கருத்தியலும் கழைக்கூத்தும்- கடிதங்கள்

ராஜன் குறை என்பவர் யார்?
‘திராவிட மனு’
திராவிட மனு- இரு எதிர்வினைகள்
திராவிட மனு- இரட்டை நாக்குகள்
‘திராவிட மனு’- மேலும் எதிர்வினைகள்
திராவிட மனு- கடைசியாக
திரிப்பு அரசியலின் முகங்கள்

அன்புள்ள ஜெ

நீங்கள் எம்.எஃப்.ஹூசெய்ன் முதல் இன்றுவரை இலக்கியம் மீதான கும்பல்வன்முறை சார்ந்து எடுத்திருக்கும் நிலைபாடுகளை உங்கள் தளத்தில் வாசித்தேன்.பத்தாண்டுகளாக மிகத்திட்டவட்டமாக இந்துத்துவ அரசியல் இந்துமெய்யியலை அழிப்பதை, இந்துத்துவ அரசியலின் லும்பன் நடைமுறைகளை கண்டித்துக்கொண்டே இருந்திருக்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழில் இத்தனை திட்டவட்டமாக, தொடர்ச்சியாக இவற்றை கண்டித்த இன்னொரு எழுத்தாளரே இல்லை.

உங்கள் நிலைபாடுகளில் இருக்கும் தர்க்கத் தொடர்ச்சியும் உறுதியான நிலைபாடும் ஆச்சரியப்படவைக்கின்றன. பதினைந்தாண்டுகளுக்கு முன்பு எம்.எஃப் ஹூசெய்ன் தாக்கப்பட்டபோது என்ன சொல்லியிருக்கிறீர்களோ அதையே இப்போதும் சொல்கிறீர்கள். கிட்டத்தட்ட அதே சொற்றொடர்கள்.

ஆனால் அரசியல் கும்பலுக்கு ஒரு வழக்கமான உத்திதான் இருக்கிறது. அங்கே இங்கே பிய்த்தெடுத்து முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார், சோரம் போய்விட்டார் என வசைபாடுவது. உதிரிவரிகளை எடுத்து முத்திரைகுத்துவது. வாசிக்கும் பழக்கமில்லாத ஒரு கூட்டத்தை அதைக்கொண்டு நம்பவைக்கவும் முடியும்.

உங்களை இந்துத்துவக் கும்பலைச் சேர்ந்தவர் என்று ஒரு சாரார் சொல்ல நீங்கள் இந்துத்துவ எதிர்ப்புக் கும்பலிடம் பணம், திரைவாய்ப்புக்காக சோரம்போனவர் என்று இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள். இருசாராருமே மூர்க்கத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். வசைகளையும் அவதூறுகளையும் மட்டுமே உமிழ்கிறார்கள்.

என்ன காரணம் என்றால் நீங்கள் இரண்டில் ஒரு தரப்புடன் சேர்ந்துகொண்டு கோஷம்போடவில்லை. ஓர் இந்துவாக உங்களை முன்வைத்துக்கொண்டே இந்துத்துவ அரசியலின் லும்பன்கலாச்சாரத்தை, ஒற்றைப்படைத்தன்மையை விமர்சிக்கிறீர்கள். காந்தியையும் நேருவையும் அம்பேத்கரையும் உள்ளடக்கிய ஒரு தேசியத்தை, ஒரு விரிந்த இந்து மெய்யியலை முன்வைக்கிறீர்கள். உங்களை எதிர்கொள்ள அவர்களிடம் சிந்தனைகள் இல்லை.

இந்த அரசியல்கூட்டங்களுக்குத் தெரிந்ததெல்லாம் சில வழக்கமான வசைகள்தான். அவர்களின் எதிரிகளை தாக்குவதற்கான சில வெறுப்புக்கூச்சல்கள். தங்களுக்கு கீழே வந்து நின்று கூச்சலிடாத அத்தனைபேரையும் எதிரிகளாக்கி கீழ்த்தரமாக வசைபாட மட்டுமே அவர்களுக்கு தெரியும்.

தமிழ்ச்சூழலில் இத்தனை திராணியுடன் இரு தரப்பின் ஆபாசவசைகளை தாங்கிநிற்பது ஒரு பெரிய சாதனைதான்

எம்.ராஜேந்திரன்.

***

ஆசிரியருக்கு,

பா ஜெயபிரகாசம் விவகாரமானாலும் சரி, ராஜன் குறை விவகாரமானமானாலும் சரி, முகநூலில் எழுதப்பட்டதில் பெரும் பகுதியைப் படித்துவிட்டேன். இவர்கள் வாசிப்பு பழக்கம் உடையவர்கள், சமூக  விவகாரங்களில் கருத்து சொல்பவர்கள். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி நமது விவாதச் சூழலில் உள்ள குறைபாடுகள் என நான் எண்ணுவது குறித்து ஒரு பட்டியலிட விரும்புகிறேன். அவை –

விவாத தந்திரம்

விவாத அறமின்மை

விவாத முறைமை அறியாமை

விவாத தந்திரம் என்பது பிரதானமாக நிலைபாடு எடுக்காமல் இருப்பது மற்றும் மென்மையாக நிலைபாடு எடுப்பது. கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் இடதுசாரிகள் எடுத்த நிலைபாடு இதற்கு உதாரணம். இவர்கள் அரிதாகவே இதை செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸ், பா ஜ க, திமுக, போன்ற கட்சிகள் இதில் விற்பன்னர்கள். அதிமுகவிற்கும் அறிவியக்கத்திற்கும் சம்பந்தமில்லை என்பதால் அவர்களை நாம் பரிசீலிக்க தேவை இல்லை.

நம் இலக்கிய சூழலில் பா .செயபிரகாசம் விவகாரத்தில் இளங்கோ கிருஷ்ணனின் நிலைபாடு  ஒரு உதாரணம்.  கண்டன அறிக்கையில் கை எழுத்திட்டவர்கள் மீதும் பா செயபிரகாசம் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என நீங்கள் கூறியதை அவர் கண்டிக்கிறார்.

பா செயபிரகாசம் வழக்கு தொடுப்பது சரி, ஜெயமோகன் பதில் வழக்கு தொடுப்பது தவறு, நியாயமாக பா செயபிரகாசம் தொடுக்கும் வழக்கை மட்டும் ஜெயமோகன் எதிர்கொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாட்டை அவர் எடுத்துவிட்டு தான் மேலே பேச வேண்டும். ஆனால் அதைச் செய்வதில்லை. பொதுவான ஒரு கருத்து. அதன் பின்னர்தான் கண்டன அறிக்கை கையெழுத்தாளர்கள் மீதான அச்சுறுத்தல் இது என கூறலாம். முதலில் பா செயபிரகாசம் தான் வழக்கு தொடுப்பதாக சொன்னார், வழக்கறிஞர் அறிவிப்பும் அனுப்பினார் என்பது குறித்து நிலைபாடு எடுக்காமல் இருப்பது விவாத தந்திரம். அதை ஒருவர் சுட்டிக் காட்டிய பின்பும் அமைதி காப்பது விவாத அறமின்மை.

இந்த விவாதத்தில் பங்கேற்போர் முதலில் தனது நிலைபாடு பற்றி கூற வேண்டும், பிறரையும் நிலைபாடு எடுக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும். அப்படி செய்யாதது விவாத முறைமையை அறியாமை. ஆனால் மிகுதியாக இவ்வாறு தான் உள்ளது.

ராஜன் குறை தனது சர்ச்சைக்குரிய கட்டுரையை இப்போதும் சரி என கொள்கிறேன் எனவோ, அல்லது தனது பார்வை மாறிவிட்டது எனவோ இதுவரை கூறவில்லை. இப்போது அவருடைய நிலைபாடு என்ன என்றே சொல்லவில்லை. சுகுணா திவாகர் என்பவரை தவிர யாரும் ராஜன் குறையை நிலைபாடு எடுக்க வற்புறுத்தவில்லை. இது விவாத அறமின்மையும் தந்திரமும் ஒரு சேர கலந்தது. இது பற்றி பேசுவதை விடுத்துவிட்டு ஒருவர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து தாமும் நிலைபாடின்றி விவாதிப்பது என்பது விவாத முறைமை அறியாமை.

எனது நிலைப்பாடு –

பா செயபிரகாசம் விவகாரத்தில் முதலில் நீதிமன்றத்தை நாடுவது அவர் தான் ,ஆகவே பதில் வழக்கு என்பது சரியானதே. அவர் வழக்கு தொடுக்காமல் நீங்கள் தொடுப்பது என்பது தான் தவறு.

கண்டன அறிக்கை சங்கதிகள் அவதூறு என்றாலும் இலக்கிய விவாத சூழலில் அம்மொழி பயன்பாட்டில் உள்ளது. ஆகவே இவர்கள் மீது வழக்கு தொடுத்தல் என்பதை நான் ஏற்கவில்லை. அதே சமயம் இந்த கையெழுத்தாளர்கள் உங்கள்மேல் வழக்கு தொடுக்க சொல்லி பா செயபிரகாசத்தை தூண்டினால் அவர்கள் மீது நீங்கள் வழக்கு தொடுக்கலாம், அப்போதும் அரசு ஊழியர்கள்மேல் துறைவாரி நடவடிக்கை என்பதை நான் ஏற்கவில்லை, அது அச்சுறுத்தல் தான்.

எஸ் விஆர் கடந்த 8 ஆண்டுகளாக உங்கள் மீதான அவதூறு வழக்கை நடத்தாமல் இழுத்தடிக்கிறார். நீதிமன்றத்திற்கு வரும் அளவுக்கு உடல்நிலை சரியில்லை என பொய்யாக மனு செய்திருக்கிறார் .அது தள்ளுபடி ஆனபின்னும் இழுத்தடிக்கிறார். கொச்சையான வழக்கறிஞர் அறிவிப்பை கையெழுத்திட்டு அனுப்பி இருக்கிறார். ஆகவே இது போன்ற அலைகழிப்புகள் தொடரா வண்ணம் நானும் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கிறேன் என நீங்கள் கூறினால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் உங்களின் வழக்கமான பெருந்தன்மையை இதிலும் எதிர்பார்க்கிறேன்.

ராஜன் குறை விவகாரத்தில் உங்கள் நிலைப்பாட்டை 100 % ஏற்று வழி மொழிகிறேன்.

இப்போதும் நிலைபாடு எடுக்கச் சொல்லி சம்பந்தப் பட்டவர்களுக்கு ஒரு நூறு பேர் மின்னஞ்சல் அனுப்பலாம்.

கிருஷ்ணன்,

ஈரோடு.

***

திராவிட மனு- கடைசியாக  பத்தியில்  சொல்லி இருக்கும் ” பொதுவாக படித்தவர்கள் ‘எலைட்கள்’ இதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.”. இந்த கூற்று  நூற்றுக்கு  நூறு உண்மை.

நான் நோர்வே நாட்டிற்கு செல்லும் முன் , நான் சென்று சேரும் இடமான Haugesund பற்றி மற்றும் அந்த ஊர் மக்கள் பற்றி   இன்டர்நெட்டில்  தேடி அந்த இடத்தை பற்றியான research papers and  Journals refer செய்து  அந்த இடத்தை பற்றியான முன்முடிவுகளுக்கு சென்று சேர்ந்தேன் .  நான் மட்டும் அல்ல என் பல நண்பர்கள் இதை தான் பல வருடங்களாக பின்பற்றி வருகிறோம்.

நான் அங்கு சுமார் 3 வருடம் இருந்தபோது அந்த முன்முடிவுகளை மறுபரிசீலனை செய்தது மிக அரிது.

எந்த ஒரு substantiate ஆன authour  தன்னுடைய கட்டுரைகளையும்  திரும்பப்பெற மாட்டார் .

ஏன்  என்றால் காரணங்கள்  பின்வருமாறு

1. சுமார் இருபது வருடத்திற்கு முன் publish  ஆன  ஒரு X Journal paper ஐ நாம் எடுத்துக்காட்டிற்கு எடுத்துக்கொள்வோம்  .  அந்த துறையில் ஏற்கனவே இந்த field இல்  அந்த author expert என்ற இடத்திற்கு போய் சேர்ந்திருப்பார்.  அந்த field இல் இருக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். Even  though he is really expert  or not .

2.  அந்த  paper களுக்கு எந்த மறுப்பும் இல்லையென்றால் மற்றும்  அந்த journal  சுமார் 15 to 20 முறை மற்ற journal லில் refer பட்டிருந்தால் அது அவரை reviewer என்ற இடத்திற்கு கொண்டு சேர்த்திருக்கும். Expert  to reviewer. இந்த power என்பது சாதாரமானது அல்ல . பல scholarships அண்ட் research fellowship இற்கு approval authority ஆக செயல்பட முடியும்.
இதற்கு கிடைக்கும் கமிஷன் என்பது உங்களால கற்பனை கூட செய்ய முடியாது.

3. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் அந்த நபர் பெயர் தெரிய தொடங்கி இருக்கும்.  பல conference மற்றும் symposium ஆகியவற்றுக்கு அழைக்கபடுவார்கள். இதற்கு கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் வசதி என்பது incomparable .

suppose அந்த X  journal author அந்த research paper திரும்ப பெறுகிறார் என்று வைத்து கொள்வோம் .அந்த journal இந்த மறுப்பை உலகம் முழுக்க பதிவு செய்யும். Its going to be a death blow to that author .
மேலே நாம் discuss செய்த மூன்றும் அவர்க்கு மறுக்கபடும்.

முக்கியமாக கருத்தியல் ரீதியாக அவர் தன்னை உடைத்து மறுஆக்கம் செய்ய வேண்டும்.அவர் போய் முட்டி நிற்கும் இடம் பணமா ? அறமா ?.
இது education மற்றும் research field இல் நடக்காத காரியம்.நீங்கள் கூகிளில் சர்ச் செய்து பாருங்கள் taking back என்பது மிகச் சொற்பம் .

உங்கள் பகல் கனவு பலிக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
செல்வம்

***

அன்புள்ள  ஜெ.,

ராஜன்குறை, ஜெயரஞ்சன் மற்றும் ஆனந்தி முதலியோரின் பதினோறு பக்க சமூகவியல் கட்டுரை பற்றிய தங்களின் விமர்சனம். அதில் அந்த கட்டுரையின் தாக்கத்தால் விளைந்த இன்றைய ‘நாடகக் காதல்’ அரசியல் என அனைத்துமே அருமை.

திருன்னூரை ஒத்த சூழல் கொண்ட திருவள்ளூர் மாவட்ட கிராமத்தைச் சேர்ந்தவன் தான் நானும், எனக்கு இருபத்து எட்டு வயதாகிறது, எங்களின் முதலியார் சமூகமே நிலவுடைமை சமூகமாகவும் தலித்துகள் வேலையாட்களாகவும் இருந்தார்கள்.எங்கள் கிராமத்திலும் திருன்னூரை போலவே நாயுடு ஜமின் இருந்தார். முதலியார்கள் இளையவர்களாயினும் வயதிற் முதிர்ந்த தலித்துகளை பெயர் சொல்லியே அழைப்பார்கள். இப்படியான சூழல் ஒரு காலத்தில் இருந்தது.

அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை போலவே விவசாயத்திற்கு மாற்றாக தொழில் துறை பெருகியபோது, விவசாயம் இல்லாமல் ஆனது. விவசாய நிலங்களை விற்றுவிட்டு பெரும்பாலானவர்கள் சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். இன்று சொற்பமானவர்களே கிராமத்தில் இருக்கிறோம்.

இந்த நாடகக் காதல் என்பது வடதமிழகத்தில் பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிகம் பேசப்படுகிறது. எங்கள் கிராமத்தை எடுத்து கொண்டால் அப்படியான நாடகக் காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை. தலித்துகள் ஊர் பகுதயில் வாழும் எல்லா  சமூகங்ளை விடவும் இன்று பொருளியியல் ரீதியாக உயர்ந்து விட்டார்கள். அப்படியான சூழலிலும் ஊர் தெருக்களில் வந்து கிண்டல் செய்வது, ஆண்களை வம்பிழுப்பது போன்ற எந்த தகாத செயல்களையும் அவர்கள் செய்ததில்லை. பஸ் ஸ்டாப்களில், பஸ்களில் கூட அத்துமீறுவது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற மறையில் மாற்று ஊர்காரர்களிடமிருந்து பாதுகாக்கவே செய்கிறார்கள். தேவைக்கு அன்றி அவர்கள் ஊர் தெருக்களில் நடக்கக் கூட மாட்டார்கள். இதுவே இன்றைய எங்கள் கிராமத்தின் எதார்த்தம்.

இதுவரை தனிப்பட்ட முறையில் என்னை யாரும் வம்பிழுத்தது கூட கிடையாது. முகநூலில் அரசியல் ரீதியாக எதிர் கேள்விகள் கூட அவர்கள் கேட்பது கிடையாது.

ஜெமோவிடம் ஓரே ஒரு கேள்வி, தலித்துகளுக்கு ஆதரவாக பேசியதை போலவே முதலியார் பெண்களின் உணவு முறைகளையும் அவர்களின் ஒழுக்கத்தை பற்றியும் கொச்யைாக பேசியதை அதிமாக கண்டித்ததாக தெரியவில்லையே, இந்த நாடகக்காதல் மாதிரியே நாளை முதலியார் பெண்களை பற்றிய தோற்றம் வேறு விதமாக சமூகத்தில் பரவி விட்டால் ஆபத்து அல்லவா? உங்களிடம் இந்த கேள்வி விட்டு விடுகிறேன். ஆம், இதில் சுயநலமும் இருக்கிறது என்பதையும் நான் மறுக்கவில்லை.

இப்படிக்கு,

கே. யுவராஜ் கலைச்சித்தன்

***

அன்புள்ள யுவராஜ்,

நீங்கள் சொல்வது புரிகிறது. இங்கே மானுடவியல் என்பது ஐரோப்பிய மேட்டிமைத்தனத்துடன் இங்குள்ள மக்களை ‘ஆய்வுப்பொருள்’ ஆக கருதி தங்கள் முன்முடிவுகளை, அரசியல்செயல்திட்டங்களை அவர்கள் மேல் திணிப்பது. ஆம், அதில் எதிர்க்கப்படவேண்டிய, கண்டிக்கப்படவேண்டிய பல விஷயங்கள் இருக்கலாம். [அதைத்தான் விரிவாக டி தரிமராஜ் கண்டித்து எழுதுகிறார்]

ஆனால் தலித்துக்கள் விஷயம் அப்படி அல்ல, ஏற்கனவே அவர்கள் ஒடுக்கப்பட்டு இப்போதுதான் மெல்ல மேலெழுகிறார்கள். அவர்களை குற்றத்தன்மைகொண்டவர்கள், பாலியல் ஆதிக்கம் செலுத்துபவர்கள் என வரையறுப்பது அவர்களை மேலும் அடிமைப்படுத்தி அழிப்பதற்கான முயற்சி. நீங்கள் சொல்வதில் உள்ளது ஒரு சமூகப்பிரச்சினை. தலித்துக்கள் சிறுமைசெய்யப்படுவது அறப்பிரச்சினை. அறவுணர்வு கொண்ட அனைவருக்குமான பிரச்சினை.

ஜெ

***

முந்தைய கட்டுரைநோயும் வாழ்வும்
அடுத்த கட்டுரைஅன்னியநிதியும் போலிச்சிந்தனைச்சூழலும்