அறம் கதைகள் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ.
ஜனவரி 31 லிருந்து அதி வேகத்தில் தொடர்ந்து 13 + கதைகள், அதுவும் மிக அடர்த்தியான எழுத்து தினமும் உங்கள் இணையப் பக்கத்தை ஆவலுடன் பார்ப்பது, படிப்பது அன்றாட வழக்கமாகி விட்டது.

நீலக் கடல் அணுகுமுறை (Blue Ocean Strategy) என்று மனஜெமேண்டில் கூறுவது உண்டு. அது போல இருக்கிறது. உங்கள் எழுத்துக்கள். பழக்கமான எல்லைகளைத் தாண்டி புதிய எல்லைகளை வரைந்து கொண்டு இருக்கிறீர்கள்.

தவிர இணையத்தை disruptive technologies என்று கூறுவார்கள். அதற்கு எளிய உதாரணம், ஆடியோ டேப்பிலிருந்து சீடிக்கு மாறுவது போல. இது மாதிரியான தொழில் நுட்பங்கள், தருவது ஓரிரு அளவிலான பெருக்கம் அல்ல. பன்மடங்கு (100 to 1000 times on speed, reach etc.,) இவை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்.

நீங்கள், இணையத்தை உபோயோகித்து, அதி வேக வெளிப்பாட்டுக்கான ஒரு மாதிரி (Model) அமைத்துள்ளீர்கள். அதனுள், உங்களது கடும் உழைப்பு உள்ளது, உங்களுக்கு உதவ மிக சரியான இணைய தொழில் நுட்ப குழு உள்ளது. அது வரும் தலை முறைகளுக்கு ஒரு பயிற்சி முறையாக அமையக் கூடும். இதனை நன்கு பரிசீலித்து, விருது கொடுக்கக் கூடிய சிறப்பான சில அம்சங்கள் உள்ளன, எழுத்துகள், வாசகர்களுடன் எண்ணப் பரிமாறல்கள், அதைத் தாண்டிய விவாதங்கள் என பல பரிமாணங்களில் விரிந்த சூழல், மிகவும் உற்சாகம் தரும், எல்லோரும் பங்கேற்க கூடிய, social collaboration (கூட்டு முயற்சி?).

கதையும் எழுத்தும் விதையாக, அது வளர்ந்து, அந்தப் பயிரை அல்லது தோட்டமாக இருக்கும் சூழலை – அதன் பன்முகத்தை அனைவரும் அனுபவிக்க ஒரு வாய்ப்பு

நன்றி
அன்புடன் முரளி


M.Murali
Consultant

அன்புள்ள முரளி

ஆம் அதை நானும் உணர்கிறேன்

ஆரம்பத்தில் இது நான் எழுதுவதற்கான ஒரு மையமாக இருந்தது. இன்று தமிழ் இணைய வெளியில் காழ்ப்பும் கசப்பும் இன்றி ஆழமான விவாதங்கள் நிகழும் ஒரு வெளியாக உருவம் பெற்றுள்ளது. அதற்காக நண்பர்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்

ஜெ

அன்பிற்கினிய ஜெ
பூமேடையில் டிராபிக் ராமசாமியைப்பற்றி எழுதி இருந்தீர்கள்
மதுரை மேலூர் வட்டாரங்களில் குவாரி என்ற பெயரில் மறைமுகமாக நிறைய குடியுருப்புகளைப் பலவந்தமாகக்  காலி செய்கிறார்கள்- மறுப்பவர்களை அவர்கள் வசிக்கும் இடத்தருகே குவாரி குப்பைகளை குவிப்பது, அருகே பெரும் பள்ளம் தோண்டி அச்சுறுத்துவது, அவர்கள் பாதைகளை அடைப்பது போன்றவற்றை அரசு எந்திரங்களின் உதவியுடன் செய்து புலம் பெயர்க்கிறார்கள். எதிர்த்து பேசுபவர்களை நம்ப முடியாத வில்லத்தனம் செய்து அடக்குகிறார்கள்.

இது தொடர்பாக மதுரை உயர் நீதி மன்றத்தில் நிறைய பொதுநல வழக்குகள் ஒரு குறிப்பிட்ட குவாரிக்கு எதிராகத் தாக்கல் செய்யபட்டுகொண்டிருகிறது. ஆனால் நீதிபதிகளையும் வளைத்து, அடக்க முடியாத சக்தியாக உருவெடுத்து ஈவிரக்கமில்லாமல் பெரும் பள்ளங்களைத் தோண்டி வருகிறார்கள். இது ஈழத்தில் அப்பாவிகளுக்கு நடந்ததை விட மிகமிகக்கொடுமை. சொந்த நாட்டின் அகதிகளாக அப்பகுதி மக்கள்.

அதாவது காந்தி இருந்த போது வெள்ளையர்களில் நியாயமானவர்கள் தர்மர்கள் நீதிமான்கள் இருந்தார்கள் எனவே காந்தி மதிக்கப்பட்டார். இந்தியாவும் சுதந்திரம் அடைந்தது.

முட்டாள்களும் அயோக்கியர்களும் சமுகத்தின் உயர் பதவிகளில் இருக்கும் போது பொதுநல வழக்குகளால் எதுவும் நடக்கபோவதில்லை. மாற்ற வேண்டும்.

Kannan KK

 

அன்புள்ள கண்ணன்

எல்லா காலகட்டத்திலும் ஆட்சியும் அதிகாரமும் அப்படித்தான் இருந்திருக்கும். காந்தியின் காலகட்டத்தில் மட்டும் என்ன வேறுபாடு? பதவிக்காக சொந்த நாட்டை அன்னியனுக்கு காட்டிக்கொடுத்தவர்களாக இருந்தவர்கள்தானே அன்றைய இந்திய ஆட்சியாளர்கள்?

வெள்ளையர்கள் தர்மவான்கள் என்பதெல்லாம் அப்பட்டமான அடிமை மனநிலையின் நம்பிக்கை மட்டுமே. ஜமீந்தார்களையும் குட்டிமகாராஜாக்களையும் கருவிகளாகக் கொண்டு மொத்த இந்தியாவின் வளங்களையும் ஒட்டச்சுரண்டி இங்கே மாபெரும் பஞ்சங்களை உருவாக்கி பல லட்சம் பேரின் பட்டினி மரணத்துக்குக் காரணமாக அமைந்தார்கள் வெள்ளையர். வெள்ளையர் ஆட்சி மிகப்பெரிய ஊழல் ஆட்சியே. இவற்றை ஏற்கனவே எழுதியிருக்கிறேன், இந்தத் தளத்திலேயே.

அன்றும் இன்றும் தனிமனிதர்கள்தான் தனிப்பட்ட அறவுணர்வுடன் இருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் அதிகாரத்தின் பிரதிநிதிகள் அல்ல.

அநீதிக்கு எதிராக போரடவும் வெல்லவும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை விட இன்றைய ஜனநாயக ஆட்சிக்காலத்தில் பலமடங்கு வாய்ப்புகள் அதிகம் என்பதே உண்மை. நம்முடைய இயலாமையை இந்தமாதிரியான வாதங்களால் மறைக்கவேண்டியதில்லை

ஜெ

முந்தைய கட்டுரைஇறுதி யந்திரம் (சிறுகதை)
அடுத்த கட்டுரைகடிதங்கள்