மூங்கில்- கடிதங்கள்

மூங்கில்[சிறுகதை] சுஷீல்குமார்

அன்புள்ள  ஜெ

சுஷீல்குமாரின் மூங்கில் கலைஞனின் மனதைப்பற்றிப் பேசும் ஒரு கதை. நான் காலச்சுவடில் நகலிசைக் கலைஞன் என்று ஒரு கட்டுரைநூல் வாங்கினேன். அருமையான கட்டுரைகள். ஆர்க்கெஸ்டிராக்களில் பாடுபவர்களின் வாழ்க்கையைப்பற்றிய கட்டுரைகள் அவை.

அப்போது நான் யோசித்தேன் நகலிசைக் கலைஞர்களின் வாழ்க்கையில் அந்த முதல்வடிவம் எப்படி அவர்களிடம் வந்து படிகிறது என்று. குறிப்பாக டி.எம்.எஸ் பாட்டைப்பாடுபவர் கொஞ்சம் கொஞ்சமாக டி.எம்.எஸ் ஆகிவிடுவதைக் கண்டிருக்கிறேன். அது ஒருவகையான கூடுவிட்டு கூடு பாய்தல்

ராஜா ரவிவர்மா ஓவியங்களையே வரைந்து வாழும் நகல்கலைஞர். அவர் ரவிவர்மாவாக தன்னையையே வரையும்போது அவராகவே மாறிவிடுகிறார்.

சாந்தகுமார்

***

அன்புள்ள ஜெ

மூங்கில் ஒரு நல்ல கதை. நான் கதையை பலவகையிலும் வாசித்தேன். நானும் கொஞ்சம் வரைபவன். ஒரு ஓவியத்தை நகல் எடுக்கும்போது என்ன ஆகிறதென்றால் அது ஒரு கிராஃப்ட் ஆகிவிடுகிறது. இப்படிச் சொல்லலாம், கித்தனைலிருந்து மூங்கிலுக்கு. மூங்கிலில் ஓவியம் வரைவது கலைக்கான மீடியமே இல்லை. அது ‘மூங்கிலிலேகூட எப்டி வரைஞ்சிருக்கான்பாரு’ என்ற ஒரு வகையான வியப்பைத்தான் உருவாக்கும்

ஆனால் ஓவியம் வரையும்போதுள்ள அந்த தவம் ரவிவர்மா அடைந்த அதே தவம்தான். ஆகவேதான் அப்பா தானும் ரவிவர்மா ஆகிறார். உலகுக்கு அவர் ரவிவர்மா என்று தெரியாமலிருக்கலாம், அவருக்குத்தெரியும், அவர் ரவிவர்மாதான்

சி.ஜெயராஜ்

***

அன்புள்ள ஜெ

மூங்கில் ஒரு வீழ்ச்சியின் கதை. பத்மநாபபுரம் அரண்மனையிலுள்ள ஓவியங்களை வரைந்த மூதாதையின் வாரிசு கைவினைக் கடையில் மூங்கில் வாங்கிவந்து நகல்படங்களை வரைந்து வாழ்க்கைநடத்தவேண்டிய நிலையில் இருக்கிறார். ஓவியம் அவருடய குலப்பாரம்பரியம். அது ஒரு பெருமையாக இருந்த காலம்போய் இப்போது அது ஒரு பெரிய சாபமாக ஆகிவிட்டது. அதைச் சொல்லி புலம்புகிறார்கள். பிள்ளைகளை அதிலிருந்து காப்பாற்றவேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால் உள்ளூர அப்பா அந்த பழங்காலத்தில்தான் வாழ்கிறார். அவருடைய அந்தரங்கத்திலே அவர் ரவிவர்மாவாகவே இருக்கிறார்

செந்தில்குமார்

***

முந்தைய கட்டுரைபச்சை
அடுத்த கட்டுரைஏழாவது,சாவி- கடிதங்கள்