வெண்முரசின் பெண்கள்- சுபஸ்ரீ

ஓவியம்: ஷண்முகவேல்

எங்கோ வெகுதொலைவிலெனத் தெரிகிறது ஏழாண்டுகளின் நீளம். அங்கிருந்து வெண்முரசு கரம்பிடித்து வெகு தூரம் இப்பயணம் நடந்திருக்கிறது. பல நிலங்களில் பல உணர்வு நிலைகளில் பல்வேறு மாந்தர்களோடு வாழ்ந்திருக்கிறேன்.

மகாபாரதம் நவீன மறு ஆக்கம் என்ற மந்திரச் சொற்களால் ஈர்க்கப்பட்டு இதை வாசிக்கத் தொடங்கி, முதற்கனலின் முதல் சில அத்தியாயங்களுக்குள்ளேயே ஓடும் கங்கைப் பெருக்கில் விழுந்து நதி தனதாக்கிக் கொள்ள ஒப்புக்கொடுத்து, அதன் கரைகாணா பெருக்கையும், அடித்தட்டின் கீழ் திகழும் அறியொணாத ஆழுலகங்கங்களையும், உள்ளிழுத்துக்கொள்ளும் உணர்வுச் சுழல்களையும், நிகர் நதியென மேலே விரிந்த காற்றின் ஒழுக்கையும் உணர்ந்தபடி சிறு பரல் மீனென இதுகாறும் நீந்தி வந்திருக்கிறேன். கரையேறும் வழியையும் காவியமே சொல்கிறது. எனினும் நீரன்றி வாழ்தலறியா இச்சிற்றுயிர். அதிலேயே திளைத்து, அதைக் குறித்தே எழுதியும் வாசித்தும், நூறு நூறு பேருக்கு இனிவரும் நாளெல்லாம் இக்கதை சொல்லியும், கழியும் இவ்வாழ்வெனில் நிறைவடைவேன்.

இது நவீன இலக்கியம் கண்ட மாபெரும் புனைவு நூலாக, காவிய இலக்கணங்களின் பாற்பட்டு எழுந்த நிகழ்காவியமாக, தொல்வேதம் முதல் அனைத்து இந்து தரிசனங்களின் சாரம் கொண்ட ஞான நூலாக, நவீன மொழியில் நாராயண வேதம் வந்தமைந்த பொற்பீடமாக, மாபெரும் மானுட நாடகத்தை நிகர்வாழ்வெனத் தந்த நவீன வியாசமாக என்று எப்படியும் அவரவர் கொள்திறனுக்கு ஏற்றபடி வகுத்துக் கொள்ளலாம். அள்ளிக் கொள்ளென அளியொடு பெருநதி விரிந்திருக்கிறது.

ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளையும் விடியச் செய்த 26 நூல்கள் தந்ததென்ன என்று கேட்டுக் கொள்ளும் தோறும் ‘அருளப்பட்ட வாழ்வை வாழ்ந்து நிறை’ எனும் வாழ்த்து என்றே தோன்றுகிறது.

வாழ்நாளுக்கும் தியானிக்க ஆப்த வாக்கியங்களாக மாறிவிட்ட வரிகள், கனவுகளை நிறைத்துவிட்ட படிமப் பெருவெளி, தேர்ந்த உளியொன்று நாளும் செதுக்கிய அகமொழி, பல்வேறு தொலை நிலங்களில் பல்வேறு உடல்களில் உளங்களில் திகழ்ந்த நிகர்வாழ்வு.

மண்ணில் விதிக்கப்பட்ட சிறுவாழ்வு தரும் அனுபவங்களை மட்டுமே வைத்து இறுகிய மனஅழுத்தங்களோடு தத்திக் கொண்டிருந்த சிறுபறவைக்கு நிகர்வாழ்வு தந்து, எண்ணற்ற அகநாடகங்களின், அலைக்கழிப்புகளின், அறக்குழப்பங்களின், அறிதல்களின், கண்ணீரின், குருதியின், பேரன்பின், கருணையின் பெருவெளியைத் திறந்து வைத்து
சிறகுகள் அருளி, கூட்டிலிருந்து அருகாமைக் கிளைக்கும், கிளையிலிருந்து விரி வெளிக்கும் தாவியேறக் கற்றுக் கொடுத்த இறையாணை இந்நூல்.

முதற்கனல் வரத்தொடங்கிய சிலநாட்களிலேயே அம்பையின் அனலும் பீஷ்மரின் உறைவும் விசித்திரவீரியனின் அதிர்வும் சத்யவதியின் கனவுமாக நான் வாழும் உலகம் விரிந்து கொண்டது. சுவர்ணையும் சோபையும் விருஷ்டியும் நான் பெண்ணெனக் கடந்துவந்த பாதையைப் புது ஒளியில் காட்டினார்கள். அன்று இபபெருக்கில் எனை முழுதளித்தேன்.

எங்கெங்கோ ஏதேதோ ஊர்களில் நாடுகளில் அமர்ந்து வெண்முரசு வாசித்திருக்கிறேன். நீண்ட விமானப் பயணங்களில் மொத்த வாசிப்புக்குமான வெண்முரசு பக்கங்களை தரவிறக்கிக் கொள்வதென் வழக்கம். துபாயிலிருந்து இரான்-துருக்கி-கருங்கடல் வழியாக ஐரோப்பாவைத் தாண்டி போஸ்டனுக்கு விமானப் பயணம் செல்லும்போது துபாயிலிருந்து எழுந்ததுமே பெரும்பாலை நிலங்களைக் கடந்து கருங்கடல் தாண்டிச் சென்றது விமானம். மணற்பாலை, பின்னர் மணலும் அற்றது போல ஒரு பாழ்வெளி, பின் ஐரோப்பா தாண்டியதும் பனிப்பாலை. கிராதத்தின் வாருணம் பகுதியில் அர்ஜுனன் மேற்கொள்ளும் பயணத்தை நினைவுபடுத்த அப்பயணம் முழுக்கவே அதில் திளைத்திருந்த நாட்கள்.

கடற்பயணம் ஒன்றில் விளிம்புகளற்ற நீலப்பெருவெளியில் இரவும் பகலும் கடலைப் பார்த்தபடி வாசித்த நீலம், தங்களை முதல் முறை நேரில் சந்திக்கும்போது வாசித்துக் கொண்டிருந்த சொல்வளர்காடு, வாழ்வில் திசைகளறியாது முட்டி நின்ற பல பொழுதுகளில், அன்றைய பகுதியில் எனக்கென்றே வரிகள் காத்திருந்த அனுபவம். இது நண்பர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். காலையும் மாலையும் ஜுராங்கிலிருந்து சாங்கி வரை ஒரு மணி நேர ரயில் பயணத்தில் மீள மீள வாசித்து நெகிழ்வும் மகிழ்வுமாய் பிச்சிபோலத் திரிந்த நாட்கள்.

நண்பர்களோடு கூட்டு வாசிப்பாய் வாசிக்கத் தொடங்கி ஒவ்வொரு அத்தியாயமும் இரண்டு முறை மூன்று முறை வாசித்திருக்கிறேன். இப்போது முழுமையான மீள்வாசிப்பில் பிரயாகையிலிருக்கிறேன். வெண்முரசின் நினைவுகள் விரிந்து கொண்டே செல்கிறது.

வெண்முரசின் பெண்களின் நிரையை இத்தருணத்தில் எண்ணிக்கொள்கிறேன்.

பேரரசியென்றே பிறந்து தனக்கான விதியையும் மணிமுடியையும் தானே வடிக்கும் தேவயானி. பேதைமையுடன் அறிமுகமாகி பணிவென முகம்காட்டி தக்க தருணத்தில் மேலெழுந்து யயாதியை அடைந்து குருவம்சத்திற்கு கொடிவழியும் அமுதகலச முத்திரையும் தந்து செல்லும் சர்மிஷ்டை. உலகியலின் நறுமணத்தை உமை அறிந்த கனம் மகளென்று வந்து நகுஷனை மணந்து காமத்தின் அனலில் உயிர்விடும் அசோகசுந்தரி .
கொல்வேல் கொற்றவை என மண்ணிறங்கி கங்கையோடு பொருதும் அம்பை, சந்தனு நீராடி முடிக்க இயலாத இரு நீர்ப்பெருக்குகளென கங்கையும், யமுனையின் மச்சகந்தியும். தேவயானியின் நீட்சியென பெருங்கனவுகள் காணும் சத்யவதி. சகோதரியர் எப்போதும் சூழ்ந்திருந்தாலும் பாலை நிலத்து தனித்த தாலிப்பனை போன்ற காந்தாரி.

குன்றாத விழைவும் நிகரற்ற மைந்தர்களின் அன்னையென நிமிர்வும், கர்ணனை இரக்கமின்றி உண்ணும் அன்னை விலங்கென அதிகார விடாயும் கொண்ட குந்தி. பாண்டுவின் விளையாட்டுத் தோழியென வாழ்ந்து அவனோடு தீபுகும் மாத்ரி. களிப்பாவைகளோடு வாழ்வை நடத்தும் அம்பாலிகை, அன்னையென வந்ததன் சிறுமைகளில் திளைத்து தங்கையோடு மனக்குமுறல்கள் கொண்டுவாழும் அம்பிகை. விண்ணிலிருந்து மலரென உதிர்ந்து புரூரவஸை மணந்து மண்தரும் பேரின்பங்களை எல்லாம் வாழ்ந்து கனியும் ஊர்வசி.

முதன்மையாக நிகரொன்றிலாத விண்கங்கையென நிகர்நிலை மாறாத திரௌபதி, பெண்ணின் அழல் தீர்ந்தே ஆக வேண்டும் என நோன்பிருக்கும் அதே வேளை துரியனுக்கென மனம் சுமந்த மயிலிறகைத் துறந்து போர்க்காலத்தில் அன்னையென நாட்டை நடத்தும் பானுமதி, துரியனின் உருவம் பார்த்தே காதல் கொண்டு கலிதிகழ் துரியனை காளை உருவெனக் காணும் சுதர்சனை, பார்த்தனிடம் கலை பயின்று அபிமன்யுவின் கரம்பிடித்து பரீஷித்தைப் புறம்தந்து உயிர்விடும் உத்தரை.

ஊழின் ஆடுகளத்தில் கருக்களாக விரும்பியவனை மணமுடிக்க இயலாத தேவிகை, விஜயை, பலந்தரை, பிந்துமதி, கரேணுமதி, குருகுலத்தின் முதல் மருகியாக அமையும் காட்டின் பிடியானை போன்ற இடும்பி. மூத்தோனன்றி தனக்கேதும் சொற்களற்ற துச்சாதனனின் பேச்சுத்திறன் கொண்ட துணைவியாகி, இறுகி வைரம்பாய்ந்த பீஷ்மரையே பதறச் செய்யும் கேள்விகளோடு வரும் துருமசேனனின் அன்னை அசலை.

தன் மனதில் வேறொருத்தியிருக்க தனக்கிணையானவளல்ல தன் துணை என்ற விலக்கத்தோடே விதுரர் மணக்கும் சுருதை. விகர்ணனின் உளச்சான்றாகிய சிறு பரல் தாரை. கௌரவர் நிரை போன்றே காந்தாரியின் நிழலென இருப்பதன்றி தனக்கென ஏதும் வாய்த்திடாத சத்யவிரதை முதல் தசார்ணை வரையிலான காந்தாரியர், அதன் அழுத்தம் தாளாது சிதறும் சம்படை, அதற்கு முன்னரும் நீள்சரடின் முதல் கண்ணியென
வெறித்த விழிகளும், சிதறிய சித்தமுமாக அஸ்தினபுரியின் மேற்கு சாளரத்தில் உயிர்துறந்த சுனந்தை.அடுத்த தலைமுறையின் மகாநிஷாத குலத்து இளவரசியர்

இன்னும் பல நூறு கௌரவர் மனைவியர், மனம் விரிந்த மதவேழமென வரும் திருதராஷ்ட்டிரரின் பெண்ணுருவென வரும் துச்சளை. திருதாவின் இசைத் துணைவியாக வரும் பிரகதி. பிறப்பிலேயே பேரரசி என நிமிர்வு கொண்ட நிரையின் இன்னொரு அரசி சம்வகை என்று குருவம்சத்தின் ஆக்கமும் அழிவும் என காய்கள் நகர்த்தி குருட்சேத்திரப் போருக்கு களமெழுதும் பெண்களின் நிரை.

யோகியென வந்தவனைக் காதலித்து இந்திரன் மகனைக் கைப்பிடிக்க நேர்வதன் கசப்பில் உறையும் சுபத்திரை, பார்த்தனுக்கு நாகமென காமம் அறியத்தரும் உலூபி, வெல்வதொன்றே வாழ்வாகிய விஜயனையே வெல்லும் மகனைப் பெறும் சித்ராங்கதை, பாசுபதம் தேடிச் செல்லும் பார்த்தனை விரும்பும் கின்னர தேசத்து மலைமகள் பார்வதி, அறிதலொன்றே பெரும் செல்வமென பார்த்தன் வெல்லும் குபேரபுரியின் மீனாட்சி, அர்ஜுனன் தான் உலகு வென்று அனைத்தையும் துறந்து திரும்பும்போது மீள்வதற்கான இடமென்று நினைக்கும் சுபகை.

லவண குலத்தில் உதித்து யாதவ குலத்து சூரசேனரை மணந்து கண்ணனின் கருமையழகுக்கு ஊற்றாகி, துயரென்ற ஒன்றை அறியாத வலிமையின் வடிவாகிய மரீஷை. இலக்கறிந்த பறவைக்கு திசைத் தடுமாற்றம் இல்லை என்று சிறைவாழ்வை எதிர்கொண்டு நீலனைத் தன் மணிவயிற்றில் சுமந்த தேவகி. அவனது அம்புலிப் பருவம், சிற்றில் பருவம் சிறுதேர் பருவம் என அனைத்தும் கண்ட யசோதை. பரம்பொருள் ‘உம்’ கொட்ட ராதையெனும் பசுவின் கதை சொல்லும் ரோகிணி.

நீலனே தானாகிய ராதை.இளைய யாதவனைச் சேர்ந்தமையும் எட்டு திருமகள்கள் – அவரை வெற்றி கொண்டதாகத் தருக்கும் சத்யபாமை, ஷத்ரிய முறைப்படி இளைய யாதவனைக் கரம்பிடிக்கும் ருக்மிணி, தவமிருந்து யாதவரை மணந்து முழுதளிப்பில் தனைக் கரைத்த மச்சர் குலத்துக் காளிந்தி, அரசமகள் என்ற நிமிர்வும் படைக்கலம் கொண்டே பிறந்தவள் போன்ற தோற்றமும் கொண்ட கேகய நாட்டு பத்ரை, ஏழு பெருங்காளைகளை அடக்கி இளைய யாதவர் மணக்கும் வெற்றியின் திருவாகிய நக்னஜித்தி, குழலிசை காதில் விழாமலே வளர்க்கப்பட்டு குழலிசையாலேயே கவரப்படும் மித்ரவிந்தை, கானகம் உருக்கொண்டு வந்த வல்லமை என ஜாம்பவதி, வீணைக்கலை சூடிய மத்ரநாட்டு லக்ஷ்மணை. இளைய யாதவர் உதிர்வதன் ஊழ்கநிலையில் உறக்கம் கலைக்காது காய்களை அகற்றும் புதிய ஆடல்களைக் கற்றுத் தரும் தயை, அவரது பெண்ணுருவென மயிற்பீலி சூடி வரும் மகள் மயூரி.

நாகத்தின் பிளந்த வாயில் தர்ப்பயை எய்து, பெண்கள் வில்லேந்துமளவிற்கு மகிஷன் பிறந்துவிட்டானா என்று துரோணரை முதல் உரையாடலிலேயே கவர்ந்து, முழு வாழ்வும் தன் உள்ளொளியால் அறத்தின்பால் நின்ற கிருபி.
அழகெனும் சிறையிலாது அறிவெனும் சிறகுகள் அருளப்பெற்ற கார்கி, செய்வதனைத்தும் வேள்வியாதலே தவத்தின் உச்சம் என உற்றுணர்ந்து யாக்ஞவல்கியரை மணமுடித்து வெளியைச் சுட்டிய விரலோடு மோனத்தில் இருக்கும் காத்யாயனி, பிருஹதாரண்யகத்தின் அச்சென சுழன்று, நிலைத்த செல்வமன்றி ஏதும் வேண்டோமென யாக்ஞவல்கியரிடம் உரைக்கும் மைத்ரேயி. விழைவெனும் நாகத்தைப் புணர்ந்த பேரரசி தமயந்தி என்று எத்தனை எத்தனை மையப் பெண் பாத்திரங்கள்.

நிகராக தேவயானியின் நிழல்முகமென சாயை, திரௌபதியின் உக்கிர நிழலென மாயை, முதலும் முடிவுமென அமையும் நாகர் குலத்து மானசாதேவி, பெருமாந்தரின் நிழலென்றே வாழ்ந்து தங்கள் ஆளுமையை வனைந்து கொள்ளும் சத்யவதியின் அணுக்கத் தோழி சியாமை, குந்தியின் தோழி அனகை, சூதர் குலத்தில் பிறந்து காவியம் கற்ற காரணத்தால் சூத அரசியாக ஆணையிடப்பட்டு காலப்பெருக்கில் புறக்கணிக்கப்பட்டு தன்னைக்கடந்து செல்லும் வகையறியாது உளமழியும் சிவை, அவளது இளமைக்கால சேடி வாழ்வில் தோழியென இருந்து அவளால் அவமதிக்கப்பட்டு நுண்மையாக அவளை வெல்லும் சுபை

திருஷ்டத்யமனனின் ஆழத்தை தொட்டு அவனால் என்றும் வெல்லவோ கடந்து செல்லவோ இயலாத சுஃப்ரை, சிறுமைகளே அண்ட முடியாத பேரன்பே உருவான பிரேமை, வராஹியின் சினம் பிழைக்க பீஷ்மனைத் தனை மணக்கச்சொல்லும் சப்தசிந்துவின் உர்வரை, சூதன் மனைவியென அமைய மறுத்து அதிருப்தியும் கசப்புமாக வெய்யோனின் ஒரு புறம் எரிந்து எரிந்து நச்சுமிழ்ந்து, பின்னர் நாகினியுடன் வெளியேறும்
சுப்ரியை.

குலமுறை நிகழ்ந்த திருமணத்தால் கர்ணனை மணந்து அரசியெனும் இடத்தை நடிக்க முடியாது தவிக்கும் விருஷாலி, தன்முலை உண்டவன் சூரியன் அருள்பெற்ற மைந்தன் என்று தெளிந்திருந்தாலும் பின்னர் தாய்மையின் சிறுமையிலும் திளைக்கும் ராதை, புற உலகே அறியாமல் ஆடிகளின் உலகில் வாழ்பவளை ஓவியங்களின் அப்பாலிருந்து வந்தணையும் அநிருத்தனின் உஷை, அவளுக்கென ஓர் உலகை படைத்துத்தரும் சித்ரலேகை

கொற்றவையை மகளாகப் பெற்றதனாலேயே முத்து சுமந்த சிப்பியென தன்மதிப்பிழந்து நிலையழியும் திரௌபதியின் அன்னை பிருஷதி, குந்தியின் அரச நிமிர்வுக்கு முன் சாதாரண யாதவப்பெண்ணென சிறுக்கும் வளர்ப்பன்னை தேவவதி, சதியைப் பெற்று தீயில் அடைக்கலமாகும் அம்பையின் அன்னை புராவதி. சேடியென வாழ்விருந்த போதும் மனதுக்குள் அரசியாகவே திகழும் சுபாஷிணி.

பெருவீரர்களை வளர்த்த அன்னை மாலினி, அனகை. குருகாணிக்கை என வரும் ஷத்ரிய சூழ்ச்சியை தவிர்க்க முயன்று இயலாது போகையில் நவகண்டம் என கழுத்தறுத்து சாபமிடும் ஆசுர குலத்து சுவர்ணை என்று எத்தனை எத்தனை பெண்மையின் வண்ணங்கள்!!

மன அடுக்குகளில் எழுந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். இது முழுமையும் நினைவில் நின்ற பெண்களின் பெயர்கள். இன்னும் பலர் விடுபட்டிருக்கலாம், அது நினைவின் கொள்திறன் குறைவே.

இது தவிர சூதர் பாடல்களில் வரும் காளி, தாட்சாயணி, மகிஷாசுரமர்த்தினி, சுநீதி, சுருசி, கத்ரு, வினதை, வராஹி, அனசூயை, கேசினி, உக்ரசண்டிகை, மூத்தோள் என உள்ளுறையும் நூற்றுக்கணக்கான படிமங்கள்.

வெண்முரசு காட்டும் பெண்மையின் வழிகள் குறித்து சில காலம் முன்னர் கேள்விகள் எழுப்பிக் கொண்டு எழுதியிருந்தேன். எழுதி அறிவதொன்றே வழி என்று குறிப்பிட்டிருந்தீர்கள். காவியமே அதற்கான விடைகளும் கொண்டிருக்கிறது.

//கனிவதன் மூலமே கடப்பதன் கலையை கற்பிக்கவில்லை. அளிப்பதன் வழியாக அடைந்து நிறைவுறும் அறிவையும் கொடுக்கவில்லை.
விண்சுருங்கி அணுவாகும் பெருவெளியை வெறும்சிறகால் பறந்துசெல்ல ஆணையிட்டான் ஆணிடம். சென்றடைந்தோரெல்லாம் கண்டது கடுவெளியே அதுவாகி எழுந்து நின்ற கழலிணைகளை மட்டுமே. பெண்களுக்கோ பெற்றெடுத்து முலைசேர்த்தால் மட்டுமே போதுமென்று வைத்தான் பாதகன்//

இந்நிரையில் ஒவ்வொருவராகவும் அவர்களது அலைநுரைத் துமியென்றேனும் சில பொழுதேனும் வாழ்ந்திருக்கிறேன், இவர்களது பேராற்றலை, கண்ணீரை, குருதியை, சிறுமையை, பேரன்பை, தாய்மையை, காமத்தை, பெருவிழைவை, வெறுமையை என் அகமென அறிந்திருக்கிறேன். சாளரங்களில் காய்ந்து போன கண்ணீருக்கும், வரலாற்றிலும் புராணங்களிலும் பெயர் தொலைந்து போன முகங்களுக்கும், புராணமாகிவிட்டதாலேயே அகக்கிடக்கையை அறிவிக்க இயலாத பாத்திரங்களுக்கும் முகமும், பெயரும், ஆளுமையின் ஆழமும் கொடுத்து வாழவைத்த ஆசிரியருக்கு அம்பை முதல் சம்வகை வரை, ராதை முதல் தயை வரை அனைவரது சார்பாகவும் பேரன்பும் வணக்கங்களும்.

வெண்முரசு விவாதங்கள் தளம்

முந்தைய கட்டுரைமணிபல்லவம்,கீர்ட்டிங்ஸ் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபெருஞ்செயல் – தடைகள்