அந்த அறை

பழைய புகைப்படங்களில் என்னுடைய வாசிப்பறையை பார்க்கிறேன். 2008ல் இந்த மாடியை கட்டி மேலே வருவதுவரை கீழே வலப்பக்கம் சிறிய அறைதான் என் படுக்கையறையும், எழுத்து அறையும். பொதுவாக அடைசலான அறை. நான் மேலும் புத்தகங்கள் துணிகள் என்று வைத்திருப்பேன். ஆனால் அருண்மொழி ஓயாமல் தூய்மை செய்து கொண்டிருப்பதனால் துல்லியமாகவும் இருக்கும்.

அங்கே இருந்துதான் காடு, ஏழாம் உலகம், கொற்றவை எழுதினேன். 2000த்தில் கணிப்பொறி வாங்கினேன். மேஜைக்கணினி. அதில் இணையத் தொடர்பு ஓராண்டுக்குப்பின் வாங்கினேன். தமிழில் தட்டச்சு செய்ய அடிப்படையான விரலொழுங்கை சொல்லித்தர எம்.எஸ் முன்வந்தார். ஆனால் அவரே பின்னர் “இதுக்கு ஃபிங்கர் ஆர்டர் தேவையில்லை. டைப்ரைட்டரிலே ஷிஃப்டை முழு பலத்தோட அடிச்சு மேலே தூக்கணும். அப்பதான் பல எழுத்துக்களை எழுதமுடியும். அந்த ஃபிங்கர் ஆர்டர் அதுக்குத்தான். இதிலே எல்லாமே ஃபெதர் டச் தான். ரெண்டுகையையும் பயன்படுத்தணும், அது போதும்” என்றார்.

முதலில் இணையத்தில் சில்லறை கடிதங்கள் எழுதினேன். அப்போது திண்ணை இணையதளம் பிரபலம். அதன் பின்னூட்டப்பெட்டியில் கொலைவெறிச்சண்டை நடக்கும். அதில் எழுதினேன். மெல்லமெல்ல கைகள் பழகின. கட்டுரைகள் எழுதினேன். கடைசியாக, தட்டச்சு செய்கிறோம் என்பதையே கைகளும் மனமும் மறந்தபின் கதைகள்.

கொற்றவை எழுதிய நாட்கள் மகத்தானவை. அந்நாவலுடன் இளையராஜாவின் கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம். என்ற பாடல் என் மனதில் அந்த கருவுடன் இணைந்துகொண்டது. அந்தப்பாடலை ஒருமுறை கேட்டுவிட்டுத்தான் எழுதவே ஆரம்பிப்பேன்- எல்லா பகுதிகளுக்கும் அந்தப்பாடல்தான். ஒவ்வொருநாளும், ஒவ்வொருமுறை அமரும்போதும்.

ஏற்கனவே எழுதுவதற்கான சூழல் வீட்டில் உண்டு. அன்று எட்டு வயதான அஜிதன் நான் எழுத ஆரம்பித்தாலே ஒதுங்கிவிடுவான். சத்தம் போடமாட்டான். ஆனால் சைதன்யா நேர்மாறு. தட்டச்சு செய்துகொண்டிருக்கும் இரு கைகளுக்கு நடுவே அவளுடைய குட்டித்தலை அவ்வப்போது முளைக்கும். அவளும் சேர்ந்து தட்டச்சு செய்ய முயல்வாள். “அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா” என ஒரே மூச்சில் அழைப்பாள். ஏகப்பட்ட சந்தேகங்கள் கையளவு மண்டைக்குள் இருந்து கிளம்பி வந்துகொண்டே இருக்கும்.

ஓர் அறை நம் மனமே ஆகிவிடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாம் அதற்குள் சென்றுவிடுகிறோம், அது நமக்குள் வந்தமைகிறது. அங்கே அமர்ந்தாலே ஏதாவது எழுதமுடியுமென்று தோன்றிவிடுகிறது. இன்னொரு அறைக்கு மாறிவிட்டால் அந்த முந்தைய அறை கனவுக்குள் சென்றுவிடுகிறது. இன்று அது சைதன்யாவின் அறை. எப்போதாவது அதற்குள் சென்றால் அது என் அறையாக இருந்த சுவடே இல்லை. அது வேறு அறை, அங்கிருந்த என் அறை இப்படி புகைப்படங்களில்தான் எஞ்சியிருக்கும்.

புதிய வாசிப்பறை 2009

இன்றைய வாசிப்பு 2020

முந்தைய கட்டுரைவெண்முரசின் கட்டமைப்பு- நாகராஜன்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : ஞானி