செயல்வழி சென்றடைவோம் அவரவர் அகயிலக்கை-விலையில்லாமல் 200 தன்மீட்சி

நோயச்சகாலத்தின் பெருந்தனிமைக்காலம் மனித மனங்களுக்குள் பலவித வெறுமையையும், எதிர்மையையும்,மெல்லமெல்ல சூழச்செய்வதை, நம்மைச்சுற்றி நிகழ்கிற வாழ்வனுபவங்களின் வாயிலாக அறிந்து அச்சமடைந்து வருகிறோம்.

தனிமனித காழ்ப்புகள் மற்றும் சமூகக்கருத்து மோதல்கள் ஆகியன முன்னினும் உக்கிரமாக வெளிப்படத் துவங்கியிருக்கிறது. இவ்வாழ்வில் உண்டாகிற எத்தகு துயர்நொடியையும் உள்ளச்சமின்றி எதிர்கொள்வதற்கான அகத்துணிவை எக்காலத்தும் உண்டாக்க வல்லவையாக படைப்புகளும் கலைகளும் உள்ளன. மொழிவழியாக தன்னிலை வளர்க்கிற ஒரு சமூகத்தில் எழுத்துப்படைப்புகளின் பங்களிப்பென்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அவ்வகையில், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய முக்கியமான கட்டுரைகளைத் தொகுப்பு ‘தன்மீட்சி’ புத்தகம். புறத்தின் அழுத்தங்களால் நம் மனதுக்குள் அவநம்பிக்கை உண்டாகிற சூழலில், அதைமீறி நம் சுயத்தை அடைவதற்கான எழுத்தாதாரமாக இப்புத்தகம் முழுமைபெற்றுள்ளது.

குறிப்பாக, இளவயதோர்களிடம் இக்கட்டுரைகள் உருவாக்கிய அகத்தாக்கம் அளப்பரியது. நம்முள் உருவாகிற அகச்சோர்வையும், அகச்சலிப்பையும் இல்லாதாக்கி, செயலின்மைக்குள் ஆழ்ந்துவிடாமல் இருப்பதற்கான ஒரு செயல் உத்வேகத்தை இப்புத்தகம் மனதிற்களிக்கிறது. தன்னறம் நூல்வெளி வாயிலாக உருவாக்கப்பட்ட இப்புத்தகத்தில், ஜெயமோகன் அவர்களின் ‘செயல்சார் முன்செல்லலை’ அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளின் வாயிலாக தங்களின் வாழ்வர்த்தத்தை வகுத்துக்கொண்ட சாட்சி இளைஞர்களின் செயல்பங்களிப்பின் ஆழம் குறித்து தெளிவுரைக்கிறது.

தன்மீட்சி புத்தகத்தை வாசிக்க விரும்புகிற 200 விருப்பமனங்களுக்கு, அப்புத்தகத்தை விலையில்லாமல் அனுப்பிவைக்கிற ஒரு சமகாலச்செயலை தன்னறம் நூல்வெளி முன்னடுக்கிறது. இதன்படி, முதலில் விருப்பந்தெரிவிக்கிற 200 தோழமைகளுக்கு தன்மீட்சி புத்தகங்களை விலையில்லாமல் அனுப்பிவைக்க உள்ளோம். இப்புத்தகத்தை வாசித்துவிட்டு, அதனுள் ஆழ்ந்துள்ள கருத்துக்களைப் பற்றியும் அதுதருகிற அகத்தெளிவுபற்றியும் சிறுசிறு கட்டுரைக் குறிப்புகளை எழுதும் ஒரு எளிய பதில்செய்கையை, புத்தகம்பெறுகிற தோழமைகளிடம் கோரிக்கை வைக்கிறோம். மேலும், புத்தகம் பெற்றுக்கொண்ட தோழமைகள் தாங்களிறந்த நட்புறவுகளுக்கு அப்புத்தகத்தை அடுத்தடுத்து பகிர்ந்தும் அதன் செயல்நீட்சியை தொடரவேண்டுகிறோம்.

எத்தனையோ இளையவர்கள் தங்கள் செயல்பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கான சாட்சிக்கட்டுரைகள் இப்புத்தகம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நம்முடைய செயலுக்கு நாமே பொறுப்பேற்கிற ஒரு துணிச்சலை நமக்குள் வரவழைக்கிய ஒரு இலக்கியப்படைப்பு, எல்லாவகையிலும் நம் வாழ்வினை வழிநடத்தவல்லது.

செயலாற்றுதல் மூலமே நம்மால் செயலைக் கடந்துசெல்ல முடியும். தனிமைக்காலம் என்பது எவ்வகையிலும் ஓய்வுக்காலமல்ல. செயலிலக்குகள் என்றும் ஓய்வற்றவை. ‘நிற்காதே செல்!’ என்ற சொல் தருகிற அதிர்வினை தாண்டி எவ்வித எதிர்மையும் நம்மை தடுத்துவிடமுடியாது. செயல்வழி சென்றடைவோம் அவரவர் அகயிலக்கை.

புத்தகம்பெற விருப்புமுள்ள தோழமைகள் பின்வரும் எண்ணுக்கு, தங்களுடைய முழுஅஞ்சல் முகவரியை 7667040800 என்ற தொலைபேசி எண்ணுடன் வாட்சப் மட்டும் செய்யவும்.

நன்றியுடன்

தன்னறம் நூல்வெளி

முந்தைய கட்டுரைகடைசிக் கண்ணீரின் குரல்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : கர்ணன்