கடிதங்கள்

அன்பின் ஜெ.எம்.,
கிட்டத்தட்ட இரு மாத காலமாக ஆட்டி அலைக்கழித்து வந்த அற்புதமான ஒரு சிறுகதை வரிசை முடியப்போகிறது என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும்,அந்த வெறுமை நெஞ்சில் சூழ்ந்தாலும்..  ’உலகம் யாவையும்’ கதை இவ்வரிசைக்கு ஒரு சிறந்த முத்தாய்ப்பாக அமைந்துவிட்டிருப்பதை எண்ணும்போது (அப்படி நேர்ந்தது தற்செயலா…தெரியவில்லை.)வியப்பாகத்தான் இருக்கிறது.

கம்ப காப்பியத்திற்கு அடியெடுத்துக் கொடுத்த உலகம் யாவையும்’, …
இந்தச் சிறுகதை வரிசையின் முடிவுத் தலைப்பானபோதும், ..
அதுவும் கூட உலகக் குடிமக்கள் என்ற உன்னதமான ஒரு புதிய தொடக்கத்துக்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கிறது.

அரசியல்வாதிகள் கணியன் பூங்குன்றனின் அழகான தொடரைத்
தேய் வழக்காக்கி விடாமல் இருந்திருந்தால் அதுவே கூடத் தலைப்பாகியிருக்கலாம்…இப்போது அந்தத் தொடரைச் சொல்லக் கூடக் கூச்சமாக இருக்கிறது. உலகம் யாவையும் தம்முள் உளவாக்கிக் கொண்டு, பேதம் பாராட்டாத பேரறத்தின் ஆளுகைக்குள் பிரபஞ்சம் முழுதையும் கொணர நினைத்த காரிடேவிஸுக்குள் பூமேடை,யானை டாக்டர்,கெத்தேல் சாகிப் என அனைவருமே உள்ளடங்கி இருக்கிறார்கள்.
இந்த அற வரிசைக் கதைகளைத் தொடங்கி வேகம் பிடித்தபோது தாங்கள் சொன்ன வார்த்தைகளே நெஞ்சுக்குள் ஓடுகின்றன..
‘எந்தரோ மகானு பாவுலு..அந்தரிகி வந்தனமு..’
’அற’ வரிசைக் கதைகளில் இடம் பெறும் தன்னலம் துறந்த அத்தனை மகானுபாவர்களுக்கும் அவர்களின் திக்கு நோக்கிய வந்தனங்கள்.
‘உண்டாலம்ம இவ்வுலகம்..!’
எம்.ஏ.சுசீலா,(M.A.Susila)
புது தில்லி

அன்புள்ள ஜெ,
உங்கள் நூறு நாற்காலிகள் கதை மிகவும் அருமை. ஒரு கேள்வி என் மனதில் அரித்து கொண்டே இருக்கிறது. இந்த மாதிரியான சமுகம் உருவாக என்ன காரணம் இருக்க முடியும் . வாழ்கையில் மேல் மட்டதிற்க்கு வந்த பின்பும் ஏன் அந்தத் தாயால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை? தனது பேரனுக்கு எதற்காக அழுகலை ஊட்ட வேண்டும்? இதைப் பற்றி எல்லாம் அறிந்திடாத சுபா கோபப்படுவதில் தவறு இல்லையே? ஏனென்றால் அவளும் ஒரு தாய் தானே?

இந்த மக்களுக்கு அந்தஸ்து ஒன்று கிடைத்தாலும் ஏன் அதை அவர்கள் மனம் ஏற்க மறுக்கிறது? மேலும் உயர் குலத்தில் உள்ள அனைவரும் கெட்டவர்கள் அல்லரே?

இந்த மாதிரியான மக்களின் மன நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள் ?

நன்றி ,
ராம்ப்ரசாத்
http://SongsofEarth.blogspot.com/

அன்புள்ள ராம் பிரசாத்,

அவர்கள் என நினைப்பதனால் வரும் சிக்கல் உங்கள் வினா

நாம் என நினைத்துப்பாருங்கள். நாமும் நம் பெற்றோருடன் இதே வகையான மோதலில்தான் இருக்கிறோம். நம் பிள்ளைகளுடன் இதே மோதலைத்தான் மேற்கொண்டிருக்கிறோம்

ஜெ

வணக்கம் சார்!

யானை டாக்டர் – அருமையான சிறுகதை சார் ! மனிதன் செய்யும் தவறுகள் எவ்வளவு கொடுமையானது ! அவனுக்குத் தெரிவது இல்லை தன் தவறின் வீரியம் !

நம் கண் முன்னே மனிதனும் மிருகமாகத்தான் வாழ்கிறான் . ஆனால் ஒவொரு மிருகமும் மனிதனைவிட மகத்தானவை!

இன்னும் நிறைய உங்களுடன் பகிரிந்து கொள்ள ஆசை ! உங்கள் பதிலை எதிர் நோக்கி ……………….

உங்கள் அன்பு வாசகி

கண்ணம்மா

 

அன்புள்ள கண்ணம்மா

நாம் மிருகங்களில் இருந்து முன்னேறி வந்து அடைந்தவை பல– இல்லையேல் நாம் இதை வாசித்துக்கொண்டிருக்க மாட்டோம். இழந்தவையும் பல. அவற்றை நினைவூட்டுவதே இக்கதைகளின் இலக்கு

நன்றி

ஜெ

வணக்கம் ஜெயமோகன்

இதுவரை உங்களது கதைகளையோ, புத்தகங்களையோ படித்திராத முட்டாள் நான். தற்செயலாக உங்களின் வலைபக்கத்தில் இருந்து யானை டாக்டர் சிறுகதையை படிக்க நேர்ந்தது. மனசெல்லாம் ஒரு விதமான இறுக்கத்துடனும் நடுக்கத்துடனும் இருக்கிறேன்.

“மனுஷன் தான் இருக்கறதுலையே வீக்கான மிருகம்”. அதெப்படி அய்யா அவ்ளோ பெரிய உண்மைய ரொம்ப எளிதா சொல்லிட்டு ரொம்ப கூலா கதைய நகர்த்திட்டு போறீங்க.. அந்த வார்த்தைகளோட தாக்கம் மனச போட்டு பிசயுது

ஜெயமோகன், இனி இரவுகள்ல எனக்கு தூக்கம் வருமான்னு கூட தெரியல. இதுக்கு மேல எனக்கு ஏதும் சொல்ல வரமாட்டேங்குது. நல்ல அருமையான படைப்பு.

Be Yourself; Belive in Yourself

Cheers.!!!
Sathesh kumar.C
Hyderabad

அன்புள்ள சதீஷ்குமார்

இதுவரை வாசிக்காதவர் என்று நான் உங்களை பார்க்கவில்லை, இனிமேல் வாசிக்கப்போகிறவர் என்றே பார்க்கிறேன்

நன்றி

ஜெ

 

ஜெ..

1990களில் அரவிந்தாசிரமம் செல்லத் துவங்கிய பின் ஒரு நாள் “ஆரோவில்” சென்றோம். அந்த இடம், உலகில் தமக்கே என்று எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத ஓர் இடம் பூமியில் எங்காவது இருக்க வேண்டும் என்ற ஒரு நோக்கில் உருவாக்கப் பட்டது. அன்னையின் “ஒரு கனவு” என்னும் சாசனத்தின் (20-05-1966) முதல் வரியே இதுதான்.

”ஆரோவில்” பல முறை சென்ற போது, அங்குள்ள சூழல் மிக வசீகரமாக இருந்ததை உணர்ந்திருக்கிறோம். முதிரா இளம் வயதில் எழும் ஒரு மன இச்சையில் அங்கு சென்று விடலாமா என்று நானும் விஜியும் பல முறை யோசித்திருக்கிறோம். ஆனால், சற்றே அருகில் சென்றதும் தெரியும் அரவிந்தாசிரமத்தின் உள் முரண்கள் பயமுறுத்தி விட்டன. பின் ரமணரை நோக்கி நகர்ந்து விட்டோம்.

இன்றும் ஓருலகம் என்னும் நோக்கில் செயல்படும் ஒரு இடம் என்று அதைச் சொல்லலாம். முழுமையடைந்த கனவா என்றால் தெரியாது. ஆனால், காசுக்குப் பின்னால் ஓடும் உலகை விட மிக அழகானது. இதற்கு ஆதரவளித்ததும் நேருதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

உலகம் யாவையும் இந்தச் சிறுகதை வரிசையின் இறுதியாக இருப்பது மிகச் சரி. தனி மனித அறத்தில் துவங்கி, தன்னையும் உலகையும் ஒன்றாய்த் தரிசிக்கும் உச்சியில் போய் முடிகிறது. மொத்தப் பயணத்திலும் உடன் வந்தது எமது பாக்கியம்.

ரமணரைப் பற்றி முதன் முதலாகக் கேள்விப்ட்ட பேராசிரியர் ஸ்வாமிநாதன், “ஒண்ணுமே பண்ணாம சும்மா மல மேல உக்காந்திருக்கிற இந்தாளப் பத்தி ஏன் இவ்வளவு பெரிசாப் பேசிக்கிறாங்க? அங்கே காந்தி இந்தியாவின் சுதந்திரத்துக்காக எவ்வளவு கஷ்டப் படுறார்னு” யோசிச்சிட்டிருந்தாராம், ரமணரைப் பார்க்கும் வரை.

அன்புடன்

பாலா

முந்தைய கட்டுரைஅறம் கதைகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகோதையின் தொட்டிலில்