அன்புள்ள ஷண்முகப்பிரபு அவர்களுக்கு
நலம்தானே?
நானும் நலமே
பயணத்தில் இருந்தமையால் கடிதம் எழுத தாமதம். மன்னிக்கவும். உங்கள் இணையதளத்தைப் போய் பார்த்தேன்.
http://sarvadesatamilercenter.blogspot.com
தமிழர் வாழ்க்கையைப்பற்றிய ஓர் ஒட்டுமொத்தக் கண்ணோடத்தொடு இருக்கிறீர்கள். இது மிக மகிழ்ச்சியை அளித்தது.
பெரும்பாலான இணைய தளங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைச் சார்ந்தவையாகவே இருக்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பத்துவருடங்களுக்கு முன்னர் தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்களைப்பற்றியும் தமிழ்பற்றியும் இருந்த ஊக்கமும் கவனமும் இப்போது இல்லை. அன்று வந்துகோன்டிருந்த புலம்பெயர்ந்த இதழ்களில் சிலவே இப்போதும் வெளிவருகின்றன. ஊக்கத்துடன் முன்னெடுக்காவிட்டால் பண்பாட்டு அடையாளங்கள் மறைந்துவிடும். ஆப்ரிக்காவிலும் பிஜியிலும் உள்ள தமிழர்கள் அப்படி பண்பாட்டை தொலைத்துவிட்டு திரைபப்டங்கள் வழியாக ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்கிறார்கள்.
உங்களைப்போன்றவர்களின் முயற்சிகளுக்கு சமகாலத்தில் உரிய இடம் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவை வரலாற்றில் பங்களிப்பை ஆற்றுபவை என்றே சொல்ல விரும்புகிரேன்
ஜெ
அன்புள்ள சண்முகப்பிள்ளை அவர்களுக்கு
நீங்கள் சொன்னது உண்மையே. கேரளப் பண்பாட்டும் பழக்க வழக்கங்களும் தொண்ணூறு விழுக்காடு ஈழப்பண்பாடே. குறிப்பாக சமையல். தேங்காய்… நான் கனடா போயிருந்தபோது என நாவுக்கு ஈழ உணவு மட்டுமே சுவையாக இருந்தது… 1800 களில் மலையாளி நாயர்கள் ஏராளமாக ஈழம் வந்திருக்கிறார்கள். வெள்ளிஅய அரசில் வேலை பார்த்தார்கள். பலர் அப்படியே ஈழ வேளாளாச் சமூகத்துடன் கலந்து மறைந்தார்கள். இயக்குநர் பாலு மகேந்திராவின் மனைவியின் அப்பா மலையாளி நாயர்தான். எம் ஜி ஆரின் அப்பாவும் அப்படிச் சென்றவரே.
உங்கள் இணையதளத்தை படித்தேன். தமிழ்ப்பண்பாடு என்பதை நேர்நிலையாக — பாஸிடிவ் ஆக– நம்முடைய அடுத்த தலைமுறைக்குக் கொன்டுசென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் ஈழத்து புலம் பெயர்ந்தவர்கள். பிராமணா வெறுப்பு, சம்ஸ்கிருத வெறுப்பு, இந்திய வெறுப்பு, சாதி வெறுப்பு என்றெல்லாம் எதிர்மறையாக அதை முன்வைத்தால் அடுத்த தலைமுறை அந்த வெறுப்புகளை சற்றும் பொருட்படுத்தாது. ஆனால் இன்று நடப்பது அதுவே.
தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்களில் பெரும்பகுதி பத்தாம் நூற்றாண்டு பக்தி காலகட்டத்தில் பெருமதங்களான சைவ வைணவ மதங்களால் தொகுத்து உருவாக்கபப்ட்டவை. சமையல் ஆசாரங்கள் கொண்டாட்டங்கள் விழாக்கள் மட்டுமல்ல கலை இலக்கியம் தத்துவம் எல்லாம் பக்தி இயக்கத்துக்கு கடன்பட்டிருக்கின்றன. சைவக்குரவரும் ஆழ்வாரும் இல்லமல் தமிழ் இல்லை எனப்தே உண்மை. இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பண்பாட்டை முன்னெடுத்துச்செல்லும்பொருட்டே கூட நாம் பக்தி இயக்கத்தின் உணர்வுகளை நீட்டிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அது மட்டுமே நீடிக்கும் என்ற வரலாற்றையே மேற்கிந்தியத்தீவுகளிலும் ஆப்ரிக்காவிலும் வாழும் மூன்றுதலைமுறை முந்தைய தமிழர்கள் காட்டுகிறார்கள்
ஜெ