அன்புள்ள ஜெ
சமீபத்திய சர்ச்சைகளில் நீங்கள் ஒரு வகையான நடுநிலைக்கு முயல்வதாகத் தெரிகிறது. ஒரு கருத்தைச் சொன்னதுமே அக்கருத்துக்கு மறுபக்கத்தையும் சொல்கிறீர்கள். இந்த மறுப்புக்கு மறுபக்கம் நீங்கள் சொல்வனவற்றைக் குழப்புகிறது என நினைக்கிறேன்.[வைரமுத்து பற்றிய கட்டுரை]
செந்தில்
***
அன்புள்ள செந்தில்,
நான் கருத்துக்களையே உருவாக்க நினைக்கிறேன். என் கோபங்களும் கண்டனங்களும் அவ்வாறே இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.[ ஆனாலும் எல்லைகள் அவ்வப்போது மீறப்படுவதுமுண்டு, அது என் பலவீனம்தான்] எதில் கவனமாக இருக்கிறேன் என்றால் என் மறுப்போ கண்டனமோ ஒட்டுமொத்தமானதாக வாசகர்களால் புரிந்துகொள்ளப்படலாகாது என்று. ஆகவே ஒவ்வொன்றிலும் எதை ஏற்கிறேன் எதை மறுக்கிறேன் என்று சொல்லமுயல்வேன். என் எல்லா கட்டுரைகளிலும் சாதக பாதக அம்சங்களை சொல்லியிருப்பதைக் காணலாம்.
இன்னொன்று, நாம் ஒரு கண்டனத்தையோ மறுப்பையோ தெரிவித்தால் உடனே நம்முடன் சேர்ந்துகொள்ளும் சம்பந்தமில்லாத வெறுப்பு – காழ்ப்புக் கூட்டம் ஒன்று நம் கருத்தை தன் ஆயுதமாக ஆக்கிக்கொள்ளும். அதற்கு ஒருபோதும் இடமளிக்கலாகாதென்பது என் எண்ணம். இவ்வாறு சமன்செய்வதில், நான் சொல்லவந்த கருத்து மட்டுமே நின்றிருக்கவேண்டும் என்பதில் எப்போதும் கருத்தூன்றுவதுண்டு. அதை திசைதிருப்ப, வேறெவரேனும் கையாள விடுவதில்லை.
சாமானியர்கள் சண்டைகளை விரும்புவார்கள். நீ என் கட்சியா என்பார்கள். ஒன்றைமட்டும் சொல்லு என்பார்கள். கருத்து முக்கியமல்ல காழ்ப்பை காட்டு என்பார்கள். அவர்கள் என் விவாதக்களத்துக்குள் வராமல் அகற்றவேண்டுமென எப்போதுமே கவனம் கொள்வேன்
அக்கட்டுரையின் என் தரப்பு திட்டவட்டமானது. வைரமுத்து மீதான பெண்களின் குற்றச்சாட்டு எவ்வகையிலும் மறைக்கப்படவோ, சமூகஏற்புக்கு ஏற்ப திரிக்கப்படவோ கூடாது. கூட்டாக எழுந்தாகவேண்டிய அக்கண்டனமே தொழில்துறைகளில் பெண்களின் காப்புக்கு எதிர்காலத்து உறுதிப்பாடுகளை உருவாக்கும். மீ-டூ வழக்குகளில் என் நிலைபாடு அதுவே. லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டு உட்பட அனைத்திலும் என் வெளிப்படையான நிலைபாடு அது. அதை மீ-டூ வழக்குகள் எழுவதற்கு முன்னரே, தருண் தேஜ்பால் விவகாரத்திலேயே விரிவாக எழுதியிருக்கிறேன். [தமிழில் நானறிந்து வேறெந்த எழுத்தாளரும் இத்தனை திட்டவட்டமாக எதிர்ப்பை பதிவுசெய்யவில்லை]
அதேசமயம் அவருடைய படைப்புக்கள்மீதான விமர்சனம் என்பது அதைச் சார்ந்தது அல்ல.ஒரு பாலியல் குற்றச்சாட்டை வைத்து நான் வைரமுத்துவை நிராகரிப்பதாகக் காட்ட முயல்கிறார்கள் சிலர். அவருடைய இலக்கிய இடம் பற்றிய மறுப்பு என்பது முழுக்கமுழுக்க இலக்கிய அழகியல் சார்ந்தது. அவருடைய எல்லா திரைப்பாடல் வெற்றிகளையும், கருத்தில்கொண்ட பின்னரே இதைச் சொல்கிறேன்.- இதே வரியை முன்னர் நாலைந்துமுறை எழுதிவிட்டேன். இதற்கும் அக்குற்றச்சாட்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது வைரமுத்துவின் ஆளுமை எதுவாக இருந்தாலும் மாறாதது என்றே சொல்ல வருகிறேன்.இது எவ்வகையிலும் தனிநபர் காழ்ப்புடன் சொல்லப்படுவது அல்ல.தனிநபர் நட்பு இருந்தாலும்கூட இதுவே நிலைபாடு.
சொல்லும் விஷயத்தை திசைதிருப்பி, சொல்பவனிடம் ஏதாவது முரண்பாட்டை கண்டுபிடித்து, ‘நீ என்ன யோக்கியமா’ என்று வசைபாடி, அவனை நேர்மையற்றவன் என நிறுவுவதுதான் இங்கே பொதுவாக விவாதமுறை. நான் நேர்மையானவன் என நம்புபவரிடம் மட்டுமே நான் பேசுகிறேன்.
நீண்ட அனுபவத்தில் நான் அறிந்தது ஒன்று உண்டு, எவ்வளவு சொன்னாலும், எத்தனை விளக்கினாலும், சொல்பவன் மீதான நம்பிக்கை இல்லாதவர்களிடம் ஒரு சின்ன கருத்தைக்கூட விளக்கிவிட முடியாது, அவர்கள் திரும்பத் திரும்ப அவர்கள் நினைப்பதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
ஆகவே நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு மேலே விவாதிக்காமல் நின்றுவிடுவேன்.
இப்போது வேறெதிலாவது தொற்றிக்கொண்டாக வேண்டிய நிலையில் இருக்கிறேன். வெண்முரசுக்குப்பின் எழுதவேண்டியதை கண்டடைந்தாக வேண்டும். ஆகவே எல்லாவகையான கருத்தாடல்களில் இருந்தும் விலகிக்கொள்ள விழைகிறேன். குவியவேண்டியிருக்கிறது, உள்ளே இருந்து ஏதாவது எழுந்து வரவேண்டியிருக்கிறது. கொஞ்சநாள் ‘ஸ்லீப் மோட்’
ஜெ
நா.முத்துக்குமார் வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து
டைம்ஸ் ஆ·ப் இண்டியா இலக்கிய மலரும் ஜாம்பவான்களும்
***