சென்ற வாரம் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழில் இருந்து ஓர் அழைப்பு. இன்றைய இந்திய ஆங்கில எழுத்து மற்றும் இந்திய ஆங்கிலப்படங்களைப்பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று. நாளிதழ்க் கட்டுரைகளுக்கு ஓர் எல்லை உண்டு, அவை ஒரு குறிப்பைவிட சற்றுமேலாகவே இருக்க முடியும். அவற்றில் எதையும் விவாதிக்க முடியாது, சொல்லத்தான் முடியும்.
மேலும் எனக்கு ஆங்கிலத்தில் எழுதுவது கடினமான காரியம். இருபதுவருடங்களுக்கும் மேலாக ஒவ்வொருநாளும் ஆங்கிலத்தில் படித்துக் கொண்டிருந்தாலும்கூட. என் தாய்மொழியான மலையாளத்தில் எழுதுவது அதைவிட கடினம். காரணம் என் மனம் தமிழால் ஆனது. தமிழில்தான் என்னால் யோசிக்க முடியும். தமிழ்ச்சொற்றொடர்கள் வழியாகவே என் சிந்தனைகள் உருக்கொள்ளும். என்னுடைய தமிழ்நடை என்பது இருபதுவருடங்களாக ஓயாது எழுதி நான் உருவாக்கிக்கொண்ட ஒன்று. அதை இழந்துதான் இன்னொரு மொழியில்நான் எழுத முடியும். ஆகவே நான் சமீபமாக பிற மொழிகளில் எழுதுவதில்லை.
ஆனால் இக்கட்டுரையை எழுதியனுப்பலாமென முடிவு செய்தேன். காரணம் அதில் நான் சொல்வதற்கு ஒரு விஷயம் இருக்கிறது. நமது ஆங்கில ஊடகங்களில் அதை யாரும் சொல்வதில்லை. நம் ஊடகம் ஒட்டுமொத்தமாகவே இந்திய வெறுப்பில் மூழ்கிக் கிடக்கிறது.
இன்று இந்தியாவில் உள்ள இதழியல், மானுடவியல், சமூகவியல், வரலாறு சார்ந்து ஆய்வுசெய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் அனைத்துமே இந்தியாவை ஓர் இருண்ட நிலமாகக் காட்டும் மேலைநாட்டு அமைப்புகளின் அரசியல், வணிக உள்நோக்கத்துக்கு ஆட்பட்டவை. அவற்றின் நேரடியான, மறைமுகமான நிதியுதவிகளால் இயக்கப்படுபவை.
இந்தியாமேல் பெரியதோர் ராணுவ,பொருளியல்,பண்பாட்டுத் தாக்குதலுக்கு மேலையுலகு தயாரிப்பில் இருக்கிறது என்றே எண்ணுகிறேன். அப்படி அவர்கள் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ள நாட்டைப்பற்றி மெல்லமெல்ல ஒரு இருண்ட சித்திரத்தை உருவாக்குவார்கள். முதலில் பல்லாயிரம் சமூக, வரலாற்று ‘ஆய்வுகள்’ மூலம் அந்தச் சித்திரம் உருவாக்கப்படும். அதன் பின் அது ஊடகங்களுக்கு கொண்டுசெல்லப்படும். பின்னர் இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் அது வந்துசேரும். இன்று ஆய்வுகளில் இருந்து சினிமாவுக்கு வந்துவிட்டது அந்தத் திட்டம்.
இன்று ஈராக் மீது பெரும் தாக்குதல் ஒன்றை தொடுத்துள்ள அமெரிக்கா முப்பது வருடங்களாக அந்நாட்டை பண்பாடற்ற, மதவெறி மிக்க நாடாக ஆய்வுகள் பின்பு ஊடகங்கள் மூலம் சித்தரித்தது. அதன் பின் அந்நாட்டை என்ன செய்தாலும் அது நியாயமாகவே தென்படும்.இந்தியாவை எழுபதுகள் முதலே அப்படிச் சித்தரிக்கும் ஆய்வுகள் வந்து குவிகின்றன. மதச்சார்பின்மை, தலித்தியம் , விளிம்புநிலை ஆய்வுகள் என்றெல்லாம் முற்போக்கான தலைப்புகளில் தொடர்ச்சியாக முன்வைக்கபப்டும் இந்திய வெறுப்புக் கருத்துக்களின் ஊற்றுமுகம் இதுவே.
இத்துறைகளில் இந்திய வெறுப்பைக் கக்கும் எந்த அறிவுஜீவியும் பொருளாதார ரீதியாக கீழ்நிலையில் இல்லை. வெளிநாட்டு நிதியுதவிகள், ஏராளமான பயணங்கள், ஆய்வுநிறுவன வேலைகள், சொந்தமாக தன்னார்வக்குழுக்கள் என அவர்கள் கொழிக்கிறார்கள். அவர்கள் மேல் சிறு ஐயத்தை தெரிவிப்பவர்கள்கூட இங்கே மத,இன.வெறி தவிர வேறெந்த நற்பண்புகளும் இல்லாத இந்தியா என்ற இருண்ட தேசத்தின் குரல்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். இப்படிச் சித்தரிக்கப்படும் இந்தியச் சார்பு எழுத்தாளர்கள் அனேகமாக அனைவருமே எளியவர்கள்.எந்த அமைப்பாலும் தூக்கிவிடப்படாத ‘தரைநடையாளர்’கள். ஆனால் அவர்களுக்கு முதலாளித்துவ, பிற்போக்கு முத்திரைகள் வந்துசேரும். ஆனாலும் இந்த மாற்றுத்தரப்பை முடிந்தவரை சொல்லித்தான் ஆகவேண்டும்.
ஆகவே கட்டுரையை எழுதி அனுப்பினேன். சென்ற ஞாயிறன்று கட்டுரை வெளியாகியிருக்கிறது.
இண்டியன் எக்ஸ்பிறஸ் சார்பில் கட்டுரை மிகச்சிறப்பாக இருப்பதாகவும் மேலும் தொடர்ந்து எழுதவேண்டும் என்றும் சொன்னார்கள். எதிர்வினைகளும் சிறப்பாக இருக்கின்றன. ஆகவே கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக இண்டியன் எக்ஸ்பிரஸின் எழுதுவதாக இருக்கிறேன்.