பொழுதுபோக்கின் எல்லைகள்

அன்புள்ள ஜெ

இந்த வீடடங்கு காலகட்டத்தில் சென்ற நான்கு மாதமாக நான் முழுமையாகவே சும்மாவே இருக்கிறேன். முதல் ஒருமாதம் படிக்கமுயன்றேன். படிப்பு அமையவே இல்லை. வாசித்த இரண்டே நாவல்கள் நாஞ்சில்நாடனின் மிதவை, உங்களுடைய இரவு. பிறகு, அ.முத்துலிங்கத்தின் சிலகட்டுரைகள்.

அதன்பிறகுன் சினிமா பார்த்தேன். முப்பது சினிமாவுக்குமேல் பார்த்தேன். கேம் ஆப் த்ரோன்ஸ் பார்த்து முடித்தேன். அதன்பிறகு சலிப்பு வந்துவிட்டது. இப்போது எதையும் பார்ப்பதில்லை. நேரம் சும்மாவே கிடக்கிறது.

இப்போது என்ன செய்கிறேன் என்றால் மரவேலை. யூடியூப் பார்த்து சில ஃபர்னிச்சர்களைச் செய்தேன். மொட்டைமாடியில் ஒரு தோட்டம் போட்டேன். அதுதான் செய்யக்கூடியதாக இருக்கிறது. இந்த சலிப்பைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். இது ஏன் வருகிறது? என் நண்பர்களிடம் பேசினால் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் நேரம்போகிறது, ஆனால் ஒன்றுமே உருப்படியாகச் செய்யவில்லை என்று சொன்னார்கள்

வழக்கமாக இதைப்பற்றி உங்களிடம்தான் கேட்பார்கள். நீங்கள் தீர்வுகளைச் சொல்லாவிட்டாலும் அதன் பின்புலத்தைச் சொல்லி யோசிக்கவைப்பீர்கள். ஆகவே இதை எழுதுகிறேன்

டி.எஸ்.சங்கரநாராயணன்

***

அன்புள்ள சங்கர்,

இந்த வீடடங்குநாட்களில் பெரும்பாலானவர்கள் சினிமாக்களையும் இணையத்தொடர்களையும் பார்த்துத் தள்ளியதாக அறிந்தேன். அதில் ஒரு சில வடிவமுறைகள் உருவாகி வருவதையும் கண்டேன். சில சுவாரசியமான அவதானிப்புகளை அடைந்தேன், இணையத்தொடர்கள் சார்ந்த பலருடன் தொடர் உரையாடலில் இருப்பதனால் அவற்றிலிருந்தும் அவ்வெண்ணங்களை உறுதிசெய்துகொண்டேன்.

இந்த வீடடங்குக் காலகட்டதில் ஏற்கனவே நிறைய வாசித்துக் கொண்டிருந்தவர்கள் மட்டுமே தொடர்ந்து வாசித்தார்கள், இந்த ஓய்வைப் பயன்படுத்தி நிறைய வாசிக்கவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தவர்கள் எவரும் அப்படி வாசிக்கவில்லை. பெரும்பாலானவர்கள் நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தவற்றையோ, அதிகமாகப் பேசப்படுவனவற்றையோ, நண்பர்கள் அளித்தவற்றையோ வாசிக்க ஆரம்பித்து, வாசிப்பு மேலே ஓடாமல், புத்தகத்தை மூடிவைத்தார்கள்.

தாங்கள் வாசிக்காமலிருப்பதற்கான காரணம் நேரமின்மைதான் என அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த சுயசமாளிப்பு மறைந்தது. வாசிப்பதற்கான தடைகள் மேலும் ஆழமானவை என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். ஒரு சாரார் அதை தாங்கள் வாசிக்க முற்பட்ட நூல்களின் சிக்கலாக அவ்வாசிரியர்கள் மேல் ஏற்றிக் கொண்டார்கள். எஞ்சியோர் அப்பிரச்சினைகளை அந்தரங்கமாகவேனும் உணர்ந்தார்கள்.

முதற்சிக்கல் என்பது எதையும் தொடர்ச்சியாக, கூர்ந்து கவனிக்க முடியாமை. அது இந்த காலகட்டத்தின் பிரச்சினை. தொடர்ச்சியாக மின்னஞ்சல்கள் பார்த்தல், முகநூல் எதிர்வினைகளை கவனித்தல், வாட்ஸப் மற்றும் எஸ்.எம்.எஸ் பார்த்தல், அவ்வப்போது யூடியூப் டிவி ஆகியவற்றை எட்டிப்பார்த்தல் என கவனம் கலைந்து கொண்டே இருக்கிறது. இருபது நிமிடம்கூட ஒன்றை முழுமையாக ஈடுபட்டுச் செய்யும் வழக்கம் பெரும்பாலானவர்களிடம் இல்லை. வாசிப்புக்கு மிகமிக இடையூறாக அமைவது இந்த கவனம் கலைதல்.

ஏனென்றால் வாசிப்புக்கு மூளையுழைப்பு தேவையாகிறது. வாசிப்பு என்பது ஒரேசமயம் நிகழும் மும்முனைச் செயல்பாடு. எழுத்தடையாளங்கள் சொற்களும் மொழிகளுமாகின்றன. மொழி காட்சிகளும் நிகழ்ச்சிகளும் மனிதர்களும் கருத்துக்களுமாக நிகர்வாழ்க்கை ஆகிறது. அந்த நிகர்வாழ்க்கையிலிருந்து மேலும் வாழ்க்கைகள் முளைத்து சரடுகளாக எழுந்து பரவுகின்றன.

வாசிக்க முடியாமல் திணறுபவர்களின் உண்மையான சிக்கல் என்னவென்றால் இம்மூன்றும் ஒரே சமயம் நிகழாதென்பதே. எழுத்துக்கள் மொழியாக ஆவதேகூட ஓர் அகவைக்குப்பின் கொஞ்சம் தாமதமாகவே நிகழும். தொடர்பழக்கம் இல்லை என்றாலோ, மனம் வேறெங்கோ சென்றாலோ எழுத்துக்களுக்கும் மொழிக்குமான உறவு அறுபட்டுவிடுவதைக் காணலாம். உண்மையில் மனம் விலகிவிட்டால் எழுத்துக்களை மொழியாக்கும் முதற்செயல்பாடு நின்றுவிட்டு அக்கணமே நாம் வாசிப்பை நிறுத்திவிட்டிருப்போம்.

மொழியிலிருந்து அக்கணமே, தன்னியல்பாக காட்சிகளும் நிகழ்ச்சிகளும் மனிதர்களும் கருத்துக்களுமாக நிகர்வாழ்க்கை உருவாகிவருவதற்கு தொடர்பயிற்சி தேவை. இளமையிலிருந்தே அப்பயிற்சி இருப்பது நல்லது. அதை நாம் சிறிதுநாள் நிறுத்திவிட்டாலும்கூட மீண்டும் தொடங்குவது கடினம். ஐந்தாறாண்டுகள் படிக்காமலாகிவிட்ட ஒருவர் மீண்டும் புனைவுகளை படிக்க முயன்றால் ஆரம்பித்த இடத்திலிருந்தே மீண்டும் தொடங்கவேண்டும்.

இந்தப் பயிற்சியற்றவர்கள் மொழியை வாசித்து பின்பு நிறுத்தி, தனியாக நிகர்வாழ்க்கையை கற்பனைசெய்து, மீண்டும் படிப்பதை காணலாம். ஒருபக்கம் வாசிக்க அரைமணிநேரம் ஆகும் அவர்களுக்கு. நிகர்வாழ்க்கையில் திளைத்தபடி, தான் வாசித்துக்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் வாசிப்பதையே ‘காலமும் இடமும் மறந்து’ வாசிப்பது என்கிறோம்.

இப்படி வாசிப்பவர்களுக்கு நூல்களின் பக்கங்கள் ஒரு பொருட்டே அல்ல. சொல்லப்போனால் நிறையப் பக்கங்கள்தான் அவர்களை கவர்கின்றன, அவை அந்த நிகர்வாழ்க்கையை முழுமையாக உருவாக்கி அளிக்கின்றன. நீண்டகாலம் மூழ்கியிருக்கச் செய்கின்றன.

ஒரு வாசகன் நூலகத்துக்குச் சென்றதுமே இயல்பாக பெரியநாவல்களை தேடுகிறான் என்றால்தான் அவன் நல்ல வாசகன், அவனுக்கு வாசிப்பில் சிக்கல்கள் இல்லை, அவனால் மொழியை நிகர்வாழ்வாக முயற்சியே இல்லாமல் மாற்றிக்கொள்ள முடிகிறது, அவன் அதில் திளைத்திருக்க விழைகிறான் என்று அதற்குப்பொருள். சிறு நாவல்களை அவன் ஏமாற்றமடையச்செய்பவையாக நினைக்கக்கூடும், அவை அவன் வாழத்தொடங்கும்போதே முடிந்துவிடுகின்றன. நிகர்வாழ்க்கையிலிருந்து தொடர்நினைவுகளை வளரும் சிந்தனைகளை உருவாக்கிக்கொள்வது அடுத்த சவால்.

வாசிப்பதன் சிக்கல்களில் என்றுமுள்ள இன்னொரு பிரச்சினை, புதியனவற்றை ஏற்கமுடியாமலாதல். இளம் வயதில் அந்தப்பிரச்சினை இல்லை, ஆகவே அனைத்து புதிய படைப்புக்களையும், கருத்துக்களையும் வெறிகொண்டு அள்ளித்தழுவிக்கொள்வோம். ஆனால் மெல்லமெல்ல நாம் நிலைகொண்டு, உறைந்துவிடுவோம். நாம் ஏற்கனவே அறிந்தவற்றைக்கொண்டு நம் ரசனையை உருவாக்கிக்கொள்வோம். அதற்கான விதிகளை கற்பனைசெய்துகொள்வோம்.

அந்த மனநிலை புதிய அனைத்தையும் எதிர்க்கச் செய்கிறது. புதியவை உள்ளே வரமுடியாமல் அரண் அமைக்கிறது. பல நடுவயது கடந்தவர்கள் அவர்கள் ஏற்கனவே வாசித்தவற்றையே மீண்டும் வாசிக்க விரும்புவதைக் காணலாம். அவைதான் அவர்களால் வாசிக்கமுடிவனவாக இருக்கின்றன. அவர்கள் அதற்கான சொற்களை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள், அதை ஏற்கும் சிறிய கூட்டத்தையும் உருவாக்கிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் அவற்றையும் அவர்களால் நீண்டநேரம் ஈடுபட்டு வாசிக்கமுடியாது. ஏனென்றால் அவற்றின் உள்ளடக்கம் அவர்களுக்கு தெரியும், ஆகவே கண்டடைதலின் இன்பமும் விரிதலின் பரவசமும் இல்லை. பெட்டிக்குள் போட்டுவைத்த பழைய நினைவுப்பொருள் அங்கே இருக்கிறதா என்று சென்று பார்த்துக்கொள்ளும் இன்பம் மட்டுமே எஞ்சுகிறது. பொன்னியின்செல்வன் அல்லது மோகமுள்ளை எடுத்து ஒரு ஐம்பது பக்கம் படித்து பரவசமடைந்து, அதை பத்துபேரிடம் சொல்லிவிட்டு, நின்றுவிடுவார்கள்.

வாசிக்கமுடியாதவர்கள்தான் சினிவாலும் இணையத்தொடர்களிலும் ஈடுபட்டார்கள். அது ஒப்புநோக்க அவர்களுக்கு எளிதாக இருந்தது. ஏனென்றால் சென்ற இருபத்தைந்தாண்டுகளாக காட்சியூடகம் மிகப்பெரிதாக வளர்ந்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது. நாம் காட்சியூடகத்தை அறிந்தோ அறியாமலோ ஒருநாளில் பலமணிநேரம் பார்க்கிறோம். வாசிப்பைப் போலன்றி காட்சியூடகம் நமக்கு பழகிப்போனதாக உள்ளது. ஆகவே ஒரு சினிமாவை, தொடரை பார்ப்பது நமக்குக் கடினமானதாக இருப்பதில்லை

ஆனால் நான் ஓர் ஆச்சரியத்தைக் கண்டேன். இன்று இணையவெளியில் காட்சியூடகம் மிகமிகப்பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கிறது. சினிமாக்கள், இணையத்தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள், ஆவணப்படங்கள், யூடியூப் வீடியோக்கள். அவற்றில் பல மிகமிகத் தரமானவை. அவற்றை பரவசத்துடன் பேசுபவர்களும் பலர் இருக்கிறார்கள். ஒரு நல்லநூலைப் பற்றி ஒரு குறிப்பை இங்கே பார்க்கமுடியாது, ஆனால் இணையத்தொடர்கள் பற்றி ஏராளமாக எழுதிக்குவிக்கப்படுகிறது. அவற்றை பார்ப்பது ஒரு சமூகக்கட்டாயமாகவே ஆக்கப்படுகிறது. வீடடங்கு காரணமாக பலரிடம் நேரம் நிறைய உள்ளது. இருந்தும் சட்டென்று ஓரிரு மாதங்களிலேயே அவை சலிப்பூட்டத் தொடங்கிவிட்டன

குறிப்பாக இணையத் தொடர்களை வெறிகொண்டு பார்த்தவர்கள் பலர் மெல்லமெல்ல ‘எம்புட்டுத்தான் பார்க்கிறது, சலிப்பா இருக்கு’ என்ற முனகலை வந்தடைந்துவிட்டனர். ’பெரும்பாலும் ஒரே டெம்ப்ளேட்’ என்று சொன்னவர்களும் பலர் இருந்தார்கள். உலகசினிமாவின் பெருஞ்சாதனைகள் இணையவெளியில் எளிதாகக் கிடைத்தாலும்கூட அவற்றைப் பார்ப்பதற்கான ஊக்கம் நாளுக்குநாள் குறைகிறது. வீடடங்குநாட்களின் தொடக்கத்தில் நாளுக்கு ஐந்துமணிநேரமெல்லாம் பார்த்தவர்கள் கூட மிகவும் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள்

ஏன் இந்த சலிப்பு? ஓர் ஊடகம் எளிதாகக் கிடைப்பதனால், அது நம்மேல் வந்து மோதுவதனால் மட்டும் நாம் அதில் ஈடுபட முடியாது. நாம் எவ்வளவு தேடுகிறோம், எவ்வளவு வாங்கிக்கொள்கிறோம் என்பது முக்கியம். நம்முள் எழும் கேள்விகளின் விளைவாக நாமே தேடிக்கண்டடையாத ஒன்றில் நம் ஆர்வம் நிலைகொள்வதில்லை. நம் வாழ்க்கையுடன், நம் ஆழுள்ளத்துடன் உரையாடி நம்மை எவ்வகையிலேனும் மாற்றியமைக்காத ஒன்றை நாம் நினைவுகூர்வதுமில்லை.

உதாரணமாக, ஓராண்டுக்கு முன் பெருங்கொந்தளிப்புடன் பேசப்பட்ட இணையத்தொடர் ஒன்றைப்பற்றி இன்ற்ய் தமிழ்நாட்டில் எவரேனும் உணர்வெழுச்சியுடன் பேசுகிறார்களா என்று பார்த்தேன். அப்படியே அது மறைந்து அடுத்தது வந்து அமர்ந்துவிட்டது. அப்படியென்றால் அது உருவாக்கிய பாதிப்புதான் என்ன? அந்த அளவுக்கு மேலோட்டமான செல்வாக்கைச் செலுத்துவது எப்படி ஒருவரை தீவிர அனுபவமாக இருக்கமுடியும்?

இந்த காட்சியூடக வடிவங்கள் ‘பொழுதுபோக்கு’ நோக்கம் கொண்டவை. பெருஞ்செலவில் உருவாக்கப்படுபவை, ஆகவே உலகளாவிய ரசனைக்கான தயாரிப்புகள். அவை செயல்படும் விதம் இருவகையானது- நானும் அவற்றில் ஒரு பகுதி என்பதனால் அதை அறிந்தே அவற்றை உருவாக்குகிறோம் என்று சொல்ல என்னால் முடியும்.

ஒன்று பொதுரசனைக்காக காட்சியூடக வடிவத்தை உருவாக்குவது, இரண்டு அக்காட்சியூடக வடிவத்தின்பொருட்டு பொதுரசனையை வடிவமைப்பது. இரண்டையும் ஒரே சமயம் செய்வோம்.

இதை எப்படிச் செய்கிறோம் என்றால், பொதுரசனையின் ஒரு கூரிய அம்சத்தை முதலில் அடையாளம் காண்போம். அதை விரித்து எடுத்து அந்த காட்சியூடக வடிவத்தை உருவாக்குவோம். அதை அனைவருக்கும் உரியதாக உக்கிரமான பிரச்சாரம் வழியாக மாற்றி நிலைநிறுத்துவோம். மக்களிடமிருந்தே எடுக்கிறோம், அதை மக்கள் அனைவருக்கும் உரியதாக ஆக்குகிறோம். ஆகவே அது சமகாலம் சார்ந்தது, உண்மையனாது. ஆனால் அதன் பெருக்கமும் பேருருவமும் பொய்யானது

இது தொடர்விவாதங்கள் வழியாக நடைபெறுகிறது. செய்துபார்த்து, வெற்றிதோல்விகளின் அடிப்படையில் சீரமைத்துக்கொண்டு மேலே செல்கிறது.

இந்த பொதுவான ‘பொழுதுபோக்கு’ காட்சியூடகத்தில் அறிவார்ந்த தேடலுடையவன் ஓர் எல்லைக்குமேல் ஈடுபடமுடியாது. ஏனென்றால் அவனுடைய தனிப்பட்ட தேடலுக்கும் ரசனைக்கும் உரியவை ஏதும் அதில் இல்லை. அவனுக்கு அவை எதையும் கற்பிப்பதில்லை. அவனை வளர்ப்பதில்லை. அவற்றின் தொழில்நுட்பம், பிரம்மாண்டம் ஆகியவற்றை மட்டும் அவன் கொஞ்சநாள் ரசிக்கலாம், அவ்வளவுதான்

சாமானிய மக்களுக்குக் கூட சட்டென்று சலிப்பு உருவாகியிருப்பதை அக்கம்பக்கத்தினரின் பேச்சுகள் வழியாக காண்கிறேன். ஏனென்றால் ஒருநாளில் ஆறேழுமணிநேரம் பொழுதுபோக்கில் ஈடுபடுவது இயலாதது. அதுவே சலிப்பூட்ட ஆரம்பிக்கிறது. ஆரம்பகட்ட ஆர்வத்துக்குப்பின் ஒன்றையே மீண்டும் மீண்டும் செய்வதுபோல தோன்றுகிறது.நண்பர் சொன்னார், ‘ஆங்கிலப்படம் , சீரியல் ஆரம்பிக்கும் இசையைக் கேட்டாலே எரிச்சல் வந்து வெளியே ஓடிப்போய்விடுகிறேன்’ என்று.

ஏனென்றால் பொழுதுபோக்கே ஆனாலும் அதில் ஈடுபடவேண்டுமென்றால் அதைப் பார்ப்பவனின் வாழ்க்கை, கலாச்சாரப்பின்புலம் சார்ந்த ஒரு ஏற்புதளம் தேவையாகிறது. தமிழின் சாதாரணமான தொலைத்தொடர்கள் தயாரிப்பில் நடிப்பில் என்னவாக இருந்தாலும் அவற்றில் பேசப்படும் பிரச்சினைகள் இங்குள்ள வாழ்க்கையிலிருந்து எழுபவை, ஆகவே உணர்வுபூர்வமானவை. அயல்தொடர்களின் நிழலுகமும் கற்பனையுலகமும் அப்படி அல்ல

மிகவிரைவாக பலரும் தங்கள் ரசனையின் வட்டம் எத்தனை சுருங்கியது என்று கண்டுகொண்டார்கள். அவர்களால் உண்மையில் ரசிக்கத்தக்கவை வாழ்க்கை, பண்பாடு, வெளிப்பாட்டு முறை சார்ந்து எல்லை வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அவை வட்டத்திற்குள் வட்டமென சுருங்கிக்கொண்டே செல்கின்றன.

உதாரணமாக ஒருவரால் ஏதோ ஒருவகையில் குடும்பச்சிக்கல், ஆண்பெண் உறவுகளின் சிக்கல் சார்ந்த படங்களைத்தான் ரசிக்கமுடியும். ஆகவே உலகசினிமாவிலேயே ஒரு வட்டம் அமைந்துவிடுகிறது. அவரால் கொரிய இணையத்தொடரையோ அமெரிக்க சினிமாவையோ ரசிக்கமுடியாது. அந்த பெரிய வட்டத்திற்குள் இந்தி தெலுங்கு மலையாள தமிழ் சினிமாக்களின் ஒரு சின்ன வட்டம். அதற்குள் தமிழ் சினிமாவின் ஒரு வட்டம்.

தமிழ் சினிமா என்று கொண்டால்கூட மிகப்பழையவை வெளியே போய்விடுகின்றன. எண்பதுகளுக்கு பிறகு வந்த சினிமாக்களின் ஒரு வட்டம். அதற்குள் பிடித்தமான படங்களின் ஒரு வட்டம். கட்டக்கடைசியில் உண்மையில் தான் ரசிப்பதற்கு எவ்வளவு குறைவான சினிமாக்களும் சீரியல்களும் இருக்கின்றன என்பதை அவர் கண்டடைகிறார். மீண்டும் பழையவற்றுக்கே திரும்புகிறார்.

நெட்ஃப்ளிக்ஸ், அமேஸான் போன்ற இணையவழி காட்சியூடகங்கள் ஒரு பெரும் பொங்குதலுக்குப் பின் இப்போது சரேலென்று சரிவைச் சந்திக்கின்றன. அவை புதியநிகழ்ச்சிகளை புதியரசிகர்களைக் கருத்தில்கொண்டு உருவாக்கியே ஆகவேண்டிய கட்டாயத்தை வந்தடைந்துவிட்டிருக்கின்றன.

ரசனையை வெளியே போய் வளர்க்கமுடியாது, நாம் நமக்குள்ளே வளர்க்கவேண்டிய ஒன்று அது. ரசனை ஒருதளத்தில் மட்டும் வளர்வதும் இயலாது. தமிழ்நாட்டில் வாசிப்பே அருகிப்போய், வரலாறு பண்பாடு பற்றிய அறிதல் மிகக்குறைவாக இருக்கும்போது உலகளாவிய சினிமாரசனையை மட்டும் உருவாக்கிவிடமுடியாது. வாசிப்பைக்கூட தனியாக உருவாக்கமுடியாது, ஒட்டுமொத்த அறிவியக்கத்தின் விளைவாகவே வாசிப்பும் உருவாகிவரமுடியும். இந்த வீடடங்குக் காலம் காட்டுவது அதையே

எந்த மனிதனும் பொழுதுபோக்கிலேயே திளைத்து நீண்டநாள் வாழமுடியாது. அறிவும் நுண்ணுணர்வும் உடையவர்கள் தன்னை வளர்க்காத அச்செயலில் சலிப்படைவர். கல்வி இல்லாத எதையும் அவர்களால் தொடர முடியாது. எளியமனிதர்கள் கூட உழைப்பும், படைப்பும் இல்லாத செயலை வெறுக்க ஆரம்பிப்பார்கள். வேலையிலேயே அவர்கள் நிறைவடைவர்.

[ஆனால் சூதாட்டம் அப்படி அல்ல, அது எதையுமே அளிப்பதில்லை, ஆனால் சலிப்பூட்டுவதுமில்லை. இது ஏன் என்பது எனக்கு எத்தனை எண்ணினாலும் புரியவுமில்லை.]

இதுதான் சிக்கலென்றால் என்ன வழி?

அ. நமக்கு தேடல் உள்ளது, வாசிப்புக்கும் சிந்தனைக்குமான பயிற்சியின்மைதான் நமது பிரச்சினை என்றால் வெறிகொண்டு பயிற்சி எடுத்து அந்த தடையை தாண்டுவதே ஒரே வழி.முதற்கட்டச் சலிப்புக்கு இடம்கொடுக்காமல் தொடர்ச்சியாக முயன்று அந்த வாசலை கடந்துவிட்டோம் என்றால் கற்பதன் இன்பம் நம்மை ஆட்கொள்ளும். அது சலிப்பதே இல்லை.

ஆ.பொதுவான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டுச் சலிப்புறுகிறோம் என்றால் நமக்கேநமக்கான தேடலை தீட்டிக்கொண்டு நம் ரசனையை ஒட்டியவற்றை கண்டடைந்து முன்னகர்வதே நாம் செய்யவேண்டியது

ஜெ

முந்தைய கட்டுரைநீரும் நெருப்பும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசின் வெகுமக்கள் – சுனீல் கிருஷ்ணன்