மலைவிளிம்பில்,அமுதம்- கடிதங்கள்

கதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஏதோ ஒரு வரியில் உணர்வெழுச்சி உச்சமடைய படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வீசிவிட்டு எழுந்துபோனது அரிதாக நிகழ்ந்திருக்கிறது. அமுதம் படித்தபோது ‘உடலெங்கும் தீ எழுந்து சதை உருகும்போதுகூட குரலெழுப்பி ஒரு சொல் சாபமிடாமல் நின்றது’ என்ற வரியைக் கடக்க இயலாது கைப்பேசியை வீசிவிட்டு விம்மலுடன் வீட்டினுள் சுற்றி நிலை மீண்டேன். காலைதான் பொறையுடைமை அதிகாரத்தின் வாசிப்பை நிறைவு செய்திருந்தேன். 50 ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் வழங்கப்பட்ட அமெரிக்க பால் பவுடர் பால், வெண்மைப் புரட்சி, மதிய உணவு, ஏசுவின் இறுதிச் சொற்கள் என எங்கெங்கொ அலைந்து கொண்டிருக்கிறது மனம். மேலும் அலையும். ஆனால், ‘அமிர்தலட்சுமி காய்ந்து நின்ற இஞ்சிப்புல் மேட்டில் புகையும் செஞ்சுடருமாக சூழ்ந்த தீயில் உடலெங்கும் தீ எழுந்து சதை உருகும்போதுகூட குரலெழுப்பி ஒரு சொல் சாபமிடாமல் நின்ற’ காட்சி நெஞ்சை விட்டு அகலாது.

பா ராஜேந்திரன்.

***

அன்புள்ள ஜெ

உலுக்கும் கதைகளில் ஒன்று அமுதம். இப்படி ஒரு தொன்மம் உண்மையில் இல்லை, நீங்களே உருவாக்கியது என்றால் இது ஒரு மகத்தான கற்பனையேதான். இதன் அர்த்தங்கள் விரிந்துகொண்டே செல்கின்றன. பெண்மை,தாய்மை என்பதைப்பற்றிய நம்முடைய சித்திரங்கள் எப்படி சிக்கலாக உள்ளன என்று காட்டும் கதை இது. ஒரு அசலான பெண்ணியப்பார்வையை முன்வைப்பது. ஆனால் ஏற்கனவே வெண்முரசு முதல் பல நாவல்களிலும் கதைகளிலும் வந்தது. கருத்தியல்ரீதியாக நீங்கள் அதிகம் பேசாதது

மைந்தராக நின்று அம்மச்சிப்பசுவை ஏற்கிறார்கள். தெய்வமாக வழிபடுகிறார்கள். ஆணாக நின்று அதை அடக்கி ஜெயிக்கவும் முடியாவிட்டால் அழிக்கவும் நினைக்கிறார்கள். இந்த மூன்றுபட்டை உறவுதான் இந்திய ஆண் கொண்டிருக்கும் சிக்கல். என் அம்மா என்று உருகுபவன் மனைவியை அடித்து ஒடுக்கவும் தயங்குவதில்லை. துர்க்கையை வழிபடவும் செய்கிறான். இந்தக்கதை அந்த மூன்றுதள உறவு சிக்கலாக கலந்திருப்பதையும் எது எப்போது எழுகிறது என்பதையும் அருமையாக காட்டுகிறது

ராஜசேகர்.

***

கதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

சுருக்கமான செறிவான ஒரு கதையாக இருந்தது மலைவிளிம்பில். அந்தத் தலைப்பே குறிப்பானது. பேலன்ஸ் செய்து நிற்கவேண்டிய இடம். மலைவிளிம்பில் இருப்பவன் கதைசொல்லிதான்

வாழ்க்கை என்பதே முடிவெடுப்பதன் சிக்கல்களால் ஆனது என்பது இருத்தலியல் கோட்பாடு. நம்மால் எதையும் அறுதியாக முடிவெடுக்க முடியாது. படிப்பு கல்யாணம் உட்பட எல்லாத்திலும் நான் எப்படி முடிவெடுத்திருக்கிறேன் என்று பார்த்தேன். பெரும்பாலும் நாணயம் சுண்டிப்போடுவது போல குத்துமதிப்பாகவே முடிவெடுத்திருக்கிறேன். ‘தெளிவாக’ யோசித்து முடிவெடுக்கவேண்டும் என்று சொல்லலாம். ஆனால் எதிர்காலத்தை முழுசாக உணர்ந்து எவரால் முடிவெடுக்க முடியும்? அதெல்லாம் எங்கோ அறியாத இடத்தில் அல்லவா இருக்கிறது?நம்பி முடிவெடுக்கவேண்டியதுதான்.

முடிவெடுப்பதன் அந்த ஒரு தருணத்தை மட்டும் freeze பண்ணியிருக்கிறது கதை. அதற்கு முன்னும் பின்னும் இருக்கும் முடிவில்லா வாய்ப்புகளைச் சொல்லியிருக்கிறது. அந்த தருணம் எப்படி ஒரு பல்லாயிரம் டன் எடைகொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது என்று காட்டுகிறது

எஸ்.ராகவேந்திரன்

***

அன்புள்ள ஜெ

இந்தக்கதையின் மையப்புள்ளி ஒன்றுதான், கதைசொல்லி கொலைசெய்யக்கூடாது என்று Moral Conviction அடிப்படையில் முடிவெடுத்திருந்தால் அவன் விடுதலை அடைந்துவிட்டான். அவனுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் அந்த முடிவை எடுக்காமல் கோழைத்தனத்தாலோ குழம்பிப்போயோ முடிவைக் கைவிட்டால் அவனுக்கு வாழ்க்கையே இல்லை.

இந்தப்புள்ளிதான் கதையின் சிக்கலே. அந்தப்புள்ளியில் எது morality என்று அவன் முடிவெடுத்தாக வேண்டும். முடிவெடுக்கவில்லை என்றால் அவனால் அங்கே தீர்மானமாக எதையும் செய்யமுடியாது. தீர்மானமாக எதுவும் அங்கே செய்யவில்லை என்றால் அவன் பின்பு தன்னைப்பற்றி ஒரு வரையறையை உருவாக்கிக்கொண்டு அதிஅற்குள் சிக்கிக்கொள்வான். பிரச்சினை எது சரி எது தப்பு என்று முடிவெடுப்பது இல்லை. நான் யார் என் இயல்பு என்ன என்று முடிவெடுப்பதுதான்

சாரங்கன்

கதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]
கதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]
கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]
கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]
கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]
கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]
கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]
கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]
கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]
கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]
கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]
கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]
கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]
கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]
கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]
கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]
கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]
கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]
கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]
கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்
முந்தைய கட்டுரைசிறகு,தூவக்காளி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிராவிட மனு- இரு எதிர்வினைகள்