திராவிட மனு- கடைசியாக

ராஜன் குறை முதலியோர் முன்வைத்த “Work caste and Competing Masculinities- Notes from a Tamil village” என்னும் தலித் ஒழிப்பு ஆவணத்தை கவனப்படுத்தும் இக்கட்டுரைகளை இங்கே முடித்துக்கொள்கிறேன். இறுதியான ஒரு தன்னிலை விளக்கம்

இக்கட்டுரையை இப்போது முன்வைப்பதற்கான காரணம் என்ன என்று நான் சொல்லிவிட்டேன். இப்போது நிகழ்ந்த ஒரு வழக்கின் தீர்ப்பு பற்றி வழக்கறிஞர்களிடம் பேசியபோது இக்கட்டுரையின் பகுதிகள் அளித்த செல்வாக்கு குறித்து சொன்னார்கள். விசாரித்தபோது இதுவே கேரளத்தில் தமிழக தலித் இயக்கம் பற்றிய எல்லா புரிதல்களையும் தீர்மானிக்கும் கட்டுரை என்று அறிந்தேன்.

ஆகவே இது ஒரு பழைய கட்டுரை அல்ல. இன்று மேலும் பெரிய உருவம் எடுத்திருக்கும் பூதம். இதை எதிர்கொள்ளவில்லை என்றால் இது இன்னும் பேரழிவை உருவாக்கும். நான் இதை கவனத்திற்குக் கொண்டுவந்தது இதன்பொருட்டு மட்டுமே.

இந்த ஆய்வாளர்கள் இன்று இக்கட்டுரைகள் உலகமெங்கும் தலித்துக்களைப் பற்றி உருவாக்கியிருக்கும் சித்திரத்தை மாற்ற முயலவேண்டும். இக்கட்டுரையையும் மேலும் தீவிரமான சில கட்டுரைகளையும் இவர்கள் திரும்பப்பெறவேண்டும். மூல இதழ்களிலேயே இவர்கள் அதை திரும்பப்பெறுவதாக சொல்லவேண்டும். இல்லையேல் இது தொடர்ந்து பேரழிவுகளை உருவாக்கும்ம்

நான் இதை கவனத்தில் கொண்டுவரும்போது இங்கே தொடர்ச்சியாக தலித் ஆய்வாளர்கள் இக்கட்டுரைதான் தமிழகத்தில் நாடகக்காதல் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி அரசியல்வாதிகளுக்கு அளித்தது என்பதை ஆணித்தரமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. அவர்களின் எதிர்ப்பு இந்தக் கூட்டத்தால் பொருட்படுத்தப்படாமல் கடந்துசெல்லப்பட்டது. நான் அவர்களின் எதிர்ப்புக்குமேல் வெளிச்சம் வீசியிருக்கிறேன்- இதில் என் பங்களிப்பு இவ்வளவுதான்.

ஏன் இது போலி ஆய்வு? இதன் மெய்மதிப்பு என்ன?

இத்தகைய கட்டுரைகள் உரிய பாவலாக்களுடன்தான் இருக்கும். அமெரிக்க நிதிபெற்று மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்வதன் அடிப்படை பாவலாவில் இருந்து ஆரம்பிக்கிறது இது. இவை  பொதுச்சூழலுக்கு வந்துசேர கொஞ்சம் தாமதமாகும். ஆனால் அடித்தளத்தை அரித்து நீண்டகால பாதிப்பை உருவாக்கிவிடும். இது முன்வைக்கும் நாடகக்காதல் என்ற கருத்து அரசியல்மேடைக்கு வர பத்தாண்டுகள் ஆகியிருக்கிறது.

ராமதாஸ் போன்றவர்கள் இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை அரசியல்மேடைகளில் சொல்லும்போது அது சமூகத்தில் மிகப்பெரிய முன்முடிவாக, காழ்ப்பாக ஆகிறது. இன்றைய ஆணவக்கொலைகள் அனைத்துக்கும் காரணமாகிறது. தலித் இளைஞர்களை வேலைவாய்ப்புச் சந்தையிலிருந்து அகற்றுகிறது.

ஆனால் நீதிச்சூழலில், இதழியல் சூழலில் இந்த கட்டுரையின்  கல்வித்துறை சார்ந்த பின்புலம் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்துகிறது. ஏனென்றால் இது ஒரு ஆய்வேடு, களஆய்வின் அடிப்படையில் கண்டடைந்த முடிவுகளை முன்வைப்பது என்று சொல்லிக்கொள்கிறது. பொதுவாக படித்தவர்கள் ‘எலைட்கள்’ இதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

இது என்ன வகையான கள ஆய்வு? ஆய்வேட்டிலேயே பாருங்கள். ஒரு கிராமம், அங்குள்ள சிலரிடம் ராஜன் குறை ‘பேட்டி’ கண்டார். அவ்வளவுதான். தலித் இளைஞர்களைப் பற்றிய அறுதி உண்மை உருவாகிவிட்டது. [அனேகமாக ஒரே ஒருநாள் அந்த பேட்டி எடுக்கப்பட்டிருக்கும். அந்தப்பேட்டிக்கு பின் அவர் திரும்பும்போதுதான் நான் பேருந்துநிறுத்ததில் அவரைச் சந்தித்தேன் என நினைக்கிறேன்]

தலித் இளைஞர்களின் வேலைச்சூழல் பற்றி எத்தனை நிறுவனங்களில் பேட்டி காணப்பட்டது? தலித் இளைஞர்களின் வன்முறைப்போக்கு பற்றி காவல்துறை ஆவணங்கள் பார்க்கப்பட்டனவா? தலித் இளைஞர்களை மணந்த பெண்களை பேட்டி எடுத்தார்களா? எதுவுமே இல்லை. எந்த தரவும் இல்லை. ராஜன் குறைக்கு தேவையான பேச்சுக்களை பதிவுசெய்கிறார். அதை தனக்குத்தேவையானபடி தொகுத்தளிக்கிறார். அவ்வளவுதான். ஆய்வு முடிந்துவிட்டது. ஆய்வேட்டுக்கான மொழி தவிர இக்கட்டுரையில் ஆய்வு என எதுவுமே இல்லை.

ஆய்வின் அன்னியக் கரங்கள்

இந்தப்போலி ‘ஆய்வு’ International Centre For Research on Women, Washington DC [https://www.icrw.org/] என்ற அமைப்பின் நிதிக்கொடையுடன் செய்யப்பட்டுள்ளது. ஜெயரஞ்சன் நடத்திய ஒரு என்.ஜி.ஓ நிறுவனத்திற்காக இந்த ஆய்வை ராஜன் குறை நடத்தியிருக்கிறார். என்ன சொல்லப்படவேண்டும் என்ற வழிகாட்டல் அந்த ஆய்வுநிறுவனத்திடமிருந்து வந்திருக்கும். இவர்கள் திரிக்கப்பட்ட தகவல்களை அளிக்கிறார்கள்

அந்த நிறுவனத்திற்கு இந்த ஆய்வைச் செய்வதற்கான தேவை என்ன, அதன் வழிமுறை என்ன, இவர்களுடனான தொடர்பு என்ன என நம்மால் அறியவே முடியாது. ஆனால் தலித் இளைஞர்களை மொத்த தமிழகமே முத்திரையிட்டு ஒதுக்க வழிவகுத்துவிட்டது. மெய்யான சதி என்ன, எங்கிருந்து தொடங்கியது என கண்டுபிடிக்க இன்னொரு விரிவான ஆய்வைத்தான் செய்யவேண்டும்.

மேலே சொன்ன ஆய்வுநிறுவனத்தின் நோக்கம் இந்தியா, ஆப்ரிக்கா முதலிய நாடுகளில் பெண்கல்விக்கு இருக்கும் சிக்கல்களை ஆராய்ச்சி செய்வது. நிதிக்கொடை அதன்பொருட்டே அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையின் நோக்கமே ‘பெண் கல்விக்கு இருக்கும் தடைகள் யாவை?’ என்ற கோணத்தில்தான்.

அப்படியென்றால் இந்தியாவில், தமிழ்நாட்டில், பெண்கல்விக்கு முதன்மைத்தடையாக இருப்பது தலித் இளைஞர்களின் ஆணவமும் நாடகக்காதலும்தான் என்று இந்த ஆய்வாளர் சொல்வதன் பொருள் என்ன என்று எளிதில் உணரலாம்.

சொத்துக்களை இழந்து சிற்றிதழ் நடத்திய க.நா.சுவும் செல்லப்பாவும் சி.ஐ.ஏ நிதி வாங்கினார்கள் என்று பிரச்சாரம் செய்த நம்மூர் மார்க்ஸியர்களெல்லாம் அமெரிக்க நிதிபெற்று செய்யப்பட்ட இந்த ஆய்வை, அப்பட்டமான நாஸி ஆய்வை, தாங்கிப்பிடிப்பதிலுள்ள சாதியநோக்கு கவனிக்கத்தக்கது.

அனைத்துக்கும் மேலாக ஒரு சூழலில் தன்னிச்சையான ஆய்வுகள் நிகழ்வதையே இவை அழித்துவிடுகின்றன. ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் நடக்கும் ஆய்வுகளை நிதிக்கொடைகள் வழியாக கட்டுப்படுத்தும் இந்த அமைப்புகள் அங்கே சுயசிந்தனையே உருவாகாமல் பார்த்துக்கொள்கின்றன. அங்குள்ள சிந்தனையையே கட்டுப்படுத்துகின்றன. இதை இனியாவது நாம் உணரவேண்டும். இதை விரிவாக டி.தர்மராஜ் எழுதியிருக்கிறார்

முகநூலர்களின் கள்ளமௌனமும், சப்பைக்கட்டும்

இதே ஆவணம் இந்த நபர்களால் அல்லாமல் வேறு எவர் பெயரிலாவது வந்திருந்தால் இங்கே என்னென்ன பேசப்பட்டிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். நாம் எழுதும் வரிகளை வளைத்து ஒடித்து அர்த்தத்திரிபு செய்து ஃபாஸிசத்தை கண்டுபிடிக்கும் இவர்கள் என்ன ஆட்டம் ஆடியிருப்பார்கள்!

இன்று எத்தனை கள்ளமௌனம். எவ்வளவு பூடகமான சமாளிப்புகள். இந்த கட்டுரையை எழுதி இதை உலகமெங்கும் கொண்டுசென்று தலித் மக்களை முத்திரையிட்டது சின்ன விஷயமாம், அதை வெளியிட்ட என் செயலில் உள்நோக்கம் உண்டாம். நான் அதை வெளியிட்டதுதான் ’மாபெரும் சதிவேலை’யாம்.

இக்கட்டுரையில் இந்த  ‘ஆய்வாளர்’கள் தலித்துக்களைப் பற்றி வரையறை செய்திருக்கும் இந்த நாஸி முத்திரை குத்தலைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. இதை நீங்கள் கண்டிக்கவில்லை என்றால் மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் யார் என்பதுதான் கேள்வி.

ராஜன் குறை இதற்கு என்ன சொல்வார் என்பது தெளிவு. அவரை நான் நன்கு அறிவேன். இது புறவயமான ஆய்வு, நான் இதிலிருந்து சொந்தமாக வந்தடைந்த முடிவு வேறு, அதை வேறு கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன் என்பார். தலித் இளைஞர்களைப் பற்றிய அவருடைய  ‘ஆய்வு’  ‘fact’ சார்ந்தது என்றுதான் சொல்வார், அது அவருக்கு நிதியளித்தவர்களுடனான ஒப்பந்தம். ஆனால் அதை இப்படி இப்படி விளக்கலாம் என நீளமாக பேசுவார்

இது புறவயமான ஆய்வே அல்ல, மோசடி என்பதுதான் பிரச்சினை. இது புறவயமான ஆய்வுண்மை என முன்வைக்கப்படுவதிலுள்ள அழிவுதான் பிரச்சினை. அந்த அறமின்மையை ஒருபோதும் ராஜன் குறை எதிர்கொள்ள மாட்டார்.

கட்டுரையின் கடைசியில் அவர் இந்த ஆவணத்தில் சொன்னபடி ‘திருட்டு, ஆண்மைத்திமிர், நாடகக்காதல்’ ஆகிய இயல்புகளுடன் தலித் மக்கள் இருப்பதற்கு இங்குள்ள சமூக ஒடுக்குமுறைதான் காரணம் என்று சொல்லவந்தேன், ஆகவே இது தலித் ஆதரவு கட்டுரை என்று வாதிடுவார். இதெல்லாம் எவ்வளவு காலமாக பார்க்கிறோம்.

இதை எழுதிய என்மேல் அவதூறுகள் குவிப்பார், உள்நோக்கம் கற்பிப்பார். முடிந்தவரை நீளநீளமாக எழுதுவார். பல பக்கங்கள் எழுதினால் ‘ராஜன் குறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார்’ என ஒரு கும்பல் சொல்லும். ஆனால் ஒருபோதும் இந்த போலி ஆவணத்தை அவர் நிராகரிக்கமாட்டார், மறுக்கமாட்டார். ஏனென்றால் இது உருவாக்கி அளிக்கும் இடைநிலைச் சாதி ஆதரவின்மேல்தான் அவர் இன்றைக்கு அமர்ந்திருக்கிறார்.

எந்த அப்பட்டமான வெளிப்படுத்தலும் இவர்களை ஒன்றுமே செய்யாது. இந்தவகையானவர்கள் வெறும் வக்கீல்கள், ஆகவே உணர்ச்சிகரமாகவும் பாதிக்கப்படமாட்டார்கள். எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு விளக்கம் இவர்களிடமிருக்கும். அடிப்படை அறம் மட்டுமே இருக்காது.

ராஜன் குறை அதற்கு எப்படி என்ன சப்பைக்கட்டு எழுதினாலும் ‘அடடா ஜெயமோகனை ராஜன் குறை மூக்குடைத்துவிட்டார், தோலுரித்துவிட்டார்’ என்று இந்த இடைநிலைச் சாதிவெறியர்கள் ஒரு டான்ஸ் போட்டு விஷயத்தை இழுத்து மூடிவிடுவார்கள்.

இந்தக்கும்பலுடையது சாதிவெறி, குழுமனப்பான்மை மட்டுமே. கொள்கை என ஏதுமில்லை. ‘நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று தெரியாது, ஆனால் ஜெயமோகன் எதிர்ப்பதனால் நான் உங்களை ஆதரிக்கிறேன்’ என்று பின்னூட்டமிடும் பதர்களால் ஆனது இந்த சுயநல- சாதிவெறிக் கும்பல்.

என் குறிப்பு அடிப்படை மனசாட்சி கொண்டவர்களை நோக்கி மட்டுமே. வெறும் தனிநபர்க் காழ்ப்புகளால் இயங்காமல் உண்மையாகவே அரசியலை நம்புகிறவர்களிடம் மட்டுமே. அதை செய்துவிட்டேன். மேற்கொண்டு தமிழ்ச்சூழல் முடிவெடுக்கட்டும். [இந்த ஆய்வின் உண்மைமதிப்பைப் பற்றி ராவணன் அம்பேத்கர் எழுதியதை படியுங்கள்]

 

தி.மு.க வும் இந்த ஆவணமும்

இந்த தருணத்தில் பலர் தி.மு.கவுடன் இந்த ஆவணத்தை தொடர்பு படுத்துகிறார்கள். கட்சியரசியல் அதைத்தான் செய்யும், ஆனால் நான் அதை ஏற்கவில்லை. இந்த ‘ஆய்வாளர்கள்’ ஒருவகை வாடகைச் சிந்தனையாளர்கள். நிதிக்கொடையின் பொருட்டு ஆய்வுசெய்பவர்கள். இவர்கள் திமுக தரப்பை தாங்கள் எடுத்து பேசுகிறார்கள். இவர்களுக்கு திமுக பொறுப்பு அல்ல.

இன்று திமுக ஏதோ அறிவார்ந்த வறுமையில் இருப்பதாகவும், அதைப்போக்க தாங்கள் அவதரித்திருப்பதாகவும் இவர்கள் காட்டிக்கொள்கிறார்கள். திமுகவுக்கு இவர்கள் தேவையா என அக்கட்சிதான் முடிவெடுக்கவேண்டும். வாடகைச் சிந்தனையாளர்களை வைத்து அவர்கள் அரசியல் செய்யவேண்டுமா? இவர்களின் பின்னணியில் இருந்து என்ன கிளம்பிவரும் என்றே சொல்லமுடியாது. இவர்களின் தொடர்புகளை, இவர்கள் எதன் கருவிகள் என்பதை திமுக எளிதில் புரிந்துகொள்ளமுடியாது.

இன்றைக்கு இப்படிப்பட்ட அப்பட்டமான நாஸி ஆவணம் வெளிப்பட்டபோதுகூட இவர்கள் ஓர் ஆதரவு வட்டத்துடன் நிலைகொள்வது எதன் பலத்தில்? இங்கே இவர்கள் காட்டும் திமுக ஆதரவுப் பாவனையால்தானே? இதற்காகத்தான் இவர்கள் திமுக ஆதரவுநிலைபாடு எடுக்கிறார்கள்.

நாடகக்காதல் உள்ளிட்ட கோஷங்களை தமிழகத்தில் திமுக முன்வைத்தது இல்லை.நடைமுறையில் இங்கே எல்லாக் கட்சிகளும் இடைநிலைச்சாதி அரசியலைப் பேசுவனதான். அவற்றில் தலித் அரசியலுக்கு ஒப்புநோக்க நெருக்கமானவை காங்கிரஸும் திமுகவும் இடதுசாரிக் கட்சிகளும்தான் என்பதே என் எண்ணம். இந்த வாடகை அறிவுஜீவிகள் வேறு எவருடைய நோக்கத்தினாலோ ஆற்றிய பணிக்கு திமுக பொறுப்பேற்கமுடியாது.

இன்றைய சூழலில் திமுகவினரும் இடதுசாரிகளும் இந்த வாடகைச் சிந்தனையாளர்களை ஆதரித்து நிற்காமல் கொள்கை நிலைபாட்டையே எடுக்கவேண்டும் என நினைக்கிறேன். இல்லையேல் அவர்கள் தலித் மக்களிடமிருந்து மேலும் அன்னியப்படவே செய்வார்கள். அதிலும் ராஜன்குறை போன்றவர்கள் எந்த அமைப்புக்கும் பெரும் சுமைகள்.

ஏன் ராஜன் குறையை குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிறேன்?   

சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுத்தாளர் அம்பை பற்றி ஒரு கடுமையான கருத்தை முன்வைத்தேன். அம்பை ஒரு தன்னலவாதி என்றேன். அம்பைக்கும் எனக்கும் எந்தப்பூசலும் எப்போதும் இருந்தது இல்லை. அது ஒரு பண்பாட்டு விமர்சனமாகவே முன்வைக்கப்பட்டது. ஆனால் அது அவதூறு என்றும், அம்பை கடைந்தெடுத்த மார்க்ஸியர் என்றும், புரட்சியாளர் என்றும் என்னை கண்டித்தவர் பலர். இன்று அம்பை தன் நெடுங்கால மார்க்சியப் பாவனைகளை கழற்றிவிட்டு அரவிந்தன் நீலகண்டனின் அடிப்பொடியாக இந்துத்துவ அரசியல் பயில்கிறார். அன்று அம்பைக்காக பேசியவர்கள் எங்கே என்று தெரியவில்லை.

ஜெயரஞ்சனோ, எம்.எஸ்.எஸ்.பாண்டியனோ பேசும் இடைநிலைச்சாதி அரசியல் அவர்களுக்கு இயல்பாகவே உள்ள மனநிலை. அவர்கள் இடைநிலைச்சாதி அரசியலை ஒரு மீட்புசக்தியாக பார்க்கிறார்கள். நாளை இடைநிலைச்சாதி அரசியலுடன் தலித் அரசியல் சமரசமும் செய்துகொள்ளக்கூடும். ராஜன் குறை அப்படி அல்ல. அவர் இந்த அரசியலில் ஒர் ஒட்டுண்ணி. அடிப்படையில் அவர் இதை எதையுமே நம்பவில்லை. அவர் இவற்றையெல்லாம் ஒரு சதுரங்கமாக ஆடிக்கொண்டிருக்கிறார். உள்ளுக்குள் சிரித்தபடி நிதானமாக காய்நீக்குகிறார்.

அம்பை, ராஜன் குறை போன்றவர்கள் மிகமிகச் சூழ்ச்சி நிறைந்தவர்கள். எவ்வகையிலும் நம்பத்தக்கவர்கள் அல்ல. ராஜன் குறை நாளை பாரதிய ஜனதாவின் கொள்கைப் பிரச்சாரகராக அமர்ந்தால் அது எனக்கு எவ்வகையிலும் ஆச்சரியமளிக்காது. என் ஒவ்வாமை இந்த தன்னலச் சிந்தனையாளர்களிடம்தான், தனிநபர்கள் பொருட்டு அல்ல.

அரசியல்சரிநிலைகளை வலியுறுத்துகிறேனா?

தமிழ் எழுத்தாளர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலே சூழலில் அரசியல்சரிநிலைகளை அளவுகோலாகக் கொண்டு சுற்றிவரும் மொண்ணைகள்தான். எது எழுதப்பட்டாலும் உடனே இது பிற்போக்கானது, ஒழுக்கமற்றது என்று கிளம்பிவிடுவார்கள். இந்தக் கெடுபிடி இலக்கியத்தின்மேல் அடிமடையர்கள் அதிகாரம் கொள்ள வழியமைப்பது. நாலாந்தர எழுத்தை முன்வைத்து, இலக்கியத்தையே அழிக்கக்கூடியது.

அரசியல்சரிகளுடன் சுற்றுபவர்களில் முதன்மையானவர் ராஜன் குறை. அவர் அறிந்த இலக்கியவிமர்சனம் என்பது படைப்புக்களில் அரசியல் சரிநிலைகளை கண்டுபிடிப்பது மட்டுமே.அவர் இலக்கியவாதிகள் மீது செலுத்திய தாக்குதல்கள் பல. என் கதைகளிலேயே கதாபாத்திரங்கள் பேசும் உதிரி வரிகளை கொண்டு என்னை முத்திரை குத்தியிருக்கிறார். நான் அவருக்கே அதை திருப்பிச் செய்கிறேனா? அரசியல் சரிநிலைகளின்படித்தான் எழுதவேண்டும் என்று நானும் சொல்கிறேனா?

ராஜன் குறை இந்த ‘கிராம அனுபவத்தை’ ஒரு நாவலாக எழுதியிருந்தால் அது வேறு. ஏனென்றால் புனைவில் வெளிப்படுவது பலகுரல்தன்மை. ஒன்றையொன்று மறுக்கும் வெவ்வேறு தரப்புகள் அதில் வெளிப்படலாம். அவை அக்கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டுமே. அவற்றில் அரசியல்சரிநிலைகளை எதிர்பார்க்கக்கூடாது. எதுவும் வெளிப்படலாம். எதுவும் வெளிப்படலாமென்ற சுதந்திரமே இலக்கியத்தின் அடிப்படை விசை.

அதோடு ஒட்டுமொத்தமாக அந்நாவலில் வெளிப்படுவது ஆசிரியனின் தனிப்பட்ட உண்மை. அதை வாசகன் தன் அனுபவமாக ஏற்றால் மட்டுமே அது வாசகனின் உண்மையாக ஆகிறது. வாசகனுக்கும் தெரியும், புனைவில் வெளிப்படுவது பொதுவான புறவய உண்மை அல்ல, புனைவுக்குள் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய, புனைவின் தர்க்கங்களுக்கு உட்பட்ட அந்தரங்க உண்மை என்று. அந்த அந்தரங்க உண்மையை வாசகனின் அந்தரங்கம் ஏற்பது புனைவில் இருக்கும் கலைத்தன்மையாலும் நேர்மையாலும் நிகழ்கிறது. அவ்வண்ணம் இல்லை என்றால் இயல்பாக வாசக உள்ளம் அதை நிராகரிக்கிறது. யோசித்துப்பாருங்கள், நீங்கள் ஏற்றுக்கொண்ட புனைவுகளைவிட மறுதலித்த புனைவுகளே பலமடங்கு இருக்கும்

ராஜன் குறை ஒருசில தனிப்பட்ட குரல்களை கேட்டு, அவற்றில் வசதியானவற்றை கொண்டு ஒரு அந்தரங்க உண்மையை உருவாக்குகிறார்.ஆனால் இதை ஓர் ஆய்வுண்மையாக, புறவய உண்மையாக, நிரூபிக்கப்பட்ட ஒன்றாக முன்வைக்கிறார். அவருடைய தொகுப்புமுறையால் அதை அப்படி காட்டுகிறார். அதை சர்வதேசப்புகழ் கொண்ட ஊடகங்களில், கல்விநிறுவனங்களில் நிறுவுகிறார்

இதை வாசிப்பவர்கள் இதை ஓர் அறிவியலுண்மை போல புறவயமானது என நம்ப கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது கள ஆய்வில் கண்டடைந்தது, கண்டடைந்தவர்கள் பெரிய ஆய்வாளர்கள், இது புகழ்பெற்ற ஆய்விதழில் வெளியானது, இது உலகம் முழுக்க மேற்கோள் காட்டப்பட்டது—இத்தனை பின்புலத்துடன் வரும் ஒரு கருத்து மிகமிக வலுவான ஆயுதம். தலித்துக்கள் மேல் விடப்பட்ட சாபம்போன்றது.

என் அரசியல் என்ன?

இதை நான் அரசியல் செயல்பாடாகச் செய்கிறேனா என்கிறார்கள். அரசியல் என் இடம் அல்ல. திட்டவட்டமான அரசியல்நிலைபாடு எனக்கு எப்போதும் இருந்ததில்லை. சாமானியனின் உள்ளத்திற்கு நெருக்கமாக, அவனை தொடர்பவனாகவே என் அரசியல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

ஆகவே எப்போதுமே தேர்தலரசியலில் ஒரு தரப்பை எடுத்து வாதிடுவதில்லை. பிறருடைய நிலைபாடுகளுடன் மோதுவதும் இல்லை. ஒவ்வொரு அரசியல்நிகழ்வுக்கும், சமூக நிகழ்வுக்கும் எதிர்வினை ஆற்றுவதுமில்லை. இலக்கியவாதிக்கு அது மாபெரும் வெட்டிவேலை.என் தளமும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டுமென்றே நினைக்கிறேன்.

ராஜன் குறையின் இந்த நாஸிசக் கட்டுரையை நான் கவனப்படுத்துவது இது அரசியல் என்பதனால் அல்ல. இது நான் செயல்படும் பண்பாட்டுச்சூழல் சார்ந்தது என்பதனால் மட்டுமே. அதிலுள்ள மகத்தான மோசடியைச் சுட்டிக்காட்ட மட்டுமே.

தலித் அரசியலை நான் அரசியலாக நினைக்கவில்லை, அது பெரும்பாலும் பண்பாட்டுத்தளத்தில் நடைபெறுகிறது. தலித் அரசியலைப் பொறுத்தவரை, அவர்கள் எந்நிலைபாடு எடுத்தாலும், எங்கு நின்றாலும், அவர்களுக்கே என் ஆதரவு. நிபந்தனைகளே இல்லை. விமர்சனங்களே இல்லை. ஏனென்றால் அவர்களின் நியாயங்கள் கடந்தகால வரலாற்றில் உள்ளன.

தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதனால் திருமாவளவன் தமிழகத்தின் முதன்மை அரசியல்வாதி என்று நினைக்கிறேன். அவருடைய அரசியல் நடைமுறை என்ன, அவருடைய நம்பிக்கைகள் என்ன என்பதெல்லாம் நான் கருத்தில்கொள்வதே இல்லை. அவருடைய ஆளுமை, அவருடைய நியாயங்கள் மட்டுமே என் கருத்தில் முக்கியமானவை.

சரி, வாக்காளனாக என்னுடைய அரசியல்நிலைபாடு என்ன என்று கேட்கிறார்கள். நான் அரசியல்வாதி அல்ல என்பதனால் அது எவ்வகையிலும் என் சிந்தனைகளுடன் தொடர்புடையது அல்ல. என் இணையதளத்திலும் அதற்கு இடமில்லை. அது என் மாறாத நிலைபாடும் அல்ல.

நான் பாரதிய ஜனதாவை எப்போதும் ஐயத்துடன் பார்த்துவந்தவன். அதன் ஆதரவுப்பின்புலம் பற்றிய அறிதலே காரணம்.ஆகவே அவர்கள் போட்டியிட்ட எந்த தேர்தல் சார்ந்தும் ஏதும் எழுதியதில்லை. ஆனால் மோடி முதலில் வந்தபோது ஒரு மெல்லிய எதிர்பார்ப்பு இருந்தது என்பதை மறுக்கவில்லை. அதை பின்னர் முழுமையாகவே ரத்துசெய்துகொண்டேன். அதை விரிவாக பதிவும் செய்துவிட்டேன்.

என் நண்பர்களுக்கு தெரியாதது அல்ல,சென்ற பல ஆண்டுகளாகவே நான் காங்கிரஸ் ஆதரவு நிலையிலேயே இருக்கிறேன். இன்றைய சூழலில் நான் இந்தியாவை காங்கிரஸ் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று நம்புகிறேன். ராகுல் என்றால் சரி. ஆனால் நம்மை இன்றைய பொருளியல் பேரழிவுச்சூழலில் இருந்து காக்க இன்னொரு நரசிம்மராவ் எழுந்துவர வாய்ப்புள்ள கட்சி காங்கிரஸ் மட்டுமே.

ஆனால் இது ஒரு வாக்காளனின் நிலைபாடு, அவ்வளவுதான். இதை எவர்மேலும் நான் சுமத்துவதில்லை. மிகநெருக்கமானவர்களிடம் அன்றி அரசியல் பேசுவதுமில்லை. இலக்கியத்திற்கு அப்பால் அரசியலைக் கருதிக்கொண்டு என்மேல் ஒவ்வாமையை  கொண்டிருந்தவர்கள் விலகிச் சென்றுவிட்டனர். கடுமையாக, எல்லா எல்லைகளையும் மீறி, வசைகளையும் குவித்துவிட்டனர்.

[என்னுடைய ஏதோ சிடி காங்கிரஸிடம் மாட்டிக்கொண்டுவிட்டது என்றுகூட ஒரு கட்டுரை வந்தது. சிடி! நினைக்கவே கிளுகிளுப்பாக இருக்கிறது. என்னவாக இருக்கும்! யார்! என் கற்பனைகள் எப்படியெல்லாம் கட்டற்றுச் செல்கின்றன, ஆண்டவா!]

எப்போதும் நான் சொல்லிக்கொள்வது என் பண்பாட்டுநிலைபாடுகளை. நான் ஓர் இந்து, என் ஆசிரியமரபின் வழியாக வேதாந்தி, அத்வைதி.நாராயணகுருவின் குருவழி வந்தவன்.

ஆனால் அதுகூட அறுதியான தத்துவ நிலைபாடு அல்ல, தத்துவப்புலம் மட்டுமே. அதற்குள் என் தேடல் எனக்கேயானது. அது தன்னிச்சையாக புனைவில் செயல்பட விடுவேன். ஆகவே ஒரு வேதாந்தி இதைச் செய்யலாமா என்று எவரும் என்னிடம் கேட்கவேண்டியதில்லை. வேதாந்தி போர்ன் கூட எழுதலாம்.

என் வாசகர்கள் என்னிடம் உசாவ வேண்டியது அரசியலை அல்ல., எந்த அரசியல் கொண்டிருந்தாலும் அவர்கள் வாசிக்கவேண்டியது நான் உருவாக்கும் பண்பாட்டுப் புலத்தை, மெய்யியல் பரப்பை, என் புனைவுத் தரிசனங்களை.

இந்த சமகால அரசியல் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. அது எனக்கு எதையுமே தருவதில்லை, ஒரு நல்ல வாசகனைக்கூட கொண்டுவருவதில்லை.

இலக்கியம் அரசியல்சூழ்ச்சி அல்ல. அரசியல் நடவடிக்கைகூட அல்ல. அது செயல்படும் தளமே வேறு. நான் என் வாசகனுடன் உரையாடும் நுண்புள்ளியில் அரசியல் இல்லை. அடிப்படையில் அது வாசகனுக்கு அவனுடைய ஆழ்மனதை மொழிவழியாக காட்டும் ஒரு கலை. அந்த ஆழ்மனமே பண்பாடாக வரலாறாக விரிவதை காட்டும் ஓர் அறிவியக்கம்

நான் என் புனைவில் முன்வைக்கும் அறவியல் என்பது அரசியலினூடாக கண்டடைந்தது அல்ல, என் வாழ்க்கை வழியாக என் ஆன்மீகப் பயணம் வழியாக கண்டடைந்தது

அந்த அறவியலால் நான் தலித் போராட்டம் அனைத்துடனும் நிலைகொள்பவன். வெள்ளையானை வந்தபின் என் நண்பர்களில் மூன்றில் ஒருபங்கினர் விலகிச் சென்றனர். ஒருவரைக்கூட ஒருகணம்கூட நான் பொருட்படுத்தவில்லை. வெள்ளையானையில் என்ன இருக்கிறதோ அதுதான் கொற்றவையில், விஷ்ணுபுரத்தில், ரப்பரில் இருக்கிறது. அந்த அறவியலை உணர்ந்த வாசகன் எனக்குப்போதும்

இங்கே நான் தலித் மீதான தாக்குதலை முன்வைத்து நான் ஏதோ அரசியலை ஆடுவதாகச் சொல்லி இந்த சாதிச்சூழ்ச்சிக்காரர்கள் தப்ப முயல்கிறார்கள். எனக்கு அரசியல் இல்லை, அறவியல் மட்டுமே. அது எழுத பேனா எடுத்த கணம் முதல் இருந்துகொண்டிருப்பது. என்றும் அப்படித்தான். இலக்கியம் செயல்படும் களங்களை இந்த அரசியல்வாதிகளுக்கு  புரியாது.

பரபரப்புக்காகவா இதை முன்வைக்கிறேன்?  

இந்த கட்டுரையைச் சுட்டிக்காட்டி லட்சுமணன் என்னும் ஆய்வாளர் விரிவான மறுப்பு தெரிவித்துவிட்டார் என்றும் ஏ.பி.ராஜசேகரன் விரிவாக எழுதியிருக்கிறார் என்று இப்போதுதான் தெரியவந்தது.இக்கட்டுரை இந்த ஆண்டுகளில் தலித் சிந்தனையாளர்களால் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாடகக்காதல் என்ற கருத்தை நட்டவர்கள் ராஜன் குறை-எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குழுவினர் என்பதை தலித் ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாகச் சொல்லிவருகிறார்கள்.

ஆனால் அந்த எதிர்ப்புகளை தூசிபோல தட்டிவிட்டு மேலே சென்றார்கள். இன்று என் கட்டுரை வந்ததும்தான் பொருட்படுத்துகிறார்கள். எதையாவது சொல்லி சமாளிக்க முயல்கிறார்கள். அவர்களின் சகசாதிப் போராளிகள் ஆறுதலுடன் சூழ்ந்துகொள்கிறார்கள் .

என்னைவிட ஆய்வுத்தகுதி கொண்டவர்கள் சொன்னவை செவிகொள்ளப்படவே இல்லை. அந்த மறுப்பு எவரையும் சென்றடையவில்லை. இப்போது தெரிந்திருக்கும்,சூழலில் என் இடம். நான் ஏதோ பரபரப்புக்காக கருத்துச்சொல்கிறேன், கவனஈர்ப்புக்காக அலைகிறேன் என்று இக்கும்பலே சொல்கிறது.

நான் சொல்லும் கருத்துக்கள் அல்லது அதேநிலை கருத்துக்கள் இங்கே பலராலும் சொல்லப்படுபவை. அவற்றை புறக்கணிக்கமுடியும், என்னை புறக்கணிக்கமுடியாது. ஆகவேதான் நான் விவாதப்பொருளாகிறேன். நான் விவாதங்களை உருவாக்குவதே இல்லை, என் மீதான கவனம் விவாதங்களை உருவாக்குகிறது. நான் கருத்துக்களால் கவனம் பெறவில்லை, என் ஆளுமையால் இக்கருத்துக்கள் கவனம்பெறுகின்றன.

ராஜன் குறைக்கு ‘பதிலடி’ கொடுக்கிறேனா?

என் மேல் இந்தக்கவனம் ஏன் வருகிறது? அது என் புனைவிலக்கியம் வழியாக உருவாவது. எந்த இலக்கியச்சூழலிலும் புனைவிலக்கியவாதியின் இடம் முழுக் கமுழுக்க அந்தப்புனைவுகளால் உருவாக்கப்படுவது. அதை எந்த எதிர்மறை இயக்கமும் எதுவும் செய்துவிடமுடியாது.

பிரச்சாரம் செய்து, எதிர்த்து , அசட்டுக் கட்டுடைப்புகள் செய்து முத்திரைகுத்தி, இலக்கியத்தை ஒழித்துவிட முடியும் என்றால் இலக்கியம் என்பதற்கே பொருள் இல்லை. அதை இலக்கியப் படைப்புக்களை கருத்துநிலைபாடுகள், சதிவேலைகள் என்று நம்பும் இந்த கருத்துச்சதியாளர்களால் உணரமுடியாது. படைப்புக்குள் சென்று வாழ்ந்து அறியும் வாசகனுக்குரியது இலக்கியம்.

இவர்கள் உண்மையில் தங்களால் இலக்கியத்தில் ஏதையேனும் செய்ய முடியும் என்று நம்பினால் ஒருவரை படைப்பாளியாக முன்னிறுத்தி ஏற்கச்செய்யட்டும் பார்ப்போம். ஏற்புபெற்ற படைப்பாளிகள்மேல் ஒட்டுண்ணிகளாக அமரவே இவர்களால் இயலும்

ஆகவே ராஜன் குறை மட்டுமல்ல, அவரைப்போன்ற எவரும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்களை சிறு புன்னகையுடன் கடந்து செல்கிறேன்.

இந்த நாஸி ஆவணத் தயாரிப்பாளர்கள் பிறருக்கு ஃபாஸிச முத்திரை குத்திக்கொண்டே இருக்கிறார்கள். என் படைப்புக்களை வாசிப்பவன் அதை எவ்வகையிலேனும் பொருட்படுத்துவானா என்ன? வாசிக்காதவன் பற்றி எனக்கென்ன அக்கறை?

சரி, உண்மையிலேயே நான் ஃபாஸிஸ்டாக இருந்தேன் என்றால்கூட அது என் படைப்புகளை இல்லாமலாக்குமா? உலகில் ஃபாஸிஸ்டுகளாகவே செயல்பட்ட பெரும்கலைஞர்கள் இன்றும் அவர்களின் உச்சபீடங்களில்தான் இருக்கிறார்கள். வாக்னர், நீட்சே முதல் எஸ்ரா பவுண்ட் வரை. கலையின் இடமே வேறு.

நான் பொறுக்கியாக, வஞ்சகனாக, காமவெறியனாக எவனாக இருந்தாலும் என் எழுத்தில் ஆழ்மனம் வெளிப்பட்டிருந்தால் நான் கலைஞன், நான் இலக்கியத்தில் வாழ்வேன். ஆகவே இந்த கூச்சல்களுக்கெல்லாம் என்ன மதிப்பு என்று உலக இலக்கியம் கற்ற எனக்குத்தெரியாதா என்ன?

ஏனென்றால் இலக்கியப்படைப்பு ஒரு கருத்துநிலைபாடு அல்ல. அது ஒரு மொழிக்கனவுவெளி. அங்கே வாசகன் எழுத்தாளனுடன் இணைந்து உருவாக்கும் உலகில் அரசியல் போன்ற சில்லறைக் கருத்துக்களுக்கு மதிப்பே இல்லை.

புனைவு வாசகனின் உள்ளத்தில் உயிர்த்தெழக்கூடியது, அந்தரங்கமானது. அந்த உரையாடல் நிகழும் இடத்தில் இன்னொருவர் இல்லை. நுண்ணுணர்வுள்ள ஒரு வாசகன் என் ஒரு படைப்பை படித்தால்போதும், அவனுடன் நான் இருப்பேன்.

இந்த ஒவ்வொருவரும் வெறும் பெயராகக்கூட எஞ்சாத காலம் வரும்போதும் என் புனைவு நிலைகொள்ளும். நானே எண்ணாத வாசிப்புகள் அதன்மேல் எழும். நான் விதை, அவை என்னை கீறி எழும் மரங்கள். அந்த தன்னிலையுணர்வு இருக்கையில் இந்தக்கும்பல் எல்லாம் என்னைப் பொறுத்தவரை வெறும் சிறுபூச்சிகள். கொடுக்குகூட இல்லாதவை.

நான் இவற்றைச் சுட்டிக்காட்டுவது இங்கே என்ன நடக்கிறது, எச்சூழலில் இங்கே கருத்தியக்கம் முன்னால் கொண்டுசெல்லப்படுகிறது என்று சுட்டிக்காட்டுவதற்காக மட்டுமே. அதுவும் நான் சுட்டிக்காட்டினாலொழிய அது கவனிக்கப்படாது என்பதனாலேயே.

இந்தக் கழைக்கூத்தாடிகளின் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை வாசகர்கள் கவனிக்கவேண்டும். புனைவெழுத்தை அதன் அத்தனை வாசிப்புச் சாத்தியங்களையும் ரத்துசெய்து, ஒற்றைப்படையாக ஆக்கி, உறையவைத்து நிலையான அர்த்தத்தை அளிக்க முயல்கிறார்கள். அதற்காக ஏற்கனவே இவர்கள் கொண்டிருக்கும் கருத்துக்களுக்கு ஏற்ப அதை திரித்துச் சிறுமைசெய்கிறார்கள்.

ஆனால் தாங்கள் திட்டவட்டமாக எழுதி, பேரழிவுகளை உருவாக்கிய ஒரு கட்டுரைபற்றி கேள்விகேட்டால் அதற்கு பன்முக வாசிப்புத்தன்மையை அளிக்க முயல்கிறார்கள். அது ஏதோ வாசகனின் இஷ்டப்படி பொருள்கொள்ளவேண்டிய நுண்பிரதி என்று பாவலா காட்டுகிறார்கள். எத்தனைபெரிய கருத்துக்கயவர்கள்.

இவர்களை அச்சுறுத்துபவன் எதிர்த்தரப்பினன் அல்ல. அவனும் இவனைப்போன்றவனே என இவர்கள் அறிவார்கள். இவர்களை சிதறடிப்பவன் எதையும் எண்ணி அஞ்சாமல் கருத்துச்சொல்லும் புனைவெழுத்தாளன். அவனுடைய புனைவில் தன் ஆத்மாவைக் கண்டடைந்த வாசகனிடம் அவனால் உண்மையை கடத்திவிடமுடியும். அதை இவர்கள் தங்கள் வெட்டித்தர்க்கங்களால் வீழ்த்த முடியாது.

ஆகவே புனைவெழுத்தாளனின் எழுத்துசார் அடையாளத்தைச் சிதறடிக்க, அவன் எழுத்து அளிக்கும் வாசிப்புச் சாத்தியங்களைச் சிதைக்க முயல்கிறார்கள். விளைவாக ஒரு காலகட்டத்தின் இலக்கிய இயக்கத்திலேயெ பெரிய அழிவுகளை உருவாக்குகிறார்கள். அதனால் தொடக்கநிலை வாசகனுக்கு மட்டுமே இழப்பு. எழுத்தாளனை இவர்களால் தொடவே முடியாது.

புனைவெழுத்தாளன் புனைவின் முடிவில்லாத சாத்தியக்கூறுகளால் மட்டுமே நினைக்கப்படுகிறான். காலந்தோறும் பிறந்து பிறந்து வரும் வாசகன் புனைவில் தன்னுடைய வாழ்க்கையை, தன் ஆழ்மனதைக் கண்டடைந்துகொள்கிறான். அவன் ஒவ்வொருமுறை வாசிக்கையிலும் எழுத்தாளனை புதிதாக உருவாக்கிக் கொள்கிறான். திரும்பத்திரும்ப உயிர்த்தெழச்செய்கிறான்.

நான் என் எழுத்தைப்பற்றி நன்கறிவேன். நானல்ல எந்த எழுத்தாளனும் எழுதும்போது அந்நிலையைச் சென்றடைவான். அற்பர் அதை அகங்காரம் என்பார்கள். அசடர் ஃபாஸிஸம் என்பார்கள். அது அத்தனை எழுத்தாளர்களிடமும் உள்ள தன்னுணர்வு. ‘வாழையடி வாழையாக வந்துகொண்டிருப்பவர்களில் எவருக்காகவோ’ தான் எழுதுவதாகச் சொன்ன புதுமைப்பித்தனின் தருக்கு அது.

***

முந்தைய கட்டுரைஎரிமருள்,அருகே கடல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅய்யா வைகுண்டர் இதிகாசம்