கழுமாடன்,சாவி -கடிதங்கள்

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

சாவி ஒரு அற்புதமான கதை. என் வாசிப்பில் இப்படி மிக இலகுவாக, போகிறபோக்கில் எழுதிச்செல்லும் கதைகளில்தான் நீங்கள் ‘மாஸ்டர்’ என்பது வெளிப்படுகிறது. தமிழில் புதுமைப்பித்தன், ஜானகிராமன், அழகிரிசாமி, சுந்தரராமசாமி போன்ற சிலர் மட்டுமே அத்தனை எளிதாக எழுதியிருக்கிறார்கள். அசோகமித்திரனுடைய மொழி இலகுவாக எழுதியது, ஆனால் கதையில் skill தெரியும். இயல்பாக எழுதியிருக்கவேண்டும். ஆனால் டீடெயில்களும் ஆழமும் அமைந்திருக்கவும் வேண்டும். சாவி அப்படிப்பட்ட கதை.

சாவியில் அந்தக்குரங்கு கடைசியில் திறப்பது அறிவின் சாவி. அதை ஒரு சாபம் என்றும் சொல்லலாம், வரம் என்றும் சொல்லலாம். அறிவைப்பற்றி எப்போதுமே தத்துவார்த்தமாக இந்த சந்தேகம் உள்ளது. அறிவைக்கொண்டாடும் சமூகங்களிலேயேகூட இந்தச் சந்தேகம் இருந்துகொண்டிருக்கிறது. கிறிஸ்தவ மரபில் அறிவு என்பது பாவத்தின் தொடக்கம். ஆதமுக்கும் ஏவாளுக்கும் சாத்தான் அளித்த ஆப்பிள் அது. இந்து மரபிலும் ஞானம் என்பது ஒரு வழிமுறை, ஆனால் அதன் வழியாக கடந்துசென்று ஞானத்தை துறந்தாகவேண்டும். அதைத்தான் ஞானதுக்கம் – ஞானசன்யாசம் என்று சொல்கிறாள் அரிகிருஷ்ணனின் அம்மா.

குரங்கு அந்த சாவியை திறந்துவிட்டது. இனி ஒன்றும் செய்யமுடியாது. ஞானத்தின் களிப்பும் ஞானத்தின் சுமையும் அதை இனி வாழ்நாளெல்லாம் அலைக்கழிக்கும். நினைக்க நினைக்க மனிதவாழ்க்கையின் அடிப்படைகளைப்பற்றிய கேள்விகளாகவே பெருகிச்செல்லும் கதை இது

ஆர்.ஸ்ரீராம்

***

அன்புள்ள ஜெ

சாவி கதையை நான் பரிணாமத்தின் சாவி என்று வாசிப்பேன். அந்த குரங்கு திறப்பது பரிணாமத்தின் சாவியை. பல குறிப்புகளால் பல திசைகளில் திறக்கிறது கதை. முதல் விஷயம் காடு. காடு என்பது தவம் நடக்கும் இடம் என்று அரிகிருஷ்ணனின் தாயார் சொல்கிறார். அங்கே வாழ்வது குரங்கு. அதை எதற்கு இங்கே துயரத்தில் இழுத்துவிடுகிறாய் என்று கேட்கிறார். ஆனால் பரிணாமத்தின் சாவியை திறந்து மனிதவாழ்க்கையின் உள்ளே நுழைந்துவிட்டது அந்தக்குரங்கு.

பொதுவாக குரங்குகளுக்கு கருவிகளைப் பயன்படுத்தும் ஒரு பழக்கம் உண்டு. எல்லா கருவிகளையும் அவை கூர்ந்து கவனிக்கும். எங்கள் வீட்டில் அப்பா பால் கறப்பதைப்பார்த்து ஒரு குரங்கு வந்து பால்கறந்து குடித்துவிட்டுபோனது. அதை துரத்தவே ரொம்ப கஷ்டப்பட்டோம். அந்த ஆதிஉந்துதலால்தான் முன்பு ஒரு குரங்கு மனிதனாக ஆகியது. இந்தக்கதை ‘துக்கமில்லாத’ ஏதேன் காட்டிலிருந்து ‘ஞானதுக்கம்’ நிறைந்த உலகுக்கு குரங்கு வந்த சித்திரத்தை அளிக்கிறது

எம்.ராஜேந்திரன்

***

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

கழுமாடன் துல்லியமான வடிவம் கொண்ட கிளாஸிக்கல் டைப் கதை. அந்த உச்சிமுடிச்சில் கதை இன்னொன்றாக மாறிவிடுகிறது. அதன் பின் கதையின் அர்த்தமே வேறு. சிலநூறாண்டுகளுக்கு முன்பு அடித்தளமக்கள் மேல் செலுத்தப்பட்ட அடக்குமுறை, அவர்களின் உடல்மேல் செலுத்தப்பட்ட உச்சகட்ட வன்முறை,அதிலிருந்து வெளிவர தங்கள் உடலையே அவர்கள் ஆயுதமாக பயன்படுத்தியது. இன்னொரு நூறுநாற்காலிகள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஆக்ரோஷமான கதை அது. அதிலும் கழுவேற்றப்படுவதை கற்பனையிலேயே விட்டுவிட்டு செல்வதன் வழியாக அந்தக்கதையிலிருந்து மீளவே முடியாத நிலையை உருவாக்கிவிடுகிறது.

அந்த சாக்கடைப்பாதை, மலம் வெளிவரும் இடத்திலேயே சாப்பாடும் கொடுக்கும் கொடூரம், அதற்கு எதிரான ஒரு குரல்கூட இல்லாமல் அவர்களே அவர்களுக்கான கழுவையும் சாமியையும் தயாரிக்கும்படி அவர்களை அமைத்திருக்கும் அந்த அமைப்பின் செல்வாக்கு. ஒரு காலகட்டத்தின் துயரம் ஒரு கைப்பிடி பச்சைரத்தம் போல உறைந்து கிடக்கும் கதை

ராஜசேகர்

***

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்.

கழுமாடன் சிறுகதை படித்தேன். முதல்பாதி படிக்கப் படிக்கச் சற்று அச்சமே குடிகொண்டது. கழுபீடம் அமைப்பது, அதில் ஒருவனை அமர்த்தி அளவு பார்ப்பது, கழுவேற்றும் விதம், பின் அதில் ஏற்றப்பட்டவன் துடிப்பது எல்லாமே கண்முன்னே வந்து நிற்குமாறு உங்கள் எழுத்தாளுமை குடிகொண்டிருக்கிறது.

கதையை முதலில் படிக்கும்போது, அறம் தொகுப்பில் உள்ள நாயாடிகள் நினைவுக்கு வந்தது.,”தீண்டத்தோனாக்குமே ஆயித்தமுண்டே” என்று அவன் கூவுகிறான். அடுத்த நொடி என் குரல் எனக்கே திரும்பி வந்தது என்று அவன் உணரும் போது அவன் மனம் படும் வேதனை தெரிகிறது.

செய்யாத குற்றத்துக்காகக் கரியாத்தனுக்குத் தண்டனை அளிக்கப்படுகிறது. அவனைத் தேவகி பிள்ளையின் இளையம்மை காம எண்ணத்துடன் வரவழைக்கிறாள். ஆனால் எதிர்பாராதவிதமாக வந்த பகவதிப் பிள்ளை குடும்பகௌரவம் காக்க அவனை மாட்டிவிடுகிறார்.

“பின்னர் கழுவேற்றப் பட்டவனுக்கு ஆண்டுதோறும் படையல் இடவேண்டும். நடுகல் ஒன்று இருந்துகொண்டே இருக்கும். அது தலைமுறை தலைமுறையாய்ப் பழியைக் காட்டிக்கொண்டே இருக்கும்” என்றெல்லாம் எண்ணியவர் கரியாத்தனைக் காப்பாற்ற முயல்கிறார்.

ஆனால் தான் தவறே செய்யாதபோது அடைந்த சித்திரவதைகளும்,  தொடர்ந்துவரும் ஆதிக்கசாதியினரின் அளவுகடந்த அத்துமீறல்களும் அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்னும் எண்ணத்தைக் கரியாத்தனுக்கு உண்டாக்கிவிடுகின்றன.

தானே அதற்கு அடியெடுத்துக் கொடுக்கவேண்டும் என்றெண்ணுகிறான். அதனால் தானே முதல் களப்பலியாக முடிவு செய்துவிடுகிறான்.

கதையின் இறுதிக் கட்டத்தில், ” பழி வந்திடும்னு பயப்படுதாக இல்ல: அவங்களுக்கு நாம திருப்பிக் குடுக்க இந்தப் பழிமட்டும்தான இருக்கு” என்று கரியாத்தன் சொல்லும் வரிகளில் இயலாமை, எள்ளல், ஆத்திரம், அவலம் எல்லாம் குடியேறிக் கதையை வாசகர் நெஞ்சில் நிலைநிறுத்துகின்றன.அவனால் அதுதானே முடியும்.

வளவ. துரையன்

***

கதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]

கதைத் திருவிழா-22, பீடம் [சிறுகதை]

கதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]

கதைத் திருவிழா-20, சாவி [சிறுகதை]

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரைசிறகு, மூத்தோள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைத் திருவிழா-23, தீவண்டி [சிறுகதை]