ராஜன் குறை என்பவர் யார்?

அன்புள்ள ஜெ,

உங்கள் கடிதத்துக்கு நன்றி.நானே யோசித்த விஷயங்கள்தான் என்றாலும் அதை ஆணித்தரமாக ஒருவர் சொல்லும்போது ஒரு நிறைவு வருகிறது.

இன்னொன்றையும் கேட்க விரும்புகிறேன். ராஜன் குறை என்பவர் தொடர்ச்சியாக உங்களைப்பற்றி எழுதிவருகிறார். ஒரு அப்செஷன் கொண்டவர் போல. அவரைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? ஏன் நீங்கள் அவரை பொருட்படுத்துவதே இல்லை?

எம்.ராஜேந்திரன்

***

அன்புள்ள ராஜேந்திரன்,

எழுதவேகூடாது என நினைத்திருந்தேன், ஆனால் எழுதியாகவேண்டும் என்ற நிலை.

1988 என நினைக்கிறேன், கோணங்கியின் கல்குதிரையில் நான் நக்சலைட் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து சில கவிதைகளை மொழியாக்கம் செய்து பிரசுரித்தேன். அப்போதுதான் ராஜன்குறை எனக்கு அறிமுகமானார். அப்போது அரசுத்துறையில் குமாஸ்தா நிலை ஊழியர். அன்று தன்னை அவர் ஒரு நக்சலைட் செயல்பாட்டாளரான பிராமணர் என்று காட்டிக்கொண்டார். பிராமண அடையாளத்தை மீற அவர் சூட்டிக்கொண்ட பெயர் குறை. அதாவது தீவிர இடதுசாரித் தலைவர்களான மருதையன், வீராச்சாமி போல. அது அன்று ஒரு மோஸ்தர்.

அதன்பின் அவர் அமெரிக்காவுக்கு ஆய்வுக்காகச் சென்றார். அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களில் ‘சமூகவியல்’ ‘மானுடவியல்’  ஆய்வுக்குச் செல்வதற்கான வழிமுறை என்பது இந்து- இந்திய எதிர்ப்பு அரசியல்.

திரும்பி வந்தபின் அவர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் போன்ற திராவிட இயக்கப்பார்வையுள்ள பேராசிரியர்களுடன் தொடர்புகளை உருவாக்கிக்கொண்டார். எம்.எஸ்.எஸ் பாண்டியன் டெல்லியின் பல்கலைகழகச் சூழலில் செல்வாக்கானவர் அன்று. அவர் வழியாக இந்தியாவின் கல்வித்துறைக்குள் நுழைந்தார். அப்போது அவர் உருவாக்கிக் கொண்டதுதான் திராவிட இயக்க ஆதரவு நிலைபாடு.

தொடர்ச்சியாக கொக்கிகளை வீசி மேலே சென்றுகொண்டே இருக்கும் ஒரு ‘தொழில்முறைவாதி’ ராஜன் குறை. மிக வெற்றிகரமானவர். இன்று அவருக்கு இந்த திராவிட இயக்க அறிஞர் என்ற வேடம் மிக உதவிகரமானது, அவருக்கு தனக்கே உரிய திட்டங்கள் இருக்கும். அவருடைய ஆற்றலுக்கு எல்லையே இல்லை. இந்தியச்சூழலில் அடையத்தக்க உச்சகட்ட வெற்றிகளுடன் ஓய்வுபெறுவார். [ஆனால் கூடச்சேர்ந்து மண் சுமக்கும் திராவிடக் கூச்சல்காரர்களுக்கு உதிர்ந்த பிட்டுகூட கிடைக்காது, எப்போதுமே இந்த ஃபார்முலா இப்படித்தான்.]

அவருடைய நோக்கங்கள் என்னவென்று தெரிந்தும் அவர் பொதுத்தளத்தில் உருவாக்கும் நிழல்களுடன் சண்டை போடுவதைப்போல வெட்டிவேலை வேறேதுமில்லை. ஆகவே முற்றாகத் தவிர்க்கிறேன், இனிமேலும் அப்படித்தான்.

ராஜன் குறையின் வாசிப்பு ஒருவகையான வைக்கோல்ப்போர் வாசிப்பு. எந்தப் புரிதலுமில்லாமல் நூல்களை, மேற்கோள்களை அள்ளிஅள்ளி தன்மேல் போட்டுக்கொள்வது. எந்தவகையான கருத்துநிலைபாடுகளை உருவாக்கிக்கொள்ளவும் விவாதிக்கவும் ஆற்றலற்றவர். வழக்கமான ஒன்றாம் வகுப்புத்தர கட்சியரசியல் கட்டுடைப்பு [அதாவது பாசிசத்தை அகழ்ந்து எடுப்பது] தான் அவரும் செய்வது. மேலதிகமாக மேற்கோள்களை தூவிவிட முடியும் அவரால்.

எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் உள்ளே சென்று வாசிக்க, ஆராய அவரால் இயலாது. அந்த நுண்ணுணர்வே அவரிடமில்லை. இலக்கியத்தில் அவருடைய நிலைபாடு, ரசனை, தேர்வு என ஏதும் இல்லை. அவர் அப்போது எந்த தரப்பை எடுத்து பேசுகிறாரோ அந்தத்தரப்பில் எழுதப்படுவதெல்லாம் இலக்கியம். மற்றதெல்லாம் எதிரிகளால் எழுதப்படுவது, ஆகவே ஃபாஸிசம், நாசிசம், இன்னபிற. அவ்வளவுதான். இதற்கு அந்த மேற்கோளெல்லாம் தேவையே இல்லை. அதெல்லாம் சும்மா லுலுலாயி என்று அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும், அப்புறமென்ன?

இத்தகைய தொழில்முறையாளர்கள் கருத்தியல் தளத்தில் உருவாக்கும் அழிவு மிகப்பெரியது. இவர்கள் பேசுவது இவர்களின் அரசியல் அல்ல. ஆனால் சூழலில் பெரிய ஓசையை கிளப்பிக் கொண்டிருப்பார்கள். சரி, உண்மையில் அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் கொண்ட வாசகர்கள் இவர்களை கொஞ்சம் பிந்தியேனும் கண்டுகொள்வார்கள் என நினைக்கவேண்டியதுதான்.

ஆனால் என்ன அபாயம் என்றால் இதைப்போன்ற உள்நோக்கம் கொண்ட, தன்னலம்மிக்க , ஆய்வாளர்கள் பேரழிவுகளை உருவாக்கிவிடுவார்கள் என்பதுதான். எல்லா சூழலிலும் பிற்பாடு அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் அழிவுக்கருத்துக்கள் முதலில் இவர்களால்தான் உருவாக்கப்படும்.

சிதானந்த மூர்த்தி

ஓர் உதாரணம் சொல்கிறேன். இன்று கன்னடச்சூழலில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக பெருகி பேரழிவை உருவாக்கிய காழ்ப்பை ஓர் அரசியல் கருத்தாக முன்வைத்தவர் சிதானந்தமூர்த்தி என்ற பேராசிரியர். அவர் ஆய்வுச்சூழலில்தான் அந்தக் கருத்தை உருவாக்கினார். அது வாட்டாள் நாகராஜ் வழியாக தெருவுக்கு வந்து தலைகள் உருள காரணமாக ஆகியது. இந்தியா முழுக்க இத்தகைய தன்னலமே நோக்கமாகக் கொண்ட, பேராசிரியர்கள்  ஆய்வுச்சூழலில் உருவாக்கி வெளியே விடும் கருத்துக்கள் பேரழிவை விளைவித்திருக்கின்றன.

அத்தகைய ஒருவர் ராஜன் குறை. அதை ஐயமறத் தெரிந்துகொண்ட ஒரு காலகட்டம் எனக்கு தொண்ணூறுகளில் வந்தது. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொல்லி முடிக்கிறேன். இதைப்போல பல உள்ளன.

தமிழ்ச்சூழலில் இன்று பெரும் சமூகப்பூதம் போல நின்றிருக்கும் ‘நாடகக்காதல்’ என்ற கருத்தை முதன்முதலாக உருவாக்கியவர்கள் ராஜன் குறையும் எம்.எஸ்.எஸ்.பாண்டியனும்தான். தலித்துகளுக்கு எதிரான இடைநிலைச்சாதி வன்முறைக்கு முதல்புள்ளிகளாக எவரையேனும் சொல்லமுடியும் என்றால் இவர்களைத்தான்.

இந்தியாவில் எண்பதுகள் முதல் உருவாகி வந்த இரண்டாம்கட்ட தலித் அரசியல் அலை இடைநிலைச்சாதியினரை அச்சுறுத்தியது. ஆகவே அதன் அற அடிப்படையை குலைக்க எண்ணினார்கள். அவர்களின் தேவைக்காக  இந்தியாவின் தலித் இயக்கங்களின் ஒட்டுமொத்த தார்மீகத்தையே நிராகரிக்கும் மூன்று அடிப்படைக் கருத்துநிலைகளை ராஜன் குறை -எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குழு திட்டமிட்டு உருவாக்கியது.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன்

அக்கருத்துக்கள் இவை:

1 தலித் இளைஞர்கள் கட்டுப்பாடற்றவர்கள், ஆகவே நிறுவனம் சார்ந்த உழைப்புக்குத் தகுதியற்றவர்கள். வேலைசெய்யும் இடங்களில் அவர்கள் திருடுகிறார்கள். அவர்கள் இயல்பிலேயே நேர்மையானவர்கள் அல்ல. உழைப்பிடங்களில் அவர்கள் அமைதியின்மையை உருவாக்குகிறார்கள். கூட்டமாகச் சேர்ந்துகொண்டு சூப்பர்வைசர்களை தாக்குகிறார்கள். ஆகவே முதலாளிகள் அஞ்சுகிறார்கள். புதிய தாராளமயப் பொருளியல் சூழலில் இவர்கள் வேலையில்லாதவர்களாக இருக்க இதுவே காரணம்.

2. தலித் இளைஞர்கள் ஆணாதிக்கப் பார்வை கொண்டவர்கள். தங்கள் ஆண்திமிர் வழியாக சுயஅடையாளம் தேட முயல்பவர்கள். ஆகவே அடிப்படையில் பொறுக்கித்தனமானவர்கள். பெண்களை அடிமைகளாகவும் பொருட்களாகவும் காண்பவர்கள். அவர்களுக்கு காதல், அன்பு போன்ற உண்மையான உணர்ச்சிகள் இல்லை.

3.தலித் இளைஞர்கள் உயர்சாதிப்பெண்களை நாடகக்காதல் செய்து கைப்பற்றுகிறார்கள், அல்லது அவர்களின் வாழ்க்கையை திட்டமிட்டு அழிக்கிறார்கள்.

ராஜன் குறை – எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கட்டுரையிலிருந்து சமீபத்தில் இதழியல்- நீதித்துறை உடபட பலரிடமும் செல்வாக்கு செலுத்திய பகுதிகள் இவை

தொண்ணூறுகளில் இவர்கள் வடதமிழகப்பகுதிகளில் நிகழ்த்திய ‘கள ஆய்வில்’ தலித் இளைஞர்கள் தொழிலிடங்களில் திருடுவது, சூபர்வைசர்களை தாக்குவது போல  ‘எண்ணற்ற’ நிகழ்ச்சிகள் நடந்தன என்றும் ஆகவே அவர்களுக்கு முதலாளிகள் வேலைகொடுக்க அஞ்சுகிறார்கள் என்றும் தெரியவந்ததாக எழுதினார்கள்.

தலித் இளைஞர்கள் தங்கள் சமூகத்துப் பெண்களின் உதவியுடன் இடைநிலைச்சாதிப் பெண்களை திட்டம்போட்டு கவர்வதாகவும், அவர்களை காதலிப்பதாக ஏமாற்றுவதாகவும்,அப்பெண்கள் வழிக்கு வராவிட்டால் அவமதிப்பதாகவும், வடதமிழகத்தின் சாதியமோதல்களுக்கு அதுவே காரணம் என்றும் கண்டடைந்ததாக  எழுதினார்கள்.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் டெல்லியில் இருந்தார். இங்கே அந்தக் ‘களஆய்வை’ செய்தவர் ராஜன் குறை. அப்போது அவரை ஒருமுறை பேருந்து நிலையத்தில் சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் தலித் பிரச்சினைகளைப்பற்றி ஆய்வு செய்வதாகச் சொன்னார்- செய்த ஆய்வு இது.

ராஜன் குறை -எம்.எஸ்.எஸ்.பாண்டியன் குழு உருவாக்கிய இக்கருத்துக்கள் பொதுத்தளத்திற்கு வரவில்லை.  Economic Political Weekly போன்ற ‘அறிவுத்தள மதிப்பு’ கொண்ட ஆய்விதழ்களில் இக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அங்கே இவை உரியமுறையில் மறுக்கப்படவில்லை. ஆகவே அங்கிருந்து நூற்றுக்கணக்கான ஆய்வேடுகளில் மேற்கோள் காட்டப்பட்டன. வெளிநாட்டு இதழ்களில்  ‘ஆய்வுலகில் நிறுவப்பட்ட’ செய்தியாக வெளியிடப்பட்டன. அதன்பின் இந்தியாவின் ஆங்கிலநாளேடுகளின் கட்டுரைகளுக்கு வந்தன. அங்கிருந்து அரசியல்வாதிகளை வந்தடைந்தன. அரசியல் மேடைகளில் பேசப்பட்டன.

இன்று தமிழகத்தின் இடைநிலைச்சாதியில் அத்தனைபேரும் சாதாரணமாக ஏதோ அறுதியுண்மை போல, அவர்களே கண்டடைந்த அனுபவ உண்மை போல, இவற்றை பேசிக்கொண்டிருக்கிறார்கள். தலித் அரசியல் என்று சும்மா வாயைத் திறங்கள், மேலே சொன்ன மூன்று அபிப்பிராயங்களும் எந்த இடைநிலைச் சாதியிடமிருந்தும் எழுந்து வரும். இந்தியாவெங்கும் ஏன் கேரளத்தில் கூட ராஜன்குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இருவரின் கருத்துக்கள் தலித்துகளுக்கு எதிராக மேற்கோள் காட்டப்படுகின்றன.

இந்த மூன்று சித்திரங்களும் உண்மையானவை அல்ல, வெளியில் இருந்து திட்டமிட்டு நுட்பமாக உருவாக்கப்பட்டு தலித்துக்கள் மேல் சுமத்தப்பட்டவை என்பது எவருக்கும் தெரியாது.

இந்த மூன்று சித்திரங்களுமே அமெரிக்காவின்  ஆப்ரிக்க வம்சாவளி மக்களைப் பற்றி அங்கே வெள்ளையர் கொண்டிருக்கும் முன்முடிவுகள். அவை அப்படியே இங்கே எடுத்தாளப்பட்டன. ராஜன் குறையே தலித் இளைஞர்களை அமெரிக்க ஆப்ரிக்க வம்சாவளி மக்களுடன் திறமையாக ஒப்பிட்டுச் செல்வதை இந்த ‘ஆய்வுகள்’ முழுக்கக் காணலாம்.

உண்மையில் இந்த மூன்று முத்திரை குத்தல்களில் இருந்து இனி எளிதில் தலித்துக்கள் வெளியே செல்லமுடியாது. ஏனென்றால் இன்று இது ஒரு சமூகநம்பிக்கையாக நிலைநாட்டப்பட்டுவிட்டது. இன்று தலித் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவது இந்த ஆய்வாளர்கள் திட்டமிட்டு உருவாக்கிய அவநம்பிக்கையின் அடிப்படையிலேயே.

ஆணவக்கொலைகளுக்கு அடிப்படையான மனநிலையை உருவாக்குவது ராஜன்குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் தொடங்கிவைத்த இந்த அடையாளப்படுத்தலும் நாடகக்காதல் என்ற கருத்தும்தான்.இன்னும் ஒரு தலைமுறைக்காலம் தலித்துகளுக்கு எதிரான அத்தனை வன்முறைகளுக்கும் காரணமாக அமைவன ராஜன் குறை- எம்.எஸ்.எஸ்.பாண்டியன் உருவாக்கிய இந்த மூன்று வரையறைகள்தான்.

இந்த ‘ஆய்வுக்கட்டுரைகளின்’ மொழிநடை மிகச்சமத்காரமானது. உண்மையில் கட்டுடைப்பு போன்ற உத்திகள் தேவைப்படுவது இந்தவகையான மொழிநடைகளின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளத்தான். ஆனால் இவர்கள் கதைகளை தாறுமாறாக உடைத்து அபத்தமாக ‘விளக்க’ அதைப் பயன்படுத்துகிறார்கள்.

மேலே கொடுத்திருக்கும் மூன்று பத்திகளை மட்டுமே பாருங்கள் இவர்கள் எவர் என்று தெரியும். மிக அப்பட்டமான முத்திரைகுத்தி ஒழிக்கும் அரசியல் ஜாலக்கான கல்வித்துறை நடையில் தரப்பட்டுள்ளது. உதாரணமாக ராஜன் குறையின் இந்தச் சொற்றொடரைப் பாருங்கள். அதில் முக்கியமான வார்த்தை The use of violence by Dhalit youths. தலித் இளைஞர்கள் பயன்படுத்தும் வன்முறை-க்கான சமூகக்காரணங்களை அவர் மேலே ஆராய்கிறார்.

ஆனால் தமிழ்நாட்டில் தலித் இளைஞர்கள்தான் வன்முறையை உருவாக்கியிருக்கிறார்கள் என்று யார் சொன்னது? அதுவா இங்குள்ள களஉண்மை? இங்கே அவர்களா உண்மையான வன்முறையாளர்கள்? இதுவரை இங்கே எந்த உயர்சாதியினராவது தாக்கப்பட்டிருக்கிறார்களா? திருப்பித் தாக்குவதாவது நடந்திருக்கிறதா? சங்கர், இளவரசன் போன்றவர்களின் கொலைகளை நியாயப்படுத்தும் முன்முடிவுகளை உருவாக்குதல் அல்லவா இது?.

அதன்பின் சாதுரியமாக அடுத்த வரி new masculine subjectivity of dalit youths மேலே சொல்லப்பட்ட ‘தலித் இளைஞர்கள் பிறர்மேல் காட்டும் வன்முறைக்கான’ காரணம் இது என்கிறார். அதாவது ‘புதிதாக அவர்கள் கண்டடைந்த ஆண்திமிர் சார்ந்த தன்னடையாளம்’ தான் அவர்களின் வன்முறைக்கான அடிப்படையாம். அங்கிருந்து ஆரம்பிக்கிறது ‘நாடகக்காதல்’ என்ற கருத்து.

அதை தெளிவாக ராஜன் குறையே வரையறை செய்கிறார். love plays a central role in defining the masculine identity of dalit youths. ‘தலித் இளைஞர்களின் ஆண்திமிர் சார்ந்த அடையாளத்தை வரையறை செய்வதில் காதல் ஒரு மையமான இடத்தை வகிக்கிறது’ என்கிறார்.

தலித் இளைஞர்களின் முக்கியமான பொழுதுபோக்கே வேலைக்கு அல்லது படிக்கச்செல்லும் உயர்சாதி பெண்களை சீண்டி அவமதிப்பதுதானாம் [Their major pastime is to tease woman who go to study and work].இவ்வாறு தலித் இளைஞர்கள் உயர்சாதிப்பெண்களைச் சீண்டுவதும் அவமதிப்பதும் அவர்களால் அகராதிபேசுதல் என்று பெருமையுடன் சொல்லப்படுகிறது என்கிறார்.

உயர்சாதிப் பெண்களை கவர்ந்து வென்று அடைவது தலித் ஆண்களின் ஆண்மையின் நிரூபணமாக அவர்களால் கருதப்படுகிறது என்கிறார் ராஜன் குறை. அதில் உள்ள வார்த்தை enticing. மிக நுட்பமான வார்த்தை. மாயங்களால் மயக்கி கவர்வது என்ற நுண்பொருள் கொண்டது.

இந்தவகையான கட்டுரைகள் தேவையான எல்லா ‘முற்போக்கு’ பாவனைகளையும் கடைசியில் தொகுப்புரையில் கொண்டிருக்கும். எல்லாவகையான அறிவுத்தள சர்க்கஸ்களையும் அடித்திருக்கும். சிலசமயம் வலுவற்ற ஒரு மறுதரப்பையும் மேலோட்டமாகச் சேர்த்து இந்த ‘ஆய்வுகளுக்கு’ ஒரு நடுநிலைத்தன்மையையும் உருவாக்கியிருப்பார்கள்.

நம்மூர் எளிய தலித் செயல்பாட்டாளர்கள் இவர்களிடம் பேசவே முடியாது. ராஜன் குறை சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஆயிரம் மேற்கோள்களை அள்ளிக் குவிக்கவும் செய்வார். நயந்து பேசுவார், குழைவார், தனக்கு எதிரான பேச்சை சொல்சொல்லாக கட்டுடைப்பார். ஆனால் அவர் உத்தேசித்த நஞ்சு ஆழமாக இறக்கப்பட்டுவிட்டிருக்கும்.

மேலே சொன்ன கட்டுரையை நான் மேலோட்டமாக வாசித்தது நினைவிருக்கிறது. உண்மையில் அரசியல்வாதிகள் கையில் எடுக்கும்வரை எனக்கேகூட இந்த முத்திரைகுத்தலின் ஆற்றல் என்ன என்று புரியவில்லை. எனக்கு இதெல்லாம் கல்வித்துறையாளர்களின் சமத்காரங்கள், சிறுவட்டத்தில் புழங்குபவை என்ற எண்ணமே இருந்தது.சமீபத்தில் இந்த வரிகள் இவர்களின் ‘ஆய்வுமுடிவுகளாக’ உயர்மட்டங்களில் சுற்றிவருவதை வாட்ஸப்பில் கண்டபோது திகைப்பும் பதைபதைப்பும் ஏற்பட்டது. நான் மேலே கொடுத்திருப்பவை வாட்ஸப் ஃபார்வேட்கள்.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இடைநிலைச்சாதியின் அரசியல் கொண்டவர்.  ராஜன் குறைக்கு அப்படி எந்த அரசியலும் இல்லை. உண்மையில் நேரில் பழகுவதற்கு இனியவர், உற்சாகமாகப் பேசுபவரும்கூட. அவரை அறிந்தவன் என்றவகையில் அவருக்கு தனிப்பட்ட முறையில் சாதிவெறியோ, காழ்ப்போ உண்டு என்றுகூட நான் நினைக்கவில்லை.

ஆனால் ராஜன் குறைக்கு அன்று எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் தொடர்பு தேவைப்பட்டது, ஆகவே அக்கருத்தை ‘களஆய்வு’ செய்து கொடுத்தார். இன்று சாதாரணமாக அதை மறுத்து கடந்துசென்று அடுத்த அரசியலைப் பேசுவார். தேவை என்றால் நேர் எதிரான கள ஆய்வையும் செய்து தருவார், வாதாடவும் வருவார். அவருக்கு லாபம் இருக்கவேண்டும், அவ்வளவுதான்.

ஆனால் அவர் உருவாக்கிய அழிவு அழிவுதான், சிந்தப்பட்ட ரத்தம் ரத்தம்தான். அவர் உருவாக்கிவிட்ட பூதத்திற்கு அவர் பொறுப்பேற்க மாட்டார்.

இன்னொரு ஆரோக்கியமான, முற்போக்கான அறிவுச்சூழல் இத்தகைய அப்பட்டமான இனவாதத்தை – நாஸிஸத்தை வெறுத்து ஒதுக்கும். இதை உருவாக்கியவர்களை அருவருத்து விலக்கும். ஆனால் தமிழ்ச்சூழலில் இவர்களே முற்போக்காளர்களாக அங்கி மாட்டிக்கொண்டுவந்து மற்றவர்களை ஃபாஸிஸ்டுகள் என்கிறார்கள்.

எழுதவந்த காலம் முதல், பிரசுரமான இரண்டாவது கதை முதல், இன்று வந்து கொண்டிருக்கும் கதைகள் வரை, நான் தலித் மக்கள் மீதான அடக்குமுறையையும், அதிலிருந்து அவர்கள் மீண்டெழுந்ததன் பெருமைமிக்க வரலாற்றையும்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.  அது என் மாறாத நிலைபாடு. அதற்கு இளமையில் நான் கண்ட அனுபவங்களில் இருந்து எழுந்த அறவுணர்வே அடிப்படை. ஆகவே என்றும் தலித் இயக்கங்களின் சகபயணி. என்னால் அறவுணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ராஜன்குறை போன்ற ஒருவரை எவ்வகையிலும் பொருட்படுத்தவோ மதிக்கவோ முடியாது. அவருடைய சொற்சிலம்பங்களுடன் களமாடவும் பொழுதில்லை.

ஜெ

***

 

திராவிட மனு

முந்தைய கட்டுரைகுருபூர்ணிமா கடிதம்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-25, மலைவிளிம்பில் [சிறுகதை]