ஞானி : அஞ்சலிகள்

ஜெ,

ஞானி மறைந்த செய்தியைக் கேள்வியுற்றேன். சமீபத்தில் சொல்முகத்திற்காக கொற்றவையை மீண்டும் வாசித்தேன். ஞானி கொற்றவைக்காக அடுத்தடுத்து கொண்டு வந்த இரு சிறப்பிதழ்களையும் சேர்த்து வாசித்தேன். கடைசியாக அவரை சந்தித்தது கூட ஒரு எம்பி3 ப்ளேயரில் வெண்முரசு ஒலி அத்யாயங்களையும், ஒலி வடிவில் கிடைக்கும் உங்களுடைய கதைகளை அவர் கேட்கும் பொருட்டுத்தான். அதற்காக நானும் நரேனும் இருமுறை அவரைச் சந்தித்தோம். கொடுத்த அனைத்து கதைகளையும் கேட்டிருந்தார். அத்தனைக் கதவுகளும் மூடப்பட்ட பின்னரும் எஞ்சிய சாத்தியங்களைக் கொண்டு இலக்கியத்திற்குள்ளும் சிந்தனைக்குள்ளுமே அவர் தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்தார். பெருவாழ்வு

செல்வேந்திரன்

இனிய ஜெயம்

தளம் வழியே கோவை ஞானி இயற்கை எய்திய தகவல் அறிந்தேன். கோவை ஞானியை அவரது சில விமர்சன நூல்கள் வழியே நெருங்கி அறிய, கொற்றவை நாவலுக்கு பிறகு சந்தர்ப்பம் அமைந்தது. கொற்றவை நாவலை மறுவாசிப்பு செய்ய அதன் மெய்யியல் தளத்தின் உலகு தழுவிய பரிமாணம் குறித்து புரிந்து கொள்ள, ஞானி அவர்களின் சில கட்டுரைகள் உதவின.

நவீன விமரிசன மரபு தோன்றிய போதே உலகெங்கும் அதன் இயங்கியல் எதிர்முனையாக மார்க்சிய விமர்சனமே அமைந்தது. தமிழிலும் அதே சூழல்தான். ஆனால் தமிழுக்கு மட்டுமே சொந்தமான தனித்துவம் கொண்ட சிக்கல் என்னவென்றால், கன்னடம், மலையாளம், வங்கம் போல நவீனத்துவத்துக்கு முன்பான வளமான யதார்த்தவாத மரபு தமிழில் இல்லை.

நேரடியாக பாரதி புதுமைப்பித்தனில் துவங்கும் நவீன இலக்கியம், வ வே சு அய்யர் போன்ற  முன்னோடிகள் வழியே துவங்கி சி சு செல்லப்பா என நவீன விமர்சனம் வேகம் கொள்ள துவங்கியது. தொ மு சி ரகுநாதன்தான் பாரதி புதுமைப்பித்தன் வழியே அவர்களின் இயக்கம் வழியே மார்க்சிய விமர்சன மரபை துவங்கி வைத்தார் என்று சொல்லலாம்.

கலை இலக்கியங்களை மேற் கட்டுமானமாக கண்டு, வர்க்க பேத சமுக சூழலில், வரலாற்று பொருள்முதல்வாத இயங்கியலில், சோசியலிச லட்சியவாத இலக்கின் பின்னணியில் அமைந்த, பெரும்பாலும் கட்சி நிறுவனம் சார்ந்த எல்லைகளுக்குள் செயல்பட்ட இந்த விமர்சன மரபு, ரஷ்யாவின் உடைவு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் வழியே நிறுவதின் பிடிக்கு வெளியே சென்று மறுமலர்ச்சி கண்டது.

அந்த மறுமலர்ச்சியின் முக்கிய குரல்களில் ஒன்று கோவை ஞானி அவர்களுடையது. தனி மனித அகத்தை, அதன் வழியே கட்டப்படும் பண்பாட்டின் இழையை கவனத்தில் கொண்டவர். இந்த மண்ணின் கலைகளின் இலக்கியத்தின்வேர் தமிழ் மெய்யியல் தளத்தில் இருப்பதை கண்டு அதன் உலகு தழுவிய கிளைகளின் கனியின் சாரத்தை மார்க்சிய மெய்மையில் கண்டு இரண்டுக்கும் உள்ள தொடர்பை, தனது விமர்சன உரையாடல்கள் வழியே துலக்கியவர். கொற்றவையை அணுகி அறிய அவரது மெய்யியல் நோக்கு ஒரு எல்லை வரை எனக்கு துணை நின்றது.

மற்றபடி இவற்றுக்கு முன்பாகவே எனக்கு கோவை ஞானியை தெரியும். பின்தொடரும் நிழலின் குரல் வழியாக.

செம்பட்டாடைதனை இடை சேர்த்தாயே

செம்பருத்தி மலர்களயே குழல் சேர்த்தாயே

எங்கள் சோவியத் தாயே …

என்று  அந்த நாவலில்முழங்கும் முற்போக்கு  கவிஞருக்கு அவர் காட்டும் புன்னகை முகத்தை இப்போது எண்ணிக் கொள்கிறேன்.

ஜெயமோகனின் ஆசிரியர் கோவை ஞானி அவர்களுக்கு அஞ்சலி.

கடலூர் சீனு

கோவை ஞானி அவர்கள் திறந்து காட்டும் அறிவுலகம் இளம் வாசகனுக்குப் பிரமிப்பை கொடுக்கக் கூடியது. தெளிந்த எளிய மொழியில் அவர் பிழிந்து கொடுக்கும் சாரம், ஓர் அறிவுத்துறையில் அவரது ஆழமான புரிதலுக்குச் சான்று. எனது முதுகலை பட்டப்படிப்புக்காகச் சேமிப்பில் இருந்த அவரது நூல்களை மறுவாசிப்பு செய்யும்போது அவரது நிதானமான விளக்கிச் சொல்லும் முறை, இலக்கியச் சூழலிலும் அவர் ஓர் ஆசிரியராகவே தன் பணியைச் செய்துள்ளார் என்றே தோன்ற வைத்தது.

அஞ்சலி ஞானி- ம.நவீன்


கோவை ஞானியின் இணையதளம்
கோவை ஞானி பேட்டி
ஞானிக்கு இயல் விருது…
முந்தைய கட்டுரைதங்கப்புத்தகம், சிறகு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசும் ஆழ்படிமங்களும்