அமுதம்,தீவண்டி- கடிதங்கள்

கதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

அமுதம் ஒரு பெரிய பரவசத்தைக் கொடுத்த கதை. என் வாசிப்பில் இத்தகைய கதைகள்தான் பெரிய அனுபவமாக ஆகின்றன. கதைகள் எல்லாமே உருவகத்தன்மை கொண்டவைதான். சுத்தமாக உருவகத்தன்மையே இல்லாத கதைக்கு இலக்கியத்தில் பெரிய இடம் இல்லை. எந்த யதார்த்தவாதக் கதையாக இருந்தாலும் அதில் உருவகத்தன்மை உண்டு

அதேபோல எந்தவகையான கதையாக இருந்தாலும் அதில் ஒரு மாயத்தன்மை உண்டு. மாயம் என்பது ஒருவகையில் அந்த மொழியும் சூழலும் உணர்ச்சியுமெல்லாம் சேர்ந்து உருவாக்குவதுதான். ஆனால் மாயத்தன்மை கண்டிப்பாக இருக்கும்.

அப்படியென்றால் உருவகமும் மாயத்தன்மையும் உச்சத்திற்குப்போனால் என்ன? ஏன் அதை நம்பகமாக ஆக்க முயற்சி செய்யவேண்டும். அது நாம் அறிந்த வாழ்க்கைக்குள் ஏன் நின்றிருக்கவேண்டும்?

இந்தக்கதையின் வளர்ச்சிப்பரிணாமம் ஆச்சரியமானது. ஒரு வரலாற்றுக்கதை மெல்ல மாயக்கதையாக ஆகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அது உருவகமாகிறது. கடைசியில் ஒரு ஞானக்கதையின் வடிவை அடைந்துவிடுகிறது

அந்தப்பசுவின் இயல்புகளில் பிரபஞ்சமர்மம் உள்ளது. அவ்வளவு அருளை அளிக்க அது அந்த பலிகளையும் எடுத்துக்கொள்கிறது இல்லையா? இந்த பிரபஞ்சமே அப்படித்தானே இருக்கிறது? துர்க்கையின் இயல்பே அதுதானே?

செந்தில்குமார்

***

அன்புள்ள ஜெ

அமுதம் கதையிலேயே கௌரி பார்வதிபாய் அரசியின் குறிப்பு வருகிறது. அவர்களைத்தான் நாம் லட்சுமியும் பார்வதியும், மலையரசி போன்ற கதைகளில் பார்த்தோம். அருள்நிறைந்த அம்மா அவர்கள்.

ஆனால் இந்தக்கதை மேலும் சரியாக ராணி மங்கம்மாளுக்குத்தான் பொருந்துகிறது. ராணிமங்கம்மாள் தென் தமிழகத்தையே சிருஷ்டி செய்த மேதை. ஆனால் மக்கள் அவர்களை வெறுத்தார்கள். அவர்களுக்கு திவானுடன் உறவிருந்தது என்று தூற்றினார்கள். அவர்கள் ‘ஆசாரப்பிழை’ செய்தார்கள் என்றார்கள். அதன்பின் அவர்கள் பட்டினிபோட்டுக் கொல்லப்பட்டார்

அதேமனநிலைதானே இந்தக்கதையிலும் உள்ளது? அமுதம் அளிக்கும் அன்னையின் செக்ஸுவாலிட்டிதான் மக்களுக்குப் பிரச்சினை. அது சிங்கம் மாதிரி இருப்பதுதான் பிரச்சினை. அதை தன் வீட்டுப்பெண்களுடன் சம்பந்தப் படுத்திக்கொள்கிறார்கள். பெண்களைப் பற்றிய பயம்தான் அம்மைக்கு எதிரான கசப்பாக உருவாகிறது

சாரங்கன்

கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

ஜான் ஆபிரகாம் பற்றிய கதையை சிரித்துக்கொண்டே படித்தேன். உண்மையில் கதையின் நாயகன் இக்காதான். மிக எளிமையானவர். பழமையானவர். ஆனால் ஜான் என்ற மேதையை மிகநுட்பமாக புரிந்துகொள்கிறார். அவன் ஒருவகையான புனிதன் என்று நினைக்கிறார். புனிதனைச் சுற்றி குப்பைசேரும் என்று சொல்கிறார். நையாண்டியுடன் அவனை அணுகுவதே அவனைச் சரியாக புரிந்துகொள்வதற்கான வழி என்று தெரிந்துவைத்திருக்கிறார்

இதை நான் பார்த்திருக்கிறேன். ஜீனியஸ்களுடன் சில சாமானியர்கள் நெருக்கமாக இருப்பார்கள். அவர்களை ஆழமாகப் புரிந்துகொண்டும் இருப்பார்கள். அதேசமயம் சகஜமான உறவும் கொண்டிருப்பார்கள். ஜெயகாந்தனிடம் அப்படி சில ரிக்‌ஷாக்காரர்கள் நெருக்கமாக இருப்பதை கண்டிருக்கிறேன்

எம்.தேவராஜ்

***

அன்புள்ள ஜெ

ஜான் ஆபிரகாம் பற்றிய கதை அற்புதமான ஒன்று. ஒரு விரைவான கீற்றாக அவரை காட்டிவிட்டது. சினிமா எடுக்க அத்தியாவசியப்பொருள் என்று எழுதிய அறைக்குள் மதுக்குப்பிகளை போட்டுவைத்திருந்தது அவருடைய சிறந்த பகடி என நினைக்கிறேன்

செல்வக்குமார்

***

கதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]

கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]

கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]

கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5
அடுத்த கட்டுரை‘திராவிட மனு’