மணிபல்லவம்,கீர்ட்டிங்ஸ் – கடிதங்கள்

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

கீர்ட்டிங்ஸ் கதையை வாசித்தேன். அந்தக்கதையில் இருக்கும் எளிமையான ஒரு கொண்டாட்டத்தை ஒரு தலைமுறைக்கு முன்னால் வரை அரசு அலுவலகங்களில் மட்டுமல்ல தனியார் அலுவலகங்களில்கூட பார்க்க முடிந்தது. சனிக்கிழமை வேலைநாள் என்றால் பெரும்பாலான பெண்கள் குழந்தைகளைக் கூட்டிவந்துவிடுவார்கள். அந்தக்குழந்தைகள் அலுவலகத்தில் ஒரு நல்ல சூழலை உருவாக்கும்

அது புரஃபஷனல்’ அல்ல என்று இன்றைக்கு நம்பப்படுகிறது. எல்லாரையும் மிகச்சிறந்த இயந்திரங்களாக ஆக்கி அந்த கருவிகளை இணைத்து ஒரு பெரிய இயந்திரமாக ஆக்கினால்தான் அது நல்ல நிர்வாகம் என்று சொல்கிறார்கள். அதுதான் ஊழியனின் அதிகபட்ச ஆற்றலை வெளியே கொண்டுவரும் என்கிறார்கள். ஆனால் ஊழியன் நிறைவில்லாதவனாகவும் டிப்ரஷன் கொண்டவானாகவும் ஆகும்போது அவனுடைய கற்பனை சக்தி இல்லாமலாகிவிடுகிறது. உழைக்கும் ஆற்றலும் மறைந்துவிடுகிறது. இதை யாரும் இன்று யோசிப்பதில்லை

இன்றைய்க்கு பொதுவாக அரசு ஊழியர்களின் உழைப்பு – பங்களிப்பு ஆகியவற்றை குறைத்து மதிப்பிடுகிறார்கள். அது ஒரு ஃபேஷனாக மாறியிருக்கிறது. ஆனால் இந்தியாவில் உருவான அரசு ஊழியர்கள்தான் இந்த தேசத்தின் போக்குவரத்து, செய்தித்தொடர்பு, வரிவசூல் போல எல்லாவற்றையும் உருவாக்கினார்கள். சூனியத்திலே இருந்து அதை உருவாக்கி எடுத்தார்கள். ஒரு கிராமசேவக் கிராமம் கிராமமாக போய் ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை உருவாக்குகிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அவருக்கு தன் வேலைமேல் நம்பிக்கையும் அதில் மகிழ்ச்சியும் இருக்கவேண்டும். இந்தியா போன்ற மாபெரும் தேசத்தில் உருவான இந்த அரசு நிர்வாகம் ஒரு மனிதகுல சாதனை. அதற்குச் சமானமகா தனியார்த்துறையில் உழைப்போ கற்பனைத்திறனோ இல்லை.

அந்த காலகட்டத்தின் உற்சாகமான ஒரு சூழலை காட்டியது கீர்ட்டிங்ஸ். நான் ஓய்வுபெற்றவன். அந்தக்காலத்தை நினைத்துக்கொண்டேன்

கிருஷ்ணமூர்த்தி

ஜெ

அதிகாரம், ஆணவம், போட்டி, பொறாமை, ஆண்டான் அடிமைத்தனம் என அனைத்தும் பருவுருவெடுத்து, அலைதலும் கொந்தளிப்புமாய் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு அலுவலகத்தில் ஒரு குழந்தை வித்யா என்பதே அழகான விஷயம். நீங்கள் எழுதின நெடுஞ்சாலையில் புத்தர் மாதிரியான கவித்துவப்படிமம் என்றுதான் எனக்குப்பட்டது. எரிச்சலும் அமர்த்தலும் ஆணவமும் சோம்பலுமாய் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு அலுவலகத்தில் குழந்தைக்கு என்ன இடம் ? குழந்தைமைக்கு என்ன பொருள் ? ஆனால் அங்கும் அது இருக்க முடியும். கண்டவர் விண்டிலர் போல தோன்றியும் மறைந்தும் போக்குக்காட்டியபடி, இருக்கும் சில அறைகளுக்குள் தனது திருவிளையாடலை நிகழ்த்த முடியும் என்பதே புன்முறுவலை வரவழைக்கும் விஷயம்.

சித்தம்போக்கிலே கவனமின்றி செய்த ஒரு திட்டத்தில் ஏற்பட்ட நஷ்டம் மேலதிகாரியின் பார்வையில் ஊழலாகப் படுமே என்ற பதற்றம் சிவசங்கரனுக்கு; தனது பதவி உயர்வும் அதனால் கிடைக்கக்கூடிய கூடுதல் வருமானமும் போய்விடுமே என்ற கவலை ; தற்காலிகமாக வேலை நீக்கம் செய்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்; அப்படியும் ஒரு வண்ணத்தீற்றலெனெ வாசலைக்கடந்துபோகும் குழந்தையைக்கண்டுவிட்டு எங்கே உயரதிகாரி கண்ணில் பட்டு அதுவேறு பிரச்சினையைக்கிளறப்போகிறதோ என்ற கூடுதல் பயம். அந்நிலையிலும்கூட ‘அந்த குழந்தையை கவனிக்க, சமாளிக்க ஒரு ஜேஈ போகவேண்டிய தேவையில்லை, பியூன் போதும்’ என்ற அதிகாரப்படிநிலை குறித்த பிரக்ஞை போகவில்லை.அப்படியே ஒரு டிபிகல் அரசு அதிகாரியை அருமையாக கண்முன் நிறுத்துகிறீர்கள்.

அந்தக் குழந்தை இன்னும் சில குழந்தைகளுக்குத் தாயாக மாறி தாலாட்டிக்கொண்டிருப்பதை கேள்விப்பட்டு மலரும் இடம் வெகு அழகு. அதுபோலவே, தன்வீட்டுக் குழந்தையும் எப்போதும் நாற்பது ஐம்பது குழந்தைகளுக்கு ஆசிரியையாக இருப்பதை ஒரு கணம் நினைத்து ஆனந்திக்கையில் அந்த அதிகாரிக்குள் இருக்கும் குழந்தை மீதான வாஞ்சை வெளிப்படும் இடம் ஒரு ஹைகூ போல. அறுந்துகொண்டிருக்கும் வேரைப்பிடித்து கிணற்றுக்குள் தொங்கிக்கொண்டிருப்பவன் நாவில் சொட்டும் தேனை ருசிக்கும் கதைதான் நினைவுக்கு வந்தது.

இறுதியாக கடுங்கோபத்துடன் வந்தேவிடும் உயரதிகாரி இஸ்மாயில் மரைக்காயர் எதிர்கொள்வது அவர் சோதனையிடுவதற்காக வந்திருக்கும் விவகாரத்தையோ அது தொடர்பான கோப்புகளையோ இல்லை. குழந்தையை. அவருக்கு கீர்ட்டிங்ஸ் வழங்கும் குழந்தையை. அப்படியே குளிர்ந்துருகிக் கனிந்துபோகும் அவரோ வழங்கப்படும் ஒன்றோடு இரண்டாவதையும் கேட்டு வாங்கிக்கொள்கிறார். தனக்குக்கிடைத்த ஆசியை அப்படியே அனைவருக்கும் மறவாமல் பகிர்ந்தும் அளிக்கிறார்.

இந்த இடம் எனக்கு நீங்கள் யாமம் குறித்து எழுதிய விமர்சனத்தை நினைவுபடுத்தியது (ஹ்ம்ம் … இனி உங்கள் கதைகளுக்கு உங்கள் வார்த்தைகளையேதான் துணைக்கழைக்கவேண்டும்போல :))

மனமுருகி இருகைகளையும் விரித்தேந்தி அல்லா என்று அழைக்கும் ஒருவனுக்கு அல்லா அளிக்கும் பரிசல்லவா அது ? ஆம், அல்லாவின் ஆசி பொருண்மையுறுகையில் ரோஜாவாக மட்டுமல்ல, ஒரு கீர்டிங்க்ஸ் கார்டாகவும் ஆகக்கூடும். அது சிவசங்கரன் அபயம் நாடும் முத்தாலம்மனின் மூலமாகவும் வரக்கூடும்.

பொன் முத்துக்குமார்

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

மணிபல்லவம் கதையை சில சொந்த அனுபவங்களுடன் கலந்து கற்பனைசெய்துகொண்டேன். முப்பதாண்டுகளுக்கு முன் நான் கோஸ்டல் கார்ட்ஸ் ஊழியனாக இருந்தபோது இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரைகளில் வரும்போது கரையோரமாக வரமாட்டோம். ஏராளமான பாறைகள் உண்டு என்பார்கள். இரவில் பார்த்தால் சிலசமயம் சிலபாறைகள் மேலே எழுந்து கோபுரம் போலவே நின்றிருக்கும். பிறகு மறைந்துவிடும். இங்கே ஆழமில்லாத பகுதிகள் நிறைய உள்ளன. இங்கே இன்னமும்கூட ஆழ்கடல் ஆராய்ச்சிகள் முறையாக நடைபெற்றதில்லை. நடைபெற்றால் நிறைய ஆச்சரியங்கள் வெளியே வரலாம். ஆனால் நமக்கு இப்படி ஒரு ஆழமான ரகசியம் இருக்கிறது என்பதே மனநிறைவூட்டுவதுதான்

டி.எஸ்.சிவகைலாசம்

அன்புள்ள ஜெ

மணிபல்லவம் கதை என்னுடைய கனவில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கிறது. அது மனதில் ஆழத்தில் இருக்கலாம். ஆனால் அது ஒரு ஹாண்டிங் ஆன விஷயம். நம்முடைய ஆழம் அது. அங்கே நாம் இழந்தவையும் கைவிட்டவையும் மட்டும் அல்ல நமக்காக காத்திருப்பவையும் இருக்கின்றன என்று நினைத்தேன். புதுமைப்பித்தனின் கபாடபுரம் கண்ணதாசனின் கடல்கொண்டதென்னாடு ஆகியவற்றை வாசித்தேன். இது உண்டா இல்லையா என்பது அல்ல முக்கியம். இந்தக் கனவை நாம் புனைவிலாவது நிலைநிறுத்தியாகவேண்டும் என்பதுதான்

ஆர்.முத்து செல்வன்

முந்தைய கட்டுரைரம்யா, திராவிட மனு- கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசின் பெண்கள்- சுபஸ்ரீ