கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
பத்துலட்சம் காலடிகள், அன்னம், தீவண்டி வரை இந்தக்கதைகளில் வரும் எல்லா இஸ்லாமியக் கதாபாத்திரங்களும் கருணை கொண்டவர்கள், அறச்சார்பு கொண்டவர்கள். ‘மதச்சார்பின்மை’ பாவலாவுக்காக நீங்கள் இப்படி எழுதுவதாகச் சொன்னால் மறுப்பீர்ர்களா? [நண்பன் சொன்னான் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை]
ஸ்ரீதர்
***
அன்புள்ள ஸ்ரீதர்
எப்படிச் சொன்னாலும் எந்த பிரச்சினையும் இல்லை.இடதும் வலதும் இத்தனை ‘சொன்ன’ பிறகும் ஓர் எழுத்தாளன் வாசிக்கப்படுகிறான் என்றால் அதன்பின் அவன் எதைப்பற்றி கவலைப்படவேண்டும்?
நான் இஸ்லாமியர்களுடன் பழகியது என் வடகேரள வாழ்க்கையின்போது மட்டுமே. அங்கே கண்ட ஆளுமைகளே எழுதப்படுகிறார்கள். அவை இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் அல்ல, மாப்பிளாக் கதாபாத்திரங்கள். நான் பழகியவரை அவர்கள் அபாரமான மனிதாபிமானமும் தோழமையும் கொண்ட மாமனிதர்கள். அவர்கள் மட்டுமே நினைவில் நிற்கிறார்கள். இக்கதைகள் ஒருவகை புகழஞ்சலிகள்.
மாப்பிளாக்களின் இந்த குணாதிசயம் பற்றி பலரும் பொதுவாக பதிவுசெய்திருக்கிறார்கள். நான் நேரிடையாக அறிந்த கடைசியான உதாரணம் கொச்சின் ஹனீஃபா. [வி.எம்.சி.ஹனீஃபா] அவர்கள். ஹனீஃபாக்கா தன்னலம் என்பதையே அறியாத, அன்பு மட்டுமே கொண்ட மாமனிதர். என்பும் உரியர் பிறர்க்கு என்ற சொல்லை சில மனிதர்களில் அவ்வப்போது காண்கிறோம்.
சிலதருணங்களில் எழுத்தாளன் அடிபணிந்துவிடவேண்டும். தன்னகங்காரமும் பிற கணக்குகளும் அங்கே மறைந்துவிடவேண்டும். சரி, அதற்கு ஒரு வயதும் கனிவும் வரவேண்டும். உங்களுக்கு வயதிருக்கிறது
ஜெ
***
அன்புள்ள ஜெ
அன்னம் கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். இன்னொரு கெத்தேல் சாகிப் கதை. அதனாலென்ன என்ற வரி என்னை நெகிழச்செய்தது. யாரோ பேசுவது அல்ல மனிதர்கள் பேசுவது என்று கறுத்தசாகிப் அந்த பேச்சொலிகளைக் கேட்கிறார். தேவதேவனின் யாரோ ஒருவர் என்று எப்படிச் சொல்வேன் கவிதைதான் நினைவுக்கு வந்தது
சேவியர்
யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்?
தேவதேவன்
குப்பைத்தொட்டியோரம்
குடித்துவிட்டு விழுந்துகிடப்போனை
வீடற்று நாடற்று
வேறெந்தப் பாதுகாப்புமற்று
புழுதி படிந்த நடைபாதையில்
பூட்டு தொங்கும் கடை ஒட்டிப்
படுத்துத் துயில்வோனை
நள்ளிரவில் அரசு மருத்துவமனை நோக்கிக்
கைக்குழந்தை குலுங்க அழுதுகொண்டு ஓடும் பெண்ணை
நடைபாதைப் புழுதியில் அம்மணமாய்
கைத்தலையணையும் அட்டணக்காலுமாய்
வானம் வெறித்துப் படுத்திருக்கும் பைத்தியக்காரனை
எதனையும் கவனிக்க முடியாத வேகத்தில்
வாகனாதிகளில் விரைவோனை
காக்கிச் சட்டை துப்பாக்கிகளால் கைவிலங்குடன்
அழைத்துச் செல்லப்படும் ஒற்றைக் கைதியை….
கதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]
அன்புள்ள ஜெ
நலமாக இருக்கிறீர்களா?
அமுதம் கதையை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். எழுத எண்ணி பலகடிதங்களை தொகுப்பேன். ஆனால் என்னால் என் உணர்வுகளைச் சொல்லிவிடமுடியாது என்ற எண்ணம் வந்தால் எழுதமுடியாமலாகிவிடும். இப்போதும் அப்படித்தான். ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவிலுள்ள மிகமுக்கியமான சிக்கல் பெண் அம்மாவாகவும் மனைவியாகவும் இரண்டு ரோல்களை ஆற்றுகிறாள் என்பதுதான். அவளுடைய இமேஜ் இந்த இரண்டுக்கும் நடுவே உள்ளது. அம்மாவாக அவளை வழிபடுபவன் மனைவியாக அவளை அடக்க நினைக்கிறான். முலைகளின் இடமும் இங்கே இரண்டுவகைதான். அம்மாவின் முலை அமுதம். மனைவியின் முலை காமம். இரண்டு நிலைகளிலும் தன்னலம் சார்ந்து ஆண் முடிவெடுக்கிறான். தேவையானபோது பயன்படுத்திவிட்டு தூக்கிவீசிவிடுகிறான்.
எஸ்.
***
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம் நலம்தானே
அமுதம் சிறுகதை படித்தேன். பசு என்பது தெய்வத்தின் குறியீடு. கோமாதா என்று வணங்கும் வழக்கம் உண்டு. புதுமனை புகுவிழாவில் முதலில் பசுவை இல்லத்துள் நுழைய விடுவது நம் மரபு. இன்றைக்கும் வெள்ளிதோறும் பசுவைக் கும்பிட்டுப் பூசை செய்யும் பழக்கம் இருந்து வருகிறது.
அம்மச்சிப்பசு இயல்புக்கு மாறாகப் புலால் உண்கிறது. அது துர்த்தேவதையின் குறியீடு. பசுக்களையே அதிகம் வளர்க்காத, பால்சுவையே அறியாத ஒரு தலைமுறையை பார்வதி மாற்றுகிறார். ஆனால் வந்து சேரும் பசுவோ மிகப்பெரிய தோற்றத்துடன் அரிய செயல்கள் பலவற்றைச் செய்கிறது.
அவை நம்பும்படியாக இல்லை. ஆனால் விசுவரூபத் தோற்றத்துடன் அரிய செயல்கள் செய்வதுதானே தெய்வத்தின் இயல்பைக் குறிக்கும். வாங்கக் குடல் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் ஒரு யுகத்தில் இருந்தன. அப்பொழுது ஆயர்பாடியில் அது தெய்வம். ஆனால் இங்கோ யாரோ குறி சொன்னார்கள் என்று அம்மச்சியைக் காட்டில் விடப்போகிறார்கள்.
இடையில் அதைச் சுற்றிலும் நெருப்புமூட்டி வதை செய்கிறார்கள். அக்கிராமத்து மக்களின் மீது அது காட்டிய அன்பே பாலை அமுதமாக அளவின்றித் தரச் செய்தது. தன்னை அழைத்துச் செல்லும்போதும் நெருப்பிடும்போதும் அது நினைத்திருந்தால் அனைவரையும் கொன்று தின்றிருக்கலாம். இன்னா செய்தார்க்கும் இனியவே டுதக்கால் என்பது போல மக்களின் வாழ்வு இனி நலம்பெறட்டும், தான் எரி புகுந்தாலும் பரவாயில்லை என அது உயிர் விடுகிறது.
அதன் பின்தான் மக்கள் அமுதத்தைச் சுவைக்கத் தொடங்குகிறார்கள்.
வளவ. துரையன்
***