காந்தி காமம் ஓஷோ
ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1
ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 2
ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 3
காந்தி ஓஷோ மற்றும் சிலர்
ஓஷோ மயக்கம்
முட்டாள்களின் மடாதிபதி
விசித்திரபுத்தர்
கிரிமினல் ஞானி
அன்புள்ள ஜெ
இன்னொரு வம்பு. வம்புகள் உங்களை விடுவதே இல்லை. நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். நாங்கள் ஓஷோ படைப்புகளை விவாதிப்பதற்காக ஒரு தளம் வைத்திருக்கிறோம். அதில் ஒருவர் அவர் இணையத்திலிருந்து பொறுக்கிய ஒரு வம்பை கொண்டுவந்து போட்டார்—நீங்கள் ஓஷோவை ‘உடைத்துவீசவேண்டிய பிம்பம்’ என்று சொல்லிவிட்டீர்கள் என்று. அவர் கட்டுரை சுட்டிகூட கொடுக்கவில்லை. எங்கோ வாசித்ததுதான். அவ்வளவுதான்,பிலுபிலுவென சண்டை, வசை.
நம்முடைய ஆட்கள் ஓஷோ வாசித்தாலும்கூட வழக்கமான கதாநாயக வழிபாடு, கதாநாயகனை எதிர்ப்பவர்களை வசைபாடுவது என்ற அளவிலேயே இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு விளக்கம் அளித்தேன், ஆனால் உடனே நீ சப்பைக்கட்டு கட்டுகிறாய், சொம்பு அடிக்கிறாய், முட்டுக்கொடுக்கிறாய் என்று வழக்கமான க்ளீஷேக்களில் பதில்கள். நம்பமுடியாத அளவுக்கு naive ஆக இருக்கிறார்கள். நீங்களே சொல்லிவிட்டால் நல்லது என்பதற்காக இந்த கடிதம்.
எஸ்.ராஜ்குமார்
***
இந்த வகையான கடிதமே இது வரை நாலைந்து வந்துள்ளன. நான் இரண்டுமுறைக்கு மேல் பதிலும் சொல்லியிருக்கிறேன்.வெவ்வேறு ‘வட்டங்களில்’ அவ்வப்போது இப்படி ஒரு அலை அடிக்கிறது. பதில் சொல்வதை எவரும் படிப்பதில்லை. புரிந்துகொள்வதுமில்லை. மீண்டும் அடுத்த அலை. நம்மவருக்கு ஒவ்வொரு மனிதரையும், ஒவ்வொரு கருத்தையும் ஒற்றைவரியில் சுருக்குவதில்தான் ஆர்வம். அதுதான் அவர்களால் முடியும். ஜே.ஜே.சிலகுறிப்புகளில் ஜே.ஜேயின் குரலில் சுந்தர ராமசாமி சொல்கிறார் ‘ஒன்றைச்சொல்லு’ என்பதுதான் மக்களின் நிரந்தரமான கோஷம்.
ஓஷோ மேல் எனக்கு எப்போதுமே ஆர்வமும் மதிப்பும் உண்டு. அவர் என் ஆசிரியர். சொல்புதிது இதழின் மூன்றாம் இதழே அவரை அட்டையில் வெளியிட்டபடித்தான் வெளிவந்தது. இலக்கிய – அறிவுச்சூழலுக்குள் ஓஷோவை கொண்டுவந்த இதழ் அது. அதற்கு முன்புவரை ஓஷோ உதிரிகளான ஆன்மிக வாசிப்பாளர்களுக்குரியவராகவே இருந்தார். ஜே.கிருஷ்ணமூர்த்திக்கு இருந்த ஏற்பு ஓஷோவுக்கு இருக்கவில்லை. [எனக்கு ஜே.கிருஷ்ணமூர்த்திமேல் பெரிய ஈடுபாடு வரவில்லை]
நான் எழுதிய கட்டுரைகளின் சாராம்சம் ‘ஓஷோவை மறுப்பது’ என்று ஒருவர் புரிந்துகொள்வார் என்றால் அவர் ஓஷோவின் வாசகர் அல்ல, ஓஷோவையே உதிரிமேற்கோள்களாக அறிந்துவைத்திருக்கும் பாமரர் அவர். ஓஷோவின் பேச்சே ஏற்பை மறுப்பாக வெளியிடுவது, மறுப்பின் மறுப்பாக ஏற்பை வெளிப்படுத்துவது என்ற ஒரு விளையாட்டு கொண்டது. என் கட்டுரைகளும் அந்தப் பாணியில் அமைந்தவை
இப்படிச் சொல்கிறேன். ஓஷோவின் ஒரு நூலின் தலைப்பு My way – The way of white clouds. அதுதான் அவரைப்பற்றிய சிறந்த பிம்பம். அவர் மேகம்போல நிலையற்றவர், வடிவமற்றவர். அவரை ஒரு உறுதியான கட்டிடமாக ஆக்கக்கூடாது என்றும் அவரை அவருடைய ‘ஒழுகும் நிலை’யிலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சொல்லும் கட்டுரைகள் அவை.
அதாவது ஒருவன் ‘நான் ஓஷோவின் சொற்களின்படி வாழ்கிறேன்’ என்றால் அவன் ஓஷோவை புரிந்துகொள்ளாதவன், பிழையாக அணுகுபவன். ‘என்னுடைய நிலைபாடுகளை, நம்பிக்கைகளை ஓஷோ உடைத்தார். நான் திரும்ப என்னை உருவாக்கிக்கொண்டேன்’ என்று ஒருவன் சொன்னான் என்றால்தான் அவன் ஓஷோவை உண்மையில் அணுகுகிறான்.
அவர் இங்கே உறுதிப்பட்டுப்போன நம்பிக்கைகளை, ஆசாரங்களை உடைக்க வந்தவர். ஆசாரவாதமே மதம் என்றும் மெய்ஞானம் என்றும் மயங்கியிருக்கும் ஒரு தேசத்தில் தோன்றிய ’அனாசாரவாதி’. அவரை இன்னொரு பிம்பமாக, ஆசாரமாக, தத்துவமாக, மடமாக ஆக்குவீர்கள் என்றால் உங்களை முட்டாளாக்கிக் கொள்கிறீர்கள். அதுதான் உடைத்துவீசவேண்டிய பிம்பம். அவரை மடமாக ஆக்குபவர்கள் முட்டாள்கள்.அவர்களின் ஓஷோ முட்டாள்களின் மடாதிபதி.
புனிதம்,தெய்வீகம் போன்ற சொற்கள் மட்டுமல்ல நியாயம், தர்க்க ஒழுங்கு, ஒழுக்கம், அறம் போன்றவைகூட ஓஷோவிடம் எதிர்பார்க்கக்கூடியவை அல்ல. அவர் உடைப்பதற்காக வந்தவர். மெய்யாகவே உள்ளூர ஆன்மிகமாக உடைந்தீர்கள் என்றால் மட்டுமே ஓஷோ உங்கள் ஆசிரியர். ஓஷோ குறித்து எளிமையாக உருவாக்கப்படும் வழக்கமான பிம்பங்களை உடைக்காமல் அவரை அணுகவேமுடியாது
இந்தியாவில் பிறந்த ஒருவனுக்கு ஓஷோ உருவாக்கும் உடைவுகள் சாதாரணமானவை அல்ல. உடைந்து உருவானேன் என்று சும்மா சொல்லிக்கொள்ளலாம். உண்மையில் உடைவு என்பது சாவுக்கு நிகரான வதை. ஓஷோவையே நாம் உச்சகட்டமாக வெறுக்கும் கணங்களும் அதில் உண்டு.
ஒஷோ நாம் விரும்பி, நம்பி, வழிபட்டு, பின்தொடரும் ஆசிரியன் அல்ல. ஓஷோ நாம் கடந்து வந்தே ஆகவேண்டிய ஒரு பாதை. முள்ளாலும் தீயாலும் ஆன பாதை அது..
ஜெ
***