‘திராவிட மனு’

ராஜன் குறை என்பவர் யார்?

அன்புள்ள ஜெ

நீங்கள் சில மேற்கோள்களைக் கொடுத்திருந்தீர்கள். அவற்றைக்கொண்டு நானே இணையத்தில் தேடி அந்தக்கட்டுரையை எடுத்தேன். நீங்கள் கொடுத்திருந்தது உதிரிப்பகுதிகள், ஆகவே கட்டுரையை நீங்கள் தவறாக மேற்கோள் காட்டி திரிக்கிறீர்கள் எவராவது சொல்லலாம்  என்று ஒரு எண்ணம் எனக்கு இருந்தது.

ஆனால் முழுக்கட்டுரையையை வாசித்து திகைத்துப்போனேன். நீங்கள் மேற்கோள் கொடுத்திருப்பதெல்லாம் சும்மா. இன்னும் நேரடியாக அப்பட்டமாக எந்த தயக்கமும் இல்லாமல் ராமதாஸ் சொல்லும் ‘நாடகக்காதல்’ என்ற கருத்தையும் தலித் இளைஞர்களின் வேலைசெய்யும் திறமை இல்லாமை, ஆண்திமிரை வளர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றையும் கட்டுரை விரிவாக கட்டமைத்துக் காட்டுகிறது.

அதிர்ச்சியாக இருந்தது. சமூகநீதி பேசப்படும் தமிழகத்தில் இருந்து இப்படி ஒரு கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. 18 ஆண்டுகளாக சர்வதேச அளவில் புழக்கத்தில் இருக்கிறது. இதை நியாயப்படுத்தவும் இவர்களால் முடிகிறது.

கட்டுரை எழுதியவர்கள் பற்றிய உங்கள் குறிப்பில் உள்ள பிழைகள். ஜெயரஞ்சன், ஆனந்தி, ராஜன் [குறை] கிருஷ்ணன் ஆகியோர் எழுதிய கட்டுரை. எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் மனைவிதான் ஆனந்தி. முக்கியமாகச் சொல்லப்பட்ட பெயர் ஜெயரஞ்சன். களப்பணி செய்திகொடுத்தவர் ராஜன் குறை.

டி.எஸ்.அருண்

Work, Caste and Competing Masculinities: Notes from a Tamil Village

அன்புள்ள அருண்,

அக்கட்டுரையை மேலோட்டமாக படித்திருந்தேன், எனக்கு நினைவு இருந்தது, ஆகவேதான் இதைச் சொல்கிறேன். எனக்கு அப்போது ஜெயரஞ்சன் இப்படி ‘பொருளியல்மேதை’ ஆக தமிழ்ச்சமூகத்தில் அவதரிப்பார் என்று தெரியாது. ஆகவே கவனிக்கவில்லை.

மூலக்கட்டுரை சோர்வூட்டும் நடை என்பதனால் அப்போது முழுக்க வாசிக்கவில்லை. நான் வாட்ஸப் துணுக்குகளை அளித்தது  ஏனென்றால் அவைதான் உண்மையான பரவலான செல்வாக்கை அளித்தவை. எளிதில் பரவுபவை.

மூலக்கட்டுரையை இப்போது வாசித்தேன். திகைப்பு அளிக்கிறது. எப்பேர்பட்ட நாஸிஸ ஆவணம்! அப்பட்டமான பொய்யும் திரிபுகளும் கலந்தது.

இந்த அம்பிலிருந்து தலித் மக்கள் தப்பவே முடியாது. மனுஸ்மிருதி போல அவர்களை தப்பாக வகுத்து, இழிவாக அடையாளப்படுத்தி ஒழித்தே கட்டிவிட்டது இது. நடுக்கமாகவே உள்ளது, தமிழ்ச்சூழலில் இருந்து இப்படி ஒன்று எழுந்து இந்தியாவுக்கே முன்னுதாரணமாக அமைவது.

இந்த விஷயத்தில் வெறும்கூட்டணி அரசியல் சார்ந்து, வாக்கரசியல் சார்ந்து யோசிக்காமல் இடதுசாரிகளாவது மனசாட்சியை ஒட்டி யோசித்தால் நல்லது.

ஜெ

***

அன்புள்ள ஜெ

இபிடபிள்யூவில் வந்த மூலக்கட்டுரையை போய் படித்தேன். அதோடு ஒப்பிடுகையில் நீங்கள் கொடுத்திருக்கும் வாட்ஸப் துளிகள் ஒன்றுமே இல்லை. மூலம் இன்னும் கொடூரமானது

ஒரே ஒரு கிராமத்திலிருந்து சேகரித்ததாகச் சொல்லப்படும் ‘தரவுகளின்’ அடிப்படையில் தலித்மக்களால் மற்றவர்களுடன் இணைந்து உற்பத்திப் பணிகளில் ஈடுபடமுடியாது, அவர்கள் அடாவடிக்காரர்கள், ஆணாதிக்கம் கொண்டவர்கள், நாடகக்காதல் செய்பவர்கள் என்று ஆணித்தரமாக வாதிடுகிறது. படுபயங்கரமான கட்டுரை.

பயமாக இருக்கிறது. சமூகநீதித் தமிழகத்தில் இருந்தா இப்படி ஒரு கட்டுரை? இதற்கும் ஒரு நவீன மனு வந்து ‘ஆய்வு’ செய்யவேண்டியிருக்கிறதா?

அரசக்குமார்

https://www.jstor.org/stable/4412773?seq=1

***

அன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரை ஒரு அலையை உருவாக்கியிருப்பதைக் காண்கிறேன். ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் அறியப்பட்ட பெரும்பாலானவர்கள், குறிப்பாக திராவிட மார்க்ஸிய இயக்கச்சார்பு கொண்டவர்கள், ராஜன் குறையின் ஆதரவாளர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அல்லது அதை நியாயப்படுத்துவதற்கும், அதற்கு விளக்கமளிப்பதற்கும் முயல்கிறார்கள்.

இத்தகைய கட்டுரைகளில் உள்ள நேர்மையின்மை, இதிலுள்ள முத்திரைகுத்தி ஒழித்துக்கட்டும் சதி, இதை அறிவுத்தளத்தில் நுட்பமாகச் செய்துவிட்டு சம்பந்தமில்லாமல் வேஷம்போடும் அரசியல் இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. பொதுவாக இப்படி இந்தக் கட்டுரை பேசப்பட்டால் நல்லதுதான் என்ற எண்ணமும், ஆமா உண்மையைத்தானே எழுதினார் அதுக்கென்ன இப்போ என்ற பாவனையும்தான் காணக்கிடைக்கின்றன. ராஜன் குறை இடைநிலைச்சாதியின் ஐக்கான் ஆக மாறினாலும் ஆச்சரியமில்லை.

எம்.ராஜேந்திரன்

***

அன்புள்ள ராஜேந்திரன்,

நான் எதிர்பார்த்ததுதான் இது. ஒருபோதும் அக்கட்டுரையின் உள்ளடக்கம் பேசப்பட விடமாட்டார்கள். நான் அதை ஏன் பகிர்ந்தேன் என்பதையே பேசுவார்கள். உண்மையான இடைநிலைச்சாதிய அரசியலை தொட்டே பார்க்கமாட்டார்கள். முழுக்கமுழுக்க தனிநபர்த்தாக்குதல், சப்பைக்கட்டுகள், ஊடுவிளக்கங்கள், ‘ஒற்றுமை’ கூச்சல்கள் மட்டுமே இருக்கும். இவர்களிடம் அறிவுநேர்மையை எதிர்பார்க்கவில்லை. அறத்தையும் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு கும்பல். ஒருவரை ஒருவர் பாதுகாக்க எல்லாவற்றையும் உதறிவிடும் கூட்டம்

ஜெ

***

அன்புள்ள ஜெ

ராஜன் குறை பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். தமிழ்ச்சூழலில் பத்தாண்டுகளாக சாதாரணமாகப் பேசப்பட்டு வருவதுதான் இது. இடதுசாரிகள் ராஜன் குறையை என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை. அவர்மேல் இக்குற்றச்சாட்டு எப்போதுமே உண்டு. அவர் கண்டுகொள்வதில்லை. அவரைச் சூழ்ந்திருப்பவர்கள் உண்மையில் இந்த இடைநிலைச்சாதி ஆதரவையும் தலித் எதிர்ப்பையும் உள்ளூரக் கொண்டாடுகிறார்கள்.

சிலநாட்களுக்கு முன்பு ஏ.பி.ராஜசேகரன் அவருடைய முகநூலில் மேலே நீங்கள் அளித்த பகுதிகளை அளித்து மொழியாக்கம் செய்து கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்.

உங்கள் பார்வைக்காக

எஸ்.ராம்குமார்

தலித்துகளின் மீதான வன்முறைக்கு ராஜன் குறை தன்னுடைய சமூகத்தின் மீது இன்று குற்றம் சாட்டுகிறார். 2002ல் முதன்முறையாக தலித்துகள் மீது அறிவுதளத்தில் வெறுப்பை விதைத்தவர் அவரும் அவர் நணபர்களும். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் ராமதாஸ் 7-8 வருடங்கள் கழித்து எடுத்தாட்கொண்டார். தலித்துகள் மீது வெறுப்பை கக்கி இன்று வரை அவர்கள் மீது வன்முறையை நிகழ்த்தபடுவதற்கு காரணமான ராஜன் குறை எப்போது தலித்துகளிடம் மன்னிப்பு கேட்க போகிறார்.

ஏ.பி.ராஜசேகரன்

[ஜெயரஞ்சன், ராஜன் குறை, ஆனந்தி எழுதிய கட்டுரையின் பகுதிகளின்  மொழிபெயர்ப்பு]

//அவர்களுடைய (தலித்துகளுடைய) வன்முறை பெரும்பாலும் வேலைக்கு அல்லது படிப்புக்கு செல்லும் உயர் ஜாதி இளம் பெண்களுக்கு எதிராக தான் இருக்கிறது. உதாரணமாக, எங்கள் ஆராய்ச்சி உதவியாளர்களாகிய ஒருவர் பதிவு செய்த பின்வரும் நிகழ்வை குறிப்பிடலாம். 21 வயதான தலித் இளைஞர் ராஜா உள்ளூர் பேருந்து நிலையத்தில் நிற்கிறார். அவரது நண்பர்களில் ஒருவர் அவருடன் ஒரு கம்பெனியில் பணிபுரிந்த ஒரு பெண்ணைக் காட்டி, அந்த பெண்ணை “கலாய்ச்சி” அனுப்பும்படி சொல்கிறார். ராஜாவும் அந்த பெண்ணை பரிகாசம் செய்கிறார், உடனே அந்த பெண் அவரை “போடா நாயே” என்று கத்தினார். ராஜா கோபமாகி, பேரூந்து ஓட ஆரம்பித்ததும், அந்தப் பெண்ணைத் தாக்கி அவரது நண்பரிடம் ஒரு வெற்றி தோற்றத்தை காட்டினார். பெண்களை கிண்டலடிப்பது கிராமத்தில் தலித் இளைஞர்களிடையே ஒரு கலாச்சார அம்சமாக உள்ளது.

வேட்டை நாயக்கர் சமூகத்தின் 42 வயது முதியவர், “காலனி மக்கள் [தலித்துகள்] பிரச்சினை தீவிரமானது, அவர்கள் எங்கள் பெண்களை பரிகாசம் செய்கிறார்கள், அவர்களுக்கு பயந்து எங்கள் பெண்கள் படிக்க போக விரும்பவில்லை. அதனாலே நாங்களும் அவர்களை பள்ளிக்கு அனுப்பவதில்லை” …. எனவே, திருநகரில் தலித் இளைஞர்களால் நடத்தப்படும் வன்முறையினால், கிராமத்தில் பெண்களின் இடம்சார்ந்த நகர்வுகள் தடைப்பட்டிருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஆணாதிக்கத்தை நிறுவும் தலித் இளைஞர்களால் முரண்பாடான விளைவுகள் தான் விளைந்துள்ளது.

பேருந்து நிலையம், தொழிற்சாலைகள் என பெண்களும் ஆண்களும் பொது இடங்களில் புழுங்குவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், கடந்த 10 ஆண்டுகளில் திருநூறில் பல சாதி கலப்பு திருமணங்கள் நடந்துள்ளன. இந்த புதிய பாலியல் சாத்தியக்கூறுகளின் பிண்ணணியில், தலித் இளைஞர்களின் தங்களின் ஆணாதிக்க அடையாளத்தை வரையறுக்க காதல் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. காதலிப்பதற்கு முன், ஒரு முன்னுரையாக, படிப்பதற்காக அல்லது வேலைக்குச் செல்லும் பெண்களை கேலி-கிண்டல் செய்வது அவர்களின் முக்கிய பொழுதுபோக்கு ஆகும்.

ஏன் தலித் இளைஞர்கள் மேல் ஜாதிப் பெண்களிடம் குறிப்பாக ஆர்வம் காட்டுகிறார்கள் என்று வினவியதற்கு, ஒரு 17 வயது தலித் பெண் சொல்கிறார் “எங்க பசங்க பெரும்பாலும் மேல் சாதி பெண்களை மட்டுமே காதலிக்கிறார்கள். ஏனென்றால், அந்த பெண்கள் இந்த பையன்களை உதாசினப்படுத்துகிறார்கள், பிறகு அந்த பையன்கள் அந்த பெண்களை கவர்வதும் காதலிக்க வைப்பதையும் ஒரு சவாலாக எடுத்துக்கொள்கின்றனர். அந்த பெண்கள் தாங்கள் மேல்சாதிக்காரங்க என்பதால் அப்படி நடந்துகிறாங்க. அதனால் தான் இந்த பையன்கள் ஒரு முதலியார் பெண்ணை காதலிப்பது ஒரு பெரிய சாதனையாக கருதுகின்றனர் .

உற்பத்தி அலகுகளால் கோரப்படும் வேலை ஒழுங்குமுறைக்கு அவர்களால் பொருந்த முடியாததால் தலித் இளைஞர்களால் ஒரு வேலையில் நிலையாக இருக்க முடியவில்லை. தலித் இளைஞர்கள் சூப்பர்வைசர்களை தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளது, மேலும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களிலிருந்து அவர்கள் திருடும் வழக்கும் இருக்கிறது.//

pdf வடிவில் முழுக்கட்டுரையும்

ராஜன் குறை என்பவர் யார்?

முந்தைய கட்டுரைஅமுதம்,தீவண்டி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-26. எரிமருள் [சிறுகதை]