இன்று குருபூர்ணிமை. வியாசன் முதல் நித்யா வரையிலான ஆசிரியர்களை நினைத்துக்கொள்ளும் நாள். வியாச பூர்ணிமை என மரபு சொல்கிறது. இன்று வியாசனின் காலடியில் அமர்ந்து தொடங்கிய ஒரு படைப்பை நிறைவுசெய்த உணர்வை அடைந்தேன்.
காலையில் லக்ஷ்மி மணிவண்ணன், ஷாகுல் ஹமீது, சுசீல் குமார் மூவரும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். மலர்களையும் முருகன் சிலை ஒன்றையும் நண்பர் காட்சன் சாமுவேல் பனையோலையில் உருவாக்கிய புத்தர் ஓவியம் ஒன்றையும் பரிசாக அளித்தனர். காலையுணவு அருந்தி பிரிந்தனர். இந்த தனிமை நாட்களில் நண்பர்களைச் சந்தித்தது நிறைவளிக்கும் அனுபவமாக இருந்தது.
பின்பு இந்திய வாசகர்களுக்கான காணொளிச் சந்திப்பு. மூன்றுமணிநேரத்திற்கு மேல். மாலையில் வெளிநாட்டு வாசகர்களுடன் காணொளிச் சந்திப்பு நான்கு மணிநேரம். மொத்தநாளுமே சந்திப்புகளால் நிறைந்தது. மொத்தமாக தொள்ளாயிரம் பேர் பங்குபெற்றனர். அனைவரும் இங்கே என் அறைக்குள்ளேயே நிறைந்து அமர்ந்திருந்ததைப் போல உணர்ந்தேன்.
சந்திப்பை ஒருங்கிணைத்த சந்தோஷ் [லாஓசி] அரங்கசாமி, ராஜகோபாலன் ஆகிய நண்பர்களுக்கும் பங்களித்த அனைவருக்கும் நன்றி. சந்திப்புகள் மொத்தம் ஏழரை மணிநேரத்திற்கும் மேல் நடைபெற்றன. நான் எவ்வகையிலும் களைப்பாக உணரவில்லை.
இந்நாளில் என் குருவின் இடத்தில் இருக்கும் இளையராஜா அவர்களின் வாழ்த்துக்கள் வந்தது நிறைவளிக்கிறது.
கேட்க மிகவும் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தீர்கள் எல்லாம் நல்ல வண்ணம் நிறைவேற இறையருள் துணை நிற்குமாக. வாழ்த்தும்போது மனம் நிறைகிறது – இளையராஜா.
இதை முடித்துவிட்டதை மணிரத்னம், கமல்ஹாசன் ஆகியோருக்குச் சொன்னபோது அவர்களின் வாழ்த்துக்களையும் பெற்றேன். பவா, சுகா, வசந்தபாலன் என என் நண்பர்களின் வாழ்த்தும் நிறைவூட்டுவது. அணுக்கமாக உணரும் நண்பர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தற்செயலாக இருக்கலாம் இன்று சுவாமித்தோப்பு பாலபிரஜாபதி அடிகளாரும் அழைத்து பொதுவாக வாழ்த்து தெரிவித்தார். ஒவ்வொன்றும் ஒரு நிறைவூட்டும் பரிசு.
சந்திப்பு முடிந்தபின் சைதன்யா, அஜிதன், அருண்மொழியுடன் மொட்டைமாடியில் அமர்ந்து நிலவைப்பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த நிலவு அரிதானது, நினைவில் நீடுவாழ்வது.
நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இந்நாளில் நித்ய சைதன்ய யதியின் ஆசிகள் அமையட்டும் என வாழ்த்துகிறேன்.