கதைத் திருவிழா-28, புழுக்கச்சோறு [சிறுகதை]
அன்புள்ள ஜெ
புழுக்கச் சோறு மறுபடி அன்ன வடிவான பிரம்மத்தின் கதை. அன்னமே தெய்வமென்று, தெய்வத்தின் முன் மனிதர்கள் விலங்குகள் அனைவரும் சமம் என்று, வேறேதும் எவ்வகையிலும் பொருட்டே அல்ல என்று உணர்ந்துகொள்வதற்கு எவ்வளவு தூரம் செல்லவேண்டியிருக்கிறது. முதலில் பசியின் உக்கிரத்தை அறியவேண்டியிருக்கிறது. பழகிய வழிகளிலிருந்து தவறிச்செல்லவேண்டியிருக்கிறது. ஆதி இயற்கையான காட்டுக்குள் செல்லவேண்டியிருக்கிறது. இயற்கையின் வடிவமான யானையால் வேட்டையாடப்படவேண்டியிருக்கிறது. ஒருவாய் உணவுக்காக காட்டில் விலங்குகள்போல பொறுக்கி அலையவேண்டியிருக்கிறது.
காட்டுவாழ்க்கைக்குள் சென்று அங்கே காட்டின் இருள்வடிவமாக அமர்ந்திருக்கும் தெய்வத்தின் முன் சென்று நின்றிருக்கையில் சோறு என்பது அன்னம், தெய்வம் என்று புரியவருகிறது. கதைநாயகனின் எதிர்த்திசைப் பரிணாமம்தான் கதை. அவனுடைய அடையாள அட்டை, செல்போன் தொலைவதில் தொடங்கி எல்லாவற்றையும் இழந்து குரங்குகள் போல காட்டில் அலைந்து சோற்றின்முன் நிற்கிறான். அவன் இறுதியில் கண்ட தரிசனம் அன்னமே பிரம்மம் என்பதாகவே இருக்கும் இல்லையா?
ராஜசேகர்
***
அன்புள்ள ஜெ
புழுக்கச்சோறு எதிர்பார்க்கவே முடியாத கதை.நூறாம் கதையை நெருங்கப்போகிறீர்கள். இருந்தாலும் இதுவரை எழுதாத கரு, எழுதப்படாத கேள்வி கதையில் எழுந்துவருவது திகைப்பூட்டுகிறது.
கதையின் இறுதியில் அந்த வினோதமான சடங்கு ஆழமானது. பிரிமிட்டிவ் சடங்குகள் எல்லாமே அப்படித்தான். பன்றியை வெட்டி பன்றிமாடனுக்கு- அதாவது பன்றிக்கு கொடுக்கிறர்கள். மனித உடலான அன்னத்தை வெட்டி தாங்களே உண்கிறார்கள். பன்றிமாமிசத்தை உண்ண பன்றியே வருகிறது.
காட்டுக்குள் அழைத்துச்செல்ல வருபவர்கள் முதற்கொண்டு அனைவருமே ‘மிஸ்டிக்’ தன்மையுடனும் யதார்த்தமாகவும் இருக்கிறார்கள். அந்தச் சடங்கு பசிமயக்கத்தின் வழியாக மங்கலாகி மங்கலாகி தெரிவதும்கூட திகைப்பூட்டும்படி அமைந்திருக்கிறது.கடைசியில் காட்டின் தெய்வமான பன்றிமாடனின் கண்களை அருகே பார்த்துவிடுகிறான்
அருண்குமார்
கதைத் திருவிழா-27, நெடுந்தூரம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நெடுந்தூரம் ஒரு அற்புதமான கதை. நூறுகதைகள் ஆகப்போகின்றது. சினிமாப்பின்னணியில் வந்த முதல்கதை. இந்தக்கதையை திருச்சியில் ஒரு சாதாரண சந்திப்பில் சொன்னீர்கள். இந்த அனுபவத்தை. அது இப்படி கதையாக மாறியது எதிர்பார்க்கமுடியாததாகவே உள்ளது.
அசோகமித்திரன் பாணிக் கதை. அசோகமித்திரன் பலசமயம் இந்த வகையான கதைகளை அந்த மனிதர்களின் துயரமான வாழ்க்கையைச் சித்தரிப்பதாக மட்டுமே அமைத்துவிடுவார். ‘வாழ்க்கையால் கைவிடப்பட்டவர்களின் கதை’ மட்டுமாக இது நின்றுவிட எல்லா வாய்ப்பும் இருந்தது. ஆனால் அந்த இரண்டு கழுகுகளும் கதையை மேலே கொண்டுசெல்கின்றன
அவை அந்த உடலை தின்றிருக்கும் என்பதே என் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அவை தின்னவில்லை. அவற்றுக்கு அப்படி தின்ன தெரியாது. அவற்றால் பறக்கமுடியவில்லை. அவை அப்படியே செத்துவிடும்.
அவன் வானத்தில் பார்க்கும் அந்த இரண்டு புள்ளிகளும் சுதந்திரமான வேறுபறவைகள். அதுதான் பறவைகளின் இயல்பான உச்சம். இங்கே அவை மனிதனுடன் சேர்ந்து மண்ணிலேயே மாட்டிக்கொண்டிருக்கின்றன. விடுதலைக்கும் சிக்கிக்கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான தூரம்தான் இந்தக்கதை
ஸ்ரீனிவாஸ்
***
அன்புள்ள ஜெ
என் ரசனைக்கு மிக உகந்த கதை நெடுந்தூரம். அந்த ambience கதையை பலதளங்களுக்கு நகர்த்துகிறது. அழுக்கு சாக்கடை குடிசை என சிக்கிக்கொண்டிருக்கும் ஓர் உலகம். மேலே வானில் சுழலும் ஒரு உலகம். அவன் சிறகுகள் வெட்டப்பட்ட கழுகுதான். வானை அவனால் பார்க்கமுடியும்தான். அந்த இரண்டு கழுகுகளும் மனிதர்களாக மாறின கழுகுகள். கழுகாக மாற மனிதன் கனவுகாணவும் செய்கிறான்
இந்த சிக்கிக்கொண்ட உலகில் சிறை, அடக்குமுறை, வறுமை, நிராதரவான நிலை எல்லாமே இருக்கிறது. ஆனால் அன்பும் நட்பும் இருந்துகொண்டே இருக்கிறது. டீயும்பொறையும் வாங்கித்தரும் வாட்ச்மேன், சிறையில் உதவிசெய்பவன், டோபி என ஒரு உலகம் சின்னச்சின்ன குறிப்புகள் வழியாக வந்துசெல்கிறது.
ராமச்சந்திரன்