சிங்கப்பூரில் அன்று

நண்பர் சித்ரா ரமேஷ் அழைப்பின்பேரில் சிங்கப்பூருக்கு நானும் அருண்மொழியும் 2006 ஆகஸ்டில் சென்றிருந்தோம். சிங்கப்பூர்த் தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைத்த விழாவுக்காகச் சென்றிருந்ததாக அதிகாரபூர்வக் கணக்கு. அங்கே ஒரு சிறுகதைப் பட்டறையும் நடத்தினேன்.

என்னுடைய இரண்டாவது வெளிநாட்டுப் பயணம்- அதற்கு முன் 2001ல் கனடா சென்றிருந்தேன். அருண்மொழியின் முதல் வெளிநாட்டுப் பயணம். சிங்கப்பூரில் அன்று இலக்கியச் செயல்பாட்டாளர்களாக இருந்த எம்.கே.குமார், சுப்ரமணியம் ரமேஷ்,  பாண்டியன், ஷாநவாஸ் ஆகியோரின் நட்பும் உபசரிப்பும் அதை ஓர் இனிய அனுபவமாக ஆக்கியது. அருண்மொழியுடன் என் முதல் வெளிநாட்டுப்பயணம் என்பதனால் அவளுடைய வியப்பும் பரவசமும் என்னையும் அந்நிலைக்கே கொண்டுசென்றது

சிங்கப்பூரை விரிவாகச் சுற்றிப்பார்த்தோம். பறவைப்பூங்கா, காணொளிக் காட்சிகள், அருங்காட்சியகம். ஆனால் அருண்மொழியை மிகவும் கவர்ந்தது நகர்ச்சதுக்கம்தான். தூய்மையான ஒரு பொது இடம் என்பது இந்தியாவில் அன்றுமின்றும் கனவுதான். அத்தனைபேர் கூடியிருக்கும் ஓர் இடம் அத்தனை சுத்தமும் ஒழுங்கும் கொண்டிருப்பது, பிச்சைக்காரர்களும் சிறுவியாபாரிகளும் அளிக்கும் தொந்தரவுகள் இல்லாமலிருப்பது, அங்கே கூடியவர்கள் ஒருவருக்கொருவர் எரிச்சல்மூட்டாமல் இருப்பது, அங்கிருந்த களியாட்ட மனநிலை எல்லாம் சேர்த்து அவளை ஒரு கனவுநிலைக்கே கொண்டுசென்றது.

நீண்ட இடைவெளிக்குப்பின் சென்ற ஆண்டு அஜிதனும் சைதன்யாவும் அருண்மொழியும் சிங்கப்பூர் சென்றனர். இம்முறை அஜிதன் சைதன்யா இருவருமே அதே வியப்பையும் பரவசத்தையும் அடைந்ததாகச் சொன்னார்கள்.

இன்று எண்ணிப்பார்க்கிறேன், இந்தியாவில் எங்காவது அப்படி ஒரு நகர்மையம் உண்டா? ஒன்றை அமைப்பதற்கான முயற்சியை மோடி அகமதாபாத் சபர்மதி நதிக்கரையில் நடத்தினார்- அது இன்று சிறுவணிகர்களால் சூறையாடப்பட்ட பொதுவெளி. டெல்லி இந்தியாகேட் அப்படிப்பட்ட இடம். அங்கே வருபவர்கள் பானிபூரி பேல்பூரி தின்று தட்டுகளையும் தாள்களையும் அங்கேயே வீசி குப்பைநடுவே கூச்சலிட்டுக்கொண்டிருப்பார்கள். இந்தியாவில் இன்னும் இரண்டு தலைமுறைக்காலம் அது இயல்வதே அல்ல.

சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு செல்ல ஓர் அழைப்பு வந்தது. மலேசியாவில் எங்களை டாக்டர் சண்முகசிவா அழைத்தார். சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்ல விசா அளிக்கமாட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் நண்பர் ஈழநாதன் அதை ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார். சொன்னபடி ஒரே நாளில் விசா வந்துவிட்டது

ஈழநாதன் சிங்கப்பூர் இலக்கியவட்ட நண்பர்களுக்கு மிக அணுக்கமானவராக இருந்தார். ஆனால் அவர் என்ன செய்கிறார் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அவர் ஈழத்து இலக்கியப் படைப்புக்களை வலையேற்றம் செய்ய கடும் முயற்சியை மேற்கொண்டவர். ஈழ இலக்கியத்திற்கான ஒரு இணைய கருவூலத்தை உருவாக்கினார். பின்னர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என அறிந்தேன்

நானும் அருண்மொழியும் சாலைவழியாக பேருந்தில் மலேசியா சென்றோம். கொலாலம்பூர் பேருந்து நிலையத்தில் நவீன், மணிமொழி, அகிலன் ஆகியோர் வந்து எதிர்கொண்டார்கள். அங்கே ஒரு மாபெரும் விடுதியின் உச்சியறையில் தங்கியிருந்தோம். கொலாலம்பூரை வானத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தோம்.

மலேசியாவின் இலக்கியவிழா ஒருமாதிரி வேடிக்கையாக நடைபெற்றது. மலேசிய தமிழ் இலைஞர் மணிமன்றம் ஒருங்கிணைத்த நிகழ்ச்சி. நான் தமிழின் தொன்மை 2500 வருடங்கள் வரலாறுள்ளது என்பதற்கான சமீபத்தைய சான்றுகளாக ஆதிச்சநல்லூர், கொடுமணல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி பேச்சை தொடங்க ஒரு கும்பல் எழுந்து தமிழ் பத்துலட்சம் ஆண்டுகள் தொன்மையானது என்று பாவாணர் நிரூபித்துவிட்டதாக சத்தம்போட்டது. “நீங்க எங்க விருந்தினர், இல்லேன்னா கைய வச்சிருப்போம்’ என்று ஒருவர் என்னிடம் சொன்னார். எனக்கு கொஞ்சம் வேடிக்கையாகவே இருந்தது.

மலேசியாவில் இரண்டுநாட்கள் இருந்தோம். மீண்டும் சிங்கப்பூர் வந்து அங்கிருந்து ஊர் திரும்பினோம். அருண்மொழி முஸ்தபாவுக்குள் நுழைந்து பரிசுப்பொருட்களை வாங்கிக்குவித்தாள். மொத்தக்காசுக்கும். வாட்ச்கள், மின்னணுப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், குழந்தைகளுக்கான ஆடைகள். பெரும்பாலானவை அவளுடைய அலுவலகத் தோழிகளுக்குரிய பரிசுப்பொருட்கள். ஆனால் அதுவே கடைசி, அதற்குப்பின் சென்ற எந்த வெளிநாட்டுப் பயணத்திலும் அவளாக  ‘ஷாப்பிங்’ செய்ததே இல்லை.

சிங்கப்பூரில் என் உரையில் சில சுவாரசியங்களை நினைவுகூர்கிறேன். ஒன்று, அதன் முதன்மை விருந்தினர் வைரமுத்து. நான் அரங்குக்குள் நுழையும்போதே அவர் வெளியே ஒரு காரில் காத்திருப்பதை கண்டேன். அரங்கு நிறைந்தபின், விழா தொடங்கி சற்றுநேரம் கழித்து, நாடகீயமாக உள்ளே நுழைய அவர் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார்கள். அவ்வாறே அவர் அரங்கில் நுழைந்தார். நானும் சிங்கப்பூர் அமைச்சர் உட்பட பிற விருந்தினர்களும் மேடையில் இருந்தோம். வரவேற்புரை நடந்துகொண்டிருந்தது. அவர் கைகூப்பியபடி அரங்கில் தோன்றியது, ஒரே கைதட்டல் ஆர்ப்பரிப்பு

[சிங்கப்பூர் தமிழ்ச்சங்க உரை-2006 ஆகஸ்ட்]

விழாவில் நான் முதலில் பேசினேன். நான் அப்போது நல்ல பேச்சாளன் அல்ல- இப்போது சுமாரான பேச்சாளன். நாம் இந்தியாவிலானாலும் அமெரிக்காவினாலும் சிங்கப்பூரினாலும் கடைப்பிடிக்கும் ஒரு வழக்கம் மேடையில் எவரேனும் பேசினால் அரங்கில் கலைந்து பேசி கூச்சலிட்டுக்கொண்டே இருப்பது. மேடையில் முன்வரிசையில் அமர்ந்து பத்திரிகை படிப்பவர்கள், அருகே அமர்ந்திருப்பவர்களிடம் பேசிக்கொண்டே இருப்பவர்கள், ‘விஐபி’களிடம் போய் பல்லைக்காட்டுபவர்கள், செல்பேசி பேசுபவர்கள் என அரங்கு சந்தடியாகவே இருக்கும்.

இந்தச் சிங்கப்பூர் உரையில்கூட பெரும்பாலும் அரங்கச்சத்தமே நிறைந்திருக்கிறது.அன்று நிகழ்ச்சி முழுக்க அப்படித்தான் இருந்தது. இந்தப்பழக்கத்தை நான் வேறெங்கும் பார்த்ததில்லை. பிறநாடுகளில் இந்த வழக்கம் மிகப்பெரிய குற்றமாகவே கருதப்படும். சிங்கப்பூருக்கு பின்னர் சென்றபோது சீனர்கள், அதிகாரிகள் கலந்துகொள்ளும் விழாக்களில் எல்லாம் தமிழர்கள் மிக அமைதியாக, கட்டுப்பாட்டுடன் இருப்பதைக் கண்டேன். அவர்கள் கலைந்த கும்பலாக இருப்பது தமிழ்விழாக்களில் மட்டுமே

இது ஓர் அவமரியாதை என்ற உணர்வே கூட்டத்த்திடம் இருப்பதில்லை. அமைப்பாளர்களிடமும் இருப்பதில்லை. பேச்சாளர்கள் அதை அறிவுறுத்துவதுமில்லை. தொழில்முறைப் பேச்சாளர்களுக்கு அது பிரச்சினையில்லை. அவர்கள் முழங்கிக்கொண்டே இருப்பார்கள். எனக்கெல்லாம் அது பெரிய இடர். என்னை கவனிக்காதவர்களிடம் என்னால் பேசமுடியாது.

சென்ற பத்தாண்டுகளாக விஷ்ணுபுரம் கூட்டங்களில் கவனிக்காதவர்கள், மேடைநிகழ்வுக்கு எவ்வகையிலாவது ஊறுசெய்பவர்களை சமரசமே இல்லாமல் வெளியேற்றிவருகிறோம். அதில் ‘நாகரீகம்’ எல்லாம் பார்ப்பதில்லை.இங்கே நான் பேசும் அரங்கில்கூட அக்கறையில்லாமல், ஊறுசெய்தபடி ஒருவர் இருந்தால்கூட அவரை வெளியேற்றிவிட்டே அடுத்த வரியைப் பேசுவதென்று உறுதியுடன் இருக்கிறேன். ஆனால் இன்று அதற்கெல்லாம் தேவையே இல்லாதபடி அக்கறையும் கவனமும் கொண்ட அரங்கு படிப்படியாக உருவாகியிருக்கிறது. அதற்கு அடிப்படையாக அமைந்தது இந்த தொடக்ககால நிகழ்வுகள்தான்.

அன்று நான் பேச ஆரம்பித்ததுமே பெண்கள் கூட்டம்கூட்டமாக எழுந்து சென்று வைரமுத்துவிடம் கையெழுத்துவாங்கவும், குழந்தைகளை அவர் அருகே நிறுத்தி படமெடுக்கவும் தொடங்கினர். நான் பேச்சை நிறுத்திவிட்டேன். அவர்களை பார்த்தபடி, பொறுமையின்மையை காட்டி, அசையாமல் நின்றேன். சந்தடி ஓயவில்லை என்றால் மேடையில் இருந்து இறங்கிவிடலாம் என நினைத்தேன். ஆனால் என் எதிர்ப்பை புரிந்துகொண்டு அமைப்பாளர்கள் கலைந்த கூட்டத்தைச் சென்று அமரும்படிச் சொல்லி அரங்கை அமைதிப்படுத்தினர். ஆனாலும் கூட்டத்திலிருந்து ஓசை முழங்கிக்கொண்டேதான் இருந்தது.

என் பேச்சு நேரடியானதும் உணர்ச்சிபூர்வமானதுமாக இருந்தது. அந்தரங்கமானதாகவும். என் பேச்சு அங்கிருந்த பலரை கவர்ந்ததை பின்னர் எதிர்வினைகள் வழியாக அறிந்தேன். பலர் மேடைக்கு வந்து என்னிடம் உணர்ச்சிபூர்வமாக தங்கள் பாராட்டை தெரிவித்தனர்.

அன்று வைரமுத்து வழக்கம்போல நாடகீயமாக உணர்ச்சிகரமாகப் பேசினார். அவர் பேச்சு என் பேச்சுக்கு எதிர்வினையாக இருந்தது. நான் ஆங்கிலேயர் இந்தியாவில் உருவாக்கிய நீதிநிர்வாக அமைப்பை புகழ்ந்தும், அவர்களின் போர்முறைகளில் இருந்த கட்டுப்பாட்டை பாராட்டியும் பேசியதற்கு எதிராக தென்னமேரிக்காவில் வெள்ளையர் இயற்றிய கொடுமைகளைப் பற்றிச் சொன்னார். அவரிடம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் பேசியது ஆங்கிலேயரைப் பற்றி, போர்ச்சுக்கல் ஸ்பெயின் ஆக்ரமிப்பாளர்களைப் பற்றி அல்ல என்று அவரிடம் சொல்லும்படி அவருடைய அணுக்கர் ஒருவரிடம் சொன்னேன்

சிங்கப்பூர் படங்கள், உரை அடங்கிய பழைய ஆல்பம் ஒன்று அகப்பட்டது. அதற்குள் இதெல்லாம் பழையகதையாக ஆகிவிட்டதா என்ன என்று திகைப்படைந்தேன். எனக்கு தலையில் நிறைய முடி இருக்கிறது. அருண்மொழி இளமையாக இருக்கிறாள். புகைப்படங்களும் ஒளிப்பதிவுகளும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் மனிதர்கள் அவர்களுக்கு வயதாவதைப் பற்றிய அறிதலே இல்லாமல் வாழ்ந்திருப்பார்களா என்ன?

சிறுகதை ஒரு சமையல்குறிப்பு – சிங்கப்பூர் சிறுகதைப் பட்டறை 2006
முந்தைய கட்டுரைவெண்முரசு வாசிப்பு முறை – ராஜகோபாலன்
அடுத்த கட்டுரைமுரசும் சொல்லும் – காளிப்பிரசாத்