யாருக்காக இவ்வளவும் ?

அன்பு ஜெ அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களை தொடர்ந்து படிப்பவர்களுக்கும், பழகியவர்களுக்கும் நீங்கள் எந்த அளவிற்கு தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர், குரல் கொடுப்பவர் என நன்றாகத் தெரியும். தலித் உரிமைப் போராளிகளே தயங்கி நிற்கும் பல பிரச்சனைகளை துணிவுடன் எடுத்து கையாள்பவர் நீங்கள்.

ஆனால், எனக்குள்ள அய்யமும், துணுக்குறலும் எங்கே ஏற்பட்டதென்றால்,அதுபோன்ற தலித் போராளிகளும், தலித் படிப்பாளிகளும்  எடுத்த எடுப்பிலேயே உங்களை இடக்கையால் புறந்தள்ளி விடுகிறார்கள் என்பதில்தான்.

நான்  பழகும் தலித் சமுதாய – படித்த நண்பர்களிடமே, குறிப்பிட்ட நடப்பில் அவர்களுக்காக நீங்கள் முனைந்து எழுதியதைச் சொல்வேன். அதை ஒவ்வாமையுடன் கடந்து விடுவார்கள்.குறைந்தபட்ச தர்க்கம் கூட இருக்காது. தனக்காக வலிந்து பேசிய ஒருவரைப்பற்றியதான நன்மதிப்பும் இருக்காது. எனில்  யாருக்காக எழுதுகிறீர்கள்? பேசுகிறீர்கள்?

நீங்கள் யாருக்கெல்லாம் எதிரி?வலது சாரிகள், இடது சாரிகள், மத அடிப்படைவாதிகள், முற்போக்குகள் – பிற்போக்குகள், பகுத்து அறிவாளர்கள் – பகுத்து அறிவிலாதவர்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள்… இத்தனை பேருக்கும் எதிரியாய் இருந்துவிட்டு எந்த தரப்பிற்கு உங்களை நிறுவப்போகிறீர்கள்? அல்லது காந்தியைப்போல் சகல தரப்பினராலும் கைவிடப்பட போகிறீர்களா?

அன்புடன்,

எம்.எஸ்.ராஜேந்திரன்

திருவண்ணாமலை

***

அன்புள்ள ராஜேந்திரன்

காந்தியைப்போல என்பதே எவ்வளவுபெரிய மதிப்பு, அதை அடைவதென்றால் பேறு அல்லவா?

உங்கள் கடிதத்தில் ஒரு பட்டியல் இட்டிருக்கிறீர்கள் அல்லவா, அவர்களில் எவராகவும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாத சிலர் இருப்பார்கள், அவர்களே என் வாசகர்கள். அவர்களுக்கு தங்கள் சொந்தவாழ்க்கை சார்ந்த கேள்விகள் இருக்கும், அதை அறிவுத்தளத்திலும் இலக்கியத்திலும் சொந்தமாகவே தேடிக் கண்டடையும் முனைப்பு இருக்கும். அவர்களே இலக்கிய வாசகர்கள். இலக்கியவாதி எழுதுவது வலதுசாரிகளுக்காகவோ இடதுசாரிகளுக்காகவோ அல்ல. இலக்கியவாசகர்களுக்காக மட்டுமே

இந்த ‘சாரிகள்’ இலக்கியம் வாசிக்க முடியாது. ஏனென்றால் வரும்போதே அவர்கள் ‘நிறைந்து’போய் மாறாத அளவுகோல்களுடன் வருகிறார்கள். அவர்கள் ஏற்கனவே நம்பி ஏற்று உறுதிகொண்டிருப்பவை இலக்கியப்படைப்பில் இருக்கின்றனவா என்று பார்க்கத்தான் அவர்கள் வருகிறார்கள். இருந்தால் கொண்டாடுவார்கள், இல்லையென்றால் எதிர்ப்பார்கள். உண்மையில் அவர்கள் தங்கள் நேரத்தையே வீணடிக்கிறார்கள். ஓர் அறிதல்முறையை, ஒரு கலையை எதையும் அறியாமல் எதையும் ரசிக்காமல் அணுகுவதைப்போல வெட்டிவேலை வேறில்லை

என்னைப் பற்றிய அவதூறுகளை, முத்திரைகளை, கசப்புகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். பலருடைய முழுவாழ்நாளே அதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. என் நண்பர்கள், வாசகர்கள் அதைக்கண்டு வருந்தி எனக்கு எழுதுவதுண்டு. என்னை நோக்கி வரும் வாசகர்களை அவர்கள் தடுத்துவிடுவதாக சொல்வார்கள். அது உடனடிப்பார்வைக்கு உண்மை போலத் தோன்றும், ஆனால் சென்ற இருபதாண்டுக்கால இலக்கியச்சூழலை மேலோட்டமாகப் பார்த்தாலே அது உண்மையல்ல என்று தெரியும்.

இன்று தமிழில் பேசிய எல்லாச் சொற்களும் திரிக்கப்பட்ட வேறு எழுத்தாளர் எவருள்ளனர்? தொடர்ச்சியாக வசைபாடப்பட்ட வேறு எந்த எழுத்தாளர் இருக்கிறார்கள்? நீங்கள் சொல்வதுபோல அது நான். ஆனால் எவருக்கு என்னளவு தீவிரமான தொடர் வாசகர்கள் இருக்கிறார்கள்? வேறு எவரேனும் தனிநபராக இங்கே நான் செய்யும் செயல்களைச் செய்ய முடியுமா? அந்த வாசகச்சூழல் எவருக்கேனும் உள்ளதா? எப்படி அவர்கள் உருவாகிறார்கள்?

நல்ல வாசகன் என்பவன் வாசிப்பால் உருவாகிறவன் அல்ல. அவன் நுண்ணுணர்வு உடையவன் என்பதனால்தான் நல்ல வாசகனாக ஆகிறான். அவனால் போலிப்பாவனைகளை, வரட்டு அரசியல்களை, எளிய காழ்ப்புகளை உடனடியாக அடையாளம் காணமுடியும். அவற்றை நிராகரித்து தனக்குரிய இலக்கியத்தையும் ஆசிரியர்களையும் கண்டடைய முடியும். அந்த திறன் இயல்பிலேயே இல்லாதவன் இலக்கியப் படைப்புக்களை வாசிக்க நேர்ந்தாலும் அவனால் அவற்றை உள்வாங்க முடியாது. அவன் வாசிப்பே பயனற்றதுதான்.

எத்தனை சிக்கலான உள்ளடுக்குகள் கொண்ட ஆக்கங்களை உருவாக்குகிறோம். எத்தனை நுண்பிரதிகளை உள்ளே நிகழ்த்துகிறோம். இதெல்லாம் வாசகனின் அறிவுத்திறனையும் நுண்ணுணர்வையும் நம்பித்தானே செய்கிறோம்? அத்தனை நுண்ணுணர்வுகொண்ட வாசகனால் சூழலில் உருவாக்கப்படும் வெற்றுக்கூச்சல்களை அடையாளம் காணமுடியாது என்று ஏன் நினைக்கவேண்டும்?

பொதுவாக வாசகர்களிடம் இருக்கும் இயல்புகளைக் கொண்டு அவர்களை இருவகையினராகப் பிரிக்கலாம். அந்தரங்கவாசகன், பொதுவாசகன். அந்தரங்க வாசகன் வாசிப்பை அந்தரங்கமாகவே நிகழ்த்திக்கொள்கிறான். இலக்கியப்படைப்பில் தன் உள்ளத்தை, ஆழ்மனதை அடையாளம் காண்கிறான்.தன் தனிப்பட்ட கேள்விகளை படைப்பினூடாக உசாவி தன் விடைகளைக் கண்டடைகிறான்.

உண்மையில் இலக்கியவாசகன் என்பவன் அவனே. அவனுக்கு இலக்கியப்படைப்பும், இலக்கிய ஆசிரியனும்தான் முக்கியம். இலக்கியப்படைப்புக்கும் தனக்கும் நடுவே இன்னொரு குரல் ஒலிப்பதை அவன் ஒப்புக்கொள்ள மாட்டான். இலக்கிய ஆசிரியனுக்கும் தனக்கும் நடுவே மிக அந்தரங்கமான நீண்ட உரையாடலையே அவன் நிகழ்த்துவான். அங்கே புறழ்சூழலின் கருத்துக்களுக்கும் ஓசைகளுக்கும் இடமே அளிக்கமாட்டான்.

ஆகவே அவனுக்கு அரசியல், மதம் என்பவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.அவன் தன் அடையாளமாகக் கொண்டிருப்பது ஒரு தன்னுணர்வைத்தானே ஒழிய அரசியல் அடையாளமோ சமூக அடையாளமோ அல்ல. படைப்பை வாசிக்கும் அந்தரங்கமான தருணத்தில் நான் தமிழன், நான் இந்தியன், நான் இந்து, நான் முஸ்லீம், நான் கம்யூனிஸ்ட், நான் பாரதிய ஜனதா என தன்னை முன்வைப்பவனிடம் இலக்கியம் எந்த உரையாடலையும் நிகழ்த்துவதில்லை.

வாசகனுக்கு அரசியல், மதம், சமூக அடையாளம் இருக்கலாமா? இருக்கும். அதிலிருந்து முற்றாக விலக எவராலும் இயலாது. ஆனால் அவை தன் முழுமை அல்ல என்று உணர்பவனே இலக்கியவாசகன். தன் அந்தரங்கம் இவற்றுக்கு அப்பாலுள்ள ஒன்று என அறிந்து அதைக்கொண்டு இலக்கியப்படைப்புக்களை வாசிப்பவன்.

இரண்டாம்வகையானவன் பொதுவாசகன். அவனுக்கு அந்தரங்கமான தன்னடையாளம் என ஒன்று இல்லை. அவனுக்கு இருப்பது அவன் வெளியே இருந்து பெற்றுக்கொண்ட ஒரு பொது அடையாளம் மட்டுமே. அதையே தன் தனியடையாளமாக அவன் ஏற்றுக்கொள்கிறான். நான் தமிழன், நான் இந்தியன், நான் இந்து, நான் முஸ்லீம், நான் கம்யூனிஸ்ட், நான் பாரதிய ஜனதா என தன்னை வகுத்துக் கொள்கிறான்.

உண்மையில் எவரும் அத்தகைய புற அடையாளங்களில் முழுமையாக நிலைகொள்ள முடியாது. ஏனென்றால் அந்தரங்கமான காமம் வஞ்சம் அச்சங்கள் கனவுகள் போன்றவற்றில் அவன் தமிழன், இந்தியன், இந்து, முஸ்லீம்,கம்யூனிஸ்ட்,பாரதிய ஜனதா என தன்னை உணர்வதில்லை என்று அவனுக்கே தெரியும். ஆகவே அவன் அந்த புற அடையாளத்தை மேலும் மேலும் இறுகப்பற்றிக்கொள்வான். காழ்ப்பு, கசப்பு ஆகியவற்றை உருவாக்கி கொள்வான். தீவிரமான பற்றுக்களை அறிக்கையிட்டபடியே இருப்பான். நம்பிக்கை குறைவானவர்களே நம்பிக்கையை அறைகூவிக்கொண்டிருப்பார்கள்.

அத்தகைய பொதுவாசகன் இலக்கியவாசகன் ஆகவே முடியாது. அவனால் சூழலில் புழங்கும் பொதுவான கருத்துக்களை மட்டுமே வாசித்து உள்வாங்க முடியும். அவனுக்காகவே இங்கே வெற்று அரசியல்கூச்சல்காரகள் எழுதித்தள்ளுகிறார்கள். அவன் அவற்றிலிருந்து ‘தன்னவர் பிறர்’ ‘ஏற்கவேண்டியது மறுக்கவேண்டியது’ என்னும் இருமைகளை பெற்றுக்கொள்கிறான். அவற்றைச் சார்ந்து தீவிரமான விருப்புவெறுப்புகளை உருவாக்கிக் கொள்கிறான். அவற்றை இறுகப்பற்றிக்கொண்டு தன்னை முன்வைக்கிறான். தீர்ப்புகளை கூவுகிறான். வாழ்த்தும் வசையும் பொழிகிறான்.

அவனுக்கும் இலக்கியம் என்னும் அந்தரங்கமான செயல்பாட்டுக்கும் சம்பந்தமில்லை. அவனுக்கு இலக்கியத்தை என்ன செய்தாலும் புரியவைக்கவே முடியாது. அவன் அவனுடைய எளிய நிலைபாடுகளால் இலக்கியத்தை மொண்ணையாக முட்டிக்கொண்டே இருப்பான். அபத்தமான பகுப்புகளைச் செய்து தன் ஏற்பையும் மறுப்பையும் அறிக்கையிட்டுக்கொண்டிருப்பான்.

அவன் ஓயாதுசெயல்பட்டாகவேண்டும், ஏனென்றால் அவன் தன் நம்பிக்கையை கூவிக்கொண்டே இருந்தாலொழிய அவனே அந்நம்பிக்கையை விட்டுவிலகிவிடுவான். ஆகவே சூழலில் அவனுடைய குரலே ஓங்கிக்கேட்டுக்கொண்டிருக்கும். இது மதநம்பிக்கையாளர்களிடம் இருக்கும் வெறி. நான் இதை நம்புகிறேன் என அவர்கள் ஆர்ப்பரித்துக்கொண்டே இருப்பார்கள், மாற்றுநம்பிக்கைகள் மேல் நிரந்தரமான போரிலும் இருப்பார்கள்.

இந்த நம்பிக்கையுடன் அவனுடைய இயல்பான நுண்ணுணர்வின்மையும் அறியாமையும் கலக்கும்போது உடைக்கவே முடியாத மாபெரும் தன்னம்பிக்கை கொண்டவனாக இந்த பொதுவாசகன் மாறிவிட்டிருப்பதைக் காணலாம். எந்த இலக்கியப்படைப்பைப் பற்றியும், எந்த சிந்தனையைப் பற்றியும் தன்மகிழ்ச்சி கொண்ட புன்னகையுடன் அவன் பேசத் துணிவான். நுண்ணுணர்வுகொண்ட வாசகனும் எழுத்தாளனும் அந்த தன்னம்பிக்கையைக் கண்டு திகைப்பும் பின்னர் வேடிக்கையுணர்வும்தான் அடைவார்கள்.

ஆகவே அரசியல் சார்ந்து, சில்லறை வம்புகள் சார்ந்து, காழ்ப்புகளைக்கொண்டு பேசுபவர்களை கருத்தில்கொள்வதே இல்லை. ஏனென்றால் அவர்கள் வேறு எதைப்பற்றியோ வேறு எவரிடமோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் எழுதிக்கொண்டிருப்பது அந்தரங்க வாசகனுக்காக. அவனுடன் அந்தரங்கமாக பேச என் படைப்புகளால் முடியும். அங்கே நானும் அவனும் அடையாளங்கள் அற்றவர்கள்.

ஜெ

***

முந்தைய கட்டுரைகீர்ட்டிங்ஸ்,மணிபல்லவம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகனவிருள்வெளியின் திசைச் சுடர் – அருணாச்சலம் மகாராஜன்