99. முதலாமன் [சிறுகதை]
அன்புள்ள ஜெ,
‘முதலாமன்’ சிறுகதையில் வரும் காளியன் போன்றோரால் ஆனது தான் இந்த உலகு. கதையில் வரும் கருமலைப்பட்சி ஒரு உவமையாகவே வருகிறது. அதனுடன் நாம் எதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மனிதர்கள் தன்னை மீறிய நிகழ்வுகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதிலேயே தீர்மானிக்கப்படுகிறார்கள். எல்லா பெரும் போராட்டங்களிலும் தன்னை முன்னிறுத்தி சென்றவர்களே வரலாற்றின் ‘நடுகல்’ நாயகர்களாக உள்ளார்கள்.
சராசரி மனிதர்கள் அவருக்கு ஒரு நடுகல் (ஒரு உவமைக்காக) மட்டுமே நட முடியும். அதனால் தான் அவர்கள் சராசரி மனிதர்கள். அதில் அவர்கள் மேல் எந்தப் பிழையும் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்களால் அவ்வளவு தான் சிந்திக்கவும் செயல்படவும் முடியும். எந்த ஒரு இடர் வரும் போதும் தன்னிலை மறந்து அனிச்சையாக பொது நலத்தில் ஈடுபடுபவர்களால் கட்டமைக்கப்பட்டது தான் எந்த ஒரு சமூகமும், அதன் அறமும்.
கதையில் மூன்று படிமங்கள் அல்லது விவாதப் பொருள்கள் உள்ளன.
- காடு மனிதனால் தொடர்ந்து சுரண்டப்படுவதால் ‘கருமலைப்பட்சி’ போன்ற தொன்மங்களினால் , அசுரண்டலைக்குறைக்கும் பொருட்டு கூறப்படுகிறது என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு நீதி உள்ளதை பாம்பின் ‘கிழிந்த நாக்குகள்’ உட்கதை கொண்டு உணரலாம். தனி உயிரின் தேவைக்கு மேல் எந்த ஒரு சுரண்டலும் அறத்தை மீறிய செயலாகும்.
- மனிதன் எவ்வளவு தான் தன் மூத்தோரைவெறுத்தாலும், தன்குடும்பம், தன் ரத்தம் என்று வரும் போது, அவன் அதை மீறி எதுவும் செய்ய முடிவதில்லை. சாகக்கிடக்கும் பாட்டன் எப்படா போவான் என்று நினைப்பவனும், அவனை ஊருக்கு பலி கொடுக்க விடுவதில்லை. இதில் மனிதன் தான் கட்டமைத்த குடும்ப முறை ஏன் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது என்பதை அறியலாம்.
- தன்னையும், தன் ரத்தத்தையும் விட பொது அறத்திற்காக முதலில் நின்று மாண்டவர்களும், மீண்டவர்களும் எழுப்பும் அறக்கேள்விகள் ஒவ்வொரு மனிதனையும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்த்து விடுகிறது.
இன்று நாம் அறிந்திருக்கும் அத்தனைத் துறை வளர்ச்சியினிலும் காளியனைப் பார்க்கலாம். அறிவியல், மருத்துவம் முதலிய அத்தனை கட்டமைப்புகளிலும் முதலில் நின்று பலிகடா ஆனவர்களால்தான் அது வளர்ந்து வந்துள்ளது. ஏன், நாம் இன்று இருக்கும் கால கட்டத்திலே கூட, ‘கொரோனாவிற்கு’ தடுப்பு கண்டுபிடிப்பதில் பல ‘காளியன்’கள் பலியாகலாம். காளியன் ஒரு காந்தியின் படிமம் என்றே தோன்றுகிறது.
அன்புடன்,
பிரவின்,
தர்மபுரி
அன்புள்ள ஜெ,
முதலாமன் ஒரேசமயம் சோர்வும் உற்சாகமும் அளிக்கும் கதை. சோர்வு அந்தச் சாமானிய மக்களின் மனநிலையைப் பார்க்கும்போது உருவாவது. அவர்களின் அற்பத்தனம், தன்னலம், அக்கறையில்லாத தன்மை. இது எப்போதுமே இப்படித்தான் இருந்துள்ளது. அதைவிட தேவையான போது முழுக்கமுழுக்க சுயநல நோக்குடன் அவர்கள் உருவாக்கிக்கொள்ளும் செண்டிமெண்டுகளும் உணர்ச்சிநாடகங்களும்.
ஆனால் ஒரு தியாகத்திற்கு எவரும் வரமாட்டார்கள்.அதேசமயம் கும்பலாக கிளர்ச்சி செய்ய திரண்டு வரவும் செய்வார்கள். அமுதம் கதையில் அந்தப்பசுவை எரிக்க கூட்டமகா வந்து ஆட்டம்போடுகிறார்கள். ஆக்கத்துக்கு அந்த கூட்டத்தைத் திரட்டமுடியாது. அழிக்க வந்துசேர்வார்கள். அழிக்க அழைப்பவர்களையே தலைவர்களாக எடுப்பார்கள்.
தியாகத்திற்கு சிலர் வேண்டும். அவர்களை வணங்குவார்கள். ஆனால் அவர்களை பின் தொடர மாட்டார்கள். ஆனால் வரலாறு முழுக்க தியாகத்திற்கென்றே சிலர் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
ராஜன்
89. சாவி [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சாவி அற்புதமான கதை. அரிகிருஷ்ணன் குரங்கிடம் சொல்வது நீண்டு நிற்கும்:
அவன் அதன் தலையை தடவி “நீ இங்கியே இருடே மக்கா…” என்றான். “இங்க எல்லா துக்கமும் உண்டு பாத்துக்க. அங்க வானத்திலே உனக்கு அந்த துக்கமொண்ணும் இல்லை. ஆனா இந்த சந்தோசம் அங்க இல்ல கேட்டியா?”
காதலைப்பற்றி கலீல் கிப்ரானின் வரிகள் நினைவுக்கு வந்தன.
But if in your fear you would seek only love’s peace and love’s pleasure,
Then it is better for you that you cover your nakedness and pass out of love’s threshing-floor,
Into the seasonless world where you shall laugh, but not all of your laughter, and weep, but not all of your tears.
‘தூவக்காளி’ யில் அவனுடைய அப்பா அவனிடம் சொல்வதும் நினைவில் நிற்கும்.
//நமக்கு எப்டி சாமிகளை வேணுமோ அதுபோல சாமிகளுக்கு நம்மையும் வேணும்”//
திருமழிசை ஆழ்வார் வரிகள் படித்ததை நினைவூட்டியது – நான்முகன் திருவந்தாதி
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, – நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை
மிக்க நன்றி
வைகுண்டம்
மதுரை
அன்புள்ள ஜெ,
சாவி கதையின் பல்வேறு வாசிப்புகள் வந்துவிட்டன. அந்தக்கதையை அறிதல் அளிக்கும் சந்தோஷமும் துக்கமும் என்றெல்லாம் வாசிக்கலாம்தான். ஆனால் அறிவு என்பது ஒரு பொறி என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. கால்சிக்கிக்கொண்டால் நாம் அங்கேயே கிடப்போம். ஏதாவது ஒரு அறிவு நம்மேல் வந்து விட்டால் அது நம்மை நெடுந்தொலைவுக்கு கொண்டுபோகும்
1991 வாக்கில் எனக்கு ஓமியோபதியில் ஈடுபாடு வந்தது. நான் 12 வருடங்களை அதில் செலவிட்டிருக்கிறேன். ஒன்றும் செய்து பார்த்ததில்லை. சும்மா அதை படித்துக்கொண்டிருந்தேன். இன்றைக்கு ஈடுபாடு குறைந்துவிட்டது. ஆனால் 12 ஆண்டுகள் போயிற்று. சரி, அந்த 12 ஆண்டுகளும் சலிப்பில்லாமல் வாழ்க்கை போயிற்றே என நினைக்கவேண்டியதுதான்
ராஜகோபாலன் எம்.