திருவரம்பு – புறப்பாடு

(2013 பதிவு)

நேற்று முன் தினம் கோழிக்கோடு கொண்டோட்டியில் இருந்து அரங்கசாமியுடன் கோவை சென்றேன். ஈரோடு கிருஷ்ணனும் இருந்தார். நேற்று காலை கிளம்பி காரிலேயே மாலையில் நாகர்கோயில் வந்துசேர்ந்தோம்.

இன்றுகாலை நான் அரங்கா கிருஷ்ணன் கெ.பி.வினோத் சைதன்யா ஆகியோர் கிளம்பி ஒரு குமரி உலா சென்றோம். திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் முதலில். அதன்பின் நேராக திருவரம்பு. 27 வருடங்கள் கழித்து திருவரம்புக்குள் சென்றேன். ஊர் மிகவும் மாறிவிட்டிருந்தது. நிறைய புதியவீடுகள். எங்களூர் பொதுவாக வறுமை அற்றது. இப்போது அனேகமாக எல்லாமே மாளிகைகள்.

ஆனால் எங்கள் வீடிருந்த பகுதி அப்படியே கைவிடப்பட்டு புல்பிடித்துக் கிடந்தது. செல்வதற்கு வழிகூட இல்லை. மொத்தமும் ரப்பர்க்காடு. வீடிருந்த தடமே இல்லை. நான் புழங்கிய இடங்கள் எல்லாமே மனித சஞ்சாரமற்றவை போலக்கிடந்தன. இரட்டைத் தற்கொலையை ஊர் இன்னும் மறக்கவில்லை.

நாங்கள் விடியவிடிய அமர்ந்துபேசிய படிக்கட்டு அப்படியே இருந்தது. கீழே வெண்மணல் விரிந்த வெளி இன்றில்லை. மணல் அள்ளப்பட்டு ஆழமேறிய ஆற்றில் அசைவில்லாத நீர். ராதாகிருஷ்ணன் எரிந்த தோட்டம் ரப்பர் தோட்டமாக இருந்தது.

நாராயணன் போத்தியின் மகன் ரமேஷன் போற்றி அடையாளம் கண்டுகொண்டார். சத்தமில்லாமல் திரும்பிவிடலாமென்ற எண்ணம் பொய்த்தது. போற்றி வீட்டுக்குச் சென்றேன். 80 வயதான போற்றியம்மா என்னை 27 ஆண்டுகளுக்குப்பின் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொண்டார்.

போற்றியம்மா முன்பு திருவனந்தபுரம் இசைக்கல்லூரியில் கற்றவர்.செம்மங்குடியின் மாணவி. அன்று அவர் வீடே இசையால் நிறைந்திருக்கும். இசைவகுப்புகள் எடுப்பார். இன்று ரமேசன் போற்றியின் மகள்கள் மூவருமே இசைக்கலைஞர்கள். நூறுக்குமேல் இசைநிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள் – திருவரம்பு சிஸ்டர்ஸ் என்ற பேரில்.

கடைசிப்பெண் வீட்டில் இருந்தாள். ’கண்ணன் வரக்காணேனே’ என்று மிக அழகாக பாடினாள்.

ரமேசன் போற்றியின் தங்கை பத்மஜா இருந்தார். திருவனந்தபுரத்தில் வாழ்பவர். அவரது மகன் பொறியியல் மாணவர். மிருதங்க கலைஞர். ஒரு கச்சேரிக்காக குருவாயூர் சென்றிருப்பதாகச் சொன்னார்.

பக்கத்துவீடு அப்பாவின் இன்னொரு பால்ய நண்பரும் வயலின் கலைஞரும் இசையமைப்பாளருமான சோமசேகரன் நாயரின் வீடு. இன்று அவர் மகன்கள் வாழ்கிறார்கள். மூத்தவன் [கண்ணாடி] மோகன் வயலின் கலைஞர். தம்பி மிருதங்கம்.

அதற்குள் போற்றி செல்பேசியில் சொல்ல ராதாகிருஷ்ணனின் மாமா சுந்தரேசன்நாயர் வந்தார். அவரது வீட்டுக்குச் சென்றோம். அவர் கெ.பி.வினோதின் உறவினர். அவர் அன்று மிகச்சிறந்த நாடகநடிகர். அக்கால நாடக அனுபவங்களைப் பற்றிப் பேசினார்

பின்பு அருமனை. ஸ்டுடியோ சென்று வற்கீஸைப் பார்த்தோம். வற்கீஸின் வீட்டுக்குச் சென்று அவரது குழந்தைகளைப் பார்த்துவிட்டு திரும்பினோம்.

புறப்பாடு ஒரு நினைவாக இன்னும் அழுத்தமாகப் பதிந்தது. ஆனால் அந்த வீடிருந்த இடம் அப்படி கிடந்ததை நான் எந்த பதற்றமும் இல்லாமல் எதிர்கொண்டது என்னைப்பற்றி ஒரு நம்பிக்கையை எனக்கே உருவாக்கியது.

இரவு கிருஷ்ணனும் அரங்காவும் கிளம்பிச்சென்றனர்.

சைதன்யாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவளுக்கு திருவரம்பு மிகமிகப் பிடித்துவிட்டது. அவள் முதல்முறையாக பார்க்கும் அப்பாவின் ஊர்.

‘ரொம்ப அழகாக இருக்கு அப்பா ஊர். ரெண்டு வீட்டிலே மியூசிக். இன்னொரு வீட்டிலே நாடகம். இன்னொரு வீட்டிலே இலக்கியம்னு எல்லாமே நல்லா இருக்கு….’

‘நீ திரும்பி போவியா?’ என்றேன்.

‘அதான் எனக்குச் சொந்த ஊர்….எங்கபோனாலும் அதுதான் என்னோட ஊர்’ என்றாள்.

திகைப்பாக இருந்தது. வெறும் இரண்டு மணிநேரம்!

(10/15/13 ல் குழுமத்தில எழுதப்பட்டது)

முந்தைய கட்டுரைபுறப்பாடு II – 16, ஜோதி
அடுத்த கட்டுரைஆழ்துயில்நடனம்