அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
எப்போது நேரில் சந்தித்தாலும், தொலைபேசியில் பேசினாலும் நல விசாரிப்புகளுக்கு பின்னர், உங்களிடம் இருந்து வரும் முதல் கேள்வி எங்கள் தொழில் பற்றியதுதான். அதன் நிலவரத்தை நீங்கள் கேட்டு அறிந்து கொள்வதுடன், ஒரு கறாரான தகப்பனின் அக்கறைகளாக அடுத்தடுத்த கேள்விகள் அமையும்.
கருப்பட்டி கடலை மிட்டாய் தொழில் தொடங்கிய நாள் முதல் ஐந்தாவது வருடத்தின் அருகில் இருக்கும் இந்த நாள்வரை அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும், அனுபங்களையும் சாதக பாதகங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வது பெரும் வாய்ப்பாகவும் நிறைவாகவும் உணர்கிறேன்.
கடந்த இரு வாரத்திற்கு முன்பு இணையத்தில் வெளியான இந்த காணொளி,
இந்த தொழில் துவங்கிய நாட்களில் இருந்த ஒரு வித பதட்டமும் பரவசமும் கூடிய தருணத்தை மீண்டும் அளித்துள்ளது,தற்போது வரை அது நீடிக்கிறது.மேலும் நான்காம் ஆண்டு திருமண நாளுக்கான வாழ்த்தாகவும் பரிசாக நானும் கௌதமியும் இதனை நினைத்து கொண்டோம்.
அதற்கு முந்தைய இரு மாதங்கள் உண்மையில் மிக சவாலான நாட்கள் முழு ஊரடங்கு காரணமாக முற்றாக தொழில் முடங்கி இருந்தது.நிலைமை சற்று சீரான பிறகு கூட தொழில் வாய்ப்புகள் குறைந்தே காணப்பட்டது.நகரங்களில் பணிபுரிந்து வந்த மக்கள், சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் திரும்ப வில்லை. இதனால் கடைகள் உணவங்கள் முழுமையாக இயங்கவில்லை. முற்றிலும் பெரும் நகரங்கள் ஸம்பித்த சூழலில் சிறு நகர மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்து விட்டது.
ஆனால் கடந்த இரு வருடத்திற்கும் மேலாக எங்கள் சொந்த இணையதளத்தின் வழியாக தொடந்து வரும் நேரடி விற்பனை இந்த சமயத்தில் நன்கு கொடுத்தது.இந்தியா முழுக்க இந்த தின்பண்டம் சென்று சேர்ந்துள்ளது.முகம் அறியாத மக்களின் தொடர் வாழ்த்துக்கள் மட்டுமில்லாமல் பலருக்கும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
குக்கூ நண்பர்கள் ஒவ்வொருவரின் தயாரிப்புகளும் விற்பனையில் மீண்டெழுந்துள்ளது. நூற்பு,அம்பரம்,துவம்,அரும்பு,யாதும், துகள் மட்டுமல்லாமல் தும்பி,தன்னறத்தின் புத்தகங்களும் மக்களுக்கு நேரடியாக அவரர்கள் இல்லங்களுக்கு கொண்டு போய் சேர்த்து இருக்கிறோம்.இந்திய அஞ்சல் துறை வாயிலாக வெளிதேசத்தில் இருக்கும் நண்பர்களுக்கு புத்தகங்களை கொண்டு சேர்த்துள்ளோம்.தற்போது தொழில் சார்ந்த நெருக்கடிகள் அதிகம் உள்ளது,இருப்பினும் அதுவே புதிய சாத்தியங்களையும் முயற்சிகளையும் நோக்கி அழைத்து செல்கிறது.
தும்பி சிறுவர் மாத இதழ்கள் அனுப்ப வேண்டி குழந்தைகள் அனுப்பிய கடிதங்களும் voice message எங்களை செய்யும் பணியில் நிறைவினை காணவைத்துள்ளது.
மேலும் நோயச்ச காலத்தில் உங்களின் தளமே எங்களுக்கு அருமருந்தாக இருந்து வருகிறது. உங்களின் பல முக்கிய கட்டுரைகள் முழுமையாக வாசிக்க பெற்றோம்.சிறுகதைகள் தேர்வு செய்து வாசித்து நண்பகளுக்குள் தொடர் உரையாடலும் நிகழ்ந்தது.
தினமும் நடைபெற்ற குக்கூ உரையாடல்கள் 50வது நிகழ்வினை தாண்டி மிக உயிர்ப்பாக தற்போது வார இறுதியில் மட்டும் நடைபெற்று வருகிறது. இந்த குக்கூ உரையாடலின் காணொளிகள் இணைப்பு
https://www.youtube.com/c/CuckooMovementforChildren
இளைய மனதில் நல்விதைகள் பதியம் போடபட்டுள்ளது மூத்த ஆசான்களின் குரல்களின் வழியே. அதன் அதிர்வுகள் மெல்ல மெல்ல நற்செயல்களாக குக்கூ காட்டுப்பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் விரிகிறது… கிராமங்களின் கிணறுகள், எரிகள் மற்றும் குட்டை தூர் வாரப்பட்டுள்ளது,
நடமாடும் கால்நடை மருத்துவ மையம் துவங்க பட்டுள்ளது.கிராமப் பொருளாதரத்தை மேம்படுத்த ஜே.சி.குமரப்பா காலத்தில் நடைபெற்ற தொழில்பயிற்சி கூடம் மீண்டும் நடைபெற தேவையான முயற்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
வெண்முரசின் கடைசி அத்தியாயம் நல்துவக்கம் பெரும் இந்த நாளும் இந்த அதிகாலையும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
குரு பூர்ணிமா தினத்தன்று நிகழ இருக்கும் உரையாலுக்கு மனம் இப்போதே தயாராக உள்ளது.தொடந்து நேர்மறையான எழுத்துக்கள் வழியே எத்தனையோ மனங்களை ஆற்றுப்படுத்துகிற தீவிர செயல் நோக்கி நகர்த்தும்
உங்கள் சொல்கேட்க காத்திருக்கிறோம்…
என்றும் அன்புடன்
ஸ்டாலின்,
குக்கூ குழந்தைகள் வெளி.
***