சென்னையில் தங்கிவிட்டாலென்ன என்று என்னிடம் திரைத்துறையில் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நான் அதை எப்போதும் தவிர்த்தே வந்திருக்கிறேன். முக்கியமான காரணம், அங்கே பச்சை கண்ணுக்குப்படுவதில்லை என்பதுதான்.
நான் பச்சைநிறைந்து அலையடிக்கும் குமரிமாவட்டத்தில் பிறந்துவளர்ந்தவன். குமரியிலேயே நான் பிறந்த விளவங்கோடு தாலுகா மேலும் பச்சை செறிந்தது. ஒளியென்பதே பச்சைதான். இலைத்தழைப்பை ஊடுருவும் சூரியனையே நான் இளமையில் பெரும்பாலும் கண்டுவந்திருக்கிறேன்.
1975ல் நான் எட்டாவது படிக்கும்போதுதான் முதல்முறையாக ஆரல்வாய்மொழி எல்லையை கடந்தேன். பாரதி விழாச் சொற்பொழிவுப்போட்டிக்காக எட்டையபுரம் செல்வதற்காக. அன்று சன்னலோரம் அமர்ந்து முதல்முறையாக பச்சை இல்லாத நிலத்தைப் பார்த்தேன். ஏனென்றே தெரியவில்லை, அழுதுகொண்டே இருந்தேன்
உண்மையில் பச்சைபெருகாமல் மண் இருக்கமுடியும் என்றே நான் அறிந்திருக்கவில்லை. நெல்லைப் பகுதி இன்று பெருமளவு மாறிவிட்டது. சாலையை ஒட்டியநிலங்களெல்லாம் எப்படியோ யூகலிப்டஸ் பசுமையையாவது அடைந்துவிட்டன. நாற்பதாண்டுகளுக்கு முன்பு அந்நிலம் எரிந்தழிந்ததுபோல புகைந்து கிடக்கும். உலர்ந்த பனைமரங்கள். வெம்மை பறக்கும் பொருக்குநிலம். மனிதநடமாட்டமே கண்ணுக்குப் படாது
எனக்குப் பிடித்த நிலங்களெல்லாமே பசுமையானவை. குமரியை விட்டால் ஊட்டி. அதன்பின் ஈரோடு. அடிக்கடி செல்வதில்லை என்றாலும் குற்றாலம் பகுதி. ஒவ்வொருநாளும் பச்சை கண்ணுக்குப் படவேண்டும். எந்த சன்னலை திறந்தாலும் பச்சை தெரியவேண்டும்.
பச்சை வெவ்வேறுவகை. அமெரிக்காவிலும் கனடாவிலும் கண்தொடும் தொலைவுவரை நிறைந்திருக்கும் விரிந்த பசுமை. ஆஸ்திரேலியாவில் புல்வெளிகளின் அலை. ஜப்பானும் பிரிட்டனும் ஏறத்தாழ ஒரேமாதிரியானவை. பசுமையாலான அலைநிலம். ஒளிரும் பசுமையை இந்நாடுகளில் பார்க்கலாம். ஐரோப்பாவெங்கும் பசுமைதான். பசுமையில் வாழ்வது ஒரு கொடை.
இங்கே ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் நடைசெல்கிறேன். வேளிமலை அடிவாரத்தில் சோழர்காலத்திலும் பின்னர் மார்த்தாண்டவர்மா முதல் தர்மராஜா வரையிலான ஆட்சியாளர்களின் காலத்திலும் வெட்டப்பட்ட ஏரிகளால் மலையின் வடிநீர் சேகரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பெரிய வயல்வெளிகளின் நடுவே
குமரியில் கோடையிலும் பசுமை காய்வதில்லை. தென்மேற்குப் பருவமழைக்குப்பின் இப்போது வயல்களில் நாற்றுகள் எழுந்துவிட்டன. ரசாயன உரம் அவற்றின் பசுமையை இருளச்செய்து நீலநிறம்போல ஆக்கிவிட்டிருக்கிறது. புல்லுக்கு ரசாயன உரம் பொசிவதனால் அவை மேலும் பசுமைகொண்டிருக்கின்றன.
பசுமை என நாம் சொல்வது எத்தனை வகையான வேறுபாடுகளால் ஆனது. ஐரோப்பிய தைலவண்ண இயற்கைக்காட்சி ஓவியங்களில் பச்சையாலேயே ஒரு பெரிய உலகை வரைந்து காட்டுகிறார்கள். பச்சையே தொலைவும் அண்மையும் ஆகிறது.ஒளியும் இருளும் ஆகிறது.
ஆடிக்காற்று சுழன்றடிக்கிறது. நாற்றுப்பரப்புகளில் அலைகள் கொப்பளித்துக்கொண்டே இருக்கின்றன. கண்களால் பசுமையை வெறுமே பார்த்தபடி எதையும் யோசிக்காமல் நடந்தால்போதும், கொஞ்சம் கொஞ்சமாக நம் ஆழம் அடங்கி எண்ணங்களில்லாத நிலை உருவாகிவிடுகிறது.
பசுமை உள்ளுறையும் அந்த முதல்விலங்கை என்ன செய்கிறது? உணவு உண்டு என நம்பிக்கையளிக்கிறதா? பதற்றங்கள் அமைந்து ஆறுதல்கொள்ளவைக்கிறதா? குரங்குகள் மட்டுமல்ல நாய்கள் கூட பசுமையில் அமைதியடைகின்றன. நாற்றுப்பரப்பில் மனம் படிந்துவிடுகிறது, பின் மனமென்றே அலைகொள்கின்றது பசுமை.
மீண்டு வருகையில் ஓரிரு மணிநேரம் எங்குமில்லாமல் இருந்ததாக, பரவி விரிந்து மீண்டும் தன்னை இழுத்துக் குவித்துக்கொண்டதாகத் தோன்றுகிறது. பசுமை கருணையின் நிறம்.
***