கீர்ட்டிங்ஸ்,சாவி -கடிதங்கள்

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

கீர்ட்டிங்ஸ் கதை உருவாக்கும் அதிர்வு என்ன என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். என் முன்னாள் பாஸ் ஒரு விஷயம் சொல்வார்- Dont define yourself absolutely. ஒரு இடத்தில் நாம் நம்மை ஒருமாதிரி வகுத்து வைக்கிறோம். கடையில் இருக்கையில் வியாபாரி, ஆபீசில் இருக்கையில் அதிகாரி, வீட்டில் இருக்கையில் அப்பா- இப்படி. இந்த வகுத்துவைத்த அடையாளம் இரும்பு மாதிரி. அதில் நெகிழ்வே இருக்காது. அடையாளம் தேவைதான். அப்போதுதான் வேலை செய்யமுடியும். உறவுகளும் புரஃபஷனலாக இருக்கும். ஆனால் அது மட்டுமே இருந்தால் நாம் இறுக்கமானவர்களாக ஆகிவிடுவோம். மனிதத்தன்மையை இழந்துவிடுவோம்.

அந்த அடையாளத்தை மீறியும் நாம் நம்மை வகுத்துக்கொள்ள வேண்டும். இங்கே மரைக்காயர் தன்னை ஒரு ஆபீசராக வகுத்திருக்கிறார். அந்த குழந்தை அவரை தாத்தாவாக வகுத்துவிடுகிறது. ரோல் பிளேயிங் மாறிவிடுகிறது. சிவசங்கரானிடமும் ஒருகணம் அந்த ரோல் பிளேயிங் மாறுவதைக் காணலாம். ஒரு ஆபீஸில் குழந்தை எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டே இருக்கிறது. அந்த வீட்டை குடும்பமாக அது மாற்றிவிடுகிறது

கதிர் சுதாகர்

***

அன்புள்ள ஜெ,

‘கீர்ட்டிங்ஸ்’ சிறுகதை வாசித்து முடித்தபோது ‘செல்வம் அருளானந்தம்’ எழுதிய எழுதித் தீராப் பக்கங்களின் இறுதி அத்தியாயம் நினைவுக்கு வந்தது. புகைப்படம் மாற்றப்பட்ட யூதர் ஒருவரது கடவுச் சீட்டில் செல்வம் தன் குடும்பத்துடன் கனடா செல்ல பாரிஸ் விமான நிலையத்தின் இமிகிரேஷன் வரிசையில் நிற்கிறார். உருவத் தோற்றத்தையும் பெயரையும் ஒப்பிட்டு பார்த்து அதிகாரிக்குச் சந்தேகம் வராமல் இருக்க, கையிலிருக்கும் தன் பெண் குழந்தையை கிள்ளி அழச்செய்து கவனத்தைச் சிதறச் செய்யவேண்டும் என்பது திட்டம்.

ஆனால் குழந்தையை கிள்ளி அழச்செய்ய முடியவில்லை. இமிகிரேஷன் வரிசை நெருங்குகிறது, குழந்தையை கிள்ளகிள்ள சிரிக்க ஆரம்பிக்கிறது. இமிகிரேஷன் அதிகாரி “பியூற்றிரிபுல் கேர்ள்” என்று அகம் மலர்ந்து அனுப்பி வைக்கிறார். செல்வத்திற்கு புதிய வாழ்க்கை கனடாவில் ஆரம்பமாகிறது. குழந்தைத் தன்மையில் இருக்கும் வசீகரம் எல்லை கடந்தது. இறுக்கமான சூழல்களை எல்லாம் தளர்த்தி விடுகிறது. அது தானாக நிகழும்போது அத்தனை வசீகரமானதாக இருக்கிறது.  கீர்ட்டிங்ஸ் கதையிலும் நிகழந்தது அதுதான்.

அன்புடன்

அனோஜன் பாலகிருஷ்ணன்

***

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கீர்டிங்ஸ், சாவி போன்ற கதைகள்தான் என் வாசிப்புக்கு மிக உகந்தவையாக இருக்கின்றன. நான் மருத்துவத்துறையில் இருக்கிறேன். சாவுக்கு நடுவே வேலைசெய்கிறேன். அவ்வப்போது இந்தக்கதைகளை படிக்கும்போது ஒரு குட்டிப்பயணம் போய்வந்த அனுபவம் வருகிறது. அதோடு பெரிய ஒரு விரிவும் வருகிறது. ஆனால் சாவி போன்ற கதை அப்படியே மலரச்செய்துவிடுகிறது. அதிலுள்ள தத்துவக்கேள்விகளெல்லாம் எனக்கு புரிகிறது. ஆனால் குரங்கின் பாவனைகள்தான் மிக அழகு. தலையில் கைவைத்து உருண்டு உருண்டு சிரிப்பது, கால்மேல் கால்போட்டு மல்லாந்து வானைப்பார்த்து படுப்பது, நெஞ்சில் அறைந்து சத்தம்போடுவது. ஆச்சரியமான அப்சர்வேஷன்கள். குரங்கை கண்முன்னால் பார்ப்பதுபோலிருக்கிறது.

ரவிக்குமார்

***

அன்புள்ள ஜெ..

தேவி சிறுகதை படிக்கும்போது அதில் வரும் நகைச்சுவை வரிகள்

வெடித்து சிரிக்க வைத்தன.  அந்த கதை முடிவில்லாமல் அப்படியே சென்று கொண்டிருக்கலாமே என தோன்றியது.அதுபோன்ற ரகளையான ஒரு கதைதான் சாவி.

கதையின் நாயகன் அரிகிருஷ்ணனின் பெற்றோர் பிரபல கலைஞர்கள் என்ற குறிப்பும்  சூப்பர் ஸ்டார் பற்றிய வசனமும் கதை மேல் இன்னொரு வெளிச்சத்தை பாய்ச்சியது.

உங்கள்  நண்பர் கமல்ஹாசனுக்கு சமர்ப்பணம் செய்த  வனவாசம் கதையில், பார்த்து ரசிக்க யாருமற்ற காட்டிலும் ரோஜா மலர்ந்து வீசத்தான் செய்யும். அதுபோல கலைஞன் வாழ்வது கலைக்காவே.   பிறர் ரசிக்கிறார்களா என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் என்றொரு கோணம் பதிவாகியிருக்கும்.  ரசிகனுக்காக காம்ப்ரமைஸ் செய்ய ஆரம்பித்தால் கலை இருக்காது.

இது ஒரு கோணம்.  இதை கமலுக்கு சமர்ப்பித்திருப்பது மிகவும் பொருத்தமானது

சாவி கதையை பொருத்தவரை, கலை ரத்தம் உடலில் ஓடிக் கொண்டிருக்கும் ஒருவன், மக்களுக்கு எது தேவையோ அதை தர வேண்டும். மக்களை நோக்கி செல்ல வேண்டும். என்று முடிவெடுத்து அப்படி ஒரு தொழிலை தேர்கிறான்.

மாங்காய்ப்பால் உண்டு மலை மேல் இருப்பதைவிட தேங்காய்ப்பால் உண்டு தெருவில் விளையாட பிரஞ்ஞைப்பூர்வமாக முடிவு செய்கிறான்.இதனால்தான்  துக்கமற்ற வான் வாழ்வைவிட  மண்ணில் புரண்டு சுகநஷ்டங்களை சந்திப்பது சந்தோஷமானது என தைரியமாக தன்னம்பிக்கையுடன் குரங்கிடம் அவனால் சொல்ல முடிகிறது.காரணம் அவனே அப்படி முடிவெடுத்துதான் வாழ்கிறான்.

“ஸ்க்ரூ டிரைவரை பயன்படுத்துவதை மட்டுமல்ல, அது எப்படி செயல்படுகிறது என்றும் தெரிந்து கொண்டிருக்கிறது. அரிகிருஷ்ணன் கைகள் நடுங்க பார்த்துக் கொண்டு நின்றான்”

என்ற இடம் மிகவும் நுட்பமானது.

வனவாசம் கதையை கமலுக்கு சமர்ப்பணம் செய்ததுபோல இந்த கதையை ரஜினிக்கு உங்களை அறியாமல்  சமர்ப்பித்து இருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்

காட்டுவாசிகள் எந்த மன அழுத்தமும் அற்றவர்கள்.  கற்பழிப்பு போன்ற சமூக அவலங்கள் கிடையாது.  ஆனால் ஒரு காட்டுவாசியால் புத்தன் ஆக முடியாது.  அந்த நிலை மனம்  எனும் சூறாவளியால் அலைக்கழிக்கப்படும் சாதாரண மனிதனுக்கே உரியது.

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

***

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-3
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-24,அமுதம் [சிறுகதை]