபாடுகொண்டிருந்தது.

திராவிட இயக்கத்தின் தனித்தமிழ்ப்பெயர்களுக்கு மாற்றாக சம்ஸ்கிருதப் பெயர்களைச் சூட்டிக்கொள்வதும், தேசிய அரசியலை முன்னெடுப்பதும் அவர்களின் எதிர்நடவடிக்கையாக இருந்தது. ஞானி அப்படிச் சூட்டிக்கொள்ளப்பட்ட பெயர்தான். வானம்பாடிகளில் ஒருவர் அக்னிபுத்திரன் என்று பெயர்சூட்டிக்கொண்டு பின்னாளில் தமிழியக்கத்துக்குச் சென்றபோது அதை கனல்மைந்தன் என்று மாற்றிக்கொண்டார். உலக அளவில் புனைபெயரை மொழியாக்கம் செய்துகொண்டவர் அவர் மட்டுமே என நினைக்கிறேன்.

அன்று கோவையில் வானம்பாடிக் கூட்டங்கள் தொடர்ந்து நடந்தன. பயிற்சி வகுப்புகளில் ஞானி தீவிரமாகப் பங்கெடுத்தார். இவை அனைத்துமே 1975-ல் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையோடு முடிவுக்கு வந்தன. நெருக்கடிநிலை வானம்பாடிக் கவிஞர்கள் அனைவருக்குமே உண்மையான நெருக்கடியை அளித்தது. அந்தச் சிறுவட்டச் செயல்பாடுகள் அரசு என்ற பிரம்மாண்டத்தின் முன் நிற்க முடியவில்லை. வானம்பாடிகள் கவனிக்கப்பட்டார்கள், கைது செய்யப்பட்டிருக்கக்கூடும், ஆனால் கைது செய்து விசாரிக்கும் அளவுக்கு அவர்கள் முக்கியமற்றவர்க்ள் என்று அரசு எண்ணியமையால் விடப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள் அனைவருமே அரசு ஊழியர்கள், ஆகவே அஞ்சி தங்கள் செயல்பாடுகளை மடைமாற்றிக் கொண்டார்கள். வானம்பாடி நெருக்கடி நிலைக்குப் பின் மீண்டும் ஒப்புக்குச் சில இதழ்களைக் கொண்டுவந்து நின்றுவிட்டது. வானம்பாடிக்கு சமானமான மலையாள இதழ்களின், குழுக்களின் நிலையும் இதுதான்.

நெருக்கடி நிலையில் ஞானி கடுமையான உளஅழுத்தத்திற்கு ஆளானார். அவர் கைதுசெய்யப்படவில்லையே ஒழிய தொடர்ச்சியான விசாரணைகளுக்கும் கண்காணிப்புக்கும் ஆளானார். ஆனால் இந்தக் காலகட்டத்தில்தான் அவர் சோதிப்பிரகாசத்திற்கு அடைக்கலம் அளித்து கோவை தொழிலாளர் இல்லங்களில் ரகசியமாக தங்க ஏற்பாடு செய்து அளித்தார். தொடர்ச்சியான துயிலின்மையும் உளச்சோர்வும் அவரை நீரிழிவுநோய் நோக்கி கொண்டுசென்றது. அதற்கு முறையான மருத்துவ சிகிழ்ச்சை எடுத்துக்கொள்ளவில்லை. ரத்த அழுத்தமும் நீரிழிவும் இணைந்தபோது கண்களில் விழித்திரை நரம்புகள் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல பார்வையிழப்பு நிகழ்ந்தது

நெருக்கடி நிலைக்குப் பின்னர் பழைய நம்பிக்கைகளால் முற்றாக கைவிடப்பட்டு, பழைய கனவுகள் கலைந்து, யதார்த்தம் கண்முன் நிற்க தன்னை மறுதொகுப்பு செய்துகொண்டிருந்தார் ஞானி. அது அவருடைய வாழ்க்கையில் ஒரு மறுபிறப்புக் காலகட்டம். தான் கற்ற மார்க்ஸியத்தை தன் சூழலுக்குள் வைத்து ஆராய்ந்து அதன் எல்லைகளையும் வாய்ப்புகளையும் பரிசீலித்தார்.

ஞானி அன்று இந்தியக் கம்யூனிஸ்டு இயக்கத்தின் இரண்டு எழுச்சி-வீழ்ச்சிகளை பார்த்திருந்தார். கோவையின் தொழிற்சங்கச் சூழலில் பிறந்து வளர்ந்து, 1947ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்தே, தன் 12 வயது முதலே தீவிரமாக அரசியலை வாசித்தறிய ஆரம்பித்தவர் அவர். 1948-ல் பி.டி.ரணதிவே முன்வைத்த கல்கத்தா தீஸிஸ் எழுப்பிய ஆயுதப்புரட்சிக்கான அழைப்பும் அதன் விளைவான நாடளாவிய கிளர்ச்சியும் அவர் கண்டதுதான். 1955 – 56 களில் அந்த ஆயுதப்புரட்சியின் விளைவாக கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டதற்கு அவர் சாட்சியம் வகித்திருக்கிறார். அதன்பின் நக்சலைட் இயக்கத்தின் வீழ்ச்சியை கண்டார்.

எஸ்.என்.நாகராஜன்

அதோடு ஞானி 1953 முதல் குருஷேவ் வெளிப்படுத்திய சோவியத் ருஷ்யாவின் ஸ்டாலினிஸ்ட் அரசின் அதிகாரவெறி, கொலைகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அண்ணாமலைப் பல்கலையில் அவர் அதைப்பற்றி உரையாடும் ஆசிரியர்கள் சிலர் இருந்தனர். மார்க்ஸியக் கொள்கையுடன் பிரிக்கமுடியாதபடி கலந்திருந்த சர்வாதிகாரம், அது இயல்பாக அதிகாரப்போட்டிக்குச் சென்றமை, விளைவாக அது தன் தலைமைந்தர்களையே கொன்றழித்தது ஆகியவை ஆழமான அறச்சிக்கல்களை அவரிடம் உருவாக்கின. பின்தொடரும் நிழலின் குரல் நாவலுக்காக அதைப்பற்றி நான் விரிவாக அவரிடம் பேசியிருக்கிறேன்.

பின்னர் 1964ல் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியில் நிகழ்ந்த பிளவையும், அப்போது இரு கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர்களும் மாறிமாறி கடுமையாகத் தாக்கிக் கொண்டதையும் அவர் கண்டிருந்தார். அந்த அவதூறுகளும் வசைகளும் முன்பு அரசியல் பிளவுகள் நிகழ்ந்த காங்கிரசிலோ பிற கட்சிகளிலோகூட இல்லாத அளவுக்கு தீவிரமானவையாக இருந்தன. கேரளத்திலும் வங்கத்திலும் இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் ஒருவரை ஒருவர் கொன்று குவித்தனர். வடகேரளத்தில் மட்டும் அறுபதுக்கும்மேல் கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளாலேயே கொல்லப்பட்டனர். 1923 முதல் நிகழ்ந்த காங்கிரஸின் உட்பிளவுகளின்போது ஒருவர்கூட கொல்லப்பட்ட வரலாறு இல்லை என்று ஞானி சொன்னார்.

பின்னர்  நக்சலைட்டுக்கள் பிரிந்துசென்றபோது இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளும் அவர்களை துரோகிகளாக எண்ணி வேட்டையாடினர். வங்கத்தில் நக்சலைட்டுக்கள் ஆயிரக்கணக்காக கொல்லப்பட்டபோது இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி காங்கிரஸுக்கு ஆதரவாக ஆட்சியில் இருந்தது. நக்சலைட் வேட்டைக்குச் செல்லும் ஒவ்வொரு போலீஸ் ஜீப்பிலும் ஒரு இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ‘ஆள்காட்டி’ இருப்பார். மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியும் நக்சலைட்டுகளை கொன்றது. கேரளத்திலும் வங்கத்திலும் நெருக்கடிநிலையின்போது காங்கிரசுடன் கூட்டணியிலிருந்தது இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி.

இவை உருவாக்கிய அறச்சிக்கல்கள் ஞானியை அலைக்கழித்திருந்தன. அவற்றை கட்சியினர் அளிக்கும் வழக்கமான விளக்கங்கள் வழியாக தின்று செரித்துக்கொள்ள அவரால் இயலவில்லை. ஏனென்றால் அவருடைய மார்க்ஸிய நம்பிக்கை என்பது அத்தனை அந்தரங்கமானது, அவரால் அவரை ஏமாற்றிக்கொள்ள முடியாது. அந்த சிக்கல்களுக்கான தீர்வுகளை அவர் தேடிக்கொண்டிருந்தார்.

அவர் வாழ்நாளெல்லாம் பேசிய கொள்கைகள் எல்லாமே இந்த களயதார்த்தம் வழியாக அவர் தேடிச்சென்று கண்டடைந்தவையே ஒழிய நூல்களில் இருந்து உருவாக்கிக் கொண்டவை அல்ல. தர்க்கத்தில் வெல்வதற்காக கட்டமைத்துக் கொண்டவையும் அல்ல. என்னிடம் பேசும்போதுகூட உணர்ச்சிகளால் முகம்சிவந்து குரல் விம்ம அதை சொல்லியிருக்கிறார்.

“பிரச்சினை தப்பு சரிகளிலே இல்லை. அவன் தப்பு பண்ணினான், அவன் துரோகி, அதனாலே அவனை  கொன்னோம்னு சாதாரணமா சொல்லிடறான் கட்சிக்காரன். கொல்லமுடியாத இடத்திலே வசைபாடி அவதூறு செய்றான். ஆனால் உன்னைப்போலவே அவனும் புரட்சிமேலே ஒரு நல்ல எதிர்காலம் மேலே நம்பிக்கை வைச்ச கம்யூனிஸ்டுதான். அவனும் நீ வாசிச்ச புஸ்தகங்களை வாசிச்சவன்தான். ஒரு கருத்துமாறுபாட்டுக்காக அவனை நீ அத்தனை காழ்ப்போட கொல்றேன்னா நீ நம்புற சித்தாந்தத்திலே அடிப்படையா என்னமோ பிரச்சினை இருக்கு”

“அது வன்முறையோட பிரச்சினையா, இல்லை அதிகாரத்தோட பிரச்சினையா, இல்லை தனிமனித மனங்களிலேயே அந்த பிரச்சினை இருக்கா? நாம அதை யோசிக்கணும். அந்தப் பிரச்சினை அறவியலிலே இருக்கு. அறவியல் பிரச்சினை இன்னும் ஆழமா தத்துவத்திலே இருக்கும். அந்த சிக்கல் இன்னும் ஆழமா மெய்யியலிலே இருக்கும்” ஞானி சொன்னார்.

ஆகவே உண்மையில் மார்க்ஸியத்தின் அறவியலும் மெய்யியலும் என்ன, அவற்றிலுள்ள சிக்கல்களை எப்படி கடப்பது  என்ற வினாவை அவர் கிட்டத்தட்ட வாழ்வா-சாவா பிரச்சினை போலவே எதிர்கொண்டார். இன்று வெறுமே சொற்போராகவும் ஆணவப்பூசலாகவும் காகிதங்களிலும் மின்வெளியிலும் நிகழும் கொள்கை-கோட்பாட்டுச் சண்டைகளுடன் அதை ஒப்பிட்டுக்கொள்ளக் கூடாது. தங்கள் நம்பிக்கைக்காக வாழவும் சாகவும் முயன்ற தலைமுறையில் நடந்த உயிர்த்தேடல் அது.

இன்று யோசிக்கும்போது அவருடைய விழியின்மை ஒரு குறியீடாகப்படுகிறது. நக்சலைட் இயக்கத்தின் வீழ்ச்சிக்குப்பின்னர் அவர் அறச்சிக்கல்களை, தத்துவச் சிக்கல்களை அடைந்தபோது விழிகளை இழந்தார். அகவிழிகளை திறந்துகொண்டார்.

நான் ஞானியைச் சந்திப்பது அந்தத் தேடல்கள் வழியாக அவர் தனக்கான ஒரு வெளியை உருவாக்கிக் கொண்டுவிட்ட பிறகு. தன் முதற்காலகட்டத்தில் இருந்து வெளியேறி இரண்டாவது காலகட்டத்தை வந்தடைந்துவிட்டிருந்தபோது. என் ஆசிரியராக நான் கொள்வது அந்த இரண்டாம் காலகட்டத்து ஞானியையே. அதுவே அவருடைய ஆளுமையின் உச்சகாலகட்டம் என நான் நினைக்கிறேன்

[மேலும்]

எஞ்சிய சிரிப்பு சோதிப்பிரகாசம் பற்றி

முந்தைய கட்டுரைஅபிப்பிராய சிந்தாமணி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதன்னிறைவு