85. சிறகு [சிறுகதை]
அன்புள்ள ஜெ..
’ஊரில் அவனவன் சோற்றுக்கு லாட்டரி அடிக்கும்போது, ஞானத்தேடல் என சிலர் அலைவது சுயநலமல்லவா?’ என ஒருவர் ஓஷோவிடம் கேட்கிறார்.
ஓஷோ சொல்கிறார் ஒரு புத்தரோ ஒரு ரமணரோ ஞானம் அடையும் அந்த கணத்தில் ஒட்டு மொத்த மனித இனமே சற்றே உயர்கிறது. அவர்கள் ஞானம் அடைவதுதான் ஒரு மனிதன் சக மனிதர்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய சேவை என்கிறார்.
உதாரணமாக சர்.சி.வி.ராமன் ஒரு கண்டு பிடிப்பை நிகழ்த்துகிறார் என்றால் அதன் பலன் உடனடியாக தெரியாவிட்டாலும் ஒட்டு மொத்த மனித இனமே அந்த கண்டு பிடிப்பால் மாறிப்போய் விடுகிறது.
சிறகு கதை இந்த mutation- யை சொல்கிறது.
முன்பெல்லாம் ஒரு பெண் எப்போதோ அனுப்பிய ஐ லவ் யூ என்ற சர்வ சாதாரணமான வாழ்த்து அட்டையை வைத்துக்கொண்டு அவளை மிரட்டுவது உண்டு.
ஒரு பெண்ணை எவனோ ஒருவன் முத்தமிட்டுவிட்டான் என்பதற்காக அவனையே மணமுடிக்கும் கதைகளை எழுதி உயரிய விருதுகளை பண முடிப்புகளை பெற்ற நிகழ்வுகள் எல்லாம் இங்கு உண்டு.
இன்று அது போன்ற வெத்து மிரட்டல்களெல்லாம் காலாவதியாகிவிட்டன. அதுபோன்ற நோய்மை சிந்தனைகள் இருந்தன இன்று பலருக்குத் தெரியாது.
யாராவது சில பெண்கள் துணிச்சலாக எடுத்து வைக்கும் அடி, ஒட்டு மொத்த பெண் இனத்துக்கே வெளிச்சம் தந்து விடுவதை பார்க்கிறோம்.
சிறகு கதையில், ஒரு பெண் மீது கை வைத்து விட்டால், அஞ்சல் சீல் வைத்து விட்டது போல என கருதி தன்னையே எண்ணி உருகுவாள் என்ற சங்குவின் போலி கற்பிதத்தை அப்படியே உடைத்து எறிகிறாள் ஆனந்தவல்லி.
உண்மையில் ஆனந்தவல்லிகள் நம் சமூகத்தில் வெகு குறைவுதான். ஆனால் அவர்கள் எடுத்து வைக்கும் அடிகள் ஒட்டுமொத்தமாகவே பிரஞ்ஞைப்பூர்வ மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கதையில் சங்குவின் பாத்திரப்படைப்பும் குறிப்பிடத்தக்கது.
அவன் சுயநலமி, அயோக்கியத்தனமான எண்ணத்துடன்தான் அவளுடன் பழகினாலும், அவளை ஊக்குவிக்கிறான். பிறகு அவள் நல்ல நிலைமையில் இருப்பதை அறிந்து மகிழ்கிறான்.
நோய்மை மனநிலையில் இருக்கும் ஒருவனாக இருந்தால், அவளை ஊக்குவித்திருக்கவும் மாட்டான். அவள் ஜெயித்ததை எண்ணி மகிழ்ந்திருக்கவும் மாட்டான்.
எத்தியோப்பியாவை இத்தாலி தன் சுயநலம் கருதி ஆக்ரமித்தது. ஆனால் அடிமை முறை ஒழிப்பு என்ற மிகப்பெரிய நன்மையை அந்த நாட்டுக்கு செய்தது இத்தாலி.
இந்தியா உடபட பல நாடுகளில் இதுபோன்ற உதாரணங்களை காண முடிகிறது
அந்த வகையில் சிறகு கதையில் ஒரு முரணியக்கியங்களின் மூலம், தற்செயல்களின் மூலமும், விபத்துகளாலும் ஏற்பட்டு வரும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் பரிணாம வளர்ச்சியை காண முடிகிறது.
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
***
அன்புள்ள ஜெ
சிறகு கதையை பொதுவாக அனைவருமே தங்களின் இளமையுடன் பொருத்திக்கொள்ள முடியும். வயதடைதல் என்பது இங்கே பெண்களுக்கு ஆண்களுடனும் ஆண்களுக்குப் பெண்களுடனும் உள்ள உறவு வழியாகவே நடைபெறுகிறது. பெண்களை கவனிக்க ஆரம்பிக்கும்போது அது தொடங்குகிறது. புரியும்போது முடிகிறது. ஏற்கனவே தேவி, லீலை போன்றகதைகளிலும் அதுதான் நிகழ்கிறது. ஒரு அலை போல வந்து உன்மை அறைகிறது. கண்கள் திறந்துகொள்கின்றன.
சங்கு பெண்களைப்பற்றிச் சொல்வதெல்லாம் அவனறிந்த பழைய பெண்களின் இலக்கணங்கள். அதை மீறிச்செல்கிறாள் ஆனந்தவல்லி. அதுதான் அவளுக்கு முளைத்த சிறகு
டி.எஸ்.ரவிச்சந்திரன்
***
100. வரம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
வரம் கதை ஓர் அழகான நிறைவு. ஒரு மென்மையான கவிதை. பூடகமாக ஏதுமில்லை. எல்லாமே வெட்டவெளிச்சமாக இருக்கிறது. ஆனால் நினைக்க நினைக்க வளர்கிறது. அப்படி கலையாக அது வளர்வதற்குக் காரணம் அதிலிருக்கும் அழகுதான். நேரடியான அழகு. அப்பட்டமான அழகு.
பகவதி அந்த இருளில் இருந்து திருடனைக் கண்டு துணுக்குறுவதும் பிறகு வியப்படைவதும் நாணுவதுமெல்லாம் நேரில் பார்ப்பது போல. பகவதிதான் ஸ்ரீதேவி. பகவதியின் பெயர்தானே ஸ்ரீதேவி. அவளைத்தான் திருடன் நகைகள் அணிவிக்கிறான். அவளைத்தான் பேரழகியாக நிறுத்துகிறான். நான்குபேர் முன்னால் செல்ல ஆடை இல்லாமல் இருப்பவள். பகவதியும் அவளைப்போலத்தான் பார்க்கப்படாத பேரழகி. திருடன் அவளை சக்கரவர்த்தினியாக நிறுத்திவிட்டான். அவளும் பகவதியாக தன் மனசுக்குள் சக்கரவர்த்தினியாக ஆகிவிட்டாள்.
எவ்வளவு தொட்டுத்தொட்டு விரிகிறது இந்தக்கதை.
ஜெயக்குமார்
***
அன்புள்ள ஜெ
உண்மையில் நூறுகதைகளிலேயே உச்சமும் மகுடமும் ’வரம்’ தான். எப்பேற்பட்ட கதை. நினைக்க நினைக்க நெகிழவைக்கிறது. அபாரமான ஒரு பாஸிடிவான உணர்ச்சியால் மனதை நிறைக்கிறது. அது என்ன வரம்? பக்தன் தெய்வத்துக்கு கொடுத்த வரம் அல்லவா? பகவதியை அலங்காரம் பண்ணி நிறுத்தும் திருடன். அவன் கையில் அவள் அப்படியே இருட்டில் இருந்து எழுந்துவருகிறாள். ஒவ்வொன்றும் பொன்னாகும் கணம் உண்டு.
அந்த பொன்னாகும் கணம் ஸ்ரீதேவிக்கு கிடைக்கிறது. அது திருடன் தெய்வமாக நின்று அவளுக்கு அளிப்பதா? அவளுடைய துக்கத்தைப் பார்த்தவன். மானசசோரன் என்றுதான் கிருஷ்ணனை சொல்கிறார்கள். தமிழில் உள்ளங்கவர்கள்வன். அந்தக் கள்ளக்கண்ணனின் அருள் அல்லவா?
ஆனால் அவன் அவளை தெய்வமாக பார்க்கிறான். அவள் பகவதியை பார்க்கையில் அவன் பார்ப்பது அவளை. அவள் அங்கே இன்னொரு பகவதியாக நிற்கிறாள். ஒரு அற்புதமான சினிமாபோல அந்த கோயிலை மண்டபத்தை மணியோசையுடன் திறக்கும் கோயிலை பகவதியின் பேரழகான சிலையை எல்லாம் பார்த்துவிட்டேன். அந்த ஓவியமும் அபாரம்.
நினைக்க நினைக்க நெகிழச்செய்யும் கதை இது ஜெ. இது வெறும் இரக்கம், கொடையின் கதை இல்லை. இது மனிதன் தெய்வமாகும் கணம். தெய்வமாகும் மனிதன் தெய்வத்துக்கு உயிர்கொடுக்கிறான். பக்தையை தெய்வமாக்கி அவளில் தெய்வத்தை காண்கிறான்.
ஸ்ரீனிவாஸன்
***