வைரமுத்து மீதான கண்டனங்கள்

ஹிந்து தமிழ்- நாயும் நாணும் பிழைப்பு

காலையில் இருந்தே வசைமாரி பொழியும் மின்னஞ்சல்கள். சில்லறை மிரட்டல்கள். பலவாறான ஏளனங்கள். ஆனால் அவை உருவாக்கும் உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் இந்தச் சந்தர்ப்பத்தில் நானறிந்த வைரமுத்து குறித்து சில சொல்ல விரும்புகிறேன். ஒருவரை விமர்சிக்க அவரை அடிமுடி வெறுக்கவேண்டியதில்லை.

என் கணிப்பில் தமிழில் தலைசிறந்த பாடலாசிரியர் அவரே. கண்ணதாசனை விடவும் முக்கியமானவர். கண்ணதாசனைப் போலன்றி மிகச்சிக்கலான சந்தங்கள் உருவான காலத்திலும் எழுதியவர். நவீனக் கவிதையின் சொல்லாட்சிகளை பாடலுக்குக் கொண்டு சென்றவர். இந்திய அளவிலேயே திரைப்பாடலாசிரியராக அவருடைய இடம் முக்கியமானது.

திரைத்தொழிலில் அவர் ஒரு  ‘புரஃபஷனலிஸ்ட்’. சினிமாவில் அதைத்தான் முதலில் பார்ப்பார்கள். பாடல்களுக்கு மேலதிக அழுத்தம் கொடுத்து அதன் வழியாக படத்தின் வணிக- கலை மதிப்பைக்கூட்ட அவரால் முடியும். திரைப்பாடலின் எல்லாத் தேவைக்கும் இறங்கியும் எழுந்தும் எழுதமுடியும். திரைப்படத்தின் வணிகப்பிரச்சாரத்தின் போது அவருடைய ஆளுமையும் மொழியும் ஒரு பெரும்பங்கை ஆற்றுகின்றன.

திரைச்சூழலில் அவர் பொதுவாக ஒரு கனவானுக்குரிய ஆளுமை கொண்டவர். அவர் எந்நிலையிலும் புறம்கூறுவதில்லை. ஒருவர் குறித்து இன்னொருவரிடம் பேசுவதில்லை. அவரை புறக்கணித்தவர்கள், இகழ்ந்தவர்கள் குறித்துக்கூட எதிர்மறையாக எப்போதும் பேசுவதில்லை. எவரிடமும் அவர் குழைவதும் தணிவதும் இல்லை. அனைத்துக்கும் மேலாக அவருடைய விமர்சகர்களைக் கூட அவர் எதிர்த்து ஏதும் சொல்வதில்லை.

அவர் தன்னை ஓர் எழுத்தாளராக, கவிஞராகவே முன்வைப்பவர். எந்நிலையிலும் அந்த தகுதிநிலையில் இருந்து இறங்குவதில்லை. ஆகவே இன்னொரு எழுத்தாளருக்கு எதிரான அரசியலைச் செய்வதே இல்லை. இரு உதாரணங்கள் சொல்கிறேன், என் அனுபவங்கள்.

ஒன்று, 2008ல்  எம்.ஜி.ஆர். சிவாஜி குறித்து நான் எழுதியதை ஒட்டி சிக்கல்கள் எழுந்தபோது சிவாஜிக்கு மிக அணுக்கமானவராக இருந்த அவரிடம் ஒரு கண்டனம் பெற முயன்றனர். எழுத்தாளனுக்கு எதிரான கண்டனத்தை சொல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

நான் 2003ல் மு.கருணாநிதி அவர்களின் இலக்கியத் தகுதியைப் பற்றிய கடுமையான விமர்சனத்தை முன்வைத்தபோது மு.கருணாநிதி அவர்கள் கடுமையான எதிர்வினையை ஆற்றினார். அவருடைய  நன்மதிப்பை பெறும்பொருட்டு அன்று திமுக ஊடகங்களிலும் சூழலிலும் இருந்தவர்கள் மேலும் கடுமையாக தாக்குதல் தொடுத்தனர். [உதாரணம், அன்று சன் டிவியில் பணியாற்றிய மாலன்]

ஆனால் வைரமுத்து அதற்கு மறுத்துவிட்டார். அம்மறுப்பை மு.கருணாநிதி அவர்களிடமும் தெரிவித்தார் என அறிந்தேன். அவர் கவிஞர் என்ற நிலையில் அந்நிலைபாட்டை மு.கருணாநிதி அவர்களும் ஏற்றுக்கொண்டார்.

அவ்வாறு பலவற்றை நான் அறிவேன். திரையுலகில் ரஜினியோ கமலோ பிறரோ முப்பதாண்டுகளாக அவர்மேல் கொண்டிருக்கும் நன்மதிப்புக்கு இதுவே காரணம்.

அவருடைய விழைவு ஒருவகையான அடிப்படை விசை-புகழ்-முதன்மை-பதவிகள்- விருதுகள் ஆகியவற்றுக்கு அவர் அனைத்துச் சரடுகளையும் பயன்படுத்துபவர். மு.கருணாநிதிக்கும், தமிழரசி நடராஜனுக்கும், அடல்பிகாரி வாஜ்பாய்க்கும், அப்துல்கலாமுக்கும் ஒரேசமயம் நண்பர். இன்று மு.க.ஸ்டாலினுக்கும், முத்தரசனுக்கும், இல.கணேசனுக்கும், வானதி ஸ்ரீனிவாசனுக்கும், வெங்கையா நாயிடுவுக்கும் வேண்டியவர். அந்த தொடர்புகளைப் பேணும் கலை அறிந்தவர்.

அவருடைய வணிகத்தோழர்களின் நட்புவலையும் மிகப்பெரிது. அதனூடாக அவரால் எளிதில் கோடிகளைப் புரட்ட முடியும். அவர் அதனால் அடைந்ததே இன்று அவர் கொண்டிருக்கும் அனைத்தும். ஆனால் இதெல்லாம் நம் சூழலில் குறைகள் எனக்கொண்டால் வெற்றியின் உச்சத்திலிருக்கும் பலர் அத்தைகையோரே. அரசியலில் இதைத் தவிர்க்கவே முடியாது. விதிவிலக்குகளே இல்லை. வைரமுத்து அடிப்படையில் அரசியல்வாதிகளின் செயல்முறைகள் கொண்டவர்.

அவருடைய பாலியல் அத்துமீறல்கள் குறித்து வந்திருக்கும் புகார்கள் மட்டுமே அதிர்ச்சி அளிப்பவை. திரையுலகம் மட்டுமல்ல வணிகம், அரசியல், ஊடகம் என எல்லா துறைகளிலும் நானறிந்தவரை ‘ஆல்ஃபா மேல்’ எனப்படும் முதல்நிரை ஆண்களில் பெரும்பாலானவர்கள் பெண்களை வெல்வதை வெற்றி என நினைப்பவர்களே. இலக்கியத்திலும் அவ்வாறுதான். நம் வழிபாட்டு நாயகர்களிடம் அதையெல்லாம் சென்ற தலைமுறைவரை நாம் கொண்டாடியிருக்கிறோம்.  இன்று பெண்களின் குரல் எழும்போதே நமக்கு அதன்மேல் விமர்சனங்கள் எழுகின்றன.

ஆனால் சென்ற தலைமுறையினர் அதை தங்கள் இயல்பென்றும் உரிமை என்றும் கொண்டிருந்தனர். அந்த மனநிலையிலேயே பெரும்பாலும் திகழ்கின்றனர். ஆகவே தாங்கள் அளிக்கும் வாய்ப்புக்கள், தங்களிடமுள்ள பணம் ஆகியவற்றின் மூலம் ஒருவர் பெண்களைக் கவர்ந்தார் என்பதே குற்றச்சாட்டு என்றால் அதற்கு இன்றைய கேளிக்கை, தொழில் சூழலில் எந்த மதிப்பும் இல்லை. அதைவைத்து எவரையும் நிராகரிக்க முடியாது.

அதற்கப்பால் பெண்களை மிரட்டுதல், தொடர்ந்து வேட்டையாடுதல், துன்புறுத்துதல் என சிலவற்றை வைரமுத்து செய்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அது தீவிரமானது, கடுமையான கண்டனத்திற்கு உரியது. ஆனால் இவை நீதிமன்றக் குற்றச்சாட்டுக்கள் அல்ல. நிரூபிக்கமுடியாதவை. இக்குற்றச்சாட்டுகளின் நோக்கம் இவ்வாறு நிகழ்கிறதென்று கவனப்படுத்துதல் மட்டுமே.

அப்போது நாம் செய்யவேண்டியது என்ன? ஒரு குற்றச்சாட்டு வந்ததுமே ஒருவரை முற்றாக ஒதுக்கிவிடவேண்டுமா? அது நாளை எந்தப்பெண்ணுக்கும் கொலை ஆயுதத்தை கையில் கொடுத்ததாக ஆகிவிடாதா என்ன?

இந்தக் குற்றச்சாட்டுகளின் வழியாக வரும் சிறுமை என்பதே ஒரு தண்டனை. அதோடு இத்தகைய நடத்தையை நாம் ஏற்கவில்லை, கண்டிக்கிறோம் என சூழல் குற்றம் சாட்டப்பட்டவரிடம் சொல்லவேண்டும். பொதுச்சூழலில் இந்தவகையான செயல்பாடு ஏற்கப்படாது என்னும் எண்ணம் பொதுவாக உருவாகவேண்டும். அதுவே நாளை பொதுத்தளத்திற்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் ஒரு விழுமியமாக வளரும். அதாவது ஒரு சமூகக் கண்காணிப்புக்கான கோரிக்கையையே பெண்கள் முன்வைக்கிறார்கள்.

வைரமுத்து விஷயத்தில் அது நிகழவில்லை என்பதே பெண்களின் வருத்தமாக இருக்கிறது. குற்றம் சாட்டியவரை அவமானப்படுத்தவே ஊடகங்கள் முயன்றன. குற்றச்சாட்டை பொருட்படுத்தாமல் கடந்துசென்றன. அக்குற்றச்சாட்டுக்களை மேலும் புகழ்பாடல்கள் வழியாக மறைக்கமுடியும் என நம்புகின்றன. இந்து நாளிதழின் இந்தக் கட்டுரைகளின் முதன்மை இலக்கு அதுவாக இருக்கிறது.

’வைரமுத்து மீதான இக்குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றால் வன்மையாக கண்டிக்கத்தக்கவை’ என்ற வெளிப்படையான கண்டனத்துடன் மேற்கொண்டு அவருடைய படைப்புலகைப் பற்றிப் பேசுவதே நாம் செய்யக்கூடுவது.  ‘வைரமுத்து தன் குற்றமின்மையை பொதுவெளியில் அறிவிக்கவேண்டும்’ என்றுமட்டுமே நாம் அதிகபட்சம் கோரமுடியும். அதுகூட நடக்கவில்லை என்பதே சுட்டிக்காட்டப்படுகிறது. அவ்வகையிலேயே பெருந்தேவியின் கண்டனம் மதிப்பு கொண்டது.

என்னைப் பொறுத்தவரை வைரமுத்து மீதான அக்கண்டனத்துடன் மேலே செல்கிறேன். ஆனால் வைரமுத்து பற்றிய என் மதிப்பீடு அதன் அடிப்படையிலானது அல்ல.  அதைவைத்து அவரை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதும் என் நோக்கம் அல்ல. வைரமுத்துவின் படைப்புக்கள் ஆளுமை குறித்த என் மதிப்பீட்டை முன்னரே விரிவாக முன்வைத்துவிட்டேன்.

அவருடைய அப்பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்படும் என்றால் மிக வன்மையாக அதைக் கண்டிப்பேன். ஆனால் அப்போதுகூட அக்கண்டனத்துடன் அவருடைய படைப்புக்களை இணைத்துக்கொள்ள மாட்டேன். அவற்றை தனியாகவே அணுகுவேன். ஜி.நாகராஜன் பற்றி நான் அறிந்தவை இன்னும் கொடிய உண்மைகள்.

நான் வைரமுத்துவின் எழுத்தின் தரம் பற்றிய இலக்கிய விமர்சனக் கருத்தையே தொடர்ச்சியாக முன்வைக்க விழைகிறேன். திரைப்பாடல்களுக்கு வெளியே அவருடைய இலக்கியப்படைப்புகள், நாவல் கவிதை இரண்டுமே மிகப்பலவீனமானவை. கலையமைதியற்ற சொல்முழக்கமும் செயற்கையான உணர்வுப்பெருக்கமும் கொண்டவை.

ஆனால் அவை முற்றிலும் தரமற்றவை என்று சொல்லமாட்டேன். அவை பொழுதுபோக்கு எழுத்திற்கு ஒருபடிமேலாக, இலக்கிய எழுத்தின் தொடக்கநிலையில் நிலைகொள்பவை. ஆகவேதான் அவற்றுக்கு வெகுஜன மதிப்பு உருவாகிறது. அந்த அழகியலுக்கு மாற்றாக இன்னொரு அழகியலை உருவாக்கவே நாம் முயல்கிறோம்- ஒரு வாழ்நாள் பணியாக எந்த நலனையும் எதிர்பாராமல் அதைச் செய்கிறோம். விமர்சனம் அந்நிலைபாட்டில் இருந்தே.

அந்நிலையில் உள்ள ஒருவரை நவீனத் தமிழிலக்கியத்தின் தலை ஆளுமையாக முன்வைப்பது ஆபத்தானது. அது ஓர் தவறான ஆளுமையை  முன்னிறுத்துதல் அல்ல, தவறான விழுமியத்தை முன்னிறுத்துவது. அது  இலக்கியத்தின் அடிப்படையையே அழிக்கும் செயல். அதை கடுமையாக கண்டிப்பது என்பது நாம் நம்பி முன்வைக்கும் கலைவிழுமியங்களின் அடிப்படையிலேயே. எவ்வகையிலும் தனிப்பட்ட முறையில் அல்ல.

அது ஏன் கடுமையாக ஒலிக்கிறது என்றால், அதற்கு பெரிய மேடை இல்லை என்பதனால்தான். நாம் சிறுகூட்டம். வைரமுத்து இருப்பது திராவிட இயக்கமும், கம்யூனிஸ்டு இயக்கமும், இந்துத்துவ இயக்கமும் இணைந்து மூன்று கால்களாக தாங்கியிருக்கும் ஒரு பீடத்தில். நாம் தரையில் நிற்கிறோம். ஆகவேதான் கூச்சலிடுகிறோம். நம்மால் அது மட்டுமே முடியும் என்பதனால்.

நான் அளித்த தலைப்பை ஒட்டி சில நண்பர்களின் வருத்தங்கள் வந்தன. என் கண்டனம் வைரமுத்துவுக்கு அல்ல, அவர் தன் விழைவை நோக்கிச் செல்கிறார். என் முதன்மைக் கண்டனம் தமிழ் இந்து நாளிதழ் மீதுதான். நான் சுட்டியதும் அதைத்தான். அது ஓர் இலக்கிய மதிப்பீட்டை உருவாக்குவதாக பாவலா காட்டுகிறது. நவீன இலக்கியவாதிகளைப்பற்றி வெளியிடுகிறது. ஆனால் அதன் உச்சியில் வைரமுத்துவை தூக்கி வைக்கிறது. அதன் வழியாக உருவாக்கிய இலக்கியமதிப்பீட்டை அழிக்கிறது. நாம் கண்டிப்பது அந்தக் கீழ்மையைத்தான்.

2008ல் ஆனந்தவிகடனின் பொறுப்பில் ஓர் இலக்கியமலர் வெளியானபோது ‘நா.முத்துக்குமார் முதலிய இலக்கியமேதைகள் பங்குபெறும் இதழ்’ என முத்துக்குமாரின் படத்துடன் அவ்விதழை விளம்பரம் செய்தனர். அதில் அசோகமித்திரனும், இந்திரா பார்த்தசாரதியும் எழுதியிருந்தனர். நான் மிகக் கடுமையாக விகடன் குழுவை கண்டித்தேன். அதன் எதிர்வினையாகவே அவர்கள் எம்.ஜி.ஆர் பற்றி நான் சொன்ன கருத்தை விவாதமாக்கி எனக்குப் பிரச்சினைகளை உருவாக்கினர். ஆனால் அப்போதும் நா.முத்துக்குமார் என் நண்பர், பின்னரும். [டைம்ஸ் ஆ·ப் இண்டியா இலக்கிய மலரும் ஜாம்பவான்களும்]

நான் முன்வைப்பது எவ்வகையிலும் தனிப்பட்ட விமர்சனத்தை அல்ல. நான் ஓர் இலக்கிய விழுமியத்தை மட்டுமே முன்வைக்க விரும்புகிறேன். இது நான் தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்வைப்பது, என் தரப்பு இங்கே என்றுமுள்ள இலக்கிய அழகியலின் குரல்.

ஜெ

***

வைரமுத்து

வைரமுத்து,ஆண்டாள்

வைரமுத்து – எத்தனை பாவனைகள்!

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

வைரமுத்து சிறுகதைகள்

இசை, பாடல், கண்ணதாசன் வைரமுத்து- கடிதங்கள்

வைரமுத்து:ஆளுமைச்சித்திரம்

சில்லென்று சிரிப்பது

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15
அடுத்த கட்டுரைஏணிப்படிகள்- கடிதம்.