கலையின் வெற்றி-கடிதம்

அன்புள்ள ஜெ,

எனக்கு ஜூன் 2009ல் திருமணமாகி அம்மா, மனைவி, நான் மூவரும் நான் பணிபுரியும் இடத்திற்கே வந்து குடியேறினோம். அம்மா சத்துணவு அமைப்பாளர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவள். கணவனை 23 வருடங்களுக்கு முன்பு இழந்தவள்.

அம்மா சிறுவயதிலிருந்தே ஓயாது வேலை செய்யக்கூடியவள். அவள் சிறுவயதில் பள்ளி விடுமுறை நாட்களில் கடலைக்காய் தொலிக்கச் செல்வதற்காக விடியற்காலையிலே எழுந்து ஏன் இன்னும் விடியவில்லை என்று காத்திருப்பவள். ஒருமுறை அவ்வாறு சென்றபோது ’ஏ புள்ள! ..இன்னும் விடியல புள்ள’ என்று திருப்பி அனுப்பப்பட்டதை சொன்னதாக நினைவு. வயலில் பித்துப் போல உழைத்தவள். நிலத்தை இழந்து சொந்த ஊரை விட்டு வந்து கணவனையும் இழந்த பிறகு என்னை வளர்த்து ஆளாக்க வேண்டுமே? சத்துணவு அமைப்பாளர் பணி கிடைத்தது. வீட்டில் மாடுகள் வைத்திருந்தோம். ’ஒப்புக்கு’ எனது பாட்டியையும் என்னையும் வைத்துக்கொண்டு தனியாளாக வைக்கோல் போர் போடுவது, தூக்க முடியாத புல்லுகட்டு மற்றும் விறகுகளைத் தூக்கிவருவது போன்ற வேலைகள். அவளுக்குக் காசும் மிகப்பெரிய கடவுள்.

இங்கே நாங்கள் வந்த பிறகு அவளுக்குச் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. வீட்டு வேலைகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பரபரவென்று முடிந்துவிடும். கம்பியூட்டர் கேம்ஸ் ஆடுவாள். செய்தித்தாள்களில் வரும் சுடோக்கு போடக் கற்று கொண்டாள். நான் சிலசமயங்களில் இணையத்தில் இருந்து ‘ Hardest suduko puzzle ‘ என்று தேடிதான் கொடுக்கவேண்டியிருக்கும்.

வீட்டுவேலை……சுடோக்கு………மருமகளிடம் சண்டை சமாதானம்…கம்பியூட்டர் கேம்ஸ்….எதிர்த்த வீட்டு முதல் மாடி பாட்டிக்கு முதல் மாடியிலிருந்தே ‘நமஸ்தே மாதாஜி’ என்று இருகை கூப்பி வணக்கம்…..இந்தி தெரியாமலே பக்கத்து முதல் மாடி அம்மையாரிடம் பிரபஞ்ச ரகசியங்களை அரைகுறை இந்திய ஆங்கிலத்தில் உரையாடுவது….சன் டீவி…..சொல்லமுடியாத சோகம்….அவளுக்கு வேலைக்குச் செல்ல முடியவில்லை என்பதும் பணம் சம்பாதிக்காமல் வீட்டில் சும்மா இருப்பதும் சுத்தமாக பிடிக்கவில்லை என்பதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பது என் ஊகம். சிலசமயம் அதைச் சொல்லுவாள்.

‘ஏம்மா…பையன் பெத்தவங்கள முடுக்கிவுட்டாலும் முடுக்கிவுட்டானு திட்றீங்க…..நீ என்னடான்னா..சும்மா சந்தோஷமா என் கூட இருக்காமா…இந்த வயசில நீ சம்பாரிக்கல்லன்னு சொல்லி யாரு அழுதா? ’ என்று ஏதாவது சொல்லித் திட்டுவேன். அதில் எனக்குக் கோபம் உண்டு. திட்டினாலும் கொஞ்ச நேரத்திலே சமாதானம் செய்வேன்..

நடுவீட்டில் அவள் பார்வையில் கங்காரு போல கைவைத்து நின்றுகொண்டு ’மே…..மே’ என்று கத்தி தத்தி தத்திச் செல்வேன். அவள் அதற்கு சிரிப்பதற்கு தவறியதே கிடையாது. அதுபோல் எப்போதும் எங்களுக்கிடையே ஏதாவது ஒன்று இருக்கும்.

நான் தாயார் பாதம் முதலில் பிப்ரவரி 14ம் தேதி விடியற்காலையில் வாசித்தபோது கதை பிடிபடவில்லை. வாசகர் சிவம் அவர்களின் இரண்டாவது கடிதத்தையும் எஸ் சங்கர் அவர்களின் கடிதம் மற்றும் உங்கள் பதிலையும் படித்துவிட்டு மீண்டும் வாசித்தபோது கதைக்குள் சென்றேன். எனது நாற்காலியில் இருந்து எழுந்துசென்று அருகில் படுக்கையில் முகம்புதைத்து அழுதேன். அப்போதிலிருந்தே உச்சி மண்டையில் ஒரு வலி ஆரம்பித்தது. மனைவி கீழ்வீட்டு பையனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கச் சென்றிருந்தாள்.

எனது கணிணியை படுக்கையறையில் படுக்கை தலைபகுதியின் பக்கவாட்டில் வைத்திருக்கிறேன் அம்மா சமையல்கட்டிலிருந்தோ நடுவீட்டிலிருந்தோ விளம்பர இடைவெளியிலோ வந்து நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று பார்ப்பது வழக்கம். அன்று மாலை அப்படி வந்த அம்மாவை என் அருகில் உட்காரச்சொல்லித் தாயார் பாதம் கதையை சொல்ல ஆரம்பித்தேன்.

’ ரண்டு பேர் கடற்கரையில நின்னு பேசிக்கிட்டு இருக்காங்க’ என்று ஆரம்பித்து வலைபக்கத்தையும் காட்டி படித்து சொல்லிக்கொண்டுவந்தேன். நடுவில் ஒரு இடத்தில் குரல் கம்மியது. எந்நேரமும் உடைந்து அழத் தயாராக இருந்தேன்.

பாட்டியின் சித்திரம் வர ஆரம்பித்தது.

’ராமனுக்கு ஒரு பாட்டி இருந்திச்சி..அதோட முதுகு வளைஞ்சி தலை வந்து தரைய பாத்துக்குட்டு இருக்குமாம்’ என்று எனது கையை உயரத்தூக்கி முன்கையை வளைத்து காண்பித்தேன்.

’ம்ம்..கூனுப் பாட்டி’

’அவ சாபபிடவே மாட்டாளாம். காலையிலே ஒரு இட்லி. மத்தியானம் ஒன்னு’ என்று சொல்லி பொரியை மடியில் கட்டிவிடுவதையும் சொன்னேன்.

’ ம்’ என்று ஆச்சரியப்பட்டாள்

’ அவ உக்காந்து நான் பாத்ததே கிடையாது ‘

அவ்வளவுதான். உடைந்து அழுதேன்.

‘அம்மா..இந்த கதைய படிச்சா எனக்கு அழுக அழுகயா வருதுமா’ என்று அடிக்குரலில் சொல்லி ஓங்கி அழ ஆரம்பித்தேன்.

’ஏண்டா ? அழுவாதரா சாமீ…..எதுக்குடா அழுவுற? என கண்களை துடைத்தாள். ’கோழமாதிரி அழுவாதடா’ அவளும் அழுதாள்.

அழுதுகொண்டே ‘ஒண்ணும் இல்ல.. மா….சில சமயம் நீ டிவி சீரியல், படம் பாத்துட்டு அழுவல்ல..அந்த மாதிரி..’ என்று அவளையும் என்னையும் தேற்றிக்கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தேன்.

பாட்டி ஓயாமல் வேலை செய்வதை சொல்ல சொல்ல, மீண்டும் அழுகை..

‘நீயும் அந்த மாதிரிதா..மா….ஓடிக்கிட்டே இருக்க. ஒக்காரவே மாட்டேங்கிற ’ என்று சொல்லி மீண்டும் அழுதேன். அவளும் உடைந்து அழ ஆரம்பித்து ஒரு சம்பவத்தை சொன்னாள்.

’ஒரு தடவ நானும் சரசும் (சத்துணவு ஆயா) வெறவு எடுக்கப்போனமா……சாயந்திர நேரத்தல அங்கே ஒரே பொதாரா கெடந்தது. அந்த இடத்துல பாம்பு கூட இருக்கலாம். சரசுகிட்ட ‘சரசு..இரு சரசு..நான் எடுக்கிறேன்’ என்று அவளே விறகுகளை எடுத்ததையும், ‘ஏதாவது இருந்து போட்டுருந்துதனா….நாம போனாக் கூட பரவாயில்லை. கடவுள் புன்னியத்துல ஒன்னும் நடக்கல’ என்று சொல்லி அழுதாள்.

நான் அதிர்ந்து. ‘அதனாலாத…மா… அந்த தேவி அப்புடி கால தூக்கிகிட்டு நிக்கிறா’

’ ஓ!’ எனறு அவள் கண்கள் விரிந்தது. அவளும் எதையோ கண்டது போல எனக்குப் பட்டது. மீண்டும் இருவரும் தேற்றிக்கொண்டு மீண்டும் கதை. முடிவில்..

’பெட்பேனை எடுத்து அந்த தாத்தா…அந்த பாட்டி தலையிலே அப்பிடியே கொட்டிட்டாரமா…’

‘திமுறு புடிச்ச கெழவன்’

’அதனாலதாமா அந்த பாட்டி பைத்தியம் ஆயிருச்சு’ என்று மீண்டும் ஓ வென்று அழுது, அவள் தேள் கொட்டி செத்தாலும் அவள் தேள் கொட்டி சாகவில்லை..அவள் முன்பே செத்துவிட்டாள்’ என்பதை எல்லாம் விவரித்து இறுதியில் ராமன் இசையை தேர்ந்தெடுக்காமல் இலக்கியத்தை தேர்தெடுத்ததின் காரணத்தைச் சொல்லிமுடித்தேன்

அன்றிரவு மனைவி அம்மா தூங்கிய பிறகு உங்களுக்கு முதல் கடிதம் எழுதினேன். மீண்டும் மீண்டும் அம்மா சொன்ன சம்பவம் நினைவுக்கு வந்தது. மேலும் பல சம்பவங்கள்.

அம்மா தன் அக்காவின் மகளுக்கு அவளின் கல்யாணத்திற்கு ’நம்மால் முடிந்தது’ என்று 10 பவுன் நகையை கொடுத்தது, ஒருமுறை அவள் பள்ளியின் அருகே குடியிருக்கும் ஒருவருக்கு அவரது அறுவை சிகிச்சைக்காக பாண்டு பத்திரம் இல்லாமல் ஒரு லட்சம் ரூபாய் கடனைத் தூக்கி கொடுத்தது, பக்கத்து வீட்டு மும்தாஜின் அப்பா அவளை அர்த்தமில்லாமல் அடித்ததற்காக அவரை அடித்ததை, அவர் கல்லூரியிலிருந்து வந்த என்னிடம் புகார் செய்ய, அன்று என்னிடம் பயங்கரமாக திட்டு வாங்கியது. அப்போதெல்லாம் அவளிடம் எரிந்து விழுவேன். இன்னும் எவ்வளவோ அவளால் முடிந்த சிறு சிறு உதவிகள்.

அம்மாவுக்கு சந்திரா டீச்சர் மேல் தனி பிரியம் இருந்தது. அவர் ஸ்வைன் ஃபுளூவில் சமீபத்தில் இறந்துவிட்டார். அவர் மரணத்திற்கு சென்றுவிட்டு வந்த அம்மா ‘டேய் !..சந்தரா டீச்சர் செத்தே போச்சுடா.’. அவருக்கு 35 வயது இருக்கும். பெரியம்மா வீட்டில் விட்டு வந்த எனது பாட்டியும் இறந்தார். இரு மரணங்கள். அவளை மிகவும் பாதித்திருக்கும்.

’அவளுக்கு நான் மட்டும் பிள்ளையில்லையா ? எல்லோரும் அவளுக்கு பிள்ளைகள்தான் போல.’ என்று நினைக்க நினைக்க உச்சி மண்டையின் வலி மேலும் அதிகரித்தது. சத்தமில்லாமல் கேவி கேவி அழுதேன். விடியற்காலையில் தூங்கினேன். 14, 15 ம் தேதிகளில் விடுப்பு எடுத்திருந்தேன். 16 விடுமுறை.

15ம் தேதி வாசகி அமுதா அவர்களின் கடிதத்தை வாசித்தேன். இரவு அம்மாவும் மனைவியும் தூங்கிய பிறகு அதை யோசித்தபோது எனக்குத் தெரிந்த பெண்களின் முகங்கள் வந்து கொண்டே இருந்தது. எனது பெரியம்மா, பெரியம்மாவின் மகள், மனைவியின் அம்மா, தங்கை, பெரியம்மா, பாட்டிகள் என்று….எழுந்து வெளியே சென்றுவிட்டேன். மனைவி வந்து ‘என்னாச்சுங்க’ என்று கேட்க, ’ஒன்னுமில்லடி.! நீ போய் தூங்கு‘

நான் பின் டிராயிங் ரூமுள் நடந்து கொண்டே யோசித்துக்கொண்டிருந்தேன். எத்தனை முறை அழுதேன் என்று தெரியவில்லை. ‘ அம்மா..அம்மா’ என்று பிதற்றிக்கொண்டு….ஒரு முறை ’கூனுப்பாட்டியைப்’ போல வளைந்து தரையை பார்த்து நின்று சன்னல் கதவுகளை தலை தூக்கி பார்த்துக் கொண்டு….முற்றிலும் சமன் குலைந்திருந்தேன். முதலில் அம்மாவிடம் சொல்லவேண்டும். ’உனக்கு எல்லாரும் புள்ளங்க மாதிரிதான்’. இரு மரணங்களுக்காகவும் ‘அழாதம்மா’ என்று தேற்றவேண்டும். ‘எதுக்கும் கஷ்டப்படாம நிம்மதியா இருமா’ என்று கெஞ்சவேண்டும். மீண்டும் என் படுக்கை அறைக்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன்

இரவு இரண்டு மணி இருக்கும். அம்மா பாத்ரூம் வந்துவிட்டு போவது சத்தம் கேட்டது. நான் அவள் அறைக்கு சென்றேன். நானும் அவளும் ஊரில் இரவு இரண்டு மூன்று மணி வரைக்கூட சிலசமயங்களில் பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.

நான் அவளது கட்டிலின் கால்மாட்டில் அமர்ந்தேன்.

’ஏண்டா..தூக்கம் வரலையா?’ ‘இல்லமா…’

’இன்னும் அந்த கதையவே நினைச்சுக்கிட்டு இருக்கிறயா?’ ‘ஆமாமா..’

எல்லாவற்றையும் சொல்லி அவள் கால்களில் முகம் புதைத்து அழுதேன். பிறகு மீண்டும் கதையைப்பற்றி பேச்சுவர,

‘அந்த கெழவனுக்கு குரூரம்’ என்றாள்.

‘ம்ம்..எல்லா ஆம்பளைங்களும் அப்பிடிதாம்மா இருக்காங்க.’

’வுட்ரா..நாம பட்ட கஷ்டமெல்லாம் ஒண்ணுமில்லடா…இன்னும் எவ்வளவோ கஷ்டப்படறாங்க…அமைப்பாளர் சரோஜா இருக்குல்ல..’

’ம்…ஆமா’

’அது சில சமயம் சொல்லும்… புருஷனுக்கு சோறு போட்டுட்டு திரும்பி நடக்க கூடாதாம்….அப்டியே பின்னாலேயே நவுந்து போவனுமாம்.’

’ஏன்’

‘சோத்த போட்டுட்டு பொண்டாட்டி சூத்த காட்டிக்கிட்டு போக கூடாதுன்னு திட்டுவானாம்….அவனுக்கெல்லாம் எவ்ளவு இருக்கும்..தாயோளி ! இன்னும் என்னென்னுமோ கொடுமபடுத்துவானாம் ’

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசிகொண்டு இருந்தோம்.

மீண்டும் என் படுக்கையறைக்கு வந்தபோது மனைவி விழித்துக்கொண்டாள். என்னால் படுக்க முடியவில்லை. எத்தனை முறை படுத்து எழுந்து உட்கார்ந்தேன் என்று தெரியவில்லை. உச்சி மண்டையை யாரோ இழுப்பது போலவே இருந்தது. கண்களை மூடவில்லை. மூடினால் பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றியது.

‘என்னங்க ஆச்சு? ஏங்க நேத்தில இருந்து இப்டி இருக்கீங்க?’

’ஒண்ணுமில்லடி..அந்த கத..’

‘அப்டி என்னா இருந்தது அந்த கதையிலே? சொல்லுங்க ’

நான் மீண்டும் சொல்ல ஆரம்பித்தேன். முடிவில்..’அந்த தாத்தா பெட்பேன பாட்டி தலையிலேயே கொட்டிட்டாராண்டி’ என்று அவள் மார்பில் புதைந்து அழுதேன்.

‘இதுக்கா அழுவுறீங்க..கத தாங்க ‘

‘கத இல்லடி..நடக்கறதுடி…அப்டி கொட்டுனதாலதான் அந்த பாட்டி பைத்தியம் ஆயிருச்சி..ஏண்டி..பைத்தியம் ஆவறதுன்னா என்னனுன்னு தெரியுமா? ’

என்று கதையை விவரித்து சொன்னேன். அவள் கண்களிலும் கண்ணீர் இருந்தது.

கொஞ்ச நேரத்திற்கு பிறகு பித்து தெளிந்தது போல இருந்தது. அதற்குப்பின் படுத்து உறங்கினேன்.

தேவதேவனின் ’உடற்பயிற்சி ஆசிரியர்’ கவிதை நினைவுக்கு வருகிறது.

 

கடவுள் ஒருநாள்

உடற்பயிற்சி ஆசிரியரைப்போல

எல்லாமனிதர்களையும்

ஒரு நெடிய வரிசையாய் நிற்க வைத்தார்


 

அப்புறம்

ஒரு நீண்ட கம்பியை

வட்டமாக வளைப்பதுபோல

முதல் மனிதனையும்

கடைசிமனிதனையும்

அடுத்தடுத்து வரும்படி

அவ்வரிசையை

ஒரு வட்ட வளையமாக்கினார்

 

 

தோதான வெற்றுக்கைகள் கொண்டு

கைகள் கோர்த்துக்கொள்ளச்செய்தார்

 

 

 

அக்கணம்

ஒரு மின்சாரம் இயக்கியதுபோல

பற்றிக்கொண்டது அந்த மகிழ்ச்சி

அத்தனை முகங்களையும்

 

 

மெளணமாக இன்னொன்றும் கைகள்மாறுகிறது. ஆண்கள் தொட்டுவிட முடியாத ஒன்று.

நன்றியுடன்,

இளையராஜா

 

மார்கழியில் தேவதேவன்

 

முந்தைய கட்டுரைநஞ்சுபுரம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைதாயார்பாதம்,சோற்றுக்கணக்கு,மத்துறுதயிர்-கடிதங்கள்