குருபூர்ணிமா கடிதம்

25,000 பக்கங்கள்… 7 வருடங்கள்… ஒருதினம்கூட தவிர்க்காமல் தன்னுடைய படைப்புக்காகத் துளியும் சலிப்பின்றி தொடர்ந்து தன்னையும் தனது நேரத்தையும் ஒப்புக்கொடுக்கிற மனநிலை என்பதே தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய், காந்தி போன்று படைப்புலகில் வெகுசிலருக்கே அமைகிற பெருங்கொடுப்பினை. நாங்கள் மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்க்கிறோம், எப்படி ஒரு மனிதனால் தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் இவ்வளவு உறுதியாக தொடர்ந்து அதே துவக்கவிசையுடன் நீடிக்க முடிகிறது? இடர்ப்படும் தடைகளை படைப்பாலேயே கடந்துவிடுகிற ஒரு ஆற்றலை எவ்வாறு உங்கள் உள்மனம் நொடிக்குநொடி சிருஷ்டித்துக் கொள்கிறது?

நாங்கள் தீர்க்கமாக நம்புகிறோம், இந்தப் பெரும்படைப்பின் தெய்வச்சொற்கள் ஆயிராமாயிரம் மனித உள்ளங்களுக்கு நல்கிய அகவிடுதலையோ அல்லது படைப்புந்துதலோ… அது எதுவாயினும் அத்தனையாயிரம் வாசிப்புமானுடர்களில் மனத்திலெழுந்த தீராப் பிரார்த்தனைகள் சலிப்பைக்கடக்கிற பெருந்துணிவைக் கொடுத்திருக்கக்கூடும். அடுத்தடுத்து அதன் சொற்களைப்பிடித்தே ஒரு மனிதன் அகவேற்றம் அடைவதற்கான அத்தனை நம்பிக்கையையும் உங்கள் படைப்பு எங்களுக்குள் ஆழவிதைக்கிறது.

இத்தருணத்தில், வள்ளலார் நிறுவிய அணையா அடுப்பை நெஞ்சேந்திக் கொள்கிறோம். முதன்முதலாக, மூன்று கற்களைச் சேர்த்து அருகருகே வைத்து, முதற்கனல் தீ மூட்டி நெருப்பைப் பெருக்கி சோறுண்டாக்கிய வள்ளலாரின் தெய்வீகப் பேரிருப்பை கண்களுக்குள் நிறைக்கிறோம். ஆயிரமாயிரம் வயிறுகளின் பசிப்பிணி போக்கிய அந்த அணையா அடுப்பின் ‘அன்னத்தீ’ தான் உங்கள் பெரும்படைப்புக்குள்ளும் கனலெரிகிறது. எங்கள் எல்லோரின் இருதய வேண்டுதல்களும் என்றுமுங்கள் நிறைவாழ்வுக்கானதாக நிலைக்க அருட்பெருஞ்சோதியை கரங்கூப்புகிறோம்.

எத்தனையோ விமர்சனங்களை, கசப்பின் உமிழ்தல்களை, அறியாமையின் சலனங்களை நிஜவுண்மை அறியாது உங்ஙள்மீதும் படைப்பின்மீதும் இக்காலத்தில் சுமத்தப்படலாம். ஆனால், இப்படைப்பின் அகவுண்மைச்சொல்லின் முன்னால் எத்தகைய வசவும் வலுவிழந்து காலத்தால் அதன் வரலாற்றையிழக்கும். புனைவின்வழி இந்திய நிலத்தின் பெருமானுட வாழ்வினை அசைக்கமுடியாத படைப்பாக்கிய உங்கள் பேருள்ளத்தின் படைப்புமனதினை தெய்வப்பிதாக்கள் ஆசீர்வதித்து அருள்க! கல்பொருசிறுநுரையென எல்லா காழ்ப்பும் கசப்பும் அகலட்டும். ‘தொடுக்கும்போது ஒன்று, தைக்கும்போது ஆயிரமென’ விரிகிற அர்ஜூன அம்புகள்போல உங்கள் தீர்க்கச்சொல் காலத்தால் பெருகி நிலைபெறட்டும்.

ஜூலை 5, குருபூர்ணிமா தினமானது ‘வெண்முரசு நாள்’ என விஷ்ணுபுர இலக்கியவட்ட நண்பர்களால் முன்னெடுக்கப்படுவது மிகுந்த மன எழுச்சியைத் தருகிறது. வழித்துணையாக நிற்கும் எங்கள் மானசீக ஆசிரியருடன் உரையாடும் அருந்தினமாகவும் இந்தநாள் அர்த்தமடைகிறது. தோழமையுறவுகளுடன் நாங்களும் இந்த நேரலை இணைய உரையாடலில் இணைந்துகொள்கிறோம். எல்லோருக்குமான வெளிச்சத்தை ஏந்தியிருக்கும் உங்கள் படைப்புச்சொல்லின் தீநுனி, மானுட அகத்தின் மிச்சயிருளைத் தீண்டுவதாக! காலப்பெருஞ்சுனை கணத்திற்குக் கணம் அருள்நிறைக!

நன்றிகளோடு,
குக்கூ காட்டுப்பள்ளி
புளியானூர் கிராமம்

முந்தைய கட்டுரைதீவண்டி,சாவி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைராஜன் குறை என்பவர் யார்?