வணக்கம் சார்
நஞ்சுபுரம் இசை வெளியீட்டு விழா பற்றிய உங்கள் அறிமுகக் குறிப்பு, பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. என்மீதான உங்கள் அன்பும் அக்கறையும் எப்போதும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாகவே உள்ளது. ரொம்ப நன்றி சார்
அந்தப் பதிவில் இறுதியில் நீங்கள் “மகுடேஸ்வரன் முதல்முறையாக அதில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்” என்று எழுதியிருக்கிறீர்கள். அவர் என் படத்தில் ஐந்து பாடல்களை எழுதியிருக்கிறார் (இன்னொரு ராப் பாடலை ராகவ் எழுதினான்), அதில் ஒரு பாடல் மட்டும் புத்தகத்தில் பிரசுரமான அவருடைய கவிதைக்கு மெட்டமைத்து உருவாக்கப்பட்டது. ஒருவேளை நீங்கள் மகுடேசுவரனை கிண்டல் செய்வதற்காக அப்படி எழுதினீர்களா என்றும் தெரியவில்லை.
அன்புடன்
சார்லஸ்
அன்புள்ள சார்லஸ்
படம் பற்றி நீங்கள் சொல்லியிருந்தாலும்கூட என் நினைவில் கடைசியில் வசந்தகுமார் மகுடேஸ்வரனின் ஒரு கவிதையை நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பது மட்டுமே நின்றது. அதையே குறிப்பிட்டேன்
ஆனால் மகுடுவை கிண்டல் செய்வது மாதிரி அமைந்துவிட்டது. மகிழ்ச்சியாக இருக்கிறது :)))
வாழ்த்துக்கள்
ஜெ
மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு.,
வணக்கம். நலம். நலம் விளைக !
நஞ்சுபுரம் திரைப்படப் பாடல் வெளியீட்டு விழா பற்றிய என் இணையதளக் கட்டுரையைத் தாங்கள் முன்மொழிந்து தங்கள் இணையதளத்தில் அறிவித்தமைக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்! உங்கள் இணைப்பு அந்தக் கட்டுரையைப் பலருக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது. இன்று பிறந்த நாள் காணும் இயக்குநர்-நண்பர் சார்லஸுக்கு இது மதிப்பான பரிசாகவும் அமைந்துவிட்டது.
என்றும் அன்புடன்
மகுடேசுவரன்
திருப்பூர் / 19 மார்ச் 2011
அன்புள்ள மகுடு
பாடல் நன்றாக வந்திருப்பதாக ஏற்கனவே இணையத்தில் யாரோ சொல்லி இணைப்பு கொடுத்திருந்தார்கள். வாழ்த்துக்கள்
ஜெ