நலமே வாழ்க, மறைமுகம் -கடிதங்கள்

நலமே வாழ்க [சிறுகதை] மணி எம்.கே.மணி

அன்புள்ள ஜெ,

நான் வாசிக்கும் மணி எம் கே மணியின் இரண்டாவது கதை இது.அவருக்கென்று ஒரு கதைசொல்லும்  முறையை வைத்திருக்கிறார். இப்படி ஒரு தனித்தன்மை தமிழில் ஓர் எழுத்தாளருக்கு இருப்பது அபூர்வமானதுதான்.

அவருடைய கலையை மினிமலிசம் என்று சொல்லலாம். சென்றமுறை அவர் எழுதிய கவி என்றகதையை வாசித்தபோது தொட்டுத்தொட்டுச் செல்கிறதே என்று தோன்றியது. ஆனால் எல்லா வரிகளும் நினைவில் நிற்பதை பிறகு கண்டுபிடித்தேன். காமிராவை சுழற்றி ஒரு பத்துபேரை ஒரே ஷாட்டில் காட்டுவது மாதிரியான வடிவம். அவர்களுக்குள் உள்ள உறவும் சிக்கலும் எல்லாம் அதிலேயே தெளிவாகிவிடுகிறது.

தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் இல்லை. சிந்தனைகளும் இல்லை. உதிரிநிகழ்ச்சிகள்தான். ஆனால் கதை ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சொல்லி முழுமையடைந்துவிடுகிறது.

எஸ்.பாஸ்கர்

***

அன்புள்ள ஜெ

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ‘எவருடையவோ ராஜகுமாரி’ என்று ஒரு கதையை எழுதினேன். இப்போது தெரிகிறது, நல்ல கதை அல்ல. ஆனால் உண்மையான அனுபவம் அந்தக்கதை. நான் உருகி உருகி காதலித்த பெண் கல்யாணமாகி இன்னொருவனின் மனைவியாகி வாழ்க்கையிலே கஷ்டப்படுவதைக் கண்டேன். அவள் ஒரு டெய்லர்கடை வைத்திருந்தாள். அதைப்பார்த்தபோது அவள் என்னுடைய ராஜகுமாரி என்று நினைத்தேன். ஒரு பெண் எப்படிப்பட்டவளாக இருந்தாலும், எந்த வகையில் வாழ்ந்தாலும் அவள் எவரோ ஒருவருக்கு தேவதைதான். மணி எம் கே மணியின் நலமே வாழ்க அந்த விசித்திரமான யதார்த்தத்தைச் சொன்ன நல்ல கதை

மகேஷ் சிவராம்

மறைமுகம் [சிறுகதை] ஜா.தீபா

அன்புள்ள ஜெ,

நலம்தானே? நானும் நலமே. மீண்டும் புதிய எழுத்தாளர்களின் கதைகள். ஜா.தீபா இதுவரை கேள்விப்படாத ஆசிரியர். கதையும் அழுத்தமானது. வரலாற்றின் இன்னொருபக்கம் என்று சொல்லலாம். ஆனால் இன்னொன்றும் தோன்றுகிறது. வரலாற்றின் அறியப்பட்ட பக்கம் என்பது எப்போதுமே ஒரு பொதுவான உணர்ச்சியாலானது. வரலாற்றின் அறியப்படாத பக்கமே உண்மையான உணர்ச்சிகரமானது. வாஞ்சியின் செயல் பொதுவான தேசபக்தி என்ற உணர்ச்சியையே உருவாக்குகிறது. அதற்குப்பின்னாலுள்ள ஒரு பெண்ணின் துயரமும் அழிவும் மிகமிக ஆழமான தனியுணர்ச்சியை உருவாக்குகிறது. அதை ஒரு அருமையான பிரைவேட் லேங்குவேஜில் அழகாகச் சொல்லியிருக்கிறார் ஜா.தீபா. வாழ்த்துக்கள்

எஸ்.ராஜரத்தினம்

***

அன்புள்ள ஜெ

ஜா. தீபாவின் மறைமுகம் அழகான கதை. அவர் கையில நீ இருக்கும்போது தான் உன்னைப்பாக்கற மாதிரி அவரைப் பாக்கணும் என்ற வரிகளை வாசித்தபோதுதான் கதைசொல்லியின் ஆற்றல் தெரிந்தது. அந்தக்காலகட்டம், கணவனை மனைவி நேரில் பார்க்க உரிமையில்லாதிருந்த காலம். ஒரு பிள்ளை பிறந்து அதன் அம்மாவாகத்தான் அவளுக்கு எல்லா உரிமையும் சுதந்திரமும் வருகிறது. இரண்டுமே அவளுக்கு பறிபோய்விடுகிறது. அந்த இழப்பை கூர்மையாகச் சொல்லியிருக்கிறது இந்தக்கதை. இந்தக்காலப்பெண் ஒருத்தி அந்தக்காலப் பெண்ணின் நுட்பமான உளவியல் சிக்கலைச் சொல்லியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. இதைத்தான் கற்பனையின் ஆற்றல் என்று சொல்கிறோம். ஜா.தீபா நல்ல கதையாசிரியர் என்பதை நரம்பில் கைவைத்து தொட்டு அறியும் இடம் இது

ராமச்சந்திரன்

***

முந்தைய கட்டுரைசிந்தே, வண்ணம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமுடிவிலாது தொடரும் கார்வை- வெண் முரசு நிறைவு-சுனீல் கிருஷ்ணன்