சிறகு, வண்ணம் -கடிதங்கள்

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நாஞ்சில்நாட்டு வரலாற்றில் நாஞ்சில்வேளாளர்கள் வரிகொடாமைப் போராட்டம் நடத்தியதும், மொத்தமாகவே நெல்லைப்பகுதிக்கு சென்றுவிடும் போராட்டம் நடத்தியதும் எல்லாம் பதிவாகியிருக்கிறது. விவசாயிகளுக்கும் அரசர்களுக்கும் இடையே எப்போதும் இந்த போராட்டம் நடந்துகொண்டுதான் இருந்தது. அரசர்கள் நாஞ்சில்நாட்டு வேளாளர்களை நயந்தும் மிரட்டியும் வைத்திருந்ததை நம்மால் முதலியார் ஆவணங்களில் பார்க்கமுடிகிறது.

நாஞ்சில்நாட்டுப் பிடாகைகளின் பிரச்சினை என்ன என்றால் அவர்களிடையே ஒற்றுமை கிடையாது. எப்போதுமே மூப்பிளமை தர்க்கம்தான். அதைப்பயன்படுத்தி அவர்களை ஆட்சி செய்தார்கள் அரசர்கள். அரசர்களை தாங்கிக்கொள்ளலாம், அரசர்களின் அடிப்பொடிகளைத்தான் தாளமுடியாது. சுதந்திரம் கிடைத்தபின்னரும் இதே நிலைதான்.

ஆனால் சுதந்திரம் கிடைப்பது வரை நாஞ்சில் நாட்டில் வேளாளர்கள் நடுவே ஒரு சுதந்திரமான கூட்டமைப்பு இருந்தது. பின்னாளில் பூமிப்பாதுகாப்பு சங்கம் என்று இது மாறியது. பிறகு வந்த அரசியலில் எல்லாம் சிதறிப்போய்விட்டது. இன்றைக்கு நாஞ்சில்நாட்டில் விவசாயிகள் என்ற அரசியல்தரப்பே இல்லை

வண்ணம் ஒரு பெரிய வரலாற்றை ஒரு அழகான கதையாக சொல்கிறது. அதிலுள்ளது வண்ணம்பூசப்பட்ட ஒரு அழகான வரலாறு

சிவசுப்ரமணியம். என்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

வேறொரு காலம் பதிவில் நீங்கள் சொல்லியிருக்கும் //நகரமக்கள் நெல்லென்றே நினைக்கும் பசும்புல்// என்பதின் தொடர்ச்சியாகவேதான் நெல்லைப்போலவே இருந்து மனிதர்களை கல்லாக்கிய கோரையைப்பற்றிய வண்ணம் கதை என்று தோன்றியது.

களிமண் சேறும் சகதியுமாக தொழி அழுகிக்கிடக்கும் படுவநிலத்தில்  மூங்கில்களை வெட்டிப்போடுவது, சாம்பலும் சுண்ணமுமாய்   இட்டு மண்ணை வளமூட்டுவது, நிலத்தை வற்றச்செய்வது, கோரையின் வளர்ச்சியை மீள மீள நிலத்தை உழுது தீயிட்டு கட்டுப்படுத்த முயல்வது என்று வண்ணம் காட்டும் ஏராளமான  உழவியல் தகவல்கள் வியப்பளித்தது.

வரலாறு குறித்து அதிகம் தெரியாத எனக்கு, கண்டெழுதுபவரும், மேலெழுதுபவரும், அரசருமாக கணக்கிட்ட மெத்தனமும்,  அரசு இயந்திரம்  இயங்கிய அழகையும் வாசிக்கையில் உணவுப்பயிர் அறுவடையின் தொய்வு, பசி பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு, ரொட்டி விலைஉயர்வு போன்ற நிலைகுலைவுகளால் சாதாரண மக்களும் வீதியில் இறங்கி போராடிய பிரஞ்சுப்புரட்சியிலும் இப்படித்தான் படிப்படியாக  சிறிய பிழைகள் தொடர்ந்து நடந்து அவை பெருகி பின்னர் புரட்சி வெடித்திருக்குமாயிருக்கும் என யூகிக்க முடிந்தது.

வெண்முரசு நாவல் நிரையிலும் உங்களின் பிற படைப்புக்கள் எல்லாவற்றிலுமே குறிப்பிடப்பட்டிருக்கும் தாவர வகைகளை, வேளாண்மை மற்றும் உழவியல் தகவல்களை எல்லாம் நான் தொகுத்து வைத்திருக்கிறேன். ’விலங்கு’ கதையில் வரும் ஆரோக்கியப்பச்சை போன்ற முக்கியமான மூலிகைகளை  மட்டுமல்லாது ’பிறசண்டு’ கதையில்  தரையெங்கும் சருகுகளை கொட்டியபடி நின்றுகொண்டிருக்கும் வேப்பமரங்களையும்  கூட குறித்துக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே தெரிந்த தாவரங்கள் என்றால் அவற்றைக்குறித்த மேலதிக தகவல்களையும் புதியவை என்றால் அவற்றைக் குறித்து முழுமையாகவும் விரிவாகவும் அறிந்துகொண்டு குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளுகிறேன்.

மற்றவர்களின் எழுத்துக்களை வாசிக்கையிலும் ’’ அடடா, கார் ஷெட்டில் வண்டி இருக்குன்னு மட்டும் சொல்லியிருக்காரே, அங்கே  வேம்போ, நெட்டிலிங்கமோ நிழலுக்கு நிக்குதுன்னு சொல்லியிருக்கலாமே என்று  இருக்கும் தாவரங்களைக் குறித்துக்கொள்ளுவதோடு இல்லாதவற்றிற்காகவும் கூட ஆதங்கப்பட்டுக் கொள்ளுவதுமுண்டு.

வெண்முரசு காட்டும் மங்கல நிகழ்வுகளில், சிதையேற்றுதலில், மணத்தன்னேற்புகளில், தோள்மாலைகளில், பூசனைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலர்களை, தாவரங்களை, தாவரப்பொருட்களை, தொடர்வில் பயிற்சியால் சகுனியின் கைநரம்புகள் ஊமத்தை மலரின்  நரம்புகளைப்போல நீல நிறத்திலிருந்ததை, காந்தாரியின் திருமணத்திற்கு பெண்கள் தேடிச்செல்லும் பூத்த தாலிப்பனையை, பாஞ்சாலியின் கூந்தலுக்கு தடவும் தைலத்தின் கைதோநியை, யட்சிப்பாலையை என்று  தாவரவியல் குறிப்புகள் வரும்போதெல்லாம்   குறித்து வைத்துக்கொள்ளுவேன். எங்கும் எதிலும் எப்போதும் தாவரங்களைப்பற்றி சிந்தித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் கற்றுக்கொண்டுமிருப்பது ஒரு பித்தைப்போல் ஆகிவிட்டிருக்கிறது. புல்லைக்கண்டால் மாட்டுக்கு வரும் அதே பரவசம் எனக்கு வாசிப்பில் தாவரங்களைக் கண்டாலும் வருகின்றது.

வண்ணம் கதையில் கோரைகளைப்பற்றி சொல்லியிருக்கிறீர்கள். நெல்லைப்போலவே வயலை நிறைத்து வளரும், ஆழ உழுகையில் கிழங்குகள் துண்டாகி அத்தனை துண்டுகளிலிருந்தும் ரக்தபீஜனைப்போல முளைத்து வளர்ந்து வயல் முழுதும் நிறையும் தாவரவியலில் Cyperus rotundus எனப்படும் கோரை. 92 நாடுகளில் பரவி 52 மிக முக்கியமன உணவு மற்றும் உழவுப்பயிர்களுக்கு இடையூறு செய்யும் களைகளில் மிக முக்கியமானதும் ’one of the world’s worst weeds’. என்று குறிப்பிடப்படும் sedge எனப்படும்  மிகசுவாரஸ்யமான ஒரு களைச்செடி.

தாவரவியலாளர்களால் இக்கோரை ஹவாய் தீவுகளில் முதன் முறையாக 1850ல் கண்டறியப்பட்டு பதிவு செய்யபட்டதாக சொல்லப்படுகின்றது.

கோரையின் கிழங்குகள் மண்ணிற்கடியிலும் பக்கவாட்டிலும் எல்லா திசைகளிலுமாக வளர்ந்து ஒரு கிழங்குத்துண்டிலிருந்து சுமார் 600 செடிகள் வரை வளர்ந்து ஒரு குழுவாக அடர்ந்து காணப்படுவதால் Colonial  grass என்றே விவரிக்கப்படுகின்றன.. கிழங்குகளின் dormancy period அதிகமென்பதால் மண்ணிற்கடியிலேயே ஆழப் புதைந்திருந்தாலும்   7 வருடங்களுக்குப் பிறகும் முளைக்கும் திறனுள்ளவை. நல்ல வளமான மண்ணில் ஒரே வாரத்தில் 20 முதல் 30 லட்சம் கிழங்குகள் வரை வளர்ந்து விடும். கோரை 20 முதல் 90 சதமானம் பயிர்களின் விளைச்சலை குறைத்துவிடும்.

2000 வருடங்களாகவே இக்களை உலகெங்கும் மிக வேகமாக பரவியிருக்கிறது ஆப்பிரிகாவிலும் சீனாவிலும் உணவு மருந்து மற்றும் நறுமணத்தைலங்கள் தயாரிக்க இக்கோரை  பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மெலிதான கசக்கும் சுவையுடைய கிழங்குகள் பஞ்ச காலத்தில் உணவாகியிருக்கிறது.

கோரையைப்பற்றிய முதல்குறிப்புக்கள் சீன மருத்துவ நூலில் முதன்முதலில் கிறிஸ்துவுக்கு  500வருடங்களுக்கு முன்பே குறிப்பிடப்பட்டிருக்கிறது .

மருத்துவப் பயனுடைய இக்கிழங்குகள் முத்தக்காசு எனக் குறிக்கப்பெறுகின்றன. கோரையை முற்றிலுமாக அழிக்க முடியாது அவ்வபோது கட்டுக்குள் கொண்டுவருவது மட்டுமே பெரும் முயற்சிகளுக்கு பின்னர் சாத்தியம்.

பண்டைய இந்தியாவில் கோரையைக் கட்டுப்படுத்த பன்றிகளை வளர்த்திருக்கிறார்கள். ஒரு பன்றி 5 கிலா வரையிலும் கிழங்குகளை அகழ்ந்தெடுத்து விடுவதால் கோரைகளை இவற்றின் மூலம் பெரிதும் கட்டுக்குள் கொண்டு வரமுடிந்திருக்கின்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சாய்க்காட்டில் கோச்செங்கட்சோழன் கட்டிய குயிலினும் இனிமொழியம்மை உடனுறை சாயாவனேஸ்வரர் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது கோரையாகும். இது ஒரு புல் வகையெனினும் தலமரமாகவே குறிக்கப்படுகின்றது.

இதன் இலக்கியபெயர் எருவை, சேற்று நிலத்தில் சண்டையிட்டுக்கொள்ளும் எருமைகளின் காலில் மிதிபட்டு கோரைகள் மடியும் என்கிறது பெரும்பாணாற்றூப்படை (கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை, விளைந்த செறுவில் தோன்றும் நாடன்).

ஐங்குறுநூறு இதனை பைஞ்சாய் என்கிறது. கோரைப்புல்லில் பாவைகளை செய்யும் வழக்கமும் முன்பு இருந்திருக்கின்றது.

பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானே – ஐங் 155/5 (நான் பஞ்சாய்க் கோரைப் பாவையாகிய பிள்ளையை ஏற்கனவே பெற்றுவிட்டேன்).

அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன

நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 62/1,2 (பள்ளத்துநீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த ஒளி சிறந்துவிளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும்,)

தாவரவியலில் களை என்பது a right plant in a wrong place. இத்தனை செழித்து வளரும், மருத்துவபயன்களுள்ள இக்கோரையை கிழங்குகளின் மருத்துவ பயன்களுக்காக  இப்போது தனியே சாகுபடி செய்கிறார்கள் ஆயுர்வேதத்தில் பல முக்கியமான மருந்துகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது

சர்க்யூட்களை லூப்களை ஓலைபேசி எக்சேஞ்ச் தொழில்நுட்பங்களை, பத்தாமரி கட்டுமானத்தை, குற்றங்களை, விசாரணையை, உழவியலை உளவியலை, பறவைகளை, விலங்குகளை, மாடனைப்போல எழுந்து நிற்கும் டவர்களை, குருவி கூடுகட்டும் நுட்பத்தை, காதலை, களமெழுதுதலை, கதகளியாட்டத்தை, சமையலை, ஆன்மீகத்தை அன்னைமையை, இறைமையை, வரலாற்றை, தாவரவியலை, இசையின் நுட்பங்களை, என்று  பல்கழைக்கழகங்கள்  பல ஆண்டுகள் கற்றுத் தரவேண்டியவற்றை  உங்களின் தொடர் சிறுகதையிலும், கதைத்திருவிழாவிலுமாக குறுகிய காலத்தில்  கற்றுக்கொண்டிருக்கிறோம்.

நன்றிகளுடன்

லோகமாதேவி

***

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

சிறகு கதையை வாசிக்கும் இன்றைய இளைஞர்கள் தங்கள் நினைவுகளுடன் இணைத்துத்தான் வாசிக்கமுடியும். இந்தக்கதை நடப்பது எழுபதுகளில். தொண்ணூறுகளில்கூட கதை இப்படித்தான். சைக்கள் அல்ல, வேறுஏதோ ஒன்று. என்னுடைய தோழி ஒருத்தி பாப் கட்டிங்காக தலைமுடியை மாற்றிக்கொண்டதுமே அவளுடைய வாழ்க்கைப்பார்வையே மாறிவிட்டதைப்பற்றிச் சொன்னாள். அவள் முழுக்க விடுதலை அடைந்துவிட்டாள்.

சமீபத்தில் கௌசல்யா-[ சங்கர்] ஒரு பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை கண்டேன். அதில் தெரிந்தது ’சிறகு’ தான்

எஸ்.ஆதவன்

***

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம். நலம்தானே?

சிறகு கதை படித்தேன். அற்புதமான கதை. அருமையான தலைப்பு.

ஒவ்வொருவருக்குமே ஒரு கட்டத்தில் குருவிக் குஞ்சிற்குச் சிறகு முளைப்பது போல் ஒன்று தோன்றுகிறது. அவருள் அது ஒளிந்து கொண்டே இருக்கிறது.  அதை நான் உடன்பாடாகவே எடுத்துக் கொள்கிறேன். வெறுப்பு பழிவாங்கல் துரோகம் போன்ற எதிர்மறைகளும் இருக்கலாம்.

அது தனிப்பட்ட திறமையாகவே  இருக்கிறது. அது எந்தக் கலையாகவும் இருக்கலாம். அதைக் கண்டு பிடித்துக்கொள்ளும் அந்த நொடிதான் அவரை மேம்படுத்துகிறது. எப்படிச் சிறகு இருக்கிறது என்பது தெரியாமலே குருவி பயந்துகொண்டே இருந்து பின் சிறகு தனக்கு இருக்கிறது என்றறிந்த அந்த நொடியில் பறந்து வெற்றி அடைகிறதே அதுபோல..

ஆனந்தவல்லி முதலில் பயப்படுகிறாள். சங்கு கைவிட்டுவிடுவான் என்று சொன்னபோதும் மீள இயலாமல் விதி விட்ட வழி என்றெண்ணுகிறாள்.

அப்படி இருந்தவள் சைக்கிள் தன்னால் விட முடியும் என்று நம்பியவுடன்தான் அவளுக்குத் துணிச்சல் எனும் சிறகு முளைக்கிறது. தனியாகவே குஞ்சு பறந்துவிடுவதுபோல தனியாகவே சங்குவின் அப்பாவிடம் புகார் செய்யப் போகிறாள்.

அந்தத்துணிவே, அப்பொழுது முளைத்த சிறகே அவளை உயர் அதிகாரியாக்கி கார் ஓட்டிக்கொண்டு வரும்படி செய்கிறது.  அத்துடன் அவளை அடித்துக் கைவைத்து ஆள நினைத்தவன் அவளிடமே வந்து தன் செயலை முடித்துக் கொள்ளவைக்கிறது.

சங்கு சொன்ன வார்த்தைகளைத் தம் வீட்டுப் பெண்களிடம் தொடர்புபடுத்திக் கொள்ளும்போது கதைசொல்லிக்கு மனம் வலிக்கிறது. அதனாலேயே அவன் ஆனந்தவல்லியிடம் அவன் சங்கு அவளை விட்டுவிடுவான் என்ற உண்மையைக் கூறுகிறான்.

அப்பொழுது சிறகு இருக்கிறது என்பது தெரியாததால் ஆனந்தவல்லி எனும் குருவிக் குஞ்சிற்குத் துணிவு வந்து பறக்கத் தெரியவில்லை.

போஸ்ட் ஆபீஸ் சீல், மற்றும் நாகத்தைச் சாரையென்று நெனச்சேன் என்னும் சங்குவின் வார்த்தைகள் கதைக்கு சுவாரசியம் ஊட்டுகின்றன.

வளவ. துரையன்

***

கதைத் திருவிழா-19, கழுமாடன் [சிறுகதை]

கதைத் திருவிழா-18, கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]

கதைத் திருவிழா-17, தூவக்காளி [சிறுகதை]

கதைத் திருவிழா-16, சிறகு [சிறுகதை]

கதைத் திருவிழா-15, வண்ணம் [சிறுகதை]

கதைத் திருவிழா-14, ஆபகந்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-13, ஆமை [சிறுகதை]

கதைத் திருவிழா-12, கணக்கு [சிறுகதை]

கதைத் திருவிழா-11, சுக்ரர் [சிறுகதை]

கதைத் திருவிழா-10, அருள் [சிறுகதை]

கதைத் திருவிழா-9, ஏழாவது [சிறுகதை]

கதைத் திருவிழா-8, மணிபல்லவம் [சிறுகதை]

கதைத் திருவிழா-7,மூத்தோள் [சிறுகதை]

கதைத் திருவிழா-6,அன்னம் [சிறுகதை]

கதைத் திருவிழா-5, மலையரசி [சிறுகதை]

கதைத் திருவிழா-4, குமிழி [ சிறுகதை]

கதைத் திருவிழா-3,லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]

கதைத் திருவிழா-2, செய்தி [சிறுகதை]

கதைத் திருவிழா-1 ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2

கதைத் திருவிழா-1’தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 1

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7
அடுத்த கட்டுரைஎரிமருள்,மலைவிளிம்பில்- கடிதங்கள்