வெண்முரசு முடிந்துவிட்டது என்ற செய்தி ஒர் ஆழ்ந்த சோர்வை அளித்தது. ஆனால் மலையேறி உச்சிக்குப் போனபிறகு வரும் நிறைவான சோர்வு அது. வெண்முரசு வெளிவரத் தொடங்கிய நாள் முதல் பெரும்பாலும் தினமும் அதை வாசித்து வருகிறேன். ஓரிருநாட்கள் தவறவிட்டிருப்பேன். நீண்ட பயணத்தின்போதும் வைரல் காய்ச்சலில் சிலநாட்கள் படுத்திருந்தபோதும்.
ஓர் இலக்கியப்படைப்பை இத்தனைகாலம் இத்தனைபேர் தொடர்ந்து வாசிப்பதென்பது ஓர் அரிய நிகழ்வுதான். இந்த பெரிய நூல் ஏதாவது வாசிப்புநிலையில் தேங்கிப்போனவர்களுக்கு உரியது இல்லை. இன்னும் இன்னும் என்று கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு உரியது. ஆகவே வரும்காலத்தில் இளையதலைமுறையினர்தான் இதை இன்னமும் வாசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் சொல்ல நான் ஆளல்ல. ஆனால் எனக்கு இத்தனை வாழ்க்கையை கண்டபிறகு ஒரு பெரிய விலக்கம் ஏற்படுகிறது. இந்நாவலில் இல்லாததே இல்லை. மனிதவாழ்க்கையின் எல்லா சாத்தியங்களும் எல்லா கீழ்மைகளும் இதிலுள்ளன. இத்தனை எழுதியபிறகு உங்களுக்கு ஒரு விலக்கம் அல்லது துறவுமனப்பான்மை ஏற்படவில்லையா என்ன?
மகாதேவன்
***
அன்புள்ள மகாதேவன்
இந்த நாவல்நிரை முடியும்போதே, களிற்றியானைநிரை நாவலின்போதே, ஒரு விலக்கமனநிலை வரத் தொடங்கிவிட்டது. சிறுகதைகளுக்குச் சென்று வெறிகொண்டு எழுதி, அதன்வழியாக வெவ்வேறு மனநிலைகளிலும் வெவ்வேறு வாழ்க்கைச்சூழலிலும் திகழ்ந்து, அதை ஈடுகட்டிக்கொண்டேன். ஆனாலும் ஒரு பெரும்சலிப்பு எஞ்சத்தான் செய்கிறது. நிறைவின் சலிப்பு மிக சிக்கலானது. அது இனியது, ஆனால் நிலைகொள்ள வைப்பது.
என்னைப்பொறுத்தவரை இந்தச் சலிப்பு அபாயமானது என்றும் தோன்றுகிறது. இப்போது உலகியலை அள்ளிப்பற்றிக்கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் அது என்னை விட்டுவிடும். உண்மையில் அந்தச் சலிப்பிலிருந்து வெல்லவே இந்த சின்னச்சின்ன பூசல்களைக்கூட கையாள்கிறேன்.கொரோனா காலமாக இல்லை என்றால் பயணங்கள் கிளம்பியிருக்கலாம்.
ஆனால் இது ஒருவகையான செயல்விலக்கம் மட்டுமே. துறவு அல்ல. அந்த மனநிலை எனக்கு இல்லை. நம்மில் பெரும்பாலானவர்களைப் போலவே துறந்து சென்றுவிடவேண்டும் என்ற கனவு எனக்கும் இருந்தது- கொஞ்சம் எஞ்சுகிறது. ஆனால் வெண்முரசு நாவலை எழுதி முடித்த அன்று நண்பர்கள் எவரையாவது பார்க்கவேண்டும் என்று தோன்றியது. லக்ஷ்மி மணிவண்ணனை அழைத்தேன். அழைக்கவில்லை, அழைப்பை உணர்த்தினேன்.
அவர் வந்து அவரைப் பார்த்ததுமே சரியாகிவிட்டது, பேசவேண்டும் என்றெல்லாம் இல்லை. பேசப்பேச அவரை அழைத்திருக்கக் கூடாது என்று தோன்ற ஆரம்பித்தது. உடல்நலமில்லாதவர், நுரையீரல்பிரச்சினையே உள்ளவர், நான் பார்க்கவேண்டும் என்பதற்காக அவரை வரச்சொல்லியிருக்கிறேன். நான் கிளம்பிச் சென்றிருக்கலாம். அத்தனை தொலைவு அவர் வந்து சென்றது நல்லது அல்ல.
அவர் சென்றபிறகு நினைத்துக்கொண்டேன். இப்படி மனிதர்கள் வேண்டும் என்று தோன்றுபவனிடம் என்ன துறவு இருக்கமுடியும்? இமையமலை அடிவாரத்தில் மலைகளை பார்த்தபடி தன்னந்தனிமையில் அமர்ந்திருப்பதைப் பற்றியெல்லாம் கனவு காணலாம். இனிய கனவு, அவ்வளவுதான்
ஜெ
***
நான் உங்கள் நெடுநாள் வாசகன் நீங்கள் வெண்முரசு ஆரம்பிக்கும் முனபே தினமும் உங்கள் இணையதளத்தை வாசிப்பது என் பழக்கம். வெண்முரசு தொடங்கிய பின்னர் அது இரவு 12 மணிக்கான காத்திருப்பாக மாறி விட்டது, இதோ வெண்முரசின் கடைசி நாவல் தொடங்கி விட்டது. அது ஒருவித அழுத்தத்தை அளிக்கிறது. ஒவ்வோர் நாவல் முடியும் போதும் அடுத்த நாவலுக்கான கற்பனைகளும் காத்திருப்புகளும் தொடங்கிவிடும். இனிமேல் இல்லை என்பது ஒரு வகையான இழப்புணர்வை தர தொடங்கிவிட்டது.
நான் இதுவரை இரண்டு கடிதங்கள் மட்டுமே உங்களுக்கு அனுப்பியுள்ளேன், ஒருவேளை அது என்னுடைய இயல்பான சோம்பேறித்தனத்தினால் இருக்கலாம். ஆனலும் தினமும் உங்கள் இணையதளம் வழியாக உங்களிடம் பேசிகொன்டே இருந்த உணர்வு இருந்தது அதனால் தான் நீங்கள் ஒரு முறை திடீரென காணாமல் போனபோது என் முதல் கடிதத்தை அனுப்பினேன்.
நான் ஒரே ஒருமுறை உங்களை ரயிலில் சந்தித்தேன் நீங்கள் வெண்முரசு எழுதி கொண்டு இருந்தீர்கள், முடிக்கும் வரை காத்திருந்து பின்னர் வந்து பேசினேன். அன்று உங்களிடம்சரியாக பேசாத ஒரு உணர்வு எப்போதும் இருக்கிறது. அன்று நான் என் பன்னிரண்டு வருட சென்னை வாழ்க்கையை முடித்து விட்டு மொத்தமாக கிளம்பிக்கொண்டு இருந்தேன் பன்னிரண்டு வருட நட்புகள் சுற்றங்கள் எல்லவற்றையும் விட்டு வரும் பொது வரும் அந்த வெறுமை உணர்வுடன் தான் நான் இருந்தேன். எப்போதும் கன்னியாகுமாரி எஸ்பிரஸில் சென்னைக்கு செல்லும்போதும்வரும்போதும் உங்களை சில கணங்கள் தேடிவிட்டே என் இருக்கைக்கு செல்வேன். அந்த நாள் அது ஏதும் மனதில் இல்லை உள்ளே ஏறிய உடனே உங்களை கண்டேன். அந்த கணத்தின் அழுத்தத்தை உங்கள் முகம் மாற்றியது. எனினும் அன்று உங்களிடம் சரியாக பேசாத உணர்வே எஞ்சுகிறது.
வெண்முரசு முடிவதும் அந்த பெரும் வெறுமையை தருகிறது. சென்னையை விட்டு வந்த வெறுமையை நண்பர்களிடமும் மனைவிடமும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இதை எவரும் புரிந்து கொள்வார்கள் என்று தோன்றவில்லை, என்னை சுற்றி இருக்கும் எவருக்கும் வாசிப்பு பழக்கம் இல்லை. இந்த வெறுமையை எப்படி கடந்து செல்வது? பிரியத்திற்குரிய ஓன்று முடிந்து போவது ஓரூ இறப்பு தான் என்று தோன்றுகிறது. இல்லை இது சின்ன விஷயம் தானா ? நான் தான் பெரிதுபடுத்துகிறேனா ? பின்தொடரும் ஓன்று முடிவது அளிக்கும் வெறுமையை விட உருவாக்கி முடிக்கும் போது வரும் பிரமாண்டமான வெறுமையை நீங்கள் எப்படி எதிர்கொளகீறீர்கள் ? இதை முடிக்கும்போது நிஜமாகவே உங்களுக்கு நிறைவு வருகிறதா இல்லை வெறுமையில் தான் சென்று முடிகிறீர்களா ?
என்னவோ கேட்கவந்து எதையோ கேட்டுவிட்டேன். பிழை இருந்தால் மன்னியுங்கள்.
அன்புடன்,
ஆல்வின் அமல்ராஜ்
***
அன்புள்ள அமல்
பின்னால் வந்து அடையும் வெறுமை, முன்னால் சென்று அடையும் வெறுமை என இரண்டு உண்டு. பெரிய படைப்புக்களை உருவாக்கும்போதும் அவற்றை வாசிக்கும்போதும் உருவாவது முன்னால் சென்று அடையும் வெறுமை.பெருஞ்செயல்களை முடிக்கும்போதும் முன்னால்சென்று அடையும் வெறுமை வருகிறது.
நாம் ஒன்றில் ஏமாற்றமடைந்து, இழந்து, கைவிட்டு திரும்பும்போது பின்னகர்ந்து வெறுமையை அடைகிறோம். எங்கு செல்வதென்று தெரியாத திகைப்பு அது. அது முதல்வகையான வெறுமை.
நாம் இருக்குமிடத்தில் இருந்து ஒரு பெரும்படைப்பு,பெருஞ்செயல் வழியாக முன்னால் செல்கையில் நாம் கைக்கொண்டுள்ள அனைத்தையும் இழந்துவிடுகிறோம். நின்றிருக்கும் இடம் கரைந்துவிட்டதாக உணர்கிறோம். அது இரண்டாம்வகையான வெறுமை
இரண்டாம்வகையான வெறுமை ஆக்கபூர்வமானது. சோர்வூட்டுவது அல்ல. அப்போது தம் அகம் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நான் அகத்தே முட்டிமோதுவோம். நம்மை, நம் தளத்தை மீண்டும் புதிதாக கட்டிக்கொள்வோம். மேலும் பெரிய ஒருபடைப்பை, ஒரு செயலை நோக்கிச் செல்வோம்.
இப்போதிருப்பது அந்த நிலைதான். மேலே செல்ல இடமில்லாமல் இருந்தால் அது நிறைவுநிலை. அதுவும் செயலின்மையே. ஆனால் ஓய்ந்து செயலின்மை கொள்வது அல்ல அது நிறைந்து செயலின்மை கொள்வது. அது இன்னும் வரவில்லை
ஜெ
***