நித்யமானவன், மறைமுகம் – கடிதங்கள்

நித்யமானவன் [சிறுகதை] – செந்தில் ஜெகன்னாதன்

அன்புள்ள ஜெ

செந்தில் ஜெகன்னாதனின் நித்யமானவன் வழக்கமான டெம்ப்ளேட்டில் அமைந்த சிறுகதை. அவன் சென்னை வீட்டை விட்டு கிளம்பும்போதே கதைமுடிவு தெரிந்துவிடுகிறது. ஆனால் அந்த கதைக்குள் அவர் உருவாக்கும் ஒரு புத்தம்புதிய படிமம்தான் அதை அழகான கதையாக ஆக்குகிறது. அவன் ஒரு நாளில் செத்து மீண்டும் பிறக்கிறான். ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறான். இந்த மாதிரி ‘ஆயிரம்ஜென்மங்கள்’ எடுப்பது என்பது கலையில்தான் சாத்தியம். அந்த ஈர்ப்பு இருக்கும் வரை அவனால் கலையிலிருந்து விடுபடவே முடியாது. கலையின் ‘கொல்லும் வசீகரம்’ வெளிப்பட்ட சிறுகதை. அதோடு கலை கலைஞனுக்கு அளிப்பது என்ன என்பதைக் காட்டிய கதை

மகாதேவன்

***

அன்புள்ள ஜெ

1990களில் ஓர் அறக்கட்டளைக்காக சில நாடகநடிகர்களை பேட்டி எடுக்கநேர்ந்தது. அதில் ஒருவர் கடுமையான வறுமையில் இருந்தார். அவருடைய சொந்தக்காரர்களெல்லாம் நல்ல நிலையில் இருந்தார்கள். அவர் சொன்னார். “ஆமாம், எல்லாமே கண்ணுமுன்னாடி மறைஞ்சுபோச்சு. ஒண்ணுமே மிச்சமில்லை. ஆனா நான் ராமனா கிருஷ்ணனா அர்ஜ்ஜுனனா வாழ்ந்திருக்கேன். அது போரும்” ஆச்சரியமாக இருந்தது. கலை என்றால் என்ன என்று அப்போது தெரிந்தது. பொருளாதாரத்தை ஈட்டிக்கொண்ட எவருக்கும் திரும்பிப்பார்க்கையில் அப்படி ஒரு வாழ்க்கையில் பலமுறை பலராக வாழ்ந்த அனுபவம் இருக்காது. அந்த அனுபவம் கலைஞர்களை ஆட்டிவைப்பதை செந்தில் ஜெகன்னாதனின் நித்யமானவன் கதை வழியாக அறிந்துகொண்டேன். நல்ல கதை. எழுதியவர் இளம்படைப்பாளி என நினைக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்

எஸ்.ராஜன்

***

மறைமுகம் [சிறுகதை] ஜா.தீபா

அன்புள்ள ஜெ

ஜா.தீபாவின் கதை நுணுக்கமானது. அந்தக்கதை ஒரு பெண்ணின் துயரம் என்று பொதுவாக வாசிக்கலாம்தான். ஆனால் நுட்பமாகப்பார்த்தல் ஒரு பெண்ணின் பழிவாங்குதல்தானே அது? அவளால் அப்படித்தானே பழிவாங்க முடியும்?  தேடித் தேடிப் பாத்தேன் பாட்டி. அவரை எனக்குத் தெரியவேயில்ல…அவர் குழந்தை எதுன்னு அவருக்குத் தெரியாது…. என்று அவள் சொல்கிறாள்.என் குழந்தைக்கு அப்பனாக நீ இல்லாமலானால் நீ எனக்கு யார் என்று கேட்கிறாள் இல்லையா?

நீ ஒரு பொதுமனிதன், ஆனால் எனக்கு நீ யாருமில்லை. இந்தக்கதையை ஊருலகமும் புகழும் சரித்திரபுருஷனான வாஞ்சிநாதன் அவனுடைய சொந்த மனைவிக்கு யாரென்றே தெரியாத ஒருவன் என்றுதான் வாசிக்கவேண்டியிருக்கிறது. ஜா.தீபா சிறப்பாக எழுதியிருக்கிறார். வாழ்த்துக்கள்

சித்ரா

***

அன்புள்ள ஜெ

ஜா.தீபாவின் மறைமுகம் அழுத்தமான கதை. மறைமுகம் என்பது மறைக்கப்பட்ட முகம், மறைந்திருக்கும் முகம் என்று அர்த்தம் வரும் வார்த்தை. ஆழமாக அந்த உணர்ச்சிகளை எழுதியிருக்கிறார்.  அதன் கீழ் சுண்டுவிரலை மட்டுமே வைத்து தொடும் அளவுக்கான இடத்தில் மெதுவாக காமாட்சி அழுத்தினாள். நெற்றியைத் தடவினாள். புருவத்தை நீவினாள். என்ற வரி ஓர் உதாரணம்.

நான் இதை என் சர்வீஸில் பார்த்திருக்கிறேன். குழந்தை இறந்துவிட்டால் அம்மாக்கள் ஆஸ்பத்திரியில் அழாமல் அமர்ந்திருப்பார்கள். தொட்டுத்தொட்டுப்பார்ப்பார்கள். தொட்டுத்தொட்டு தன் உயிரின் வெப்பத்தை அதற்கு கொடுத்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள் என்று நினைப்பேன். பயிற்சிகாலகட்டத்தில் என் புரபசர் அது எல்லா மிருகமும் செய்வது. நாய் பசு எல்லாம் நக்கிக்கொண்டே இருக்கும் என்று சொன்னார். அந்த பழக்கத்தை வாசித்தபோது படபடப்பாக இருந்தது. நுட்பமாக எழுதப்பட்ட சிறந்த கதை. ஆனால் மரணித்தான் போன்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். அவை தப்பான சொல்லாட்சிகள். கிளீஷேக்களும்கூட

எம்.சந்திரகுமார்

***

மறைமுகம், மூங்கில் -கடிதங்கள்

மூங்கில்- கடிதங்கள்

மூங்கில்[சிறுகதை] சுஷீல்குமார்

முந்தைய கட்டுரைஅ முத்துலிங்கம் – கலந்துரையாடல் நிகழ்வு
அடுத்த கட்டுரைராஜன் சோமசுந்தரம் – கடிதங்கள்