ராஜன் குறை என்பவர் யார்?
‘திராவிட மனு’
திராவிட மனு- இரு எதிர்வினைகள்
முகநூலில் இருந்து என் பார்வைக்கு வந்த மூன்று குறிப்புகளை எடுத்து அளிக்கிறேன் இக்குறிப்புகளை நான் அளிப்பதற்குக் காரணம் ஒன்றே. இத்தகைய அப்பட்டமான நாஸி ஆவணம் வெளியாகி, தலித்மக்களின் எதிர்காலத்தின்மீதே நிழலாகக் கவிந்த பின்னரும்கூட, அது இத்தனை அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்ட பின்னரும் கூட, இங்குள்ள கணிசமான ‘அறிவுஜீவிகள்’ தங்கள் இடைநிலைச்சாதி மனநிலையையே வெளிப்படுத்துகிறார்கள். இந்த ஆவணத்தை அப்படியே கடந்துசெல்கிறார்கள். ஒரு சிறு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. ஒரு சிறு வருத்தம்கூட இல்லை.
அதற்கு அவர்கள் சில பாவனைகளை மேற்கொள்கிறார்கள். ஒன்று, இது முழுக்கமுழுக்க நான் உருவாக்கும் ஒரு ‘வம்பு’ என்றும் ராஜன் குறைக்கும் எனக்கும் இடையேயான ஒரு சண்டை இது என்றும் நிலைபாடு எடுக்கிறார்கள். ‘இதற்கு ராஜன்குறை பதில்சொல்வார், ஆனால்…’ கடந்துசெல்கிறார்கள்.
இரண்டு, இருபதாண்டுக்காலம் முன்பு எழுதப்பட்ட கட்டுரை ஏன் இப்போது ஜெயமோகனால் சுட்டிக்காட்டப்படுகிறது, அதன் அரசியல் என்ன என்று ஒரு கேள்வியுடன் நிலைகொள்கிறார்கள்.
மூன்று, இந்தக்கட்டுரையில் தலித்துக்களின் அவலநிலை எப்படி உருவாகிறது என்றுதான் சொல்லப்பட்டுள்ளது, ஆய்வுக்கட்டுரையை வாசிக்க அறிவில்லாதவர்கள் சொல்வது இது என்கிறார்கள்.
நான்கு, அக்கட்டுரையை எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதவில்லை, அதில் மார்க்ஸிய ஆய்வுமுறை இருக்கிறது என்றெல்லாம் பல ஊடுவாதங்களை முன்வைக்கிறார்கள்.
ஆனால் மறந்தும்கூட இந்த கட்டுரையை அவர்கள் நிராகரிக்கவில்லை. அதிலிருந்து விலக்கிக்கொள்ளவில்லை. ராஜன் குறையை குற்றம் சாட்டவில்லை. அவரை பாதுகாக்க திரண்டு நிற்கிறார்கள்.
ஏனென்றால் இக்கட்டுரையின் உள்ளடக்கமான தலித்வெறுப்பே இவர்களின் உண்மையான நம்பிக்கை. தங்களுக்குள் இவர்கள் பேசிக்கொள்ளும் மதிப்பீடு அதுதான். அதை உருவாக்கி அளித்ததால்தான் ராஜன் குறையையும் ஜெயரஞ்சனையும் தூக்கி வைத்துக்கொள்கிறார்கள்.
ராஜன் குறையை பொறுத்தவரை இக்கட்டுரையை ‘எப்படி வாசிக்கவேண்டும்’ என்று வகுப்பெடுப்பாரே ஒழிய இதை அவர் கடந்துவந்துவிட்டதாகக் கூட சொல்லமாட்டார். ஏனென்றால் இடைநிலைச் சாதியின் ஆதரவை இக்கட்டுரை வழியாகவே அவர் திரட்டிக்கொண்டிருக்கிறார்.
அ. இக்கட்டுரையை ‘திடீரென’ நான் கொண்டுவரவில்லை. ஏற்கனவே டி.தர்மராஜ், லட்சுமணன், ஏ.பி.ராஜசேகரன் என பலர் சுட்டிக்காட்டி கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள் என அறிகிறேன். தொடர்ச்சியாக அவர்களால் இக்கட்டுரையால் தலித்துக்களுக்கு உருவாக்கிய அழிவு சுட்டிக்காட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த அழிவு பெருகிக்கொண்டே செல்லச் செல்ல மேலும் மேலும் இக்கட்டுரையை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பின்போதுகூட இக்கட்டுரை உருவாக்கிய மனநிலை பற்றி தலித் ஆய்வாளர்கள் கொதிப்புடன் பேசியிருக்கிறார்கள். இக்கட்டுரை நம் சூழலில் நாடகக்காதல் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி நிறுவியது என்பது நான் சொல்வது அல்ல, முதன்மை ஆய்வாளர்களால் சொல்லப்பட்டது. ராஜன் குறை கூட்டணி அதை பொருட்படுத்தவேயில்லை.
ஆ.இக்கட்டுரையின் அழிவுத்தன்மையைச் சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பவர்கள் ராஜன் குறையை விட தகுதியான முதன்மையான ஆய்வாளர்கள். டி.தர்மராஜ் தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வாளர். இவர்களைப்போல பல்கலைக் கழக தொடர்புகள், என்.ஜி.ஓ நிதிக்கொடைகள் ஆகியவற்றின் வழியாக ஊடகச் செல்வாக்கு கொண்டவர் அல்ல, அவ்வளவுதான்.
இ. எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் மனைவி ஆனந்தி இதன் ஆசிரியை. எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் மின்னஞ்சலில் வெளிவந்தது. அவருக்கு வழிகாட்டுறுத்தலுக்காக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, ராஜன் குறையே இதை அவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியனுக்காக செய்தார் என என்னிடம் சொல்லியிருக்கிறார்.
ஈ. ‘ஜெயமோகன் இதை முன்வைப்பதனால் நான் சந்தேகப்படுகிறேன்’ என்று சொல்பவர்கள் இதையே முதன்மை ஆய்வாளர்கள் ஏற்கனவே பத்தாண்டுகளாகச் சுட்டிக்காட்டியபோது என்ன செய்தீர்கள் என்று எண்ணிப்பாருங்கள்.
உ. இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை நீங்கள் ஏற்கிறீர்களா இல்லையா என்பது மட்டும்தான் கேள்வி. இத்தகைய இழிவான மனுநீதி ஒன்று வகுக்கப்பட்டு தலித்துக்கள் மேல் சுமத்தப்பட்டதை ஆதரித்தபின் நீங்கள் பேசும் சமூகநீதிக்கெல்லாம் என்ன அர்த்தம்? நண்பகளே எந்த சமாளிப்பும் செல்லாது, இந்த நாஸிஸ கட்டுரையை நீங்கள் உண்மையில் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில் இருக்கிறது உங்கள் நேர்மையும், மனசாட்சியும்.
ஊ. நான் இப்போது இதை முன்வைப்பது ஏன்? இந்த வாட்ஸப் குறிப்புகள் என் கைக்கு வந்தது எப்படி என்றால் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு வழக்கு குறித்த செய்திகளை தேடி நீதித்துறை சார்ந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீதிமன்றச் சூழலில் இக்குறிப்புகள், இக்கட்டுரையின் சாராம்சம், மறைமுகமாகச் செலுத்திய செல்வாக்கைப் பற்றிச் சொன்னார்கள். அவர்களிடமிருந்தே இதைப்பெற்றேன். விசாரித்தபோது ஆணவக்கொலை சார்ந்து நிகழும் ஒரு கேரள வழக்கிலும் இந்த கட்டுரை மறைமுகச் செல்வாக்காக செயல்படுகிறது என்றனர்.
என்னிடம் பேசியவர் இதை அறிஞர்கள் களஆய்வில் கண்டுபிடித்த அப்பழுக்கற்ற ஆய்வுண்மை என நம்பி, தன் தரப்பை நிரூபிக்கும் ஆதாரமாகத்தான் அனுப்பினார். எனக்குத்தான் திகைப்பாக இருந்தது. இப்படி ஒரு நாஸி ஆவணம் உருவாக்கப்பட்டு, இப்படி பேரழிவை உருவாக்கிக் கொண்டிருக்கையில் அதை இத்தனை எளிதாக தமிழ்ச்சூழல் கடந்துசெல்கிறது என்பது திகைப்பூட்டியது.
இதை பதிவுசெய்வோம், இது தன் கவனத்திற்கு வரவில்லை என்று எவரும் சொல்லவேண்டியதில்லை என்று நினைத்தே இதை முன்வைத்தேன். இதை இங்கே தலித் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்திருக்கிறார்கள், உடுமலை சங்கர் தீர்ப்பை ஒட்டிக்கூட இது பேசப்பட்டிருக்கிறது என்று அப்போது தெரியாது.
இக்குறிப்புகளை இங்கே அளிப்பது என்னவகையான எதிர்வினையை இங்கே அது உருவாக்கியிருக்கிறது என்பதை காட்டுவதற்காக.
முகநூலில் ஏ.பி.ராஜசேகரன் AB Rajasekaran
முகநூலில் முதன்முறையாக அக்.2018ல் ஆனந்தி, ராஜன் குறை, ஜெயரஞ்சன் கட்டுரையை பகிர்ந்திருந்தேன். அதற்கு பிறகு இரண்டு முறை பகிர்ந்தேன். நாமெல்லாம் ஒன்னு தெரியாதவன் வாயில மண்ணு போராளிகள் ஒருவர் கூட அந்த கட்டுரையை அன்று கண்டிக்கவில்லை. இன்று ஜெயமோகன் பகிர்ந்தவுடன் ஜெயமோகனை விளாசுகிறார்களே ஒழிய இப்போதும் அந்த கட்டுரை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
எவ்வளவு சப்பைக்கட்டுகள்? ஆச்சரியமாக இருக்கிறது நம் போலி முற்போக்காளர்களை நினைத்தால். அவ்வளவு creativity. 20 வருடம் கழித்து அந்த கட்டுரையை பற்றி பேச வேண்டிய அவசியமென்ன, அதில் எம்.எஸ்.எஸ். பாண்டியன் பெயர் இல்லையே, அவர்கள் சிறு வயதில் எழுதினார்கள் இப்போது திருந்திவிட்டார்கள், அந்த கட்டுரையை படித்து புரிந்துகொள்ளும் அளவிற்கு தலித்துகளுக்கு அறிவில்லை, ராஜன் குறை யார் தெரியுமா?, அவர் சினிமா பற்றி என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?, இந்த கட்டுரை பற்றி இப்போது பேசுவது ஒரு ப்ரோஜெக்ட், காசு வாங்கிகொண்டு எழுதுகிறார்கள்… இந்த லிஸ்ட்ட முடிக்கவே ஒரு டைப்பிஸ்ட்ட வேலைக்கு வைக்க வேண்டும். இப்படி முட்டுக்கொடுக்கும் ஒருவராவது அந்த கட்டுரையை பெயரளவிற்காவது கண்டித்திருக்கிறாரா என்று பார்த்தால் ஏமாற்றமே.
அவர்களுக்கு கட்டுரை ஏன் எந்த அதிர்ச்சியும் ஏற்படுத்தவில்லை என்றால் அவர்கள் தலித்துகளை பற்றி நினைப்பதையே கட்டுரையாளர்கள் அழகாக எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள் போலும்.
முகநூலில் எழுத்தாளர் வாசுகி பாஸ்கர்
எழுத்தாளர் ஜெயமோகன் தனது பிளாக்கில் ராஜன்குறை குறித்த கேள்வியொன்றுக்கு நேற்று பதிலளித்திருந்தார், அதன் பிற்பாதியில் ராஜன்குறை 2002 ஆம் ஆண்டு EPW இதழுக்கு எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டியிருக்கிறார். இவ்விவகாரத்திற்குள் போகும் முன் சிலவற்றை தெளிவுப்படுத்த வேண்டிய அவசியமிருக்கிறது. ஜெயமோகன் குறிப்பிடுவதைப் போல அந்தக் கட்டுரையை ராஜன்குறையோடு MSS பாண்டியன் இணைந்து எழுதவில்லை, ராஜன்குறை, ஆனந்தி மற்றும் ஜெயரஞ்சன் எழுதிய கட்டுரை அது. MSS பாண்டியன் புரவலராக இருந்திருக்கலாம், உதவியிருக்கலாம், அவர் மனைவி S.ஆனந்தியும் எழுதியிருப்பதால் பாண்டியனின் இ-மெயிலில் இருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. இதைத் தாண்டி பாண்டியனுக்கும் கட்டுரைக்கும் எந்த தொடர்புமில்லை. ஜெயமோகன் பதிவில் இத்தகவல் பிழைகளோடு ராஜன்குறைக்கு பதிலடி கொடுப்பதற்கான அவசரமிருப்பதை உணர முடியும். அது அவர்களது தனிப்பட்ட பிரச்சனை விஷயம் அதுவல்ல.
2002 ஆம் ஆண்டு திராவிட அறிவுஜீவி ராஜன்குறை, S.ஆனந்தி, பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் ஆகிய மூவரும் இணைந்து எழுதிய அந்தக் கட்டுரை தற்போது பரவலாக படிக்கக் கிடைக்கிறது, இப்பதிவு அக்கட்டுரை குறித்ததல்ல என்பதால் அதன் சாராம்சத்தை சுருக்கமாக சொல்லி விடுகிறேன். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை ஆய்வுப்பகுதியாக கொண்டு Work , Caste and Competing Masculinities என்கிற கட்டுரையில் அது எழுதப்பட்ட காலத்திலிருந்து பத்து வருடம் கழித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தலித் இளைஞர்களை நோக்கி நாடக காதல் உள்ளிட்ட என்னென்ன குற்றச்சாட்டை வைத்தாரோ அதே கருத்தை தான் மூன்று அறிவுஜீவிகளும் சேர்ந்து ஆங்கிலத்தில் எழுதியிருந்தனர்.
- இடைநிலைச் சமூகப் பெண்கள் படிக்காமலிருப்பதற்கும் படிப்பைத் தொடர முடியாமலிருப்பதற்கும் காரணம் தலித் இளைஞர்கள்.
2. தலித் இளைஞர்கள் எந்த வேலைக்கும் செல்வதில்லை காரணம் பணிபுரிகிற கம்பெனிகளில் திருடுகிறார்கள்.
3. மேல்சாதி பெண்களை நாகரீக உடை உடுத்தி காதலில் வீழுத்துவதை குறிக்கோளாகவும் போட்டியாகவும் கொண்டிருக்கின்றனர்.
இவையெல்லாம் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பவை, இது எழுதப்பட்ட காலத்திலிருந்து தலித் தரப்பில் வெவ்வேறு காலச் சூழல்களில் பதிலடி கொடுக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது, நேற்று ஜெயமோகன் தொட்டுக்காட்டிய பிறகு இக்கட்டுரைக்கான விளக்கத்தை பின்னொரு நாள் தருவதாக ஒரு வரியில் கடந்து இது ஜெயமோகனின் தனிப்பட்ட தாக்குதல் என்று முழுப்பதிவை அலங்கரித்திருக்கிறார் ராஜன்குறை. தலித் இளைஞர்களுக்கு எதிராக புனையப்பட்ட வன்மத்திற்கு அவர் கொடுக்கப்போகும் விளக்கம் ஒருபுறமிருக்க ஆச்சரியப்படத் தக்கவர்கள் தமிழக முற்போக்காளர்களும் இலக்கியவாதிகளும் தாம். ராஜன்குறையின் கட்டுரையை இலகுவாக கடந்து இதை ராஜன்குறை vs ஜெயமோகன் என்று நபர் பிரச்சனையாக குறுக்கி, ராஜன்குறை பக்கமிருப்பதை அறமாக கடந்து போகிறார்கள். கட்டுரையைப் பற்றி மூச்சு பேச்சில்லை. முற்போக்கு அரசியல் தளத்திலும் எண்ணற்ற இலக்கிய எதிரிகளையும் உருவாக்கி வைத்திருக்கும் ஜெயமோகனின் எதிரிகள் தங்களது பழைய பகையை தீர்த்துக் கொள்வதற்கான போட்டியில் கிடப்பில் போடப்பட்டது என்னவோ தலித் சமூகத்தை பற்றியான திராவிட அறிவுஜீவிகளின் சித்தரிப்பு தான்.
வெவ்வேறு காலச் சூழலில் தலித் தரப்பு இதை சுட்டிக்காட்டிய போதெல்லாம் மௌனத்தோடு கருத்தேதும் இல்லாமல் கடந்தவர்கள் ஜெயமோகன் சுட்டிக்காட்டியதும் அணித் திரள்வதை பார்க்கையில் இது நபர் சம்மந்தப்பட்டதாகவும், கருத்திற்கோ கோட்பாட்டிற்கோ இங்கே இடமில்லை என்பது ஊர்ஜிதமாகிறது. ராஜன்குறையை குற்றஞ்சொல்லவோ அல்லது தலித் தரப்புக்கு ஆதரவாகவோ எழுத ஜெயமோகன் தகுதி இழப்பவராகட்டும் ஆனால் எல்லா விதமான தகுதிகளுடையவர்கள் ஏன் இத்தனை ஆண்டுக் காலம் மௌனம் சாதித்தார்கள்? சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்? இந்தக் கட்டுரை குறித்த அவர்களது மதிப்பீடு என்ன? இப்போதும் கூட ஜெயமோகன் இதை குறிப்பிடாமல் ஒரு தலித் குறிப்பிட்டு எழுதியிருந்தால் அதே மௌனத்தோடு கடப்பார்கள், இம் மனநிலை நமக்குணர்த்துவது ஒன்று தான். ஜெயமோகனை இவர்களெல்லாம் வெளிப்பார்வைக்கு எதிர்த்து வந்தாலும் ஜெயமோகன் ஒரு விமர்சனத்தை முன் வைக்கும் போது அதற்கொரு பொது அடையாளம் கிடைக்குமென்கிற பதட்டமிருக்கிறது, ஜெயமோகனுக்கு அந்த திராவிட அந்தஸ்த்து அவரது எதிரிகளாலவே கொடுக்கப்படுகிறது. ஜெயமோகன் இவர்களுக்கு தேவைப்படுகிறார், ஜெயமோகனின் பின்னால் மொத்தத்தையும் ஒளித்துக் கொள்ள அந்த பிம்பம் பெருந்துணை புரிகிறது.
சமூக மற்றும் பொருளாதார விடுதலையை நோக்கிய வஞ்சிக்கப்பட்ட பெருஞ்சமூகத்தின் தலைமுறை இளைஞர்களை வன்மத்தின் உயரந்தொட்டு சித்தரித்து கட்டுரை எழுதியவர், அதற்கான விமர்சனத்தை எதிர்கொள்ளும் போது பழகியமைக்காக மொத்த விவாதத்திலிருந்து விலகிக் கடப்பதும் கூட ஒரு வகையில் ஆதரவு தான், ஆனால் இங்கு ஜெயமோகன் கேள்விக்குள்ளாவதிலிருந்து ராஜன்குறை தப்பிப்பதோடு அவரோடு அவரெழுதிய கட்டுரையும் தப்பிப் பிழைக்கிறது. ஜெயமோகனின் நோக்கத்தை விரல் நீட்டி அடையாளம் காட்டும் ஒருவர் கூட ராஜன்குறை, ஆனந்தி, ஜெயரஞ்சன் அவர்களது நோக்கத்தை கேள்வி கேட்பதற்கில்லை, எந்தச் சூழலிலும் கேட்கத் துணியாதவர்கள். சாதிச் சங்கத்தில் கலக்கலாம், நிர்மலா சீத்தாராமனுக்கு கவி பாடலாம், தலித் இளைஞர்களை ஆணாதிக்க குண்டர்கள் எனலாம், எல்லா விதமான சலுகைகளும் இங்குண்டு, ஆனால் அவர்கள் ஏதோவொரு வகையில் திராவிட அதிகாரத்திற்கு துணைப் போகிறவர்களாக இருக்க வேண்டும், முற்போக்கு முத்திரை நிரந்தரம்.
பசியும் பட்டினியும் வெவ்வேறு என்பதை போல தலித்தல்லாத ஒருவர் இக்கட்டுரையை படிக்கிற போது தம்மை அதிலிருந்து விலக்கிப் பார்ப்பதே யதார்த்தம், அந்த யதார்த்தத்திலிருந்து மீறி அதை உணர முயற்சிக்க திறந்த மனதோடு ஒரு உரையாடலுக்குத் தயாராக வேண்டும், உள்ளதை உள்ளபடி இரண்டு பக்கமும் படித்து நேர்மையான ஒரு முடிவுக்கு வர வேண்டும், அது ஜனநாயகத்தின் முதற்படி, ஆனால் முற்போக்குப் போர்வையில் தன் யதார்த்தத்தை மறைத்து ஏமாற்றிக்கொள்ளும் பாசாங்கு தமிழகத்தின் சமூகநீதி அம்சங்களில் ஒன்று.
ஒவ்வொரு தலித்தும் அரசியல் தெளிவு பிறக்கும் போது பல்வேறு கால சூழல்களில் விவாதத்திற்கு உள்ளானதைப்போல இக்கட்டுரை மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகும், ராமதாஸ் பேசப்படுவார், திராவிட இயக்க போதாமைகள் அலசப்படும், இளவரசன் நினைவில் வருவான், போதாமைகளை ஒப்புக்கொண்டு எதிர்கால மாற்றத்திற்கான கை குலுக்கலில் இருக்கிறது நம்பிக்கை, ஆனால் அது என் தலைமுறையில் நடக்கப்போவதில்லை, அடுத்த தலைமுறைக்காவது ஒரு சிறு கண்டனத்தை பதிவு செய்து விட்டு உரையாடுவார்களா பார்ப்போம், ஜெயமோகன் விலகலாக ஒரே ஒரு விளக்கக்கட்டுரை, பொறுத்திருப்போம்.
முகநூலில் ராவணன் அம்பேத்கர்
கொண்ட காதலுக்காக கொல்லப்பட்ட இளவரசனின் நினைவுநாளில் அவன் ஏன் கொல்லப்பட்டான் என்பதையும் நாம் நினைவுகூற வேண்டியுள்ளது. ஆனந்தி, ராஜன்குறை, நமது மீடியாக்களின் டார்லிங் ஜெயரஞ்சன் ஆகியோர் கூடி வாசிங்கடன் சூத்திரர்களில் வழி பணம் பெற்று திராவிட அறிஞர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் ஈ.பீ.டபிள்யுவில் எழுதிய இந்த ஆய்வறிக்கைதான் முதன் முதலில் தமிழகச் சூழலில் நாடகக் காதல் எனும் கருத்தாக்கத்தை விதைத்தது.
மாறி வரும் சமூக பொருளாதாரச் சூழலில் தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட்டும் கூலிங் கிளாசும் போட்டுக் கொண்டு உயர் சாதிப் பெண்களை காதலித்து தம் ஆண்மையை நிரூபிக்க கிளம்பியுள்ளார்கள் எனும் நச்சுக் கருத்தை பரப்பியது. பின்னர் அது ராமதாஸ் போன்ற சூத்திர சாதியினரால் தமது சமூக அரசியல் பலத்தை பெருக்கிக் கொள்ளவும் தலித் மக்கள் மீது வன்முறையை கட்டவீழ்த்து விடவும் வழிகோலியது.
ஏதோ ஒர் கிராமத்துக்கு சென்று சிலரிடம் பேசி சரக்கடித்துவிட்டு விட்டு அவர்கள் அரசல் புரசலாக புறணி பேசும் பேச்சுகளையே ஏதோ சர்வதேச ஆய்வாக நிறுவியிருக்கார்கள். உதாரணத்துக்கு பக்கம் 4401ல் பாருங்கள். பஸ் ஸ்டாண்டில் நிற்கும் ஒரு தலித் இளைஞன் மற்றொருவனிடம் பஸ்சில் அமர்ந்திருக்கும் பெண்ணை ‘கலாய்ச்சு அனுப்பு’ என்கிறானாம். இது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் இதன் அர்த்தம் வட தமிழகத்தில் வாழும் சாதாரண சிறுவனுக்கு கூட ‘கிண்டல் செய்து அனுப்பு’ என்று தெரியும். ஆனால் இந்த தில்லி அறிஞர்கள் அதை கலைச்சு அனுப்பு என்பதாக திருத்தி வன்மமாக ‘send her dishelved’ என்று முழிப்பெயர்க்கிறார்கள். அதாவது கிட்டத்தட்ட திரவுபதியை துகில் உரியும் துரியோதனன்/துச்சாதனன் அளவுக்கு தலித் இளைஞர்களை மட்டமாக்குகிறார்கள். இதுதான் இந்த திராவிட ஆய்வறிஞர்களின் அறிவு நாணயம்.
இப்படி இவர்கள் எழுதி தள்ளியதைத்தான் தமிழக சூத்திர பொதுமனம் உள்வாங்கி இன்றளவும் தலித் இளைஞர்களையும் மக்களையும் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.
அப்புறம் சில அப்ரசண்டிகள் இருக்கிறார்கள். இந்த திருட்டு திராவிடர்களை நாம் அம்பலப்படுத்தினால் அதை பெரியாருக்கு எதிராக திசை திருப்பி ஒப்பாரி வைப்பதற்கென்றே. அவர்களுக்கு மனசாட்சி அறிவு என்று ஏதாவது மிச்சம் இருந்தால் இந்த சோ கால்ட் ஆய்வறிக்கையை முழுதும் படித்து விட்டு தங்களை சீர் செய்து கொள்ளட்டும் இல்லையென்றால் சீக்கெடட்டும். நாம் நமது வேலையை செய்வோம்.
[முகநூலில்]
***