எரிமருள்,அருகே கடல்- கடிதங்கள்

கதைத் திருவிழா-29, அருகே கடல் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

அருகே கடல் ஓர் அழகான கதை. இந்தக்கதையின் பின்புலம் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். வேறுவேறு தன்குறிப்புகளில் இந்த முஸ்லீம் வீடு வருகிறது. அங்கே கோணங்கி உங்களை வந்து பார்த்ததைப்பற்றிக்கூட சொல்லியிருக்கிறீர்கள்.

வெறும் படிமங்களாலான கதை இது. உளுத்து உதிர்ந்து மூழ்கிக்கொண்டிருக்கும் வீடு. அங்கே எலிகள், இருட்டு. புத்தகங்களை தின்பது அந்த இருட்டுதான்.அந்த இருட்டுக்கு வெளியே ஒளிமிக்க கடல், தென்னந்தோப்புகள். அந்த ஒளியின் ஒரு வடிவமான இக்கா. அவருடைய அன்பை எதிர்கொள்ள முடியாமல் திரும்பி வந்து கதவைமூடிக்கொண்டு இருட்டில் அமர்ந்து தலைகீழ் நிழல்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் கதாநாயகன்.

ஒரு சிறுகண் வழியாக உள்ளே வரும் காட்சிகள் அவை. தலைகீழ் கடல். அந்தக்கடல் வெளியே அலையடிக்கும் ஒளிக்கடல்தான். ஆனால் ஒரு நிழல்வடிவம்

ஒரு நீண்ட கவிதை இக்கதை

ராஜசேகர்

***

அன்புள்ள ஜெ,

அருகே கடல் தலைப்பே கவித்துவமானது. அருகே இருக்கும் கடல் எது? அதை உள்கடல் என்று கதை சொல்கிறது. அந்தக்கடலின் ஒரு தலைகீழ் பிம்பத்தை அவனால் பார்க்கமுடிகிறது. அவன் பார்க்கமுடியாத இடத்தில் அது அலையடித்துக்கொண்டே இருக்கிறது.

கதையின் படிமங்கள் அலாதியானவை. புத்தகங்கள் அருவிபோல கொட்டுகின்றன. அவனுக்கு எதிர்ப்பே இல்லை. ஆனால் அந்த புத்தகங்களை எரித்து டீ போடுகிறான். அவனுடைய நாள் இரவு பகல் என ஏதும் இல்லாதது. அது ஒரு அருவிபோல அவன்மேல் பொழிகிறது. தலைக்குமேல் கடலே கூரையாக அலையடிக்க அவன் கீழே இருட்டில் அமர்ந்திருக்கிறான்

உங்களுடைய அந்தக் காலகட்டத்தின் கொந்தளிப்பை மிக அமைதியாகச் சொன்ன கதை இது. இதே இடம்தான் ‘தீவண்டி’ கதையிலும் வருகிறது என நினைக்கிறேன். அங்கே நீங்கள் தங்கியிருந்தது ஒரு பஷீர்க்கதையின் சித்தரிப்பு போல தோன்றுகிறது

ஆர்.விக்னேஸ்வரன்

***

கதைத் திருவிழா-26. எரிமருள் [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

எரிமருள் அழகான கதை. எரிமருள்வேங்கை என்ற சங்ககால வரியைப்பற்றி நீங்கள் இரண்டு உரைகளில் விரிவாக சொல்லியிருக்கிறீர்கள். இங்கே வேங்கை என்ற படிமம் பலவாறாக மாறிக்கொண்டே இருக்கிறது. சின்னவயசில் இருளில் பூத்த வேங்கை மரம்போல தெரிந்தது அது. அந்தச் சருகுப்பரப்பின் நடுவே பற்றிக்கொள் பற்றிக்கொள் என்று அது நின்றிருக்கிறது. அன்றிரவு அவன் அறைக்குள் வந்து நிற்கிறது.

அந்தக் கணம் அப்படியே அவனுள் நிற்கிறது. அதை ஒரு முத்துபோல வளர்க்கிறான். முன்னும் பின்னும் இல்லாமல் வெட்டிக்கொள்கிறான். அந்த வைரம் அவனுள் இருக்கிறது. [விதுரர் வெண்முரசில் அப்படி ஒரு மணியை அவரிடம் வைத்திருக்கிறார்] அது வளர்ந்து வளர்ந்து வேங்கைக்காடாக ஆகிறது மரணமாக ஆகிறது. அணுகிவருகிறது வேங்கை

ஒரு கவிதையாகவே இதை வாசித்தேன்

எஸ்.மகாலிங்கம்

***

அன்புள்ள ஜெ,

கூர்மையான கதை. ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு முன்பின் இல்லாத தருணம் வாழ்க்கையில் இருக்கும் என நினைக்கிறேன். எனக்கு அப்படி ஒன்று உண்டு. ஒரு திருமணவீட்டில் சன்னல்வழியாகச் செல்கையில் ஒருத்தி கண்ணாடியில் பார்த்து காதின் கம்மலைச் சரிசெய்தாள். எங்கள் கண்கள் சந்தித்தன. கண்ணாடியில்தான் பார்த்தோம். மறுபடி பார்க்கவே கூடாது எனறு வந்துவிட்டேன். 17 ஆண்டுகளில் பார்க்கவே இல்லை. அந்த கணம் இன்றுவரை அப்படியே இருக்கிறது. அவள் அப்போது இருந்த ஹெவென்லி ஸ்டேட்டில் மறுபடி இருக்க மாட்டாள். அந்த தருணத்தை சேமித்துக்கொண்டேன்.

இந்தக்கதைபோல எனக்கும் வயதாகி சாகக்கிடக்கும்போது எழுந்து வரும் கணமாக அது இருக்கக்கூடும்

எம்.என்

கதைத் திருவிழா-29, அருகே கடல் [சிறுகதை]

கதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு [சிறுகதை]

கதைத் திருவிழா-27, நெடுந்தூரம் [சிறுகதை]

கதைத் திருவிழா-26. எரிமருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]

கதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]

கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]

கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]

கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9
அடுத்த கட்டுரைதிராவிட மனு- கடைசியாக