ஞானி-1

ஆசிரியர்களையும் நூல்களையும் தேடித்தேடிச் சென்று கற்றுக்கொண்டே இருந்த ஒரு காலம் எனக்கு இருந்தது. ஒருவர் எனக்கு கற்பிக்கக்கூடியவர் என்று எண்ணினால் அத்தருணத்திலேயே அவரைப் பணிந்து ஏற்பவனாக இருந்தேன். ஆனால் என் கேள்விகளை தொடர்ந்து உயிருடன் வைத்திருப்பவனாகவும் இருந்தேன்.

நான் அறிந்தவரை ஒன்றுண்டு, ஆசிரியரின் உள்ளத்திற்கு உகக்காதவனாக இருக்கும்வரை அவரிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆசிரியர் நம் உள்ளத்திற்கு உகந்தவராக இல்லாதிருக்கும் வரை அவர் கனிந்து அளிப்பதைக்கூட நம்மால் பெற்றுக்கொள்ள முடிவதும் இல்லை. ஏனென்றால் அன்புதான் உண்மையில் அறிவின் ஊடகம். ஒருவருக்கொருவர் அன்பில்லாதவர்கள் விவாதித்தோ உரையாடியோ எதையும் அறிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் நம் உள்ளத்தில் மதிப்பும் அன்பும் இல்லாதவர்களுடன் உரையாடும்போது நாம் நம்மை முற்றாக மூடிக்கொள்கிறோம், முழுச்சக்தியுடன் அவர் நமக்கு அளிப்பவற்றை மறுத்துவிடுகிறோம். எந்த மாமேதையும் நம்மை அப்போது ஊடுருவவும் பாதிக்கவும் முடியாது.

ஆனால் ஆசிரியருடனான உறவு எங்கோ ஓரிடத்தில் கசந்து போகவும் வாய்ப்புள்ளது. சுந்தர ராமசாமிக்கும் எனக்குமான உறவு அவ்வண்ணம் ஆயிற்று. அதற்கு சில தனிப்பட்ட காரணங்கள். அத்துடன் நாங்கள் இருவருமே படைப்பிலக்கியவாதிகள் என்பதனால், என்னுடைய படைப்பிலக்கியம் தமிழிலக்கியத்தில் அவருக்கு அடுத்த கட்டத்தை தொடங்கி வைத்தது என்பதனால், அது அவரை மறுத்து எழ நேர்ந்தது என்பதனால் அந்த விலக்கத்தை தவிர்க்கவும் இயலாது. பிற ஆசிரியர் அனைவருடன் இறுதி வரைக்கும் அணுக்கமானவனாகவும் அவர்களுக்கு இனியவனாகவும்தான் இருந்திருக்கிறேன்.

அவ்வகையில் ஞானி எனக்கு எண்ணும்போதே மகிழ்வளிக்கும் ஓர் ஆளுமை. ஒருகட்டத்திற்கு பிறகு என்னுடன் பேசுவதை விட தொடுவதிலும் தலையையும் தோளையும் வருடுவதிலுமே அவர் மகிழ்ச்சியடைந்தார் என்பதை உணர்ந்தேன். வெவ்வேறு நண்பர்கள் என்னுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர் அடையும் மகிழ்ச்சியை பற்றி கூறியிருக்கிறார்கள். அப்போது அவர் தன் இயல்புக்கு மாறாக வெடித்துச் சிரிப்பார்.

பிற எவ்வளவோ விவாதங்களில் அழுத்தமாகவும் மென்மையாகவும் உரையாடுபவர் என்னிடம் உரக்கப் பேசுவதை, நான் பேசும்போது ஊடே புகுந்து கருத்துகள் சொல்வதை, தொடர்ந்து என்னை கேலி செய்து கொண்டிருப்பதை நண்பர்கள் பார்த்திருக்கிறார்கள். நான் அவரிடம் சற்று மிகையான உரிமையையே எப்போதும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த உரிமையை ஆற்றூர் ரவிவர்மாவிடம் மட்டுமே எடுத்திருக்கிறேன். சுந்தர ராமசாமியை நான் கேலி செய்ய முடியாது.

ஓர் உதாரணம், 2009-ல் கலாப்ரியாவுக்காக விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் நாங்கள் நிகழ்த்திய சந்திப்பு கோவையில் நடந்தது அதில் ஞானி பார்வையாளராக கலந்துகொண்டார். நான் உரையாற்றி முடித்ததும் அவர் கேள்வி கேட்பதற்காக எழுந்தார். அவருடைய வழக்கம் மிக நீண்ட உரைகளையே கேள்விகளாக முன்வைப்பது. அப்போது அவர் எதை நம்பிக் கொண்டிருக்கிறாரோ, எதை தொடர்ந்து வலியுறுத்துகிறாரோ அதை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக அவர் எந்த இலக்கிய கூட்டத்தையும் கண்டார். எங்கும் அவர் உரைதான் ஆற்றினார். அன்றும் எழுந்து தமிழர்கள் மீதான பொருளியல் தாக்குதல் பண்பாட்டு தாக்குதல் ஆகியவற்றை விரிவாக அட்டவணையிட்டுச் சொல்லிமுடித்து, ‘இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று அதை கேள்வியாக மாற்றி அமர்ந்தார்.

நான் ஒன்றும் சொல்லாமல் புன்னகையுடன் கை தூக்கிய இன்னொருவரை பார்த்துஅடுத்த கேள்விஎன்றேன். அவர் உடனே அடுத்த கேள்வியைக் கேட்க நிகழ்ச்சி அங்கே திரும்பி சென்றது. அரங்கிலிருந்த சிலர் சிரித்தனர். அவர்கள் நான் ஞானியை மட்டம் தட்டிவிட்டதாக நினைத்திருக்கக் கூடும். ஆனால் எங்களுக்கு இடையே இருந்துவந்த விளையாட்டுகளில் அது ஒன்று. பிறகு கீழிறங்கி வந்து அவர் கையைப் பற்றிக்கொண்டபோதுஅப்டில்லாம் ஓடிர முடியாதுமறுபடியும் வருவோம், இதே கேள்வியைக் கேப்போம்என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். நானும் சிரித்தேன்.

எப்போதுமே இத்தகைய விளையாட்டுகளில் அவருக்கு ஆர்வம் இருந்தது. அவர் பேசிய கூட்டங்களில் அவரை இக்கட்டுக்கு இழுத்துவிடும் கேள்வியை நான் கேட்டிருக்கிறேன். அவர் அதற்கு அவருடைய வழக்கமான நுண்நஞ்சு கொண்ட பதிலை சொல்லி என்னை கடந்து சென்றிருக்கிறார். இறங்கி வரும்போது அவர் முகத்தில் எனக்கான சிரிப்பு ஒன்று இருக்கும். நான் கையைப் பற்றிக்கொண்டதும்அருமையான கேள்விஎன்பார். ஒருமுறை நான்மார்க்ஸியமும் தமிழிலக்கியமும்ங்கிற உங்க புத்தகத்தை எதிர்கால மார்க்ஸியக் கமிசார்களுக்கான தணிக்கைக் கையேடாக வைச்சுக்கலாமா?” என்று கேட்டேன். “அது தேவைப்படாது. உங்களுக்குப் பிடிச்ச போர்ஷனை தவிர மிச்சத்தை வச்சுக்கிட்டாலே சரியா இருக்கும்என்று அவர் சொன்னார்.

புகழ்பெற்றகதைஒன்று உண்டு. இந்த மாதிரி கதைகளில் எப்போதுமே சம்பந்தப்பட்டவரின் ஆளுமையின் சரியான சித்திரம் இருக்கும். எழுபதுகளில் கோவையில் ஓரு முற்போக்கு இலக்கியக்கூட்டம். போரிஸ் பாஸ்டர்நாக்கின்டாக்டர் ஷிவாகோநாவலுக்கு நோபல் பரிசு கிடைத்ததை, அது கிடைத்து இருபதாண்டுகளுக்குப் பின் ,கடுமையாகக் கண்டித்து இளவேனில் என்னும் பேச்சாளர் கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார். [அக்காலத்தில் அவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்தார். பின்னர் விலகி திமுகவில் சேர்ந்து காணாமலானார்]. யசோவியத் ரஷ்யாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நோபல் கமிட்டி அந்த விருதை அளித்திருப்பதாகவும், அது முற்போக்குக்கு எதிரான சூழ்ச்சி என்றும் அவர் கர்ஜித்தார்.

ஞானி அவையில் இருந்தார். அவர் அன்று அறியப்பட்ட ஒரு மார்க்ஸிய அறிஞர். இளவேனில் மேடையில்இந்த போரிஸ் பாஸ்டர்நாக் என்பவன் அமெரிக்க உளவாளி. அவனுடைய நாவல் எந்த வகையிலும் பொருட்படுத்ததக்கதல்ல. அது ஒரு குப்பை. அந்த குப்பைக்கு நோபல் பரிசு கொடுத்ததன் வழியாக சோவியத் ரஷ்யாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த இடதுசாரி அகிலத்தையே முதலாளித்துவம் சிறுமைப்படுத்தியிருக்கிறதுஎன்று பேசிக்கொண்டிருந்த போது ஞானி மெல்ல எழுந்து கைதூக்கி தணிந்த குரலில்ஐயா இளவேனில் அவர்களே ஒரு கேள்விஎன்றார்.

கூறுங்கள் ஐயாஎன்று இளவேனில் சொன்னதும்நீங்கள் போரிஸ் பாஸ்டர்நாக் எழுதிய டாக்டர் ஷிவாகோ என்ற அந்த நாவலை படித்திருக்கிறீர்களா?” என்று ஞானி கேட்டார். “இல்லை ஐயா, நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால்…” என்று இளவேனில் தொடங்குவதற்குள் ஞானிநன்றிஎன்று சொல்லி பையை எடுத்துக் கொண்டு அரங்கிலிருந்து மெல்ல நடந்து வெளியேறினார். மொத்த அரங்கும் சிரித்தபடி அவரைத் திரும்பிப் பார்த்தது. கூட்டம் அங்கே இனிதாக முடிந்தது.

ஞானியின் இவ்வியல்பு எப்போதுமே சிலரை எரிச்சலூட்டுவதாகவும், சிலரை அணுக்கமாக ஆக்கக்கூடியதாகவும் இருந்தது. தான் இனிமேல் புனைவு எழுத்தை உருவாக்கப் போவதாகவும் கட்டுரைகளில் இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் ஒரு முற்போக்குக் கட்டுரையாளர் ஞானியிடம் சொன்னபோது ஞானி மிகுந்த கனிவுடன் அவர் கையைத் தொட்டுஅதற்கென்ன உங்களுக்குதான் கட்டுரையிலேயே புனைவு மிகச்சிறப்பாக வருகிறதேஎன்றார்.

அவர் அதை ஒரு ஆசீர்வாதமாக எடுத்துக்கொண்டுநன்றி ஐயா, நன்றி ஐயாஎன்றார். நான் சிரிப்பை அடக்க வேறு பக்கம் பார்த்தேன். ஞானி மீண்டும்நாமதான் நல்ல புனைவாளர்கள். நாமதானே உலகத்திலேயே பெரிய புனைவை உருவாக்கினோம். சோவியத் ரஷ்யாங்கிற கம்யூனிஸ்டு தேசத்துக்கு சமானமா வேற உண்டா?” என்றார். ”ஆமாய்யாஎன்றார் கட்டுரையாளர் பெருமிதத்துடன். ஞானியின் முகத்தில் இருந்த புன்னகையை அடையாளம் காண நெருக்கமானவர்களால் தான் முடியும். என்னுடைய பின்தொடரும் நிழலின் குரலில் ஞானி கந்தசாமி என்றபேரில் இத்தகைய கதாபாத்திரமாகவே வருகிறார்.

ஞானியை நான் சந்தித்ததே அத்தகைய ஒரு நிகழ்வினூடாகத்தான், கோவையில் ஓர் இடதுசாரி இலக்கியக் கூட்டத்தில். 1987-ல் குற்றாலம் கவிதைப் பட்டறைக்கு காசர்கோடில் இருந்து வந்திருந்தேன். அங்கிருந்து கோவில்பட்டியில் யுவன் சந்திரசேகர் வீட்டுக்குச்  சென்றேன். அங்கிருந்து நாகர்கோவில் வந்து, மீண்டும் கோவைக்கு சென்றேன். கோவை வழியாக காசர்கோடு செல்லும் திட்டம். கோவைக்குச் சென்றது அங்கிருந்த என்னுடைய பழைய நண்பர் ஒருவரை சந்திக்கும் பொருட்டு.

அப்போது ஞானியை எனக்கு நேரடி அறிமுகம் இல்லை. சுந்தர ராமசாமியின் உரையாடல் வழி அவரைப்பற்றி ஒரு சித்திரம் எனக்குள் இருந்தது. சுரா தனக்கு முற்றிலும் எதிர்நிலையில் இருப்பவராகவும், ஆனால் இலக்கியம் குறித்து தான் பேசக்கூடிய ஆளுமைகளில் ஒருவராகவும், ஞானியை எனக்கு அறிமுகம் செய்திருந்தார். ஞானி எழுதிய ‘மணல்மேட்டில் ஒர் அழகிய வீடு’ என்ற நூலை சுந்தர ராமசாமி அளிக்க நான் படித்திருந்தேன். அதன்பின் அவர் எழுதிய ‘கல்லிகை’ என்ற நீள்கவிதை நூலை.

‘மணல்மேட்டில் ஒர் அழகிய வீடு’ எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்த ஒரு புத்தகம். ஏனெனில் அன்று முற்போக்கு முகாமினர் ஒட்டு மொத்தமாகவே ஜே.கிருஷ்ணமூர்த்தியை பிற்போக்குக் கருத்துக்கள் கொண்டவர், முதலாளித்துவ கையாள், புரட்சியிலிருந்து மக்களை திசை திருப்பும் பொருட்டு செயற்கையான உயர்வாழ்க்கை குறித்த கனவுகளை முன்வைப்பவர் என்ற நிலைபாட்டிலிருந்தே பேசிக்கொண்டார்கள். அத்தகைய வரட்டுவாதங்கள் ஒன்று திரண்டு இடதுசாரி தரப்பாக ஒலித்துக் கொண்டிருந்த காலம் அது. ஞானியின் குரல் அதற்கு மாறானதாக இருந்தது.

அன்று இடதுசாரித் தரப்பில் கலை இலக்கியம் என்ற அறிமுகமே இல்லாதவர்கள், மார்க்சியத்தையே ஒரு அரசியல் செயல்திட்டம் மட்டுமாக புரிந்து கொண்டவர்கள், அதை வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். இலக்கியம் என்பது கட்சிக் கொள்கையின் ஒருவகையான அலங்கார வெளிப்பாடு, அதன் நோக்கம் பிரச்சாரம் மட்டுமே என்று உண்மையாகவே நம்பியவர்கள் அவர்கள். கசப்புமருந்தை தேன் தடவி குழந்தைக்குத் தருவதுதான் இலக்கியம் என்னும் உவமை அன்று பிரபலம். அவர்களில் பலர் படிக்கக் கூடியவர்கள், ஆனால் படித்தால் கலையைப் புரிந்து கொள்பவர்கள் மிகச்சிலர்.

அன்று முற்போக்குத் தரப்பிலிருந்து எழுந்த பெருங்குரல் என்று கருதத்தக்க ஜெயகாந்தனே அவர்களால் மிகக் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு எதிர்தரப்புக்கு தள்ளப்பட்டிருந்தார். இன்று அவரை அந்த முற்போக்குத் தரப்பு தங்கள் முதன்மைக் குரலென அடையாளம் காண்கின்றது. முற்போக்குத் தரப்பிலிருந்து எழுதவந்த அனைவரிலும் முதன்மைச் செல்வாக்கு செலுத்தியவர் ஜெயகாந்தனே. எழுத்தில் மட்டுமல்ல, தோற்றத்தில் பேச்சில் தோரணையில் கூட. ஆனால் ஜெயகாந்தனைப் படிக்கக் கூடாது என்று முற்போக்கு எழுத்தாளர்களுக்கு தடை இருந்தது அன்று. பலர் அவரை ரகசியமாகவே படித்தனர்.

சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், கி.ராஜநாராயணன் போன்ற முற்போக்கினரெல்லாம் கடுமையாக வசை பாடப்பட்டுக் கொண்டிருந்தனர். மொத்தமாக வரட்டு அணுகுமுறையே முற்போக்குத் தரப்பை ஆட்சி செய்து கொண்டிருந்தது கைலாசபதியின் விமர்சனங்களை இன்று படிக்கையில் அந்த வரட்டுத்தனம் எப்படி படைப்பிலக்கியவாதிகளை கட்சி அடிமைகளாக மட்டுமே பார்த்தது, படைப்பிலக்கியத்தை பத்துவரி கருத்தாக சுருக்கி அணுகியது, நம்மவர் x பிறர் என்ற பகுப்பன்றி வேறெந்த அளவுகோல்களும் இல்லாதவர்களாக அதன் விமர்சகர்களை கட்டமைத்தது என்று காணமுடிகிறது.

இன்று இருப்பது போல் அல்ல, அன்று அவர்கள் மிகப்பெரிய ஒரு கருத்தியல் சக்தி. ஏனெனில் உண்மையிலேயே அன்று படிக்க வரும் இளைஞர்களில் பெரும்பாலானவர்களுக்கு புரட்சி அணுகிக் கொண்டிருக்கிறது என்றும், சோவியத் ரஷ்யா மண்ணில் ஒரு சொர்க்கம் என்றும், புவியின் எதிர்காலம் கம்யூனிசமே என்றும் நம்பிக்கை இருந்தது. உலகம் முழுக்க கம்யூனிசம் மீது நம்பிக்கையோ அச்சமோ நிலவிய காலம் அது. இந்தியச் சூழலில் கம்யூனிஸ்டுக் கட்சி ஓர் அரசியல் தரப்பாகக் கூட மிக வலுவான நிலையிலிருந்தது. அதன் பண்பாட்டு அமைப்புகள் கிராமங்கள் முழுக்க வேர் பரப்பியிருந்தன. ஓர் எழுத்தாளன் அதனுடன் ஒத்துச்சென்றால் அவனுக்கு கிடைக்கக் கூடிய அரங்குகள் பலநூறு. கல்வித்துறை அங்கீகாரமும் பல மடங்கு.

மாறாக நவீன இலக்கியமோ மிகச்சிறிய களத்தில் நூறு அல்லது இருநூறு பிரதிகள் அச்சிடப்படும் சிற்றிதழ்களுக்குள் புழங்கிக் கொண்டிருந்தது. ஆயினும் அது இடதுசாரிகளால் சூழ்ந்து தாக்கப்பட்டது. க.நா.சுவும் செல்லப்பாவும் சி.ஐ.ஏயின் ஒற்றர்களாக இடதுசாரியினரால் அடையாளப்படுத்தப்பட்டனர். புதுமைப்பித்தன், மௌனி, கு.பரா, ஜானகிராமன் போன்றவர்கள் நச்சிலக்கியவாதிகளாக, நசிவிலக்கியவாதிகளாக கூறப்பட்டனர்.

அச்சூழலில் ஞானியின் அணுகுமுறை எனக்கு வியப்பை அளித்தது. “வாசலை திறந்து வச்சிருக்கிறவங்களிலே ஒருத்தர்” என்று சுந்தர ராமசாமி அவரைப் பற்றிச் சொன்னார். கேரளத்திலும் அவ்வாறு வாசலைத் திறந்து வைத்திருந்த கே.ஜி.சங்கரப்பிள்ளை போன்றவர்களிடம் நான் தொடர்பிலிருந்தேன். ‘பாடபேதம்’ ‘ஜயகேரளம்’ போன்ற இடதுசாரி மாற்றிதழ்கள் அன்று வந்துகொண்டிருந்தன. அவற்றில் நான் சிலவற்றை எழுதிக்கொண்டும் இருந்தேன். ஆனால் எனக்கு தமிழ்ச்சூழலை அப்படி அணுகும் ஒருவர் தேவைப்பட்டார் என நான் இன்று நினைக்கிறேன்.

நவீன இலக்கியத் தரப்பில் மிகச்செல்வாக்கு செலுத்திய ஓர் ஆளுமையாக அன்று ஜே.கிருஷ்ணமூர்த்தி  இருந்தார். அசோகமித்திரன் பிரமிள் சுந்தர ராமசாமி மூவரிலும் மூன்று வகையாக, ஆனால் சீராக, ஜெ. கிருஷ்ணமூர்த்தியின் பாதிப்பு உண்டு. ஆகவே இலக்கியத்துக்குள் நுழையும் ஒருவர் முதலில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் படைப்புகளையும் இணையாக அறிமுகம் செய்துகொள்வார். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ஒற்றைவரி மேற்கோளுடன் கதைகளை ஆரம்பிப்பது, கதைகளுக்குள் ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றிய உரையாடல், எல்லாமே அன்று சாதாரணம்.

நான் தமிழ் நவீன இலக்கியம் படிக்கத் தொடங்கியவுடனேயே சுந்தர ராமசாமி எனக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தியின் “அறிந்ததிலிருந்தும் விடுதலை” என்ற நூலைத்தான் பரிந்துரைத்தார். ஆனால் நான் ஏற்கனவே ஆன்மீக நூல்களில் தொடர்பழக்கம் உள்ளவனாகவும், அதுசார்ந்த தேடலும் தத்தளிப்புகளும் கொண்டவனாகவும் இருந்ததனால் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆரம்பம் முதலே எனக்கு பெரிய ஈர்ப்பை அளிப்பவராக இருக்கவில்லை. ஜே.கிருஷ்ணமூர்த்தியை மதிப்பிடும் தத்துவ அளவுகோல்கள் என்னிடம் இருந்தன.

நான் அன்று ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நூல்களைப் பற்றி சுந்தர ராமசாமியிடம் விரிவாக விவாதித்தேன். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கருத்துகளை ஒருவகையான பாவனைகள் அல்லது இதமான கற்பனைகள் என்றுதான் சொல்ல வேண்டும். சாதகம் என்பதுடன் சம்பந்தப்படாத ஆன்மிக லட்சியங்களுக்கு நடைமுறையில் பெரிய மதிப்பெதுவும் இல்லை. இது உன்னதமானது அல்லது உகந்தது என்று ஒருவர் கூறலாம், ஆனால் எவ்வகையிலோ அங்கு செல்வதற்கான வழியை அவர் சொல்ல வேண்டும். அவர் அங்கு செல்பவராகவோ சென்றவராகவோ இருக்கவும் வேண்டும்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி  அதை ‘பாதைகளற்ற பாதை’ என்றோ ‘தனித்து செல்லவேண்டிய பாதை’ என்றோ சொல்லி கடந்து சென்றார். ஆகவே அவருடைய உரைகளையோ நூல்களையோ படிக்கும்போது வரும் மனஎழுச்சி இனியது என்பதற்கு அப்பால் அவருடைய ஆன்மிக உசாவல்களுக்கு மதிப்பில்லை என்பது என்னுடைய கருத்து. “மேகங்கள் சில சமயம் பளிங்குநகர்கள் போல தென்படும். இளமையில் அதைப் பார்க்கையில் மிகப்பெரிய கனவுநிலையை அவை உருவாக்கும் ஆனால் அவை நோக்க நோக்கக் கரைபவை, ஒருபோதும் சென்றடைய முடியாதவை, சென்றாலும் வாழமுடியாதவை” என்று நான் சொன்னேன்.

“நீங்கள் ஞானியை படிக்கலாம், உங்களுக்கு அவர் நெருக்கமானவராக இருக்கக்கூடும்” என்று சொல்லித்தான் ஞானியின் ‘மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு’ என்ற நூலை சுந்தர ராமசாமி எனக்கு அளித்தார். நான் அதைப் படித்துவிட்டு சுராவிடம் மீண்டும் விவாதித்தேன். அந்நூலில் வழக்கமான மார்க்சியர்களைப்போல வரட்டு அளவுகோல்கள் இன்றி ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மெய்யியல் மதிப்பு என்ன என்று பார்க்க ஞானி முயல்கிறார்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி  முன்வைப்பது ஓர் இலட்சிய வாழ்க்கையைத்தான். இயற்கையுடன் தன்னிலை கரைந்து இழைந்திருத்தல், மானுடர் ஒருவருக்கொருவர் முற்றிலும் ஒத்திசைவு கொண்ட ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளுதல் என தொன்று தொட்டு இருந்து வருவதும் உலகம் முழுக்க வெவ்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டதுமான ஒரு மானுடக்கனவையே ஜே.கிருஷ்ணமூர்த்தி  முன்வைக்கிறார் என்கிறார் ஞானி.

அது ஒரு சான்றோனின் கனவு என்று அவர் கருதுகிறார். ஆனால் அத்தகைய ஒரு வாழ்க்கை இங்கு அமைவதற்கான பொருளியல் அடிப்படை என்ன, அதற்கு தடையாக இருக்கும் சமூக அமைப்பு எத்தகையது ஆகியவற்றை பற்றி கேள்விகளே இல்லாமல்; அதை முழுக்க முழுக்க தனிமனிதத் தேடலும் எய்தலும் என்றே கடந்து போவதனால் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனை ‘மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு’ என்று சொல்கிறார். அது எனக்கு ஒரு வலுவான பார்வையாக தென்பட்டது.

நான் அதன் பின்னரே அவரை சந்திக்க வேண்டும் என்று எண்ணினேன். கோவைக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பமும் இருந்தது ஆனால் காசர்கோட்டிலிருந்து தொடர்ச்சியாக நாகர்கோவிலுக்குத்தான் வந்துகொண்டிருந்தேன். அனேகமாக மாதம் ஒருமுறை. எனது சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு அதற்கே செலவாகிக்கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் சுராவிடம் தங்கி பேசுவதற்காக ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பளத்தில் முந்நூறு ரூபாயை செலவழித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு அன்று குடும்பம் இல்லை, ஆகவே சுமைகளேதும் இல்லை.

அம்முறை திரும்பிப் போகும் வழியை கோவை வழியாக அமைத்துக் கொண்டேன். கோவையில் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும் என்பதற்காக தான் எனக்கு முன்னரே தெரிந்திருந்த நண்பரை அடையாளம் கண்டு அவரிடம் வருவதாகச் சொன்னேன். அவர் இல்லத்தில் தங்கிவிட்டு மறுநாள் கோவையில் நிகழ்ந்த இலக்கியக்கூட்டம் ஒன்றுக்கு சென்றேன். அதில் ஞானி பங்கெடுப்பதை அறிந்திருந்தேன்.

[மேலும்]

ஞானியுடன் நடந்த தூரம்- சுகுமாரன்

டாக்டர் ஷிவாகோ – பாலாஜி பிருத்விராஜ்
மணல் மேட்டில் ஓர் அழகியவீடு- வாசிக்க
கோவை ஞானி நூல்களை இலவசமாகப் படிக்க

 

 

முந்தைய கட்டுரைமழை இருகவிதைகள்:போகன் சங்கர்
அடுத்த கட்டுரைமானசா- கடலூர் சீனு