பெருஞ்செயல் ஆற்றுவது

அன்புள்ள ஜெ,

பெருஞ்செயல் ஆற்றி அமைந்திருக்கிறீர்கள். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். திட்டமிட்டு ஒருங்கிணைத்து சலிக்காமல் செயலாற்றி முடிப்பதில் நீங்கள் கொண்டிருக்கும் தேர்ச்சி மலைக்க வைக்கிறது. இந்தச் செயலை எப்படி ஆற்றினீர்கள், இச்செயலில் நீங்கள் அடைந்த தடைகள் என்ன, அதையெல்லாம் எப்படி கடந்தீர்கள் என்பதைப் பதிவுசெய்வது பிறருக்கு உதவலாம் என நினைக்கிறேன்.

ராஜேஷ் குமாரசாமி

***

அன்புள்ள ராஜேஷ்

பெருஞ்செயல்கள் என்பவை என்ன? அவை நம் முயற்சியால்தான் பெருஞ்செயல்கள். நமக்கு பெருஞ்செயல்கள், ஒருவேளை நம் சூழலுக்கும் அவை பெருஞ்செயல்களாக இருக்கலாம். ஒட்டுமொத்தமாக மானுடத்திற்கு அவை என்ன பொருள், அவற்றின் விளைவுகள் என்ன என்பதெல்லாம் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. ஆகவே முதன்மையான சொற்றொடர் “கடமையைச் செய், பயனை காலவெளியை ஆளும் விசைகளுக்கு விட்டுவிடு” என்பதே.

அது எளிதல்ல, நம் மனம் நாம் செய்யும் செயலின் பொருளென்ன என்றும் விளைவென்ன என்றும் அரற்றிக்கொண்டேதான் இருக்கும். அதை வெல்வது தொடர்ச்சியாக நமக்குநாமே சொல்லிக்கொள்வதன் வழியாகவே சாத்தியம். நான் அதை இளமையிலேயே நித்யாவிடமிருந்து சொல் எனப் பெற்றேன். அதை சொல்லிக்கொள்ளாமல் ஓர் அடி கூட முன்னெடுத்து வைக்கமுடியாது.

அதோடு செயலின் விளைவல்ல, செயலினால் அடையும் பயன்களும் அல்ல, அச்செயலை ஆற்றும்போது நாம் அடையும் இன்பமும் நிறைவுமே மிகப்பெரிய லாபங்கள் என்று உணரவேண்டும். இது ஒப்புநோக்க எளிது. செயலாற்றுவதன் போதையை முயன்று பெருக்கிக்கொள்ளவேண்டும். அதுவும் நாமே நமக்கு ஆணையிட்டு நம் உள்ளத்தை அதற்குப் பழக்கி ஏற்கவைத்தால்தான் இயலும்.

நான் செயலாற்றுவதை ஒரு களியாட்டமாக எண்ண என் மனதைப் பழக்கினேன். அமர்ந்து பணியாற்றும் இடத்தை இனியது இனியது என்று எனக்கே சொல்லி நிறுவிக்கொண்டேன். இனியவற்றை என்னைச் சுற்றி பரப்பிக்கொண்டேன். அங்கே அமர்ந்தாலே ஓர் இனிமை மனதில் ஊறவேண்டும். என் கனவுகளில்கூட நான் அங்கே அமர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

அங்கே எழுதுவதை தவிர வேறெதையும் செய்யமாட்டேன். அங்கே கசப்பும் சலிப்பும் அடையச்செய்யும் எதுவும் நிகழாமலிருக்க கவனம் கொள்வேன். எதிர்மறையான எதுவும் அங்கே உளப்பதிவாக ஆகிவிடக்கூடாது. குறிப்பாக அந்த அறையில் இருந்து தொலைபேசியில் பேசுவதே இல்லை.

செயலை ஒட்டுமொத்தமாக அல்ல, சிறுசிறு அலகுகளாகவே செய்கிறோம். நாம் செல்லவேண்டிய தொலைவு எதுவானாலும் காரில் நம் முகப்புவெளிச்சம் படும் இடத்தை மட்டுமே நம்மால் பார்க்கமுடியும் என்று சொல்லப்படுவதுண்டு. அந்த அலகுகளை செம்மையாக முழுமையாகச் செய்வது மட்டுமே அப்போது நம் பணி.மொத்தவடிவம் அதுவாகவே திரண்டு வரும்.

செயலாற்றி நிறைவடையும் நிலை முழுமையை அடைந்தபின்பு வரும் ஒன்று அல்ல. செயலின் சிறுபகுதியை இயற்றி முடித்தபின்னரும் அதை அடையலாம். வெண்முரசின் ஒவ்வொரு அத்தியாயமும் அன்றைக்குரிய கொண்டாட்டத்தை எனக்கு அளித்திருக்கிறது. அதற்கு மட்டுமே உரிய வடிவமுழுமை, தரிசன ஒருமை அன்றைய நாளையே மகிழ்வுக்குரியதாக ஆக்கும். அப்படி நான் நிறைவடையும் முந்நூறு அத்தியாயங்களாவது வெண்முரசில் உள்ளன.

இதுவரை சொன்னவை பிறரும் வெவ்வேறு செயல்களைச் சார்ந்து சொன்னவையாக இருக்கலாம். நானே உணர்ந்த ஒன்று உண்டு, அது படைப்பிலக்கியம் போன்றவற்றுக்கு மிகப்பொருத்தமானது. ஆனால் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அதுவே விதியாக இருக்கக்கூடுமென நான் நினைக்கிறேன்

பெரும்பாலான செயல்பாடுகளில் உள்ள துன்பம் என்பது அவற்றைச் செய்யும்போது உருவாகும் அலைக்கழிப்பும் தத்தளிப்பும்தான்.அந்த அலைக்கழிப்பும் தத்தளிப்பும் ஏன் வருகிறது என்று கூர்ந்து பார்த்திருக்கிறேன். நம் அகம் செயல்படுவது இரண்டு நிலைகளிலாக. ஒன்று நாம் பழகிய, அறிந்த விழிப்புநிலை. இன்னொன்று, நாமே அறியாமல் நம் அகத்திலிருந்து எழும் ஆழ்நிலை.

நாம் கற்ற திறன்கள் எல்லாமே விழிப்புநிலை சார்ந்தவை.மொழித்தேர்ச்சி, கைத்தேர்ச்சி, வடிவக்கணக்குகள் எல்லாமே. படைப்பியக்கம் எதுவானாலும் அது அடிப்படையில் ஆழ்நிலையைச் சேர்ந்தது. விழிப்புநிலை என்பது ஒரு கலம், அல்லது பீடம். படைப்பியக்கம் அந்த கலத்தில் பெய்கிறது, அந்த பீடத்தில் வந்து அமர்கிறது

ஆழ்நிலை வெளிப்பாடு அதற்கான விழிப்புநிலை வடிவை சந்திக்காதபோதுதான் அலைக்கழிப்பும் தத்தளிப்பும் உருவாகிறது. கலமும் பீடமும் இல்லாதபோது உருவாகும் சிக்கல் அது. அப்போதுதான் நாம் மீளமீள முயல்கிறோம். அப்படி விழிப்புநிலையில் முயலுந்தோறும் இன்னும் தவறாகவே போகும்.கைதவறிச் செல்லுந்தோறும் இறுகப்பற்ற முயல்வோம். அதன்விளைவாக பதற்றமும் எரிச்சலும் உருவாகிறது.

அதைவெல்ல முதல்வழி எப்போதும் விழிப்புநிலையில் பயிற்சி செய்துகொண்டே இருப்பது. ஆழ்நிலையில் இருந்து ஒரு கலையோ தொழிலோ வெளிப்பாடு கொள்ளும்போது மட்டும் விழிப்புநிலை அறிதல்களை அதனுடன் கொண்டுசென்று சேர்ப்பது எவராலும் இயலாது. கலை, தொழில் எதுவானாலும் அதற்கான திட்டமிட்ட தொடர்பயிற்சி எப்போதும் நடந்தபடி இருக்கவேண்டும். கலமும் பீடமும் எக்கணமும் தயாராக காத்திருக்கவேண்டும்.

உதாரணமாக, இசைக்கலைஞர்கள் எப்போதுமே வாசித்துக்கொண்டே இருக்கிறார்கள். மொழிக்கலைஞர்களும் மொழிக்குள்ளேயே இருக்கவேண்டும். எச்செயலானாலும் அதை ‘எப்போதுமே’ செய்துகொண்டே இருக்கவேண்டும். தன்னிச்சையாக, கைகளும் மனமும் முற்றிலும் மறந்து இயல்பாகவே அது நிகழுமளவுக்கு. ஆழ்மனம் தூண்டலடையும்போது தன்னெழுச்சியாக அது உரிய விழிப்புநிலையின் வடிவங்களைக் கண்டடையும்.இயல்பாக நிகழ்வதே கலையும் இலக்கியமும் செம்மையான செயலும் ஆகும்.

இது உலகமெங்கும் இன்றுவரை தோன்றிய அத்தனை எழுத்தாளர்களும், கலைஞர்களும் செயலாற்றுவோரும் பயின்றுவந்த வழிமுறைதான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் அதை எழுதியிருக்கிறார்கள். இதற்கு விதிவிலக்காக எவரும் இருப்பதுபோலத் தெரியவில்லை.

இவ்வாறு தன் கலையை, தொழிலை ‘பயின்றபடியே’ இருப்பது என்பது ஆழ்மனம் வெளிப்பாடு கொள்ளும் அந்தச் சூழலிலேயே எப்போதும் நாம் இருந்துகொண்டே இருப்பதுதான்.தின்பண்டம் தரும் அன்னையைச் சுற்றிச் சுற்றி அடுக்களையருகிலேயே குழந்தை நின்றிருப்பதைப்போல. தன் உள்ளே நிகழும் மிகமெல்லிய அசைவுகளை, எழும் மிகமிக சன்னமான குரல்களைக்கூட கேட்கும் கவனத்துடன் எப்போதும் இருப்பது அது

எந்த அளவுக்கு அந்தச் சூழலில் இருந்து விலகிச் செல்கிறோமோ அந்த அளவுக்கு மீண்டும் அங்கு செல்வது கடினமாகிறது. கலைகள், இலக்கியங்கள் மட்டுமல்ல எல்லா செயல்களுக்கும் இதுவே இயல்பாக உள்ளது.பெரும்பாலானவர்களின் தத்தளிப்பும் எரிச்சலும் சலிப்பும் எல்லாமே ஒன்று புறப்பயிற்சியை அடையாமையால் வருவது அல்லது விலகி அகன்றபின் அதை மீண்டும் சென்று அடையமுடியாததனால் வருவதுதான்.

இவ்வாறு ஆழ்நிலையில் இருந்து அகல்வதென்பது காலத்தால் மட்டும் அல்ல, மனநிலையாலும்தான். சொந்தமாக லோன் வாங்கி வீடு கட்டியமையால் கவிஞனாக அல்லாமலானவர்கள் உண்டு. போட்டித்தேர்வுக்கு பயின்றமையால் இலக்கியத்தை இழந்தவர்கள் உண்டு. உலகியல்சார்ந்த எளிய செயல்பாடுகள் எவையானாலும் அவை நுண்ணுணர்வை அழிக்கின்றன. தவிர்க்கவே முடியாத குடும்பம், தொழில் போன்றவையே கூட. அரசியல் சழக்குகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஓர் எல்லைவரை இலக்கியக் கோட்பாடுகளே கூட நுண்ணுணர்வை அழிக்கின்றன.

ஆனால் நாம் சிலவற்றை தவிர்க்க முடியாது. தவிர்க்கமுடியாமல் உலகியல்செயல்பாடுகளில் ஈடுபடும்போதுகூட அவற்றில் பெரிய இலக்குகளோ மிதமிஞ்சிய வெறிகளோ இல்லாமல் இருந்தால் நுண்ணுணர்வைப் பேணிக்கொள்ள முடியும்.நம் நுண்ணுணர்வு சார்ந்த உலகை அந்தரங்கமாக வைத்துக்கொண்டு, அதிலிருந்து ஒருபோதும் முற்றாக பிடியைவிடாமல் இருந்தாலே போதும்

ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுள்பக்திக்குச் சொல்லும் எல்லா உதாரணங்களும் இதற்கும் பொருந்தும். ஆய்ச்சியர் சாலையில் எப்படி நடந்து, என்னென்ன செய்தாலும் தலையில் மோர்க்குடம் சமநிலையில் இருப்பதுபோல நம் நுண்ணுணர்வை வைத்துக்கொள்ளலாம்.எத்தனை காற்று அடித்தாலும் கருவறைச் சுடர்விளக்கை அணையாமல் பார்த்துக்கொள்வதுபோல பேணிக்கொள்ளலாம்.

அத்துடன் ஒன்று உண்டு, அப்படி புறத்தே ஒரு செயலை பயிற்சியென நிகழ்த்துவது, அதில் மூழ்குவது என்பது ஒரு தியானம்.அது விழிப்புநிலையை கரைத்து ஆழ்நிலையை வெளிப்படச் செய்கிறது.இலக்கியவாதி மொழியை அளைந்துகொண்டிருந்தாலே போதும், அவனுள் இலக்கியம் சார்ந்த கனவுகள் எழும், படைப்புகளாக ஆகும். ஆசாரி மரத்தை இழைத்துக்கொண்டிருந்தாலே போதும். நல்ல மெட்டு வருவதற்காக இளையராஜா வெறுமே ஆர்மோனியத்தை இசைப்பதை நான் கண்டிருக்கிறேன், அவருக்கு ஐந்து அல்லது பத்துநிமிடங்கள் போதும்

கடைசியாக ஒன்று, கலையிலக்கியம் மட்டுமல்ல எச்செயலும் ஆழ்நிலையாலேயே பெரும்பாலும் நிகழ்த்தப்படவேண்டும் [வணிகம் தவிர.வணிகம் முழுக்கமுழுக்க தர்க்கத்தால் நடத்தப்படவேண்டும்]. ஆழ்நிலைவெளிப்பாடு நிகழ்ந்துவிட்டால் அதன் இயல்பான சிறிய பிசிறுகளைச் சீர்செய்ய ஓரிரு முறை முயலலாம். ஆனால் நம் ஆழ்நிலை வெளிப்பாட்டை விழிப்புநிலையைக் கொண்டு முழுமையாக ‘செப்பனிட’ அல்லது ‘மேம்படுத்த’ முயலக்கூடாது.

அவ்வாறு செய்தால் அதன் விளைவுகள் பெரும்பாலும் எதிர்மறையானவை. ஆழ்நிலை வெளிப்பாடுகளில் ஒரு கட்டற்றதன்மை, தன்னியல்பான விசை உண்டு. அவை விழிப்புநிலை சார்ந்த மொழி,வடிவம்,தர்க்கம் ஆகியவற்றில் வந்தமைகின்றன. ஆனால் எப்படி அமைந்தாலும் எப்போதும் ஒருபகுதி வெளியேதான் கிடக்கும். புரிந்துகொள்ள முடியாததாக, கட்டற்றதாக. கலையில் மட்டுமல்ல மற்ற செயல்களில்கூட அப்படித்தான்

அந்த மீறலையும் முழுக்க மொழி,வடிவம்,தர்க்கம் ஆகியவற்றுக்குள் கொண்டுவர முயன்றீர்களென்றால் நீங்கள் ஆழ்நிலைக்குமேல் விழிப்புநிலையை போடுகிறீர்கள். ஆழ்நிலையின் கட்டின்மையை சேணமும் கடிவாளமும் இட்டு நிறுத்துகிறீர்கள். அது படைப்பெழுச்சிக்கு எதிரான போர்தான். அதைப்போல சலிப்பூட்டும் எரிச்சலூட்டும் பிறிதொன்றில்லை.

அப்படிச் செய்கையில் உங்களுக்குள் ஒரு கண்காணிப்புப் புத்தி உருவாகிவிடுகிறது. ஆழ்நிலைவெளிப்பாட்டை நீங்கள் ஐயத்துடன் பார்க்க ஆரம்பிக்கிறீர்கள். அதன்பின் ஒன்று நிகழும், உங்கள் ஆழ்நிலை வெளிப்பாடு தயங்க ஆரம்பிக்கும். அப்பா பார்க்கும்போது குழந்தைகள் விளையாடாமலிருப்பதுபோல. வெளிப்பாடு நிகழ்ந்தாலும் அதில் தன்னியல்பான ஒழுக்கு இருக்காது, செயற்கைத்தன்மை இருக்கும். ஒருவகை இறுக்கம் இருக்கும்.’

அந்நிலையில் பொதுவாக புதியன நிகழாது.நீங்கள் உங்கள் விழிப்புநிலையை ஆழ்நிலைக்குமேல் நிபந்தனையாகப் போட்டால் ஆழ்நிலை விழிப்புநிலைக்கு ஏற்ப தன்னை சிறிதாக்கிக்கொண்டு வெளிப்பட ஆரம்பிக்கும். தன்னை முழுமையாகவே மாற்றிக்கொள்ளும்.

நீங்கள் உங்களிடம் பேசும் ஒருவரின் எல்லா பேச்சையும் மறுத்து ஐயப்பட்டுக்கொண்டே இருந்தால் அவர் புதிய எதையுமே பேசாமலாகிவிடுவதைக் காணலாம். உங்களுக்கு நீங்களே அப்படி ஆகிவிடுவீர்கள். உங்கள் விழிப்புநிலையை மீறி எதையுமே உங்கள் படைப்புகளும் செயல்களும் வெளிப்படுத்தாமாகிவிடும்.

இலக்கியத்தைப் பொறுத்தவரை மொழியைச் செப்பனிடுதலை இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். மொழிதான் இலக்கியத்தின் ஊடகம், ஆனால் மொழியல்ல இலக்கியம். அது மொழிக்கு அப்பாலுள்ள கனவு. மொழியில் மிதமிஞ்சி கவனம்செலுத்துபவர்கள் மொழிசார்ந்த இறுக்கமான விதிகளுடன் சில நிலையானவடிவங்களை உருவாக்கிக் கொள்வார்கள். ’டெம்ப்ளேட்’ அல்லது ’ஸ்டேண்டேர்ட்’ மொழி அது.

படைப்பிலக்கியத்திற்கு மிகமிக எதிரானது அதுவே. அதில் எந்த புதியவிஷயமும் நிகழாது. ஆசிரியன் அறிந்தவையே அதில் நிகழும், அவனைமீறி எதுவும் எழாது. அவன் ஓர் இலக்கணவாதியாக ஆகிவிடுவான். அவனுடைய கற்பனையின் அழிவு அது.

மொழியைச் செப்பனிடலாம், ஓர் எல்லைவரை. ஒருமுறை, அல்லது இன்னொருமுறை. அது கவனப்பிழைகளை களைவதற்கு மட்டுமே. தொடர்புறுத்தலில் வரும் சிக்கல்களை சீரமைக்கவும் செய்யலாம்.அதற்குமேல் அதை மேம்படுத்த முடியாது. நிறைவில்லை என்றால் தூக்கி வீசிவிடவேண்டியதுதான். ஏனென்றால் கலை என்பது ஆழ்நிலையின் வெளிப்பாடே, அதை விழிப்புநிலையால் எவ்வகையிலும் உருவாக்கவோ மேம்படுத்தவோ முடியாது.

எந்த படைப்பும் செயலும் அதற்குரிய பிழைகள் பிசிறுகளுடன்தான் இருக்கும். சென்றகாலத்தைய படைப்பாளிகளில் எண்ணிஎண்ணி சொல்லடுக்கி எழுதியவர்களின் ஆக்கங்களை இன்று வாசிக்கையில் அவை சொல்மிகையும் சொற்பிசிறும் கொண்டவையாக ஆகிவிட்டிருப்பதைக் காண்கிறோம். காலத்தால் எந்த வடிவமும் அப்படி ஆகிவிடும். ஆகவே அது அல்ல படைப்பின், செயலின் அளவுகோல்.

அந்த இல்லாத முழுமையை அடைய முயல்வது வீண். பயிற்சி என்பது தன் அகம் தன்னைமீறி எழுவதன்பொருட்டே நிகழவேண்டும். தெய்வம் எழுவதற்கே தவம். ஆகவே என் நோக்கில் ஓர் எழுத்தாளன் தன் படைப்பை ஒருமுறைக்குமேல் மெய்ப்புநோக்கிப் பிழைதிருத்துவதைக்கூட செய்யக்கூடாது.

ஆனால் அந்த ஊழ்கநிலையை உருவாக்கும் எல்லா செயல்களும் உகந்தவையே. நான் ஓவியங்களைப் பார்ப்பதுண்டு, சினிமாப்பாடல்களை மொழியாக்கம் செய்வதுண்டு, அவையெல்லாமே பயிற்சிகள்தான்.

பெருஞ்செயல் என்றால் பெருங்கனவின் நடைமுறை வடிவம். கனவு ஒட்டுமொத்தமானது.செயல் அதன் துளிகளால் ஆனது. துளிகளில் மனம் ஊன்றி தொடர்ச்சியாகச் செய்துகொண்டே இருக்கவேண்டியது. ஒட்டுமொத்தம் நம் கனவில் இருக்கிறது. ஆழத்தில் நாம் அறியாமல் உறைகிறது. துளிகளில் நாம் முழுமையாக வெளிப்பட்டோம் என்றால் ஒட்டுமொத்தம் ஒத்திசைவுடன் தன்னை நிகழ்த்திக்கொள்வதைக் காண்போம்

[தடைகளைப் பற்றி தனியாகவே பேசவேண்டும்]

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசும் ஆழ்படிமங்களும்
அடுத்த கட்டுரைரம்யா, திராவிட மனு- கடிதம்