இடதுசாரிகளுடன் என்ன பிரச்சினை?

அன்புள்ள ஜெ

இணையத்தில் இன்று மிக அதிகமாகக் கூச்சல்போடுபவர்கள் இடதுசாரிகள்.[ அவர்கள் சொல்லிக்கொள்வது, முற்போக்காளர்கள் என்று]. கிட்டத்தட்ட இணையச் சூழலையே நிறைத்திருக்கிறார்கள். கொஞ்சம் ஆர்வம்கொண்டு வாசிக்க வருபவர்களை இவர்கள் பலவகையான குரல்களால் குழப்பிவிடுகிறார்கள்.அந்தக் குழப்பத்தை கடந்து கொஞ்சம் அறிவுடன் தொடர்ந்து வாசிப்பவர்கள் வந்துவிடுவார்கள்.ஆனால் பலரை இவர்கள் அங்கேயே தடுத்துவிடுகிறார்கள்.

இவர்கள் ஒருபக்கம் சமூக- அரசியல் விஷயங்களில் ஒரு சராசரி அறிவுத்தரத்துடன் கருத்துக்களைச் சொல்கிறார்கள். போராளிப்பிம்பத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஆனால் இலக்கியத்தில் பெரிய அழிவுவேலையைச் செய்கிறார்கள்.

நான் பத்தாண்டுகளாக பார்க்கிறேன், ஒவ்வொருமுறையும் தமிழில் எவர் உணமையிலேயே நல்ல எழுத்தை எழுதுகிறார்களோ அவர்களுக்கு எதிராகவே இவர்கள் கூச்சலிடுகிறார்கள். ஒரு நல்ல கதை வெளிவந்தால் உடனே அதை அசட்டுத்தனமாக ’ஆய்வு’ செய்து அது எப்படி ‘மக்கள்விரோத’ எழுத்து என்று நிறுவுகிறார்கள். அதை நம்பி அந்தக்கதையை பலர் படிக்காமல் ஆகிவிடுவார்கள். ஆரம்பநிலையில் இருப்பவர்கள் அந்தக் கோணத்திலேயே புரிந்துகொள்வார்கள்.[யானைடாக்டர் பற்றி அப்படி ஒரு  ‘முற்போக்கு முட்டாள்’ அளித்த விளக்கத்தை நாலைந்து ஆண்டுகள் நம்பியிருந்தேன் என்று நினைக்கயில் எனக்கு என்னைப்பற்றியே அருவருப்பாக இருக்கிறது இன்று.]

இலக்கியச் செயல்பாடு ஏற்கனவே இங்கே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இவர்கள் மிகப்பெரிய அழிவுச்சக்தியாக மாறிவிட்டிருக்கிறார்கள். இவர்களை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று நானும் எண்ணியதுண்டு. ஆனால் இப்போது இவர்களை எதிர்க்காமல் இலக்கியமே பேசமுடியாது என்ற எண்ணத்தை அடைந்திருக்கிறேன்

எம்.ராஜேந்திரன்

***

அன்புள்ள ராஜேந்திரன்,

இப்போது அல்ல நவீனத்தமிழிலக்கியத்தின் தொடக்க காலம் முதலே இவர்களின் செயல்பாடு இதுதான். புதுமைப்பித்தன் அவர் எழுதிய காலம் முதல் எண்பதுகள் வரை இவர்களால் ‘நச்சிலக்கியவாதி’ என்றே முத்திரைகுத்தப்பட்டார். மௌனிக்கும் கு.ப.ராஜகோபாலனுக்கும் ந.பிச்சமூர்த்திக்கும் காலம்பிந்திய ஏற்புகூட கிடைக்கவில்லை.

க.நா.சுவும் சி.சு.செல்லப்பாவும் சி.ஐ.ஏயிடமிருந்து பணம் வாங்கும் ஐந்தாம்படையினர் என அவதூறு செய்யப்பட்டனர். ஜெயகாந்தனும், சுந்தர ராமசாமியும் திரிபுவாதிகள் என்று வசைபாடப்பட்டனர். கி.ராஜநாராயணன் ஆபாச எழுத்தாளர் என்று இழிவுசெய்யப்பட்டார். கு.அழகிரிசாமி பிற்போக்குக் கருத்துக்களை முன்வைப்பவர் என்று சொல்லப்பட்டார். ஜி.நாகராஜன் நசிவிலக்கியவாதி என வசைபாடப்பட்டார். பிரமிள் சாதியவாதி என பழிக்கப்பட்டார். தமிழின் ஒரு நல்ல எழுத்தாளர்கூட விதிவிலக்கு அல்ல.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் அவ்வெழுத்தாளர்கள் மறுக்கமுடியாதபடி தங்களை முன்னோடிகளாக நிறுவிக்கொள்ளும்போது இவர்கள் பல்டி அடிப்பார்கள் – இவர்களே புதுமைப்பித்தனுக்கு நூற்றாண்டு கொண்டாடியது போல.

சுந்தர ராமசாமி பற்றிய ஒரு நினைவை லக்ஷ்மி மணிவண்ணன் சொன்னார். சுந்தர ராமசாமியை கலையிலக்கியப் பெருமன்றம் தொண்ணூறுகளின் கடைசியில் ஒரு கருத்தரங்குக்கு அழைத்தது. அப்போது அழைக்க வந்தவர்களிடம் சுந்தர ராமசாமி சொன்னார். ‘நாற்பதாண்டுகளாக இங்கே நான் வாழ்கிறேன். உங்கள் தலைவர்கள் பலர் என் நண்பர்கள். என்னை நீங்கள் சாதி, மதம் சொல்லியெல்லாம்கூட அவமானம் செய்திருக்கிறீர்கள். ஒரு கூட்டத்திற்குக்கூட அழைத்ததில்லை. ஒருமுறை உங்கள் அழைப்பை நிராகரிக்கும் உரிமையை நான் எடுத்துக்கொள்கிறேன்’.

அவர் அடுத்த ஆண்டு அந்த கருத்தரங்குக்குச் சென்றார். அங்கு அதுவரை அவர்கள் தன்னை நிராகரித்து வசைபாடியதைச் சுட்டிகாட்டியபின்னரே பேச ஆரம்பித்தார்.

உண்மையான பிரச்சினை கொள்கையோ கோட்பாடோ அல்ல. இப்போது கட்சிசார்ந்த இடதுசாரி அமைப்புக்களில்  ஒரு சிறுவட்டத்தினரால் என்மேல் ஒரு தாக்குதல் நடத்தப்படுகிறது. நேற்று நண்பரிடம் தோராயமாக கொஞ்சம் இடதுசாரிக்’ கதைகளை சுட்டிகொடுங்கள், என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று கேட்டிருந்தேன். இந்தக்கதைக்கான சுட்டி வந்தது.

சிறுகதை: பிள்ளையார் – எழுத்தாளர் இரா.முருகவேள்

வாசித்துப்பாருங்கள். இப்படி ஒரு கதையை இன்றைக்கு ஒருவர் எழுதுகிறார் என்றால், இதை நான்குபேர் வாசிக்க முன்வைக்கலாம்  என்று நம்புகிறார் என்றால், அவருடைய அறிவுத்தரம் என்ன? அதைவிட அவர் வாசகர்களைப் பற்றி எண்ணியிருக்கும் மதிப்பீடுதான் என்ன? இதை முதலில் வாசித்தபோது உண்மையில் பகடிக்காக ஏதாவது எழுதியிருப்பாரோ என்றுகூட நினைத்தேன். கொஞ்சம் வாசிக்கும் ஓர் எட்டாம்வகுப்பு மாணவன்கூட இப்படி ஒரு கதையை எழுதமாட்டான்.

நான் வாசித்த 12 கதைகளும் இதே தரம். இந்தக்கதையை நான் தெரிவுசெய்ய ஒரு காரணம் உண்டு. இந்தக்கதை இடதுசாரிகளின் இன்றைய இந்துத்துவ எதிர்ப்பு அரசியலை முன்வைக்கிறது. இது ஓர் அசட்டு எழுத்து என்று சொன்னதுமே இந்த விமர்சனத்தை இந்துத்துவ ஆதரவுக்குரல் என்று ’விளக்க’ ஆரம்பிப்பார்கள். அதற்காகவே இந்தக் கதையை எடுத்து சுட்டிக்காட்டுகிறேன்

சரி, இது பிரச்சாரக் கதை. இந்துத்துவ எதிர்ப்புக் கதை.  ஆனால் பிரச்சாரம் செய்வதிலேயே குறைந்த அளவு அறிவுத்தரம், நுண்ணுணர்வு வேண்டாமா? வர்ணனைகள் உரையாடல்கள் எல்லாமே பழகித்தீய்ந்துபோன தேய்வழக்குகள். வடிவம்  ‘முருகன் ஓர் உழவன், இவன் காலையில் எழுந்து ஏரோட்டுவான்’ என்றபாணியில் இருக்கிறது.

சரி, மார்க்சியப்பார்வை என்கிறார்களே,அதுகூட இல்லை. பதினொன்றாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ஜெகசிற்பியன் எழுதிய நொண்டிப்பிள்ளையார் கதையை அப்படியே இந்துத்துவ எதிர்ப்பு பிரச்சாரத்தை கலந்து பள்ளிப்பையன் நடையில் திரும்ப எழுதிவைத்திருக்கிறார். எண்ணிப்பாருங்கள், நீங்கள் தமிழில் ஒரு நாலைந்து நல்ல சிறுகதைகளை வாசித்தவர் என்றால் இந்த கதையை எங்கே வைப்பீர்கள்?

இதுதான் இன்றைய  ‘முற்போக்கு’ எழுத்து. இது பெரும்பாலும் இப்படியேதான் முக்கால்நூற்றாண்டாக இருந்து வருகிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் இப்படி எழுதுகிற ஒரு நூறுபேர் உருவாகிவிடுகிறார்கள். ஏனென்றால் இதை எழுத எந்த பயிற்சியும் தேவையில்லை. எந்த வாசிப்பும் சிந்தனையும் தேவையில்லை. நுண்ணுணர்வு இருக்கவே கூடாது.

ஆனால் இவர்கள் தங்களுக்கு இலக்கிய அங்கீகாரம் வேண்டும் என எண்ணுகிறார்கள். அதற்காக ஒரு குழுவாக திரண்டுவிடுகிறார்கள். எண்ணிக்கை பலத்தாலேயே, ஓயாத கூச்சலாலேயே, கண்ணுக்குப் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்

யோசித்துப்பாருங்கள், இதை எழுதும் ஒருவர் இலக்கியத்தளத்திற்கு வந்து கருத்துச்சொன்னால் அவரை எப்படிக் கையாளமுடியும்? எந்த அறிவுத்துறைக்கும் எந்த கலைக்கும் ஒரு மிகக்குறைந்தபட்ச அளவுகோலாவது இருக்கும் அல்லவா? அதைக்கூட எட்டமுடியாதவர்கள் எப்படி மதிக்கப்படுவார்கள்? அதன்பொருட்டு இலக்கியவாதிகளும் கலைஞர்களும் வசைபாடப்படுவார்கள் என்றால் இலக்கியம், அறிவியக்கம் கலைச்செயல்பாடு என்பதற்கு என்னதான் பொருள்?

இந்தக்கதையை எழுதும் ஒருவர், இந்த அளவுக்கு குறைந்த  அறிவுத்தரமும் ரசனைத்தரமும் கொண்ட ஒருவர், புதுமைப்பித்தன் முதல் வண்ணதாசன் வரை அத்தனை பேரையும் நிராகரிக்காமல் இதை முன்வைக்க முடியுமா? ஆகவேதான் இவர்கள் இலக்கியவாதிகளை நிராகரிக்கிறார்கள். அதற்கு இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் சமகால அரசியல் சார்ந்து ஒரு நிலைபாடு எடுத்துக்கொண்டு எழுத்தாளர்களை சமூகவிரோதிகள் என வசைபாடுவதுதான்.

அப்பட்டமாக சொன்னால் இங்கே நிகழ்வது இலக்கியத்துக்கும் இடதுசாரி அரசியலுக்கும் இடையேயான மோதல் அல்ல. இலக்கியத்துக்கும்- அசட்டு எழுத்துக்கும் இடையேயான மோதல்தான் .

ஆனால் இலக்கியம் என்பது தனக்கான மதிப்பீடுகளை கொண்டது. அழகியல் மதிப்பீடுகள் என அதைச் சொல்லலாம். அது பெரும்பாலும் அகவயமானது, எப்போதும் விவாதநிலையிலேயே இருப்பது, அதே சமயம் ஒரு வாசகனால் புறவயமாக கண்டுணரவும் கூடியது. இலக்கியவாதிகள் அரசியலை அல்ல, அழகியலையே அளவீடாகக் கொள்ளமுடியும். ஆகவே இந்தக் கும்பலிலேயே ஒருவர் நன்றாக எழுதினால் அவரை அவர்கள் சுட்டிக்காட்டாமலிருக்க முடியாது

க.நா.சு முன்பு கு.சின்னப்ப பாரதியின் தாகம் போன்ற படைப்புக்களை ஏற்று எழுதினார். வெங்கட் சாமிநாதன் சு.சமுத்திரத்தையும் பா.விசாலத்தையும் ஏற்று எழுதினார். சுந்தர ராமசாமி ராஜேந்திர சோழனையும் ச.தமிழ்ச்செல்வனையும் ஏற்று எழுதினார். நான் கந்தர்வன் எழுதிய கதைகளை தொடர்ச்சியாக அடையாளம் காட்டி வந்தேன். பொன்னீலன், பவா செல்லத்துரை முதல் சு.வெங்கடேசன் வரை பலரைப்பற்றி பற்றி எழுதினேன்.

காரணம் எங்கள் அளவுகோலாக இருந்தது அழகியல். தமிழ் அழகியல் விமர்சகர்கள் அத்தனைபேரும் முற்போக்கு முகாமுக்குள் இருக்கும் அத்தனை முக்கியமான படைப்பாளிகளையும் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார்கள். சொல்லப்போனால் நாங்கள் மட்டுமே அவர்களைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறோம். ஆனால் அவர்களை அங்கீகரிப்பது இந்தக் குப்பைகளை நிராகரிப்பது வழியாகவே சாத்தியம்.

ஆனால் இந்தக் குப்பைகளை எழுதுபவர்களுக்கு உண்மையிலேயே அவர்களுக்கும் கந்தர்வனுக்குமான வேறுபாடு தெரியாது. தங்களில் ஒருவர் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டதும் பதற்றம் அடைகிறார்கள். அதை ஒரு சதி என புரிந்துகொள்கிறார்கள். கந்தர்வனை எதிரியாகக் காண ஆரம்பித்துவிடுவார்கள். அவர் புறக்கணிக்கப்பட்டு அவதூறு செய்யப்படுகிறார்.

சென்ற எழுபத்தைந்தாண்டுகளில் தமிழ் நவீன இலக்கியத் தரப்பு இடதுசாரிகளின் சமூகப்பார்வை, அரசியல் செயல்திட்டம் எதையும் பெரும்பாலும் நிராகரித்தது இல்லை. சொல்லப்போனால் அதனுடன் ஒத்துப்போகவே முயன்றது. இடதுசாரிகளால் எதிர்க்கப்பட்ட இந்திராகாந்தியின் அரசியலையோ இந்துத்துவ அரசியலையோதான் அதுவும் எதிர்த்தது. நவீன இலக்கியத் தரப்பின் ஒவ்வாமையே இவர்கள் இலக்கியம் என்றபேரில் எழுதிவிடும் இந்த அசட்டுத்தனம் மீது தான்.

அதுகூட பரவாயில்லை, அதை எங்கோ செய்து கொள்கிறார்கள் என்று புறக்கணிக்கலாம். அதை நிறுவுவதற்காக இலக்கியவாதிகளையும் இலக்கியப் படைப்புகளையும் இவர்கள் சிறுமைசெய்ய முயலும்போதுதான் இலக்கியத்தரப்பில் இருந்து விமர்சனம் எழுகிறது. உடனே ‘அய்யய்யோ எங்கள் முற்போக்கு அரசியலை எதிர்க்கிறார்களே’ என்று பிலாக்கணம் வைப்பார்கள். இந்த எழுத்து அசட்டுத்தனம் என்று சொன்னால்  ‘நீ சிஐஏ ’ என்பார்கள்,  ‘நீ சங்கி’ என்பார்கள். இதுதான் பிரச்சினை.

ஏன் இடதுசாரி மட்டும் எழுத்துக்களை இலக்கியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள் என்பதற்கும் பதில் இதுதான். இந்துத்துவத் தரப்பும் திராவிடத் தரப்பும் அவர்களுடைய வழக்கமான பிரச்சார எழுத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவை பொருட்படுத்தபட வேண்டியவை அல்ல. ஆனால் இவர்கள் இந்த அசட்டு எழுத்தை முன்னிறுத்த தொடர்ச்சியாக சமகால இலக்கியம் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

இவர்கள் உருவாக்கும் கும்பல் அதிகாரத்திற்கு அஞ்சி பெரும்பாலான இலக்கியவாதிகள் வாய் திறப்பதில்லை. தலைமுறைக்கு ஒருசிலர் மட்டுமே அதைச் சொல்கிறார்கள். அவர்கள் சூழ்ந்துகொள்ளப்பட்டு, அவதூறு செய்யப்பட்டு, தாக்கப்படுகிறார்கள்.

முக்கால்நூற்றாண்டாக இவர்களுக்கு ஒரு பாவனை உண்டு ‘நாங்கள் ஒன்றும் இலக்கிய அங்கீகாரத்திற்காக எழுதவில்லை, எங்கள் நோக்கம் அரசியல் மாற்றம்’ என்பார்கள். ஆனால் எந்நேரமும் தீவிர இலக்கியவாதிகளையே எண்ணிக்கொண்டிருப்பார்கள். அவர்களைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். இலக்கியவாதிகள் இவர்களைப் பொருட்படுத்துவதில்லை. இவர்கள் அதை எண்ணி குமைவார்கள். இலக்கிய எழுத்துக்களை திரிக்க, இலக்கியவாதிகளை முத்திரைகுத்தி அவதூறுசெய்ய, வசைபாட முழுநேரத்தையும் செலவிடுவார்கள். பலருடைய முழு வாழ்க்கையுமே இது மட்டும்தான்.

இவர்கள் உருவாக்கும் தடை பற்றிச் சொன்னீர்கள். இந்த தடை உண்மையில் எப்போதுமே இருந்தது. அதைமீறித்தான் புதுமைப்பித்தன் நிலைகொண்டார். சுந்தர ராமசாமி நிலைகொண்டார். ஜெயகாந்தன் நிலைகொண்டார்.

உண்மையிலேயே ஓர் இளம்வாசகனுக்கு இவர்கள் ஆறுமாதம் வாசித்தபின்பும் பொருட்படுத்தக்கூடியவர்களாக தெரிகிறார்கள் என்றால் அவனுடைய அறிவுத்தரமே மிகக்கீழானது.  அவன் என்றைக்குமே இலக்கியத்திற்குள் வர முடியாது, அவன் இவர்களுடனேயே நின்று இதேமாதிரி கதைகளை எழுதி வாசிக்கவேண்டிய விதி கொண்டவன். அங்கே நல்ல எண்ணிக்கை வல்லமையும் உண்டு. நீளமான கண்டன அறிக்கைகளில் இடம் கிடைக்கும். அங்கே போய் வரிசையில் நிற்கவேண்டியதுதான்.

இவர்கள் ஒருவகை அரிப்பான்கள். அசடுகளை அங்கேயே நிறுத்திவிடுகிறார்கள். அது நல்லதுதான்

ஜெ

***

முந்தைய கட்டுரைகௌசல்யா -சங்கர் தீர்ப்பு சட்டத்தின் பார்வையில்…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-4