பெருஞ்செயல் – தடைகள்

பெருஞ்செயல் ஆற்றுவது

நித்யசைதன்ய யதியின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சியை அவர் தன்வரலாற்றில் சொல்லியிருக்கிறார். அறுபதுகளில் அவர் அமெரிக்காவில் இருக்கையில் துறவுவாழ்க்கையை தலைக்கொள்ள முடிவுசெய்தார். அப்போது அவருடைய தாய்மாமா அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவருடைய அம்மா மற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு, சாப்பாட்டு இல்லாமல், உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாகவும் உடனே கிளம்பி வரவேண்டும் என்றும் எழுதியிருந்தார்.

நித்யா பதற்றம் அடைந்தாலும் கிளம்பவில்லை. அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அம்மா அளித்த பதிலில்தான் தாய்மாமா எழுதியது பொய் என்று தெரிந்தது. நித்யா முடிவுசெய்திருந்த வாழ்க்கையை தடுக்கும்பொருட்டே அவர் அந்தப் பொய்யை எழுதியிருந்தார். ஆனால் ஏன்? அவருக்கு என்ன லாபம்?

நித்யா பின்னர் அதை நடராஜகுருவிடம் கேட்டார். நடராஜகுரு சொன்னார். “அது இயற்கையின் விசைகளில் ஒன்று. பெருஞ்செயல் ஒன்று தொடங்கப்படும் என்றால் அதற்கு எதிரான விசைகள் திரள்கின்றன. தடைகளாகின்றன. அத்தடைகளை கடப்பவன் அச்செயல்களை ஆற்றினால்போதும் என்று இயற்கை சொல்கிறது. கருவறைநோக்கி ஏவப்படும் விந்தணுக்களில் கோடியிலொன்றே குழந்தையாகிறது. தடுப்பதற்கான எல்லாவற்றையும் இயற்கை உருவாக்கி வைத்திருக்கிறது. உன் தாய்மாமன் கெட்டவர் அல்ல, அந்த விசை அவரை பயன்படுத்திக்கொண்டது, அவ்வளவுதான்”

பெருஞ்செயல் செய்ய விழைவுள்ளவர்கள் கோடி. செய்ய தொடங்குபவர்கள் பலலட்சம். செய்பவர் சில ஆயிரம். முடிப்பவர் அதில் ஒரு சிறுபகுதியினரே. பெரும்பாலானவர்களை தொடக்கத்திலேயே தடுத்துவிடும் அந்த இயற்கைவிசை கருணை கொண்டது. ஏனென்றால் தகுதியற்றவர்கள் இந்தச் சுழலுக்குள் சிக்கி அழியாமல் அது காப்பாற்றுகிறது. ஆற்றை நீந்தி அக்கரை செல்லும் தோள்வல்லமை கொண்டவர்கள் மட்டும் நீரில் இறங்கினால்போதும் என அது நினைக்கிறது.

பெருஞ்செயல் என்றல்ல,வழக்கத்தைவிட சற்றுப் பெரிய செயல் ஒன்றைச் செய்வதானாலும் சூழலில் ஓர் ஒவ்வாமை உருவாவதைக் காணலாம். ஒருவன் செய்யும் அருஞ்செயல் மற்றவர்களை சிறியவர்களும் எளியவர்களுமாகக் காட்டுகிறது. சூழலில் திகழும் அளவுகோல்களை மாற்றியமைக்கிறது. ஒருவன் தங்கள் நடுவே இருந்து சிறகுடன் எழுவதை காணும்போது உருவாகும் தற்சோர்வு, தன்னிரக்க மனநிலையை அவர்கள் அடைகிறார்கள்.

ஆகவே அரிய செயல்களுக்கு எப்போதுமே கடுமையான எதிர்ப்புகளும் ஏளனங்களுமே எதிர்வினையாக எழுகின்றன. வெண்முரசை தொடங்கியபோது வந்த எதிர்வினைகளைப் பார்த்தேன். ஓரிரு வாழ்த்துக்கள், மற்றபடி மிகப்பெரும்பாலானவை ஏளனங்களும் எதிர்ப்புகளும் பின்னிழுக்கும் முயற்சிகளும்தான். இதில் நான் ‘தெரியாமல்’ வாய்விட்டுவிட்டேன், என்னால் இதை முடிக்கவே முடியாது என எழுதப்பட்ட முப்பத்தெட்டு குறிப்புகளை அதை எழுதி முடித்தபின்னர், ஏழாண்டுகள் கழித்து இப்போதுதான் முழுமையாக வாசித்துப்பார்த்தேன்.வேடிக்கையாக இருந்தது.

ஒரு பெருஞ்செயல் உண்மையாகவே நிகழத் தொடங்கி, முன்னேறும்போது அதை தடுக்கவும், ஊக்கமிழக்கச் செய்யவும், சோர்வூட்டவும் எல்லாவகையிலும் முயல்கிறார்கள். சில்லறைச் சச்சரவுகள், புரிதலற்ற விமர்சனங்கள், அர்த்தமற்ற சீண்டல்கள், சிறுமைப்படுத்தும் முயற்சிகள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கின்றன.அதைச் செய்பவர்கள் எப்போதுமே மிகச்சிறியவர்கள், எல்லாவகையிலும். ஆயினும் அவர்களால் மிகப்பெரிய சோர்வுகளையும் சலிப்பையும் உருவாக்கிவிடமுடியும்.

அவற்றுக்கு பலமுகங்கள். இங்கே உள்ள சாதியமனநிலை அதில் எப்போதும் ஓங்கியிருக்கிறது,இந்தியாவில் அது இயல்பானது.அதற்கு வேறுவேறு காரணங்களை அது கண்டடைகிறது. பல முகங்களைச் சூடிக்கொள்கிறது ஆனால் அடிப்படை ஒன்றே. இதுவே முதல்பெருந்தடை. வெளிப்படையாகத் தெரிவதும் நாம் அதிகமாக சீண்டப்படுவதும் இதனால்தான்.

இன்னொன்று, நல்லெண்ணம்கொண்ட தடை. இவர்கள் நம் மீது உண்மையாகவே அக்கறை கொண்டவர்கள். உதாரணமாக அன்னையைச் சொல்லலாம்.அன்னையைக் கொல்லாமல் தவம் செய்யமுடியாது என்று ஒரு சொல்லாட்சி உண்டு. ஏனென்றால் அன்னைக்கு நம் தவம் தெரிவதில்லை, அதன்பொருட்டான துன்பம் மட்டும் கண்ணுக்குப் படுகிறது. ஆகவே அதை தடுக்கவும் பின்னுக்கு இழுக்கவும் முயல்கிறார்.

அன்னை, மனைவி, சுற்றம் எல்லாமே இப்படி தடையென ஆகக்கூடும். நண்பர்களும் ஆசிரியர்களும் தடையாக வந்து நிற்கக்கூடும். நம் நன்மையின்பொருட்டே சொல்கிறார்கள் என நமக்கே தெரியும், அவர்களின் உணர்ச்சிகளும் புரியும், நாம் நம்மையறியாமலேயே அவர்களுக்கு ஆட்படவும் செய்வோம்.முதல் தடையை விட இந்த இரண்டாம் தடை இருமடங்கு வலுவானது.

ஆனால் இவை இரண்டுமே புறத்தடைகள். இவற்றைவிட வலுவானது அகத்தடை. அகத்தடை மூன்றுவகை.

அ. இயல்பான செயலின்மை. மனித உள்ளத்தின், உடலின் இயல்பான நிலை என்பது சும்மா இருப்பதுதான். அசைவின்மையைத்தான் அத்தனை பொருட்களும் முதலியல்பாகக் கொண்டிருக்கின்றன. அசைவு வெளியே இருந்து வரவேண்டும். எச்செயலைச் செய்தாலும் நாம் எதிர்த்துப் போராடவேண்டியது நம்முள் இருந்து ‘சும்மா இரு’ என்று சொல்லும் குரலுடன்தான்.

ஆச்சரியமான நிலைகள் கொண்டது சோம்பல். ஒரு தீவிர உழைப்புக்குப் பின் சற்று சும்மா இருக்கும்போது அற்புதமான இனிமையை நம்முள் நிறைத்து அதுதான் மெய்யான வாழ்க்கையின்பம் என்று எண்ணவைக்கிறது.செயல் நம் முன் பெருகி நின்றிருக்கும்தோறும் சோம்பல் மேலும் மேலும் அழகாக ஆகிறது

சோம்பலுக்கு நாம் பல ஊடுவழிகளை நம்மையறியாமலேயே கண்டடைகிறோம். அதில் முதன்மையானது, செயலை ஒத்திவைப்பது. ஒன்றை நிறுத்திவிடுவது நமக்கு குற்றவுணர்ச்சியை உருவாக்கும். ஒத்திவைப்பது குற்றவுணர்ச்சிக்கு நல்ல விளக்கம். மீண்டும் தொடங்குவோம் என்று சொல்லிக்கொள்லலாம், ஆனால் பெரும்பாலும் ஒத்திவைப்பதென்பது கைவிட்டுவிடுவதே

ஒத்திவைப்பதற்கான காரணங்களை நாம் பலவாறாக உருவாக்கிக்கொள்ளலாம். மேலும் ஆராய்ச்சி செய்வதற்காக, மேலதிக தயாரிப்புக்காக, உகந்த தருணத்துக்காக, சில்லறை வேலைகளை முடித்துவிட்டு முழுமூச்சாக இறங்குவதறாகாக, குடும்பச்சுமைகளை தவிர்த்து ஓய்வாக தொடங்குவதற்காக…

நான் ஒன்றை கவனித்திருக்கிறேன், எப்போதுமே ஒரு செயலின் உச்சத்தில்தான் ஒத்திவைக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. நாவல்களின் வளர்ச்சி என்பது ஒரு வில்போல. நாவல் வளர்ந்து வளர்ந்து ஓர் உச்சத்தை அடைந்து அதன்பின் தொகுத்துக்கொண்டு கீழிறங்கத் தொடங்கும். அந்த வளைகோட்டின் உச்சியை அடைவதற்கு முன்பு ஒத்திவைக்கும் எண்ணம் ஏற்பட்டு கணம்தோறும் பெருகி கோட்டைச் சுவர் போல ஆகிவிடும். மண்டையால் முட்டி கடந்து செல்லவேண்டும்.

ஆ. தன்னம்பிக்கை அழிதல். சரியாகத்தான் செய்கிறோமா என்னும் ஐயம் முதலில் எழுகிறது. தன் திறன்மீதான அவநம்பிக்கையாக மாறுகிறது. செய்துகொண்டிருக்கும் செயலின் பேருருவம் அளிக்கும் மலைப்பு மேலேறி அழுந்துகிறது. இது வெளியே ஒலிக்கும் சிறுமைக்குரல்களைச் செவிகொள்ள ஆரம்பித்தால் நாம் சலித்துச் சோர்ந்து நின்றுவிடுவோம்.

செயலை ஒட்டுமொத்தமாகப் பார்க்காமல் துளிகளாக பார்ப்பதும் அன்றாடமென நிகழ்த்திக்கொள்வதும் மட்டுமே இதைக் கடப்பதற்கான ஒரே வழி. அன்றாடச் சிறுவெற்றிகள் அளிக்கும் ஊக்கம் நம்மை நம்பிக்கை கொள்ளச் செய்யும்.

இ.பொருளின்மை உணர்வு. இந்தச் செயலுக்கு காலப்பெருக்கில் ,வாழ்வுவெளியில் என்ன பொருள் இருக்கமுடியும் என்னும் எண்ணம். இது பொய்யான உணர்வல்ல, உண்மையின் ஒரு கூர்முனைதான். எச்செயலுக்கும் காலவெளியில் வாழ்வுப்பெருக்கில் பொருளே இல்லை. அல்லது நாமறியும் பொருள் இல்லை. அதை எண்ணுபவன் எதையும் செய்யமுடியாது. ஒரு நாவலை எழுதுபவன் இதை எதிர்காலத்தில் எவரேனும் படிப்பார்களா என்று நினைத்தாலே அனைத்து ஊக்கத்தையும் இழந்துவிடுவான்

இந்த மூன்று அகத்தடைகளிலும் முறையே ஒன்றைவிட அடுத்தது ஆற்றல் கொண்டது. புறத்தடைகளை ஒருவகையான தன்னம்பிக்கையால் கடந்துவிடலாம்.கொஞ்சம் ஆணவமேகூட நன்று. அகத்தடைகளை நாம் நமக்குரிய வழிகளில் வெல்லவேண்டும்.

என்ன சிக்கல் என்றால் செயல் முடியும்வரை அகத்தடைகளை நாம் வெளியே சொல்லக்கூட முடியாது. எவரிடம் சொன்னாலும் அவர்களில் செயலைத்தடுக்கும் அந்த ‘மாயசக்தி’ தோன்றிவிடும். ‘ஆமாம், கொஞ்சம் ரெஸ்டு விடுங்க’ என்றோ ‘உண்மைதான் அவசரப்பட்டிட்டீங்க’ என்றோ ‘சரிதான், ஒண்ணுக்கும் அர்த்தமில்லை’ என்றோ சொல்லி நம்மை உட்கார வைத்துவிடும். நாமேதான் நம்மை வெல்லவேண்டும்.

ஆனால் அகத்தடைகள் இப்படி அமையும் என தெரிந்திருப்பதே ஒரு நல்ல பாதுகாப்புதான்.தெரிந்த பேய் பல்லையும் நகத்தையும் இழந்துவிடுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசின் பெண்கள்- சுபஸ்ரீ
அடுத்த கட்டுரைதன்மீட்சி வாசிப்பு