மறைமுகம் [சிறுகதை] ஜா.தீபா
அன்புள்ள ஜெ
நலம்தானே?
ஜா.தீபாவின் மறைமுகம் அழகான கதை. பெண் எழுதவேண்டிய கதை. இந்தக்கதைகள் எழுதப்படாமலேயே போகின்றன. இலக்கியம் என்பதே எழுதப்படாமல் போகும் வாழ்க்கையை எழுதிச்சேர்ப்பதுதான் என்று சொல்வார்கள். Supplemental History என்று என்னுடைய ஆங்கில ஆசிரியர் சொல்வதுண்டு.
வாஞ்சிநாதனின் தியாகம் போற்றப்படவேண்டியதுதான். ஆனால் அவர் மனைவியின் இழப்பு அதைவிட பலமடங்கு. அவருக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் இழந்தார். வாஞ்சிக்காவது ஒரு இலட்சியம் இருந்தது. அவருக்கு அதுவும் இல்லை. ஏன் என்றே தெரியாத ஒரு பலி. போரில் வீரர்களின் பெயர்களை வரலாற்றில் நிறுத்துவார்கள். படைவீரர்களின் பெயர்கள் எங்கும் இருக்காது. அந்தப்படைவீரர்களுக்கு என்ன போர் எதற்காகப் போர் என்றே தெரிந்திருக்காது
மனசைக் கனக்கவைத்த கதை. ஜா.தீபா அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
ஜெயக்குமார்
***
அன்புள்ள ஜெ
ஜா.தீபாவின் எழுத்தில் அசோகமித்திரனின் செல்வாக்கு தெரிகிறது. ஆகவே கதையை மிகுந்த அடக்கத்துடன் சொல்கிறார். வழக்கமாக பெண் எழுத்தாளர்கள் மற்ற பெண் எழுத்தாளர்களின் நடையின் செல்வாக்கு கொண்டிருப்பார்கள். அது கொஞ்சம் கொஞ்சிப்பேசுவதாகவோ அல்லது உணர்ச்சிமிகுந்து பேசுவதாகவோ இருக்கும். இந்த நடை மெச்சூர்ட் ஆக உள்ளது
நான் 1989 வாக்கில் திருப்பூரில் வேலைபார்த்தபோது திருப்பூர் குமரன் [கொடிகாத்த குமரன்] மனைவி ராமாயி அம்மாளுக்கு ஒரு சான்றிதழை வழங்கவேண்டியிருந்தது. அவரே என்னைத்தேடி வந்திருந்தார். அதன்பின் அவரை சந்தித்தேன். அந்த நினைவு வந்தது. அவரைப்பற்றி நினைக்கவே ஆச்சரியம். மிக இளம்வயதிலேயே விதவை ஆகிவிட்டார். ஒரு மகனை எடுத்து வளர்த்தார். வாழ்க்கையே ஒரு தவமாக ஆகிவிட்டது. ஒரு சோகமான வாழ்க்கைதான்.
பெண்களின் தவம் என்பது ஒருகோணத்தில் ஒரு தண்டனை மட்டும்தானா என்ற எண்ணம் ஏற்பட்டது. எந்தத் தவறும் செய்யாமல் அந்த தண்டனை அளிக்கப்படுகிறது
டி.எஸ்.செல்வராஜ்
***
மூங்கில்[சிறுகதை] சுஷீல்குமார்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
கலைஞனின் தனிமையைச் சொல்லும் கதையாகவே நான் மூங்கிலை வாசித்தேன். புதிய எழுத்தாளர் சுஷீல்குமார் நன்றாக எழுதியிருக்கிறார். குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். நடையும் உங்கள் நடை போலவே இருக்கிறது. குமரிமாவட்டத்திலிருந்து எழுத்தாளர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
கலைஞனுக்கு எப்போதுமே புறக்கணிப்பு இருக்கிறது. பிழைப்பைப்பாரு என்ற ஆலோசனை வந்துகொண்டே இருக்கிறது. அதற்கு எதிராக அவன் அளிக்கும் ஒரு பதில்தான் அப்பா கடைசியாகச் செய்வது என நினைக்கிறேன். அழகான கதை
மகாதேவன்
***
அன்புள்ள ஜெ
அழகான கதை மூங்கில். புதிய எழுத்தாளர்கள் பலர் இப்போதெல்லாம் பெரிய வீச்சுடன் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். சுஷீல்குமாரின் கதைகளை மேலும் எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.
“மகளே, ஒனக்குன்னு உள்ள சோலி வேற கேட்டியா?..அ து கடவுளுக்க தொட்டடுத்து நின்னு செய்யிற வேலைல்லா… ஞானமாக்கும்… எல்லாரும் செய்ய முடியாது மக்ளே.. எனக்குப் பொறவு ஒனக்குத்தான்னு எழுதிருக்கான்லா.. நீ அதத்தா செய்யணும் என்ன?”
என்று சொல்லும் அப்பா தன் மகளுக்காக விட்டுச்செல்லும் வடிவம்தான் அந்தப்படம். அது அவர் தன்னைப்பற்றி அளித்த ஒரு பிரகடனம்.
எஸ்.பாஸ்கர்
***