அன்புள்ள ஜெ
இதுவரை வந்த அறம் வரிசை கதைகள் எல்லாமே ஓவ்வொன்றும் ஒவ்வொருமாதிரி இருந்தன. கதை என்று பார்த்தால் பொதுவான அம்சங்கள் உள்ள கதைகள் சில கதைகள் மட்டும்தான். ஆனால் காரி டேவிஸைப்பற்றிய உலகம் யாவையும் கதை எல்லாவற்றிலும் இருந்து தனித்து நிற்கிறது. கொஞ்சம்கூட உணர்ச்சிவேகத்தைத் தூண்டாமல் வெறும் கவித்துவத்தினால் மட்டுமே சிறந்த கதையாக நிற்கிறது இந்தக்கதை. இதில் உணர்ச்சிகரமான சந்தர்ப்பங்கள் உள்ளன. அவைகூட கவித்துவமாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. ஒரு சிறு அறையில் உலகை உருவாக்குவதைப்போல உலகத்திலே பிரபஞ்சத்தை உருவாக்க வேண்டும் என்ற அந்த கனவு அற்புதமானது. காரி டேவிஸ் ஒரே உலகம் என்ற ஞானத்தை சிறிய வயதிலேயே அடைந்துவிட்டார். ஆகவே அவர் அடுத்தபடியாக போகக்கூடிய உயரம் என்பது பிரபஞ்சம்தான். நானே உலகம் என்று அறைக்குள் உணரக்கூடியவர் அகம் பிரம்ம்மாஸ்மி என்ற அனுபவத்தை அந்த மலைஉச்சியிலே அவர் அடைகிறார். அற்புதமான கதை.
ஜெயராமன்
அன்புள்ள ஜெ
நடராஜகுருவின் ஒரே உலகுக்கான அறிவிக்கை Memorandum on World Government இணையத்திலேயே கிடைக்கிறது. http://www.worldgovernment.org/memor.html. இன்றைக்கு பார்க்கும்போது அபத்தமான ஒரு கனவு மாதிரித்தான் தெரிகிறது. இன்றைக்கு உலகமே போர்களால் சிதைந்து கிடக்கிறது. இருந்தாலும் அந்த கனவை நரம்புகளிலே உணரமுடிகிறது
பாஸ்கரன், செம்பூர்
அன்புள்ள பாஸ்கரன்
நடராஜகுரு அந்த கனவை காரி டேவிஸுடன் சேர்ந்து உருவாக்கும்போது பனிப்போரின் காலகட்டம். உலகப்போர் விளிம்பில் நின்று ஆடிய காலகட்டம். இன்று குறைந்தபட்சம் ஒரு இணையவெளியாவது உலகளாவிய பொதுப்பிராந்தியமாக உள்ளது
நடராஜகுரு இருந்திருந்தால் இதற்காக மிக களிப்படைந்திருக்கக்கூடும்
ஜெ