சிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா?

செக்காவ்

இசை, ஓவியம் போன்ற ‘அர்த்தமில்லாத’ தூய கலைகளைப்பற்றியே பக்கம்பக்கமாக விமர்சனங்களும் ஆய்வுகளும் எழுதப்பட்டுள்ளன. இலக்கியம் கருத்தியல் உள்ளடக்கமும், உள்தர்க்கமும் உள்ளது. மொழியில் அமைந்துள்ளது, மொழி என்பது குறியீடுகளின் மாபெரும் தொகை. மேலும் இலக்கியம் எல்லா உலக விஷயங்களையும் பற்றிப் பேசுகிறது

எல்லாக் கலைகளையும் ‘தன்னியல்பாக’ அணுகுவது பலசமயம் போதாத ரசனையை உருவாக்கக்கூடும். பல காலத்துக்கு நம் ரசனை குறைப்பட்டதாக இருப்பதை நாம் அறியாமலும் இருக்கக் கூடும். பிரக்ஞைபூர்வமான பயிற்சி என்பது எல்லாக் கலைகளுக்கும் தேவையானது.

இலக்கியத்தை வாசிப்பதை பிரக்ஞைபூர்வமாக பயில்வது நல்ல விஷயம் என்றே நினைக்கிறேன். நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் ஆரம்ப வாசகர்களுக்காக விரிவாக இதைச் செய்ய முயன்றிருக்கிறேன். என்னுடைய சிறுகதைப்பட்டறைகள் எல்லாமே நல்ல சிறுகதைகளை வாசிப்பதற்குமான பட்டறைகள்தான். அவற்றைப்பற்றி நான் எழுதிய எழுதும்கலை வாசிப்பதற்கான பயிற்சிக்கையேடும் கூட

எல்லா நல்ல விமர்சனங்களும் அடிப்படையில் வாசிப்பதற்கான பயிற்சிகள் என்றே நினைக்கிறேன். ஆகவேதான் நான் பொதுவாக எழுத்தாளனை நோக்கி எழுதப்படும் விமர்சனங்களை தவிர்க்கிறேன். அவை வாசகனை நோக்கி மட்டுமே எழுதப்படவேண்டும்.

மாபசான்

இந்தச் சொல்லாட்சிகளை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். பிரக்ஞை பூர்வமாக வாசிப்பதல்ல, பிரக்ஞைபூர்வமான வாசிப்புப் பயிற்சி என்பது. கதைகளை வாசிப்பதற்கு சிறந்த முறை அவற்றின் மாயத்துக்கு உங்களை ஒப்புக்கொடுப்பதே. கதைகேட்கும் குழந்தையின் எளிமையான கற்பனையுடன் கதைகள் முன் அமர்ந்திருப்பதே. வடிவம், உள்ளடக்கம், தத்துவம் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் ஒரு துண்டு வாழ்க்கை உங்கள் முன் வைக்கப்படுகிறது என உணர்ந்து அவ்வாழ்க்கையை அகத்தில் கற்பனை மூலம் விரித்தெடுத்துக்கொண்டு அதை நாம் நம்மளவில் வாழ்ந்து பார்ப்பதே. அந்தக்கதையை நம் வாழ்வனுபவங்கள் நம்முடைய சொந்த அகக்கனவுகளை மட்டும் கொண்டு மதிப்பிடுவதே. அதைச்செய்வதற்கு தடையாக ஆகும் பிரக்ஞைபூர்வமான வாசிப்பு ஆபத்தானது. கதைகளை நம்மிடமிருந்து மறைத்து வெறும் மூளைப்பயிற்சியாக ஆக்கிவிடும் என நான் அஞ்சுகிறேன்.

இதையே சங்கீதம் கேட்பதற்கும் ராம் சொல்வார் என நினைக்கிறேன். ஓவியத்திற்கும் இதுவே ரசனைமுறை

ஆனால் பிரக்ஞைபூர்வமாக வாசிப்பு பயிற்சி பெறாத ஒருவருக்கு பலசமயம் பல கதைகளுடன் ஒன்றமுடியாமல் போகும். அதற்கான காரணங்கள் சில உள்ளன.

1. நாம் ஒருகுறிப்பிட்ட முறையில் கதைகளை வாசித்துக்கொண்டிருப்போம். அந்த வாசிப்பையே ‘இயல்பான’ வாசிப்பு என்று நினைத்துக்கொண்டிருப்போம். இன்னொரு வகையான வாசிப்பைக் கோரும் கதைகளை இயல்பாக நாம் எதிர்ப்போம் அல்லது தவிர்ப்போம்.

பிக்விக்பேப்பர்ஸ் [டிக்கன்ஸ்] நாவலில் ஒரு இடம் வரும். பிக்விக் ஓவியம்பார்ப்பதைப்பற்றி சில உறுதியான கொள்கைகள் கொண்டவர். ஓவியத்தை அந்த சட்டகத்தில் இருந்து நான்கடி பின்னால்சென்று கைகளை குவித்து அதன் வழியாக பார்ப்பார். அது நிஜமான காட்சி போல தெரிந்தால் நல்ல ஓவியம். இதில் அவருக்கு அபாரமான நம்பிக்கை. ஆகவே அப்போது வர ஆரம்பித்த நவீன ஓவியங்களைக் கண்டு பீதி கொள்கிறார்

சில வருடங்களுக்கு முன்னர் நான் ’கிளி சொன்ன கதை’ எழுதிய போது பல வாசகர்கள் அவை ஏன் அத்தனை விரிவான தகவல்களுடன் இருக்கின்றன, சலிப்பூட்டுகின்றன என்றார்கள். நான் அவர்கள் யதார்த்தவாதக் கதைகளை வாசித்து பழகிய மனநிலையை அக்கதைகளுக்குப் போடுகிறார்கள் என்று சொன்னேன். யதார்த்தவாதம் என்பது ஒரு அக உண்மையை சொல்வதற்காக புற யதார்த்தத்தை கட்டமைக்கிறது. அந்த அக யதார்த்தத்துடன் தொடர்பற்ற புற யதார்த்தத்தை அது முன்வைப்பதில்லை.

ஆனால் இயல்புவாதம் [நாச்சுரலிசம்] முற்றிலும் வேறானது. அதுவும் அக யதார்த்த்தையே சொல்கிறது- எல்லா இலக்கியமும் அப்படித்தான். ஆனால் தனக்கு அக யதார்த்தமே இல்லை என அது பாவனை செய்கிறது. உண்மையில் என்ன இருக்கிறதோ அதை அப்பட்டமாக புறவயமாக ’அப்படியே’ சொல்வதாக அது நடிக்கிறது. அந்த கலை வடிவுக்கு அது தேவை. கிளிசொன்ன கதை அவ்வகைப்பட்ட கதை

அதை நான் விளக்கியபோது வாசகர்கள் அந்தக்கதைக்குள் வரமுடிந்தது. அதாவது ஒரு கலைப்படைப்பைப்பற்றிய சில எளிமையான பின்புலப்புரிதல்கள், சில வடிவப்புரிதல்கள் நம்முடைய வாசிப்பை பலமடங்கு அதிகரிக்கும். நம்முடைய தடைகளை களையும். ஆகவே அத்தகைய வாசிப்புப் பயிற்சி தேவையானதே

2. நம்முடைய வாசிப்பு பலசமயம் கவனக்குறைவானதாக இருக்கும். ‘நானெல்லாம் முழுசா படிக்கறதில்லை சார், சும்மா அப்டியே ஸ்கிப் பண்ணிட்டே போவேன். ஆனா கரெக்டா செண்டரை புடிச்சிருவேன்’ என்று சொல்லும் பல வாசகர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

ஏன், இந்த இணையதளக்கதைவரிசையிலேயே மூன்று பகுதிகளாக வெளியிடப்படும் கதைகளில் இரண்டாம்பகுதிக்கு வருகையாளர்கள் கொஞ்சம் குறைவாக இருப்பதைக் காண்கிறேன். கணிசமான வாசகர்கள் முதலில் கதையின் தொடக்கத்தை வாசிக்கிறார்கள். அப்படியே முடிவை வாசித்துவிட்டு கதைபடித்த திருப்தியுடன் சென்றுவிடுகிறார்கள் என ஊகிக்கிறேன்.

அந்த முட்டாள்கள் ஏன் கதை படிக்கவேண்டும் என்றுதான் ஐயமாக இருக்கிறது. இவற்றை வாசிக்கச்சொல்லி எவரேனும் கட்டாயப்படுத்தினார்களா என்ன? இது ஒரு உயர்தர பொழுதுபோக்காக, ஒரு அறிவுத்தேடலாக, ஒரு நிகர்வாழ்க்கையாக, ஓர் ஆன்மீக சாதகமாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் கதையானது அதை முழுக்கக் கூர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்காகத்தான் எழுதப்பட்டிருக்கிறது. தள்ளித்தள்ளி வாசிப்பவர்கள் கதையை விட்டுவிட்டு அதன் பேசு பொருளை மட்டும் பெற்றுக்கொள்கிறார்கள்.

அப்படி கதைகளை மிகவும் பிழையாக வாசிப்பவர்கள் பலர் உள்ளனர். அப்பிழைகளை அவர்கள் அறிவதே இல்லை. அதற்கு பிரக்ஞைபூர்வமான ஒரு வாசிப்பு உதவலாம். ஒரு சிறுகதையின் வடிவம் எப்படிப்பட்டது, அது தன்னை தொடர்புபடுத்திக்கொள்ளும் முறை என்ன , ஒருகதையில் என்னென்ன விஷயங்களை கவனப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற கேள்விகள் முக்கியமானவை. எனக்கு ஒரு கட்டத்தில் சுந்தர ராமசாமியுடனான உரையாடல்கள் அதற்கு உதவின. ராம் செய்ய முயல்வது இதையே.

எளிமையாகச் சொல்லப்போனால் சிறுகதை முடிவில் உச்சம்கொள்ளும் ஒரு வடிவம். முடிவு திருப்பமாக இருக்கலாம், மௌனமாக அடிக்கோடு போட்டிருக்கலாம், கவித்துவமான ஓர் எழுச்சியாக இருக்கலாம். ஆக முடிவை வாசகன் மிக கவனிக்கவேண்டும். எந்த இலக்கியவடிவமும் வாசக இடைவெளிகள் வழியாகவே தன்னை வாசகனுடன் தொடர்புபடுத்திக்கொள்கிறது. வாசகன் நிரப்பியாகவேண்டிய இடைவெளிகள் அவை [பார்க்க நாவல் என்ற நூல். கிழக்கு பதிப்பகம்] கவிதை அதன் சொற்களுக்கு இடையேயான இடைவெளிகளால் தன்னை தொடர்புறுத்திக்கொள்கிறது. நாவல் அதை நிகழ்வுகளுக்கு இடையேயான இடைவெளிகளால், சிறுகதை முதன்மையாக அதன்முடிவுக்குப்பின் உள்ள மௌனமான இடைவெளியால்தான் தன்னைத் தொடர்புறுத்தும்.

சோற்றுக்கணக்கு கதை விடும் இடைவெளி கெத்தேல்சாகிப் அத்தனை பணம்கொண்டு போட்டும் தன்னை பார்க்கவேயில்லை, என் அன்னை இந்த கை மட்டுமே என கதைசொல்லி உணரும் இடத்துக்கும் ‘அடுத்தவாரமே ராமலட்சுமியை மணந்துகொண்டேன்’ என்று சொல்லப்படும் வரிக்கும் நடுவே உள்ளது. அங்கே பல விஷயங்கள் சொல்லப்படவில்லை. அவன் ஏன் அந்த முடிவை எடுத்தான் என. அதை ஊகிப்பதே வாசகனுக்கான சவால். அதைச் செய்யும்போதே வாசகன் கதையை அடைகிறான்.

அங்கே இப்படி சொல்லியிருக்கலாம். ‘நானும் ஒரு சோற்றுக்கணக்கில் அல்லவா இருக்கிறேன். நான் போடப்படாத சோற்றை கணக்கு வைத்துத்தானே மாமியை வெறுக்கிறேன். பிரியத்தை சோற்றுக்கணக்குக்கு அப்பால் சென்று பார்க்க எனக்கு ஏன் முடியவில்லை? நான் கெத்தேல் சாகிப்பை பார்த்தபோது என்னைப்பற்றி எண்ணி வெட்கினேன். ‘ இந்த வரிகளை எழுதியிருந்தால் வாசகன் தாவ வேண்டிய இடம் இருக்காது. கதைசொல்லி மனதில் நிகழும் அந்த கொந்தளிப்பையும் கண்டடைதலையும் அங்கே நின்று தானும் உணர்பவனே இக்கதையின் சரியான வாசகன்.

அக்கதை பற்றி வந்த பல நிபுணர் கருத்துக்களில் ராமலட்சுமி விவகாரம் தேவையற்ற திணிப்பு என்று சொல்லப்பட்டதை நாம் கவனித்திருக்கலாம். நிறைய சாதாரண வாசகர்கள் அந்த இணைப்பு புரியவில்லை என்று எழுதியிருந்தார்கள். அவர்களிடம் அங்கே ஒரு மௌனம் உள்ளது என்று மட்டும்தான் சொன்னேன். அவர்களுக்கு அதை உடனே தொட முடிந்தது.

இத்தகைய வடிவப்பிரக்ஞை இல்லாத காரணத்தால் அறிவுஜீவி பாவனையுடன் எழுதுபவர்கள் பலர் சிறுகதைகளைப்பற்றி அபத்தமான வாசிப்புகளை நிகழ்த்திக்கொண்டிருப்பதை நான் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்களின் மிகையான [பொய்யான] தன்னம்பிக்கை காரணமாக அவர்களுக்கு எவரும் எதையும் சுட்டிக்காட்டிவிடவும் முடியாது.

ஒரு சிறுகதையில் அதன் தலைப்பு, அதன் தொடுப்பு வாசகம், அதன் முடிப்பு வாசகம், அதன் மையச்சுட்டியாக அமையும் சொற்றொடர்கள், அது முன்வைக்கும் மையப்படிமம் ஆகியவை மிக முக்கியானவை. கெத்தேல் சாகிப்பின் கை ஆரம்பம் முதலே சொல்லப்படுகிறது. கதைமுழுக்க அன்னம் ,சோறு என்ற வர்ணனை வந்துகொண்டே இருக்கிறது

ஆகவே சிறுகதையை எப்படி வாசிப்பது என்பதைப்பற்றிய ஓர் அறிமுகப்பயிற்சி மிக மிக முக்கியமானதுதான். அதையே நான் பல சந்தர்ப்பங்களில் கட்டுரைகளில் செய்கிறேன். சிறுகதைப்பட்டறைகள் நிகழ்த்துகிறேன். ஆனால் இங்கே பெரிய தடை ஏற்கனவே உலக இலக்கியத்தில் கரைகண்ட பாவனையுடன் பல இளம் எழுத்தாளர்கள் உள்ளே வருவதுதான்.

அதேபோல ஒரு சிறுகதையை வாசிக்கும்போது என்னென்ன செய்யக்கூடாது என்பதும் முக்கியமானது. ஒரு சிறுகதை என்பது வாழ்க்கையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரு துண்டு. அந்த மிச்ச வாழ்க்கையை ஊகித்து அந்தக்கதைக்குள் கொண்டு வந்து சேர்த்து வாசிப்பது மிகமிகப் பிழையானது. பலர் நுண்வாசிப்பு என்ற பேரில் இதைச் செய்வதுண்டு. கெத்தேல்சாகிப்புக்கு மனைவி மக்கள் இருந்தார்களா, அவர்கள் அவரது வியாபார முறையைப்பற்றி என்ன சொன்னார்கள், கெத்தேல் சாகிப் அரசாங்கத்துக்கு வணிகம் செய்வதற்கான வரி கட்டினாரா இல்லை சேவைக்கா என்றெல்லாம் கேட்டுக்கொள்ளலாம். ஆனால் அது சிறுகதை வாசிப்பல்ல. சிறுகதை காட்ட விரும்பும் உணர்ச்சிகளையும் தரிசனங்களையும் தவிர்க்கும் முறை அது.

சிறுகதைக்கு இரு சுட்டுச்சட்டகம் உண்டு. [ஃப்ரேம் ஆஃப் ரெஃபரன்ஸ்] ஒன்று கதை வெளிப்படையாக சுட்டிக்காட்டுவது. அதாவது கெத்தேல்சாகிப்பின் வாழ்க்கையைப்பற்றி கதையே அளிக்கும் தகவல்கள். இதை முதல்கட்ட சுட்டுச்சட்டகம் எனலாம். இரண்டாவது தளம் இந்த முதல்கட்ட தகவல்களில் இருந்து கதை அளிக்கும் உணர்ச்சிகளையும் கதை காட்டும் வாழ்க்கைத்தரிசனத்தையும் ஒட்டி வாசகர்கள் ஊகித்துக்கொள்ளச் சாத்தியமான ஒரு சுட்டுச்சட்டகம். கெத்தேல் சாகிப் வழக்கமான மதச்சடங்குகளுக்கு அப்பாற்பட்டவராக இருப்பார் என வாசகன் ஊகிக்கலாம். சமையலே அவரது தொழுகை என கதையே சொல்கிறது. ஆகவே அவர் ஒரு சூஃபி. பெரும்பாலான சூஃபிகள் வழக்கமான மதச்சட்டங்களுக்கு வெளியே நிற்பவர்கள். இந்த ஊகம் கெத்தேல் சாகிபை இன்னும் நுட்பமாக ஆராயவும் அவரை புரிந்துகொள்ளவும் உதவக்கூடியது.

இந்தவகையான பயிற்சிகள் தேவை என்ற உணர்வு இருந்தாலே நாம் மேலும் மேலும் நுண்ணிய வாசிப்பை நோக்கிச் செல்லமுடியும். அதேசமயம் வெறும் பயிற்சியினால் நாம் சிறுகதை வாசிப்பை உருவாக்கிக்கொள்ள முடியாதென்பதையும் அறிந்திருக்க வேண்டும். கற்பனை இல்லாதவருக்கு பயிற்சிகளால் பயனில்லை. ஆகவே வாசிப்புக்கான சூத்திரங்களை உருவாக்க முடியாது. வாசிப்பை வரையறைசெய்துவிடவும் முடியாது. வாசிப்பை பிரக்ஞைபூர்வமான செயலாகச் செய்யவும் முடியாது.

ஜெ

குழும விவாதத்தில் எழுதியது

மறுபிரசுரம் Mar 19, 2011 

முந்தைய கட்டுரைஒளியும் நிழலும்
அடுத்த கட்டுரைஇன்று வெண்முரசு – இசை வெளியீட்டு விழா