பள்ளியில் தமிழ்

இனிய ஜெயம்

இன்று வெளியான பத்தாம் வகுப்பு பாட நூல் கண்டேன். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கி இருக்கிறார்கள். மெல்லிய இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.

சங்க இலக்கிய கவிதைகள், சிலப்பதிகார கவிதைகள், கம்ப இராமாயண கவிதைகள்,  இலக்கணம் தொடர்ந்து, மைய பாட திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, ஹாக்கிங் ஐ அடிவொற்றி ப்ரபஞ்சவியல், கண்ணதாசன் பாடல்களை அடியொற்றி ஞானம் எனும் தலைப்பில் தத்துவம் இவை போக, இலக்கியத்தில் கிரா, ப. சிங்காரம், ஜெயகாந்தன் எல்லாம் இடம்பெற்றிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பருவம் முடிந்த பின்னே, பாடத்துக்கு வெளியே சென்று வாசிக்க பரிந்துரைக்கப்பட்ட நூல்களில் எஸ்ரா, பாவண்ணன், நா. முத்துசாமி, அ.கா. பெருமாள் எல்லாம் இருக்கிறார்கள். பரிந்துரை வரிசையில் மிக முக்கிய நூல் அபி கவிதைகள்.  பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகள் அந்த நூலின் அட்டை படத்துடன் காண கிடைக்கிறது.

அந்த காலத்தில் நான் பத்தாப்பு பரீட்சை எழுதி தமிழில் மட்டும் 90 சதம் எடுத்தேன். மற்றதெல்லாம் முப்பத்தி மூணு சதம். இன்று வெளியான பத்தாப்பு பாடங்கள் அனைத்தையும் பார்த்தால், இன்று இந்த பாடநிலையில் பரீட்சை எழுதினாலும் நான் அதே மதிப்பெண்கள்தான் பெறுவேன் என்று தன்மைபிக்கையுடன் சொல்ல தோன்றுகிறது. :)

கடலூர் சீனு

***

முந்தைய கட்டுரைநிழற்காகம், அனலுக்குமேல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதன்மீட்சி- கடிதம்